வியாழன், 19 ஆகஸ்ட், 2010

புத்தியுடன் செயற்படுவோம்!


 மாண்புமிகு இஸ்லாத்தின்
மகத்துவத்தை பறைசாற்றும்
நோன்புதனை தினம்நோற்று
தீன்வழியில் நடந்திடுவோம்

வீண்பேச்சு சபலங்கள்
விளையாட்டு விவாதங்கள்
கூண்டோடு அத்தனையும்
குழிதோண்டி புதைத்திடுவோம்

காலைமுதல் மாலைவரை
கவனமுடன் நோன்பிருப்போம்
ஏழைகளின் பசிதன்னை
எப்படியென் றறிந்திடுவோம்

நாட்கள் முப்பதும் நாம்
நல்லபடிநோன்பிருந்து
பாவங்கள் கழுவி இன்றே
பரிசுத்த மாகிடுவோம்

புறம்கூறல் பொய்சொல்லல்
பொறாமையிலே குழிபறித்தல்
அறமல்ல என்றுணர்ந்து
அனைவருமே ஒழுகிடுவோம்

நோய்தீரும் என்பதற்காய்
நோன்புதனை நோற்காமல்
வாய்காட்டி வாழாமல்
வாய்மையுடன் வாழ்ந்திடுவோம்

அநியாயம் அக்கிரமம்
அத்தனையும் தவிர்த்திடுவோம்
துனியாவில் இஸ்லாத்தின்
தூய்மையினை எடுத்துரைப்போம்

இல்லாத மக்களுக்கு
இயன்றவரை ஈந்திடுவோம்
பொல்லாத குணங்களினை
போரிட்டு பொசுக்கிடுவோம்

அல்லாஹ்வின் நாமத்தை
அடிநெஞ்சில் வளர்த்திடுவோம்
வல்லோனின் சொல்லொன்றே
வாழ்வென்று வாழ்ந்திடுவோம்

தேன்போன்ற நபிகளாரின்
சுன்னத்தை கடைப்பிடிப்போம்
ஆண்பெண்கள் அனைவருமே
அல்குர்ஆன் வழி நடப்போம்

மதம் எதுவாயிருந்தாலும்
மரியாதை கொடுத்திடுவோம்
புரிந்துணர்வை நாம்வளர்த்து
புத்தியுடன் செயற்படுவோம்

                                    நன்றி
*வசந்தம் தொலைக்காட்சி-.இலங்கை

இறந்து போவது மேலாகும்..!

சோரும் போது ''சொறிந்து'' கொடுத்தால்
சோகம் எமக்கு காலாகும்!
பாலைக் கறந்து படுத்துக் கிடந்தால்
பாலும் கூட பாழாகும்!

துணிவை உனக்குள் வளர்த்துப்பாரு
துயரம் யாவும் தூளாகும்!
''இரந்து வாழும் வாழ்வைக் காட்டிலும்
இறந்து போவது மேலாகும்''

உணர்ச்சியற்று கிடக்கும் நெஞ்சை
உசுப்பும் கவிதை வாளாகும்
வீரம்மறந்து வீழ்ந்து கிடந்தால்
விடியல் தோன்ற நாளாகும்

''பயந்து வாயை பொத்தியிருந்தால்
பழைய சோறும் கிடைக்காது!''
துணிந்து எதிர்த்து கேட்கும் நெஞ்சை
தோட்டாக் கூட துளைக்காது!

நாய்கள் போடும் கூச்சல் கேட்டால்
நாளை உனக்கு விடியாது!
உறுதிநெஞ்சில் இருந்தால் உந்தன்
உயர்வை தடுக்க முடியாது.!

நன்றி.
*பதிவுகள்
*இருக்கிறம்
*தமிழ் ஆதர்ஸ்
*காற்றுவெளி -செப்டம்பர் -2010