சனி, 27 ஏப்ரல், 2013

நல்லாசான் ''பிஸ்ருல் ஹாபி'' அவர்களுக்காக ஒரு பாடல்...


(கொழும்பு வாழைத்தோட்டத்தில் பிறந்து ஆங்கில புலமை மூலம் பல்லாயிரம் மாணவர்களை உருவாக்கிய சமூக சேவையாளர், நல்லாசான் ''பிஸ்ருல் ஹாபி'' அவர்களுக்காக அவர்களது மாணவர்கள் சமர்ப்பிக்கும் பாடல் இது. இன்று புற்றுநோயினால் பீடிக்கப்பட்டிருக்கும் அவருக்காக நாமும் பிரார்த்திப்போம்.)

இப்பாடல் ''Bodyguard''ஹிந்தி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள  ''தேரே மேரி மேரி தேரே'' என்ற புகழ் பெற்ற பாடலின் மெட்டில் அமைந்துள்ளது.



 
ஆண்: ஆ.. ஆ... ஆ....ஆ..................


பல்லவி

பெண்:

வானம் பூமி வாழும் காலம் உங்கள் நாமம் போற்றிடுவோம்
மாணவ ரெங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே...
நல்லவழிகூறி உள்ளங்களில் ஏறி பிஸ்ருல்ஹாபி வாழ்வீரே...
மாணவ ரெங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே...

ஆண்:

வானம் பூமி வாழும் காலம் உங்கள் நாமம் போற்றிடுவோம்
மாணவ ரெங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே...
உங்களால்தானே உண்டாகினோம்-என்றும்
உங்களால்தானே நன்றாகினோம்...

வானம் பூமி வாழும் காலம் உங்கள் நாமம் போற்றிடுவோம்
மாணவ ரெங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே...


சரணம் - 01

ஆண்: ஆ.. ஆ... ஆ....ஆ


இந்த வாழ்வொரு மாயம்
என்று வாழனும் நாளும்
துன்பம் நேர்ந்திட்ட போதும்
வென்று வாழ்ந்தீரே நீரும்

வாழைத் தோட்டத்தில் கஸ்டப்பட்டு
வாட்டத்தில் கல்விகற்று
வாழ்ந்தெமை வளர்த்தவர் நீரே............... ஆ.. ஆ... ஆ....ஆ..................


பெண்:

உங்களால்தானே உண்டாகினோம்-என்றும்
உங்களால்தானே நன்றாகினோம்...
வானம் பூமி வாழும் காலம் உங்கள் நாமம் போற்றிடுவோம்
மாணவ ரெங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே...

ஆண்:

வானம் பூமி வாழும் காலம் உங்கள் நாமம் போற்றிடுவோம்
மாணவ ரெங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே...
வாசம்வீசும் நேசப்பூவே உயிரில் உம்மை சுமந்தோமே
மாணவ ரெங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே...


சரணம் - 02

ஆண்:

ஆ.. ஆ... ஆ....ஆ

மொழி ஆங்கிலம் மூலம்
வழி காட்டினீர் நாளும்
தெளி வாகினோம் நாமும்
அழியாத தும் நாமம்...

உலகாண்டிடும் ஆண்டவனின்
ஆசிகள் எங்கும் வரும்
கவலைகள் விட்டுவிடு வீரே..... ஏ........ஏ....ஏ....ஏ..................

பெண்:

உங்களால்தானே உண்டாகினோம்-என்றும்
உங்களால்தானே நன்றாகினோம்...

வானம் பூமி வாழும் காலம் உங்கள் நாமம் போற்றிடுவோம்
மாணவ ரெங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே...
சோகம் என்னும் இருளை போக்கி வாழ்வில் ஒளியை ஏற்றிடுவோம்
மாணவ ரெங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே...

ஆண்:

வானம் பூமி வாழும் காலம் உங்கள் நாமம் போற்றிடுவோம்
மாணவ ரெங்கள் நெஞ்சில் வாழும் ஆசானே...

சனி, 13 ஏப்ரல், 2013

வசந்தம் TVயில் இடம் பெற்ற திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் அஸ்மின் அவர்களின் நேர்காணல்.



2013 சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வசந்தம் தொலைக்காட்சியில்''இசையால் வெல்வோம்'' சிறப்பு நிகழ்ச்சியில் இடம் பெற்ற தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் அஸ்மின் அவர்களின் நேர்காணல்.

வியாழன், 14 மார்ச், 2013

முட்டைக்குள் தூங்கும் கழுதைகள்



சிறுக்கர்கள் உன்முகத்தில்
சிறுநீரை கழிக்கின்றார்...
சிரித்தபடி நீநாளும்
சிறப்பாக கண்ணுறங்கு...

அரசின் பால்குடித்து
ஆவென்று வாய்பிளந்து
முட்டைக்குள் ஒழித்தபடி
முழுநாளும் கண்ணுறங்கு....

காகிதமாய் உனை மாற்றி
கால்களின் கீழ் போடுகிறார்
கவட்டுக்குள் கைவைத்து
ஹாயாக கண்ணுறங்கு...

யார் அழிந்தால் உனக்கென்ன..?
யார் அழுதால் உனக்கென்ன...?
ஊரழிந்து போனாலும்
ஊமையாய் நீ உறங்கு..

எலும்புக்கும் தோலுக்கும்
ஏற்றபடி வாலாட்டி
அரசென்னும் தொட்டிலிலே
அழகாக கண்ணுறங்கு...

பௌத்தவில


எழில்கொஞ்சும் எமதூரின் அழகைப்பட
ஏற்றகவி நானில்லை கம்பன் ஷெல்லி
வளம்மிக்க எமதூரை பாடச்சொன்னால்
வரம்கேட்டு நிற்கவரும் வார்த்தைக்காக

காடுமலை ஆறுவயல் கடலும் சூழ
கட்டழகு குமரியென சிரிக்கும் ஊரில்
அறுகம்பையாளவளின் அழகைக் காண
அகிலமெலாம் இருந்தென்றும் ஆட்கள்கூடும்

வந்தாரை வரவேற்று வாழ்வைக்காட்டி
வளர்ந்தோங்கி அவர்நிற்க வழியை காட்டும்
பண்புள்ள எம்மண்ணில் ஒருநாள் பாதம்
பதித்தவர்கள் ஒருபோதும் திரும்பிப்போகார்

முந்நூறு ஆண்டுகளாய் வரலாறோடு
மூவினமும் ஒன்றுபட்டு வாழும் ஊரில்
பண்நூறு பாடுகின்ற  ஆற்றல் மிக்க
பாவலர்கள் வாழ்கின்றர் வாழ்ந்தும்போனர்...

கண்ணூறு வீழ்ந்தாலும் வீழும் நெஞ்சை
கவர்கின்ற கன்னியரின் அழகை கண்டால்
கவிநூறு பாடிவிட்ட எனக்கும் கூட-அதை
கவிதையிலே பாடிடவே முடியாதப்பா....

அழகெல்லாம் வந்திறங்கி அயர்ந்து தூங்கும்
அன்னை மண் பொத்துவிலூர் இயற்கையாலே
உலகெல்லாம்  உவந்தேகும் இடத்தில் ஒன்றாய்
உள்ளதினால் பிரச்சினைகள் தோன்றலாச்சு....

ஆளுயர சிலை நிற்க அழகாய் தோன்றும்
அனுராதபுரக்கால சிற்பம் போன்று-ஊரில்
கண்டுமகிழ்வடைகின்ற தலத்தில் புதிராய்
கடற்கரையை அண்மித்த தலமொன்றுண்டு

தொன்றுதொட்ட இவ்விடத்தை பார்க்கவென்று
தொகையான பொதுமக்கள் வந்து செல்வர்
தொல்லியல் ஆய்வுக்கு சொந்தமான
நல்லிடமாய்  இவ்விடமும் விளங்கக் கண்டேன்

பிக்குமார் வந்திங்கு பிரித்துமோதி
மக்குவேலை செய்தின்று மகிழுகின்றார்
தக்கபதில் கொடுப்பதற்கு ஒன்று சேர்ந்து
தலைவர்கள் எனச்சொல்வோர் தயங்குகின்றார்

புதைபொருள் ஆராய்ச்சி நிலையெமென்று
புடம்போட்டு  சொன்னாலும் புரியவில்லை
கதைகட்டி கண்மூக்கு காலும் வைத்து
காழ்ப்புண்வால் எம்மோடு உரசுகின்றார்

சிதைந்திருந்த மண்டபத்தில் சிலைகள் வைத்து-சிலர்
சிங்களத்தை நிலைநாட்ட முயற்சிக்கின்றார்
புதைந்திருந்த புதைபொருளை தேடிக்கண்டு-இன்று
புரிந்துணர்வை புத்தரினால் குழப்புகின்றார்

வதைபட்டு உதைபட்டு வாட்டம் கண்டு நாங்கள்
வணை ஓதும் அவர்களினை தடைகள் செய்தும்
விதைபோட்டு போதியெனும் விருட்ஷம் செய்து
விழாச்செய்து களிக்கின்றார் விம்முகின்றோம்

இருஇனங்கள் இதனாலே இரண்டுபட்டு
இடருக்குள் வீழவுளர் இதனால் இன்று
புராதன இத்தலத்தின் புகழும் குன்றி
புரிந்துணர்வும் குன்றும் நாள் தூரமில்லை

பொத்துவில் எனும் பெயரை மாற்றி இன்று
''பௌத்தவில'' என்றாக்க முயற்சிக்கின்றார்
புத்திகெட்ட அமைச்சர்கள் எம்பிமார்கள்
புரோக்கர்கள் வாய்ப்பார்த்து நிற்கின்றாரேன்...?

 

வியாழன், 24 ஜனவரி, 2013

இலங்கை தமிழரின் 'லாயிலாஹ இல்லல்லாஹ்'' பாடல்

 

இசையமைத்து பாடலை பாடியுள்ளார்:கந்தப்பு ஜெயந்தன்
பாடல் வரிகள்: கவிஞர் பொத்துவில் அஸ்மின்
காட்சித்தொகுப்பு:ஜனார்த்தனன்


இவ்வருடத்தின் முதல் பாடலாக 'லாயிலாஹ இல்லல்லாஹ்'' என ஆரம்பிக்கும் இறை தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் பற்றிய புதிய பாடல் இதோ இன்று வெளியிட்டுள்ளேன்.

இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தன் பாடலை இசையமைத்து பாடியுள்ளார் பாடல் பற்றி கருத்துக்களை பகிருங்கள். நண்பர்களே.

திங்கள், 7 ஜனவரி, 2013

வெறுஞ் சொற்கள்


காலையில் எழுந்து
கதவை திறந்தேன்
வானம் என் வாசலில்
வீழ்ந்து கிடந்தது.

ஆங்காங்கே நட்சத்திரங்கள்
சருகாய் கிடந்தன.
சுற்றுமுற்றும்
தேடிப்பார்த்தேன்
சூரியனை காணவில்லை...
உடைந்து விழுந்த நிலா
புற்தரையெங்கும்
பனியாய் படர்ந்திருந்தது....

வீதிக்கு வந்தேன்
வீதியை காணவில்லை
இரவோடு இரவாக வெள்ளம்
இழுத்துக்கொண்டு போனதாக சொன்னது
மூழ்கி கிடந்த மின்சார கம்பம்.

அழுவதற்காக உதடுகளை
திறக்க முயன்றேன்
ஆமைப்பூட்டுக்கொண்டு
யாரோ பூட்டியிருக்கின்றார்கள்.

விறுவிறு என்று ஓடிச்சென்று
நேற்று கவிதை எழுதிய
நோட்டை திறந்தேன்
கவிதையையும்
காணவில்லை
எஞ்சியிருந்தன
வெறுஞ் சொற்கள் மட்டும்....!!


07.01.2013

செவ்வாய், 18 டிசம்பர், 2012

'KFC' போகும் கோழிகள்




காகம் கூவும்
கரடி கர்ச்சிக்கும்
சிங்கம் சீறும்
சிம்பன்சி பாடும்

புறா புன்னகைக்கும்
புலி பூப்பறிக்கும்
நாய் நன்றி மறக்கும்
நரி வடைசுடும்

குருவி வீடுகட்டும்
குதிரை பொதிசுமக்கும்
குரங்கு குரைக்கும்
குயில் தோகைவிரிக்கும்

மந்தி மந்திரியாகும்
மாமரம் வாக்களிக்கும்
எலி எம்பியாகும்
எருமை பிரதமராகும்

கழுதை அமைச்சராகும்
கழுகு ஜனாதிபதியாகும்
கவிதை காசாகும்
கவிஞன் 'பில்கேட்'சாவான்.

யானை விவசாயம் பண்ணும்
பூனை சோறுசமைக்கும்
ஆடு ரவுடியாகும்
அணில் அகதியாகும்

கோழி 'KFC' போகும்
வேலியை பயிர் மேயும்
பாம்பு பால்தரும்
பலஸ்தீனம் வெற்றிபெறும்

மீன்கள் வலைவீசும்
மிளகாய் இனிக்கும்.
மானுக்கு புலிபதுங்கும்
மல்லிகையில் குருதி வடியும்.

ஆசைகள் தீர்ந்துபோகும்
ஆகாயம் திருடுபோகும்
ஆபிரிக்கா ராக்கட்விற்கும்
அமெரிக்கா பிச்சையெடுக்கும்

மனங்களில் இருள் இருக்காது
மதங்களே இங்கிருக்காது
மனிதன் மனிதனாவான்
மடையன் தலைவனாவான்

மேகங்கள் தீ பொழியும்
மேற்கில் சூரியன் உதிக்கும்
இரண்டாயிரத்து பன்னிரெண்டில்
இம்மாதம் இருபத்தொன்றில்
இவ்வுலகம் அழியுமென்றால்...!!

புதன், 14 நவம்பர், 2012

இதயப் பாயை விரிப்பாளோ...!




இலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் ''தூவானம்'' கலை, இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ள கவிஞர் அஸ்மினின் கவிதை கவிஞரின் குரலில்....


கண்கள் இரண்டும் அரிவாளோ-அவள்
காதல் வலியை அறிவாளோ...?
புன்னகை அவளின் உறைவாளோ-என்
பூவிழி வாசலில் உறைவாளோ

இடைகள் கொல்லும் இடைவாளோ-அவள்
இதழால் என்னை அடைவாளோ
இமைகள் எங்கும் கொலைவாளோ-என்
இதயம் கொன்று தொலைவாளோ...

நாணம் அவளின் பெருவாளோ-ஒரு
நாளில் காதல் பெறுவாளோ...?
பூவை ஏந்தி வருவாளோ-இல்லை
பூமி அதிர்ச்சி தருவாளோ

கதையாய் எனக்குள் எழுவாளோ-என்
கனவை வந்து உழுவாளோ
விதையாய் எனக்குள் விழுவாளோ-நான்
விழுந்தால் கூட அழுவாளோ...

வாழ்வில் வந்து நிறைவாளோ-இல்லை
வாட்டம் தந்து மறைவாளோ
கண்ணால் ஹைகூ வரைவாளோ-இல்லை
கன்னம் சிவக்க அறைவாளோ

அலைபோல் வந்து அடிப்பாளோ-இல்லை
அன்பால் என்னை படிப்பாளோ
கவியாய் வந்து துடிப்பாளோ-இல்லை
கைக் குண்டாக வெடிப்பாளோ

அழகுத் தமிழில் கதைப்பாளோ-இல்லை
ஆங்கி லத்தால் உதைப்பாளோ
கவிதை சொல்ல அழைப்பாளோ-இல்லை
கருவைப் போலே கலைப்பாளோ..

பார்க்க பார்க்க முறைப்பாளோ-இல்லை
பார்வை கொண்டு குரைப்பாளோ..!
காதல் மொழிகள் உரைப்பாளோ-இல்லை
கள்ளி மனசை மறைப்பாளோ..!

கவிதை கண்டு சிரிப்பாளோ-இல்லை
கழுத்தை வந்து நெரிப்பாளோ..!!
இதயப் பாயை விரிப்பாளோ -இல்லை
இறக்கும் நாளை குறிப்பாளோ..!!

வியாழன், 8 நவம்பர், 2012

யாஹூ மேகுறா கரு நாக மாகுறா...



ண்மையில் திரைப்படம் ஒன்றிற்காக பாடல் எழுத பணிக்கப் பட்டிருந்திருந்தேன்.இயக்குனர் படத்தில் பாடல் இடம்பெற வேண்டிய சூழலை விளக்கி டியுனைத்தந்து பாடல் எழுத கேட்டிருந்தார்.

கதையையும் டியுனை கேட்டவுடனே வரிகள் திமிரிக்கொண்டு வர ஆரம்பித்தன.நல்ல

கதை அதற்கேற்ப இசையமைப்பாளர் மிகவும் அருமையாக அந்த மெட்டினை செதுக்கியிருந்தார். முதலில் பல பல்லவிகளை எழுதிக்கொடுத்தேன்.பல கலந்துரையாடல்களின் பின்னர் எழுதிய பல்லவிகளில் ஒன்று தேர்வானது.

அதன் பின்னர் முழுப்பாடலையும் எழுதி நிறைவு செய்தேன்.இயக்குனருக்கும் பாடல் மிகவும் பிடித்திருந்தது. வெகுவாக வரிகளை சிலாகித்து பேசினார். நானும் மகிழ்ந்தேன் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை......

திடிரென மறுநாள் அழைப்பை ஏற்படுத்திய இயக்குனர் ''பாடலின் டியுனை நாங்கள் மாற்றி விட்டோம்.நீங்கள் முன்பு எழுதிய பாடல் இடம்பெறாது இப்பொது அனுப்பும் டியுனுக்கு எழுதுங்கள்'' என்றார்.

''சரி'' என்று ஏற்றுக்கொண்டு இன்று (8.11.12) பாடலை புதிய டியுனுக்கு எழுதி கொடுத்து விட்டேன் .பாடல் சிறப்பாக வந்துள்ளது.இயக்குனரும் மிகவும் மகிழ்ந்து போனார்....

அந்த பெயர் குறிப்பிட விரும்பாத திரைப்படத்தின் கதைச்சூழலுக்கும் மெட்டுக்கும் ஏற்ப நான் முதலில் எழுதிய பாடல் இது. இந்த பாடல் படத்தில் இடம்பெறவில்லை என்பது வருத்தம்தான். பாடல் பற்றி கருத்துக்களை நண்பர்களிடமே விட்டுவிடுகின்றேன்.




தொகையறா


யாஹூ மேகுறா – கரு
நாக மாகுறா...

பல்லவி

பொண்மேல ஆச வைய தடா- அவ
பொல்லாத எமனின் கையாளடா
முள்மேல கால வச்சாளும்டா-நீ
முகநூலில் காதல் செய்யாதடா...

மண்ணாப் போச்சி என் வாழ்க்க-நீ
பொண்ணுகள கதைய கேக்காத...!

அனு பல்லவி

கண்ணால தாண்டா கல் எறிஞ்சா
கண்ணாடி நெஞ்ச ஒடச்சா...
கண் இமையால் நாளும் கயிறு திரிச்சா
கனவிலே வந்து கழுத்த நெரிச்சா....

வெள்ள மனசுக்குள்ள
மெல்ல மொளச்சவளே
கொள்ள அடிச்சுப்புட்டு
கொல்ல துடிச்சவளே..

நெல்ல எறிஞ்சுபுட்டு
கல்ல கடிச்சவளே
உள்ள சிரிச்சுக்கிட்டே
உசுர குடிச்சவளே...

சரணம் -01

இரு பாட்டில் பியர் குடிப்பேன்.....
நடு ரோட்டில் நான் படுப்பேன்....

காதலும் நுழைய யாவும் வெறுத்தேன்
கணணி உலகில் காத்துக் கெடந்தேன்..
கவிதை நூல்கள் தேடிப் படித்தேன்...
கடித்த நாயை தூக்கி அணைத்தேன்.

விட்டில்
விழி வெட்டில்
புதுமெட்டில்
இளம் மொட்டில்
சட்டில்
ஒரு பொட்டில்
தினம் நெட்டில் கலந்து தொலைந்தேன்...

ஒன்ன ரசித்திருந்தோம்
ஒன்னா வசித்திருந்தோம்
ஒன்னா நனைந்திருந்தோம்
ஒன்னா இணைந்திருந்தோம்

ஒன்னா கதைத்திருந்தோம்
ஒன்னா கலந்திருந்தோம்
ஒன்னா நடந்திருந்தோம்
ஒன்னா தொலைந்திருந்தோம்..


சரணம் -02

முகநூலில் முகம் புதைத்தோம்
முழுஇரவும் விழித்திருந்தோம்

like குக்காக சண்டைகள் செய்தோம்...
life பை அங்கே முடிவு செய்தோம்....
போனில் பிடித்த போட்டோ பகிர்ந்தோம்...
வானில்கூட பூக்கள் பறித்தோம்....

மொட்டு
துயர் நட்டு
இளஞ்சிட்டு
உயிர் சுட்டு
பட்டு
எனை விட்டு
நஞ்சிட்டு போனது இறந்தேன்.....

பொண்மேல ஆச வைய தடா- அவ
பொல்லாத எமனின் கையாளடா
முள்மேல கால வச்சாளும்டா-நீ
முகநூலில் காதல் செய்யாதடா.

மண்ணாப் போச்சி என் வாழ்க்க-நீ
பொண்ணுகள கதைய கேக்காத...!

செவ்வாய், 23 அக்டோபர், 2012

தேசிய கவிஞர்கள் சம்மேளனம் நடத்திய 23 வது விருது வழங்கும் விழா



தேசிய கவிஞர்கள் சம்மேளனம் நடத்திய 23  வது விருது வழங்கும் வைபவம் 20-10-12 சனிக்கிழமை பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது இந்நிகழ்வின் போது 7 மாவட்டங்களை சேர்ந்த கவிஞர்கள் விருது பெற்றதுடன் மேலும் பல மூத்த, இளம் கவிஞர்கள் "காவிய ஸ்ரீ " ,"காவ்ய சக்தி " போன்ற கௌரவ நாமங்களை பெற்றுக்கொண்டனர் .
இவ் விழா கவிஞர் சேனக தலைமையில் இடம்பெற்றதுடன் கவிஞர் மார்டின் ஜயரத்ன பிரதம அதிதியாகவும் மேல்மாகாண சபை அமைச்சர் சந்திர பானு அதிகாரம் ,ஸ்ரீ  லங்கா மீடியா போரம் தலைவர் என்.எம்.அமீன்,கொழும்பு பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளர் கமெல்  வெலேபோட ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர் 
விருது,கௌரவப்பட்டம் பெற்ற 7 மாவட்டங்களை சேர்ந்த கவிஞர்கள் 

1.திருகோணமலை - மூதூர் முஹைதீன் 

                                       -  அருள் மொழி ராஜா 

2.கண்டி- மசீதா புன்னியாமீன் 

3.யாழ்ப்பாணம் -எம் .பொன்னம்பலம் 

4.அம்பாறை - பொத்துவில் அஸ்மின் 

5.மன்னார் - கலைவாதி கலீல் 

6.அனுராதபுரம் - அன்பு ஜவஹர் ஷா 

7.கம்பஹா - கவிஞர் ரவூப் ஹசீர் 

 "காவிய ஸ்ரீ " ,"காவ்ய சக்தி " போன்ற கௌரவ நாமங்களை பெற்றுக்கொண்ட மூத்த, இளம் கவிஞர்கள்

  • அஷ்ரப் சிஹாப்தீன்
  • நாச்சியா தீவு பர்வீன் 
  • ஏ .எம்.தாஜ் 
  • யாழ் அஸீம் 
  • எம்.ஏ .எம் .நிலாம் 
  • நஜ்முல் ஹுசைன் 
  • ரிஷான் ஷெரிப் 
  • எம்.சுனைத் 
  • முல்லை முஸ்ரிபா 
  • ஷாமிலா ஷெரிப் 
  • அனார்
  • பி.சுஜாந்தன் 
  • ஜனீரா அமான்
  • கெளரிதாசன்
  • எஸ் .ஜனூஸ் 
  • கலை மகள் ஹிதாயா
  • த .எலிசபெத் 
  • கிண்ணியா அமீர் அலி 
  • பாஹீமா ஜஹான் 
  • மன்னார் அமுதன் 
  • லுணுகல ஸ்ரீ

( சிலர் வருகை தராதிருந்ததும் குறிப்பிடத்தக்கது).

சனி, 11 ஆகஸ்ட், 2012

விஜய் ஆண்டனியின் ''நான்'' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கவிஞர் அஸ்மின் பாடல் - video song HD





 

''தப்பெல்லாம் தப்பேயில்லை
சரியெல்லாம் சரியே இல்லை
தப்பை நீ சரியாய் செய்தால்
தப்பு இல்லை தப்பு இல்லை
''

Movie:Naan

Starring : vijay Antony , SiddharthVenugopal, Rupa Manjari, Anuya
Direction : Jeeva Shankar
Music: Vijay Antony
Lyrics: Kavinger Asmin
vocals: Aathi, Santhosh Hariharan,

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் ''நான்'' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடல் என்னால்  எழுதப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி சர்வதேச மட்டத்தில் நடத்திய பாடலியற்றல் போட்டியில் 20,000 போட்டியாளர்களுள்  முதலாமிடம் பெற்ற நான்  ''நான்'' திரைப்படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பினை பெற்றுக்கொண்டேன்.

படத்தின் பாடல் வெளியீட்டு விழா அண்மையில் சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது.இலங்கையில் இருந்து நானும் என்னோடு சுயாதீன தொலைக்காட்சியின் பணிப்பாளர் புரவலர் ஹாஸீம் உமரும் கலந்து கொண்டோம்.நான் திரைப்படம் ஆகஸ்ட் 15ம்திகதி உலகமெங்கும் வெளியாகிறது..பாடலை பாருங்கள் உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள்.



நன்றி


கவிப்பேரரசு வைரமுத்துவிடம் ஆசி பெற்றபோது ..
ஹாஸீம் உமர், பாடலாசிரியர்கள் பிரியன், அண்ணாமலை
ஹாஸீம் உமர்,கங்கை அமரன்

ஞாயிறு, 24 ஜூன், 2012

அகவை நான்கில் கால்பதிக்கும் வசந்தம் தொலைக்காட்சி




            லங்கையில், தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய அடையாளங்களைப் பிரதிபலித்தபடி, தவிர்க்க முடியாதவொரு அடையாளமாகத் திகழும் 'வசந்தம் தொலைக்காட்சி'யானது, அதன் நான்காவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. இலங்கையின் முதலாவது தொலைக்காட்சி ஒளிபரப்புச் சேவையான சுயாதீன ஊடக வலையமைப்பின் ஒரு அங்கமாக இருந்து வரும் வசந்தம் தொலைக்காட்சியானது, 2009.06.25 அன்று ஆரம்பிக்கப்பட்டது. வெற்றிகரமான முப்பத்தாறு மாதங்களைக் கடந்துவந்துள்ள இதன் அபார வளர்ச்சியானது, இன்று பலரையும் இதன் பக்கம் ஈர்த்து, தலைநிமிர்ந்து பார்க்க வைத்துள்ளது.


            வசந்தம் தொலைக்காட்சியானது, தனது ஒளிபரப்பை ஆரம்பித்த நாளிலிருந்தே பல்சுவை நிகழ்ச்சிகளை வழங்கி, இலங்கைத் தமிழ்த் தொலைக்காட்சிகளுக்கு முன்னோடிகளாக விளங்கும் தென்னிந்திய தமிழ்த் தொலைக்காட்சிகளுக்கு இணையான பாரிய வளர்ச்சியை, மூன்று வருடங்களுக்குள்ளேயே கண்டிருக்கிறது. இலங்கைக்கு வசந்தத்தைக் கொண்டு வந்திருக்கும் வசந்தம் தொலைக்காட்சியின் முகாமையாளராக இருக்கும் திரு. முருகேசு குலேந்திரன் அவர்களின் வழிகாட்டலின் கீழ், துடிப்பும் ஆளுமையும் திறமையுமுள்ள இளைய தலைமுறை நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும், அறிவிப்பாளர்களும் இதன் வளர்ச்சியின் வேர்களாக இருந்து கொண்டிருக்கின்றனர்.

            நமது நாட்டில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அனேகமானவை, தென்னிந்தியத் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளே. இந் நிலையை மாற்றிய பெருமையும் வசந்தம் தொலைக்காட்சியையே சேரும். வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் எல்லா நிகழ்ச்சிகளும்போல எமது நாட்டு வளங்களைப் பயன்படுத்தி, திறமை வாய்ந்த எமது நாட்டுத் தயாரிப்பாளர்கள் தயாரித்த நிகழ்ச்சிகளே.



இனி, வசந்தம் தொலைக்காட்சியானது, தமிழ் பேசும் மக்களினது, சுயத்தையும் பண்பாட்டையும் கலாசாரத்தையும் பேணிப் பாதுகாக்கவென செய்திருக்கும் சாதனைகளை வெற்றிகரமான மூன்றாவது வருட நிறைவான இந் நன்னாளில் மீட்டிப்பார்ப்போம்.




            இலங்கையில் ஒரு குடும்பத் தொலைக்காட்சி எனும் நற்பெயரைப் பெற்று, தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறது வசந்தம் தொலைக்காட்சி. அதுவரையில் தமிழ்த் தொலைக்காட்சிகள் எனப்படுபவை, வெறுமனே நேரத்தைக் கழிக்கவும், பொழுதுபோக்கவும் மட்டுமேயானவை என்ற கருத்தினை மாற்றிய வசந்தம் தொலைக்காட்சியில், காலை ஆறு மணியிலிருந்து இரவு பன்னிரண்டு மணி வரை சிறுவர் முதல் பெரியோர் வரை எல்லோருமே கண்டுகளிக்கவும் பயன்பெறவுமான பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன


நாட்டு நடப்புகளைத் தெரிந்துகொள்ளவும், பார்த்து ரசிக்கவுமென அக் காலத்தில் அனேகமான சகோதர மொழித் தொலைக்காட்சிகளையே நாட வேண்டியிருந்த நிலையை மாற்றியதோடு நிற்காமல், முப்பது வருட கால யுத்த முடிவுக்குப் பிறகு, தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒருமித்து ரசிக்கக் கூடியதான நிகழ்ச்சிகளையும் தந்து கொண்டிருக்கிறது வசந்தம் தொலைக்காட்சி.


            வசந்தம் தொலைக்காட்சியானது, தொலைக்காட்சியோடு மட்டும் தனது சேவையை நிறுத்தி விடாமல், நேயர்களை மகிழ்விக்கவென அவர்கள் முன் நேரடியாகவும் களமிறங்குகிறது. இதன் முதல் கட்டமாக, தென்னிந்திய கலைஞர்களைக் கொண்டு யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நடத்திய, முதலாவது இசை நிகழ்ச்சியைச் சொல்லலாம். பல்லாயிரக்கணக்கான நேயர்களை வசீகரித்த இந் நிகழ்ச்சியில் பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் விஜய் அன்ரனி, தனது குழுவினரோடு கலந்து கொண்டார். இதுவே அவர் செய்த முதலாவது மேடை இசை நிகழ்ச்சியும் கூட. வசந்தம் தொலைக்காட்சியின் அனுசரணையோடு நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் கலந்து கொண்டு ரசித்தனர். அத்தோடு வரலாற்றிலேயே முதன்முறையாக நேரடி இசை நிகழ்ச்சியொன்றை பருத்தித்துறையில் நடத்திய பெருமையும் வசந்தம் தொலைக்காட்சியையே சாரும்.


            சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, கடந்த வருடங்களிலும், இந்த வருடமும் வசந்தம் தொலைக்காட்சியின் அனுசரணையோடு தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் மிக ஆர்வத்தோடு, அதிகளவான இளைஞர்களும் யுவதிகளும் பங்குபற்றி பரிசில்களை அள்ளிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. பலர் கலந்துகொண்ட, கடந்த வருடத்தின் சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்ட விளையாட்டுப் போட்டியானது, யாழ் கோட்டை முன்றலிலிருந்தும், வல்வெட்டித்துறையிலிருந்தும் நேரடியாக ஒளிபரப்பானதோடு, இந்த வருடத்தின் சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் யாழ். மானிப்பாய் மருதடிப் பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து நேரடியாக ஒளிபரப்பானதோடு நேரிலும் தொலைக்காட்சியிலும் பல்லாயிரக்கணக்கான நேயர்கள் ஒரே நேரத்தில் இந் நிகழ்வுகளை நேரடியாகக் கண்டு ரசித்தனர்.


            தனது அனைத்து நிகழ்ச்சிகளாலும் பூரணம் பெற்றுள்ள வசந்தம் தொலைக்காட்சி, இலங்கைத் தமிழ்த் தொலைக்காட்சி வரலாறுகளிலேயே முதன்முறையாக 'தசாவதாரம்', 'சிங்கம்', 'வேட்டைக்காரன்', 'நான் மகான் அல்ல', 'வானம்', 'மாசி', 'முரண்', 'வந்தான் வென்றான்' போன்ற வெற்றிப் படங்களை ஒளிபரப்பி அநேக நேயர்களைத் தம் வசம் ஈர்த்திருக்கிறது. அத்தோடு இதில் ஒளிபரப்பாகும் சினிமா நிகழ்ச்சிகளும், பிரபல நெடுந்தொடர்களும் வசந்தம் தொலைக்காட்சியை, நேயர்கள் பக்கம் நெருங்க வைத்திருக்கின்றன.




            வாரம் தோறும் ஒளிபரப்பாகும் ஒரு மணித்தியாலக் கலை நிகழ்ச்சியான தூவானத்தில், எழுத்தாளர்கள் அறிமுகம், சிறந்த இணையத்தள அறிமுகம், உலக விருதுகள் பெற்ற குறும்படங்கள் மற்றும் கவித்துவமான பாடல்கள் ஒளிபரப்பு என்பனவற்றோடு நல்ல கவிதைகளும் இடம்பெறுகின்றன. இந்த நிகழ்ச்சியானது கடந்த வருடத்தின் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான அரச விருதையும் சுவீகரித்துக் கொண்டது என்பதுவும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு நமது நாட்டில் கண்டுகொள்ளப்படாமலிருக்கும் நல்ல பல பழைய கலைஞர்களையும், புதிய கலைஞர்களையும் கலையகத்துக்கு வரவழைத்து கௌரவிக்கும் இசை நிகழ்ச்சியான 'புது வசந்தம்', ஒவ்வொரு ஞாயிறன்றும் இரவு ஏழு மணிக்கு புதிய, இடைக்கால, பழைய பாடல்களோடு ஒளிபரப்பாகி நேயர்களைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது.




            சமையல் மற்றும் பயனுள்ள விடயங்களை நேயர்களுக்கு, முக்கியமாக பெண்களுக்குத் தரும் 'கண்மணி' நிகழ்ச்சியும், மருத்துவம் சம்பந்தமாக நாம் தெரிந்திருக்க வேண்டிய தகவல்களை விரிவாக வழங்கும் 'ஆரோக்கியம்' நிகழ்ச்சியும் பலரது பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறது. அத்தோடு 'ஏழாம் நாள்', 'சுற்றிவரும் பூமி', 'உலகப் பார்வை' ஆகிய பொது அறிவை வளர்க்கும் சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் அனைத்துத் தரப்பு நேயர்களினதும் கவனத்தைத் தம் வசம் ஈர்த்துள்ளன. திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும், புதிய பாடல்களை விரும்பும் நேயர்களுக்கான 'Hello வசந்தம்' நிகழ்ச்சியும் இடைக்காலப் பாடல்களை விரும்பும் நேயர்களுக்கான 'நினைத்தாலே இனிக்கும்' நிகழ்ச்சியும் பலரையும் ஈர்த்துள்ளன.


சனிக்கிழமை தோறும் இரவு 8.30க்கு ஒளிபரப்பாகும் 'முகமூடி' நிகழ்ச்சியானது , சமூகத்தில் மறைந்திருக்கும் பல குற்றங்களையும் துயரங்களையும்  வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளைப் பெற்றுக் கொடுக்கும் சிறந்தவொரு நிகழ்ச்சியாக பலரதும் கவனத்தை ஈர்க்கிறது. அத்தோடு  கலையுலகத்துக்குச் சேவையாற்றும் முக்கியமானவர்களை நேரில் சந்தித்து சிரேஷ்ட அறிவிப்பாளரான திரு.விஸ்வநாதன் தொகுத்து வழங்கும் 'ஆட்டோகிராப்' நிகழ்ச்சியானது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்  ஒளிபரப்பாவதோடு நேயர்கள் பலரதும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது.


வசந்தம் தொலைக்காட்சியானது தனது மூன்றாம் ஆண்டு நிறைவோடு 'கல்விக்குக் கை கொடுப்போம், வறுமையை இல்லாதொழிப்போம், ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்புவோம்' எனும் தொனிப் பொருளில் 'வசந்தம் TVயின் சமூகப் பணி' எனும் சமூகப் பணியையும் ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாணத்துக்கு நேரடியாக வைத்தியக் குழுவினரோடு சென்று மக்களைச் சந்தித்து அவர்களது மருத்துவத் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யும் பணியை ஆரம்பித்திருக்கும் வசந்தம் தொலைக்காட்சியானது, பாடசாலை மாணவர்களுக்கும் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கி அவர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறது.

            கடந்த காலங்களில் கொழும்பில் மட்டும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த வசந்தம் தொலைக்காட்சியானது, தற்பொழுது யாழ்ப்பாணம் மற்றும்  வடக்கு மாகாணம் முழுவதிலும் கொக்காவில் கோபுரத்தின் வழியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கொழும்பில் UHF 10 அலைவரிசையிலும், யாழ்ப்பாணத்தில் UHF 25 அலைவரிசையிலும், DIALOG TV, PEO TV, LBN போன்றவை மூலமும் www.vasantham.lk இணையத்தளம் மூலமும் கண்டுகளிக்கப்படக் கூடிய வசந்தம் தொலைக்காட்சியானது, விரைவில் கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாடு முழுவதிலும் வசந்தத்தைக் கொண்டு வரவிருக்கிறது.