இலங்கை கவிஞர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கை கவிஞர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 22 அக்டோபர், 2011

படைப்பாளி அறிமுகம் - 19 கவிஞர் உ.நிஸார்

இலங்கை கவிஞர்களில் குறிப்பிடத்தக்க ஒருவரான கவிஞர் உ.நிஸார் அவர்கள் கண்டி மாவட்டம் உடுநுவரை முருதகஹமுல என்ற இடத்தை பிறப்பிடமாக கொண்டவர்.உடுநுவரை நிசார், உ. நிசார் ஆகிய புனைப்பெயர்களில் எழுதிவரும் இவர்,சிறுவர் இலக்கியம் படைப்பதில் அதிக  ஆர்வம் காட்டிவரும் எழுத்தாளராவார்.

உடுநுவரை டி. பி. விஜயதுங்க தேசிய பாடசாலை, கம்பளை சாஹிரா தேசிய பாடசாலைஆகிவற்றின் பழைய மாணவரான இவர் மாவனல்லை சாஹிரா பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றி வருகின்றார்.இவர் சிங்கள மொழியில் கல்வி பயின்றாலும் தமிழ் மொழியை தன் முயற்சியால் கற்றுத்தேர்ந்து  மரபுக்கவிதை கவிதை படைக்கும் ஆற்றல்  பெற்றவராக திகழ்கிறார்.இவரது படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகள் சஞ்சிகைளில் களம் கண்டுள்ளன.


 இதுவரை  கனவுப்பூக்கள் என்ற கவிதை நூலை வெளியிட்டுள்ள இவர்
•    ஓயாத அலைகள்
•    நட்சத்திரப் பூக்கள்
•    வெந்நிலா
•    மலரும் மொட்டுக்கள்
•    சிறகு விரி
•    பாவிருந்து
•    இளைய நிலா
•    முத்துக் கணையாழி 
 உட்பட பல சிறுவர் இலக்கிய நூல்களையும்   இதுவரை  எழுதி வெளியிட்டுள்ளார்.தேசிய மட்டத்தில் நடாத்தப்பட் ட பல கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும் இவர்
2008ம் ஆண்டு அரச இலக்கிய விருதான 'கலாபூசணம் விருது' வழங்கப்பட்டு  கௌரவிக்கப்பட்டிருக்கின்றார்.

படைப்பாளி அறிமுகம் - 18 கவிஞர் அமல்ராஜ்

இலங்கையின்  கலை,இலக்கிய பரப்பில் தனது சுவடுகளை ஆழப்ப பதிக்க முனைந்துவரும் இளம் எழுத்தாளரான  அமல்ராஜ் மன்னார் வஞ்சியன் குளத்தை பிறப்பிடமாக கொண்டவர்.தற்போது கொழும்பில் வாழ்ந்து வருகின்றார்.
கவிதை,கட்டுரை,நாடகம் ,பேச்சு ஆகியவற்றில் ஈடுபாடு காட்டிவரும்  அமல்ராஜ் மட்டக்களப்பு மிக்கேல் கல்லூரி, மன்னார் சவேரியர் ஆண்கள் தேசிய பாடசாலை என்பனவற்றின்  பழைய மாணவர.சிறுவயது முதலே தனக்குள் இருந்து வந்த இடையறதா வாசிப்பு, இலக்கிய தேடலின் காரணமாக இன்று ஒரு எழுத்தாளராக பரிணமித்துள்ளார்.


இவரது படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகை சஞ்சிகைகளிலும் இணைய சஞ்சிகைகளிலும் புலம்பெயர் சஞ்சிகைகளிலும் களம் கண்டுள்ளன.அத்தோடு 'புலம்பல்' என்ற தனது வலைப்பூவிலும் இவர் தொடர்ந்து எழுதிவருகின்றார்.

திருமறை கலா மன்றத்தின் நாடக பயிற்சி பட்டறைகளின் வளவாளரா பணியாற்றியிருக்கும் இவர் பல நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்துள்ளார.இவரது நெறியாள்கையில்  மேடையேற்றப்பட்ட 'உயிர்க்க துடிக்கும் உதிரங்கள்' என்ற ஊமை நாடகம் பலரதும் பாராட்டினை பெற்றுள்ளது.

மன்னார் திருமறை கலா மன்றத்தின் கலை இலக்கிய வெளியீடான  'தாளம்' சஞ்சிகையின் ஸ்தாபக ஆசிரியரான அமல்ராஜ் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தில் பணிபுரிந்து வருகின்றார்.கிறுக்கல் சித்திரமாகின்றன' கவிதை நூலையும் 'வேர்களும் பூக்கட்டும்' என்ற  உளவியல் நூலையும் இவர் இதுவரை வெளியீட்டுள்ளார்.

இவரது இலக்கிய பணி சிறக்க நாமும் வாழ்த்துவோம்.

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

படைப்பாளி அறிமுகம்-13 -கவிஞர் 'மல்லியப்பு சந்தி' திலகர்

 இளையதலைமுறை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவரான மயில்வாகனம் திலகராஜா எனும் இயற்பெயர் கொண்ட 'மல்லியப்பு சந்தி' திலகர் மலையகத்தின் இதயமான நுவரெலியா மாவட்டத்தில் மடகொம்பரை எனும் தோட்டத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். கொழும்பு பல்கலைக்கழகத்தின் வணிகத்துறை பட்டதாரியான இவர் தொழில் ரீதியாக முகாமைத்துவ ஆலோசகராக செயற்படுகின்றார்.

பாடசாலைக் காலத்தில் இருந்தே வாசிப்பிலும் எழுதுவதிலும் ஆர்வம் காட்டிவந்த இவர் பாடசாலை காலத்தில் கவிதை, நாடகம், கட்டுரை, சிறுகதை, பேச்சு போட்டிகளில் பங்குபற்றியுள்ளார்.

1991ம் ஆண்டு கண்டி மாநகரில் நடந்த 'தேசிய சாகித்திய விழா'வில் பாடசாலை மாணவனாக இருக்கும்போதே 'சிறந்த நடிகர்' விருது பெற்ற இவர் 1993ம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகம் நடாத்திய திறந்த போட்டியில் பங்குபற்றி கவிதைக்கான பரிசினைப் பெற்றுள்ளதோடு
1995ம் ஆண்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடாத்திய கலை கலாசார போட்டிகளில் பங்குபற்றி மாவட்டமட்டத்தில் கவிதைக்காகவும் தேசிய ரீதியில் பேச்சுப்போட்டியல் ஜனாதிபதி விருதினையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

பல்கலைக் கழக காலத்தில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிறந்த பேச்சாளராக, அறிவிப்பாளராக விருது பெற்றுள்ளார்.



பத்தி எழுத்தாளராகவும் பத்திரிகைகளுக்கு அரசியல் கட்டுரைகளை எழுதிவரும் இவர் பல வானொலி கவியரங்குகளிலும் கலந்து கவிதை பாடியுள்ளார்

2002 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக் கழகத்தில் 'இதழியல் டிப்ளோமாவை' நிறைவு செய்ளள்ள இவர் 'சிறந்த பெறுபேற்றுக்காகவும், மலையக மக்களின் பிரச்சினைகளில் ஊடகங்களின் பங்களிப்பு குறித்த ஆய்வுக்காகவும்; ஜப்பானிய அரசால் வழங்கப்படும் 'ஜூயின் அஹோக்கி' விருதினை வென்றுள்ளார்.

மலையக மக்களின் அரசியல், தொழிற்சங்க பண்பாட்டு அம்சங்களை பிரதிபலிக்கும் 'மல்லியப்பு சந்தி' எனும் இவரது  கவிதைத் தொகுதி 2007இல்  வெளிவந்தது.

அதன் பின்னர் ' மல்லியப்பு சந்தி' திலகர் என இலக்கிய சூழலில் அறியப்படும் இவர் தனது தாயாரின் பெயரில் 'பாக்யா பதிப்பகம்' எனும் பதிப்பகத்தினை நடாத்தி வருகின்றார். நூல் வெளியீடுகள், நூல் விநியோகம், இலக்கிய செயற்பாடுகள் என முனைப்புடன் இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்.

ஞாயிறு, 5 ஜூன், 2011

படைப்பாளி அறிமுகம் -15 கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன்


தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட படைப்பாளியும் ஒளிபரப்பாளருமான கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் பன்முக ஆளுமைகொண்டவர்.

கவிதை,சிறுகதை கட்டுரை, பத்தியெழுத்து, சிறுவர் இலக்கியம், விமர்சனம் போன்ற துறைகளில் முத்திரை பதித்திருக்கும் இவரது படைப்புக்கள்  இலங்கையின் தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகள்,இணைய சஞ்சிகைகளில் களம் கண்டுள்ளன.இவர் 'நாட்டவிழி நெய்தல்' http://ashroffshihabdeen.blogspot.com எனும் தனது வலைப்பூவிலும் தொடர்ந்தும் எழுதி வருகின்றார்.

மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடியை பிறப்பிடமாக கொண்ட இவர் ஆரம்பத்தில் 'ஓட்டமாவடி அஷ்ரப்' எனும் பெயரிலும் பல படைப்புக்களை தந்திருக்கின்றார்.

ஹாஸ்யமும் சுவாரசியமும் கலந்த கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் எழுத்துக்கள் இளைய தலைமுறையினராலும் பரவலாக விரும்பி படிக்கப்படுகின்றன.
இவர் ,ஒரு முறை புதிதாக தன்னை வாசிக்க வருகின்ற ஒருவரை திரும்பவும் தன்னை நோக்கி திரும்ப செய்கின்ற எழுத்து நடையின் சொந்தக்காரர்.மரபுக் கவிஞனாக தன்னை அடையாளப்படுத்திய இவர் புதுக்கவிதையிலே சிறந்த ஆளுமை மிக்கவர்.இவருக்கு அதிகளவிலான சிறப்பை தேடிக்கொடுத்த ஷெய்த்தூன் கவிதை சர்வதேச கவிதைகளோடு வைத்து நோக்கத்தக்கது.

2002ம் ஆண்டு இலங்கை அரசு கொழும்பில் இலங்கை இஸ்லாமிய ஆய்வகத்தின் ஆதரவுடன் நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் செயலாளராக இயங்கியதை தனது வாழ்நாள் சாதனையாக கருதும் கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினதும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினதும் செயலாளராகவும் இயங்கிவருகின்றார்.


'யாத்ரா' எனும் தமிழ் கவிதைகளுக்கான சஞ்கையின் ஆசிரியரான இவர் 'மீஸான் கட்டைகளில் மீள எழும் பாடல்கள்' கவிதை தொகுதியின் பிரதான தொகுப்பாளராகவும் இருந்திருக்கின்றார்.


இதுவரை  
1.காணாமல் போனவர்கள்
2.என்னைத் தீயில் எறிந்தவள்
3உன்னை வாசிக்கும் எழுத்து'
 என்ற மூன்று கவிதை நூல்களையும்
1.புள்ளி
2.கறுக்கு மொறுக்கு
3.புல்லுக்கு அலைந்த மில்லா என்ற  
மூன்று சிறுவர் நூல்களையும் 
1.தீர்க்கவர்ணம்
2.ஸ்ரீலங்காவலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம்வரை 
என்ற பல்சுவை பத்திகளின் தொகுப்பு பயணக்கட்டுரை தொகுப்பு போன்றவற்றையும் தமிழ் இலக்கிய உலகத்திற்கு தந்திருக்கின்றார்.


இவரின் 'என்னைத் தீயில் எறிந்தவள்' கவிதை நூல்  2008ம் ஆண்டுக்கான இலங்கை அரசின் சாஹித்திய மண்டல பரிசினை பெற்றுக்கொண்டுள்ளது.


'தமிழியல் விருது' உட்பட பல உள்ளூர் விருதுகளையும்  பெற்றிருக்கும் கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன்  தமிழகத்தில் நடந்த 5வது உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழாவின் கவியரங்கில் சிறப்பாக கவிபாடி கவிக்கோ அப்துல் ரஹ்மானால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

முற்றிலும் உண்மைக்கதைகள் அடங்கிய இவரது புதிய நூலான '''ஒரு குடம் கண்ணீர்'' அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 4 ஜூன், 2011

படைப்பாளி அறிமுகம் -14 காப்பியக்கோ' DR.ஜின்னாஹ் ஷரிபுத்தீன்.

காப்பியக்கோ' DR.ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
ன்னிகரற்ற காவியங்களை தமிழுக்கு தந்திருக்கும் நாடறிந்த கவிஞரான வைத்திய கலாநிதி  ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்கள் காப்பியக் கவிஞராக கடல் கடந்தும் அறியப்படுபவர்.

தென்றலே கவிபாடும் தென்கிழக்கு மண்ணில் மருதமுனையை பிறப்பிடமாக கொண்ட இவர் விபுலானந்த அடிகளாரின் மாணவரும் கிழக்கிலங்கையின் முதல் முஸ்லிம் ஆசிரியருமான தமிழ் பண்டிதர் புலவர்மணி ஆ.மு.ஷரிபுதீன் அவர்களின் புதல்வர்.


கவிஞருக்கு ''காப்பியக்கோ' பட்டத்தை  வழங்குகின்றார் மலேசியா கல்வி வாரியத் தலைவர் ஹாஜி டத்தோ  முஹம்மது இக்பால்
அமர்ந்த இடத்தில் ஆயிரம் பாடல்களை எழுதும்  ஆற்றல் பெற்ற இவர், தமிழ் பேசும் உலகில் தலை சிறந்த மரபுக் கவிஞர். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மரபுப் பாக்களை பாடி புகழ் சூடியிருக்கின்றார்.

கவிஞர் முஹம்மது மேத்தாவுடன் நமது காப்பியக்கோ
எஸ்.டி. சிவநாயகம் அவர்களின் தினபதி கவிதா பண்ணையில்  புடம்போடப்பட்ட இவர் இதுவரை 20 நூல்களை எழுதி வெளியிட்டிருக்கின்றார்.இதில் இவரால் எழுதப்பட்ட ஏழு காவியங்களும் அடங்குகின்றன.
''காப்பியக்கோ''வுடன் கலந்துரையாடலில் கவிஞர்களான ஏ.இக்பால், அல்-அஸூமத், அஷ்ரப் சிஹாப்தீன்.

இருபதுக்கும் மேற்பட்ட தேசிய மட்ட இலக்கிய போட்டிகளில் பரிசில்களையும் விருதுகளையும் பெற்றிருக்கும்  கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன்  அவர்களின் 'பண்டாரவன்னியன்' காவியம் இலங்கை அரசின் சாஹித்திய மண்டல விருதினை பெற்றுள்ளது.அத்தோடு இவரது 'பெற்ற மனம்' சிறுகதை தொகுப்பு கலாசார அலுவல்கள் அமைச்சினால் பாடசாலை நூலக புத்தகமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.



கவிதாயினி மலீக்கா பாரூக்கின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில்
இவரது 'மஹ்ஜபீன்' மற்றும்  'புனித பூமியிலே' காவியங்களை ஆய்வு செய்து தமிழ்நாட்டை சேர்ந்த  பேராசிரியர்  எஸ்.முஹம்மது அவர்கள் கலாநிதி பட்டத்தை நிறைவு செய்திருக்கின்றார்.

இலங்கை இஸ்லாமிய ஆய்வகத்தின் தலைவராக,கொழும்பு தமிழ்சங்கத்தின் துணைத் தலைவராக,சர்வதே இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் இலங்கை கிளையின் தலைவராவும் இருக்கும் இவர்,கலாபூசணம்,தமிழ் மாமணி, கவிமாமணி,காவியத் தலைவன்,நற்கவிஞர் உட்பட பல கௌரவ பட்டங்களை பெற்றிருக்கின்றார்.

அண்மையில் தமிழ் நாட்டின் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்தினரால் 'காப்பியக் கோ' என்ற கௌரவ பட்டம் வழங்கப்பட்டும்
கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்கள் கௌரவிப்பட்டிருக்கின்றார்.

சனி, 14 மே, 2011

படைப்பாளி அறிமுகம் -13 கவிஞர் கிண்ணியா சபருள்ளா

இலங்கையின் இளைய தலைமுறை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவரான கவிஞர் கிண்ணியா சபருள்ளா திருகோணமலை மாவட்டம், கிண்ணியா பிரதேசத்தில், அடப்பனார் வயல் எனும் இடத்தை பிறப்பிடமாக கொண்டவர்.

கிண்ணியா மத்திய கல்லூரி,கொழும்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பழைய மாணவரான இவர் தனது சட்டமானி பட்டத்தை நிறைவுசெய்து அதிலே சிறப்பு தேர்ச்சி பெற்று சட்டபீடத்திலே சிறிது காலம் விரிவுரையாளராக கடமையாற்றினார்.அதன் பிற்பாடு இவர் கடந்த 7வருடங்களாக திருகோணமலை மாவட்ட நீதிமன்ற தொகுதியில் முன்னணி சட்டத்தரணியாக திகழ்வதோடு கிண்ணியா மாநகரசபையின் பிரதி மேயராகவும் கடமையாற்றி வருகின்றார்.

சட்டம், அரசியல்,சமூகம், மற்றும் இலக்கியம்,ஆன்மீகம் என பன்முகத்தளத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் கவிஞர் கிண்ணியா சபருள்ளா கவிதை, சிறுகதை, பாடுதல், பாடலியற்றல், பட்டிமன்றம், இசை,மேடைப்பேச்சு  என பல தளங்களில் தனது முத்திரையை பதித்துவருகின்றார்.
1989களில் எழுத்துலகுக்குள் நுழைந்த இவர்  இதுவரை 100க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளையும் அரசியல் கட்டுரைகளையும் இலங்கையின் தேசிய பத்திரிகைகள் சஞ்சிகைகளில் எழுதியிருக்கின்றார்.
இவரது முதலாவது கவிதை நூல் 'வியர்த்தொழுகும் மாலைப்பொழுது' அண்மையில் வெளியிடப்பட்டு பலரதும் கவனத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 தனது காத்திரமான கவிதைகள் மூலமும் தனித்துவமான படைப்புக்கள் மூலம்  இலங்கையின் இலக்கியத்துறையில் முத்திரை பதித்துவரும்  கவிஞர் கிண்ணியா சபருள்ளாவை  நாமும் வாழ்த்துவோம்.


ஞாயிறு, 8 மே, 2011

படைப்பாளி அறிமுகம் -12 கவிஞர் மட்டுவில் ஞானக்குமாரன்

லங்கையின் இளைய தலைமுறை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவரான கவிஞர் மட்டுவில் ஞானக்குமாரன் யாழ்ப்பாணம் நுணாவிலை பிறப்பிடமாக கொண்டவர்.
யாழ் மானிப்பாய் இந்துக் கல்லூரி, கிழக்கு பல்கலைக்கழகம் என்பவற்றின் பழைய மாணவரான இவர் புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வாழ்ந்து வருகின்றார்.



ஜேர்மனிய மொழி போதனாசிரியரான மட்டுவில் ஞானக்குமாரன் 
கவிஞர், எழுத்தாளர் , பாடலாசிரியர், குறுந்திரைப்பட இயக்குனர் என பன்முக ஆளுமைகொண்டவர்.
இவர் ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக புலம்பெயர் இலக்கியத்துக்கு வளம் சேர்த்து வருகின்றார்.


கவிதை, சிறுகதை, மேடை நாடகம், வானொலி நாடகம், குறுந்திரைப்படம் என பல துறைகளிலும்  தனது திறமை பறைசாற்றிவரும் மட்டுவில் ஞானக்குமாரனின் படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகளிலும் சர்வதேச சஞ்சிகைகளிலும் களம் கண்டுள்ளன. இணையத்தில் வெளிவரும் பல இலக்கிய சஞ்சிகைளிலும் தொடர்ந்து எழுதிவருகின்றார்.

2008ம் ஆண்டு தகவம் அமைப்பினரால் தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் 'பள்ளிக்கூடம்' சிறுகதைக்காக முதலாம் பரிசினை வென்று 'தகவம் விருதினை'  பெற்றிருக்கும் இவர் சுடர்ஒளி  பத்திரிகை சர்வதேச மட்டத்தில் நடத்திய சிறுகதைப் போட்டியில்  சிறப்பிடத்தையும் பெற்றிருக்கின்றார்.


'வெளிச்ச வீடுகள்' எனும் கவிதை இறுவட்டை பின்னணி இசையோடு தனது குரலில்  வெளியிட்டிருக்கும் மட்டுவில் ஞானக்குமாரன்  லண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பான 'கரையை தேடும் ஓடங்கள்' எனும் வானொலி நாடகத்தை எழுதி, இயக்கி, நடித்து பலரதும் பாராட்டை பெற்றிருக்கின்றார் .

வசந்தம் வரும் வாசல் (2004) முகமறியாத வீரர்களுக்காக (2000) சிறகு முளைத்த தீயாக (2011) எனும் மூன்று கவிதை நூல்களை இலக்கிய உலகுக்கு தந்திருக்கும் இவர் தற்போது 'ஒரு துளி கண்ணீர்' என்ற குறுந்திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இவரது ''ஊருக்குள் நூறு பெண்கள்'' சிறுகதை நூல் மிகவிரைவில் வெளிவருகின்றது.

தனது காத்திரமான கவிதைகள் மூலமும் தனித்துவமான படைப்புக்கள் மூலம்  இலங்கையின் இலக்கியத்துறையில் முத்திரை பதித்துவரும்  கவிஞர் மட்டுவில் ஞானக்குமாரன்
அவர்களை நாமும் வாழ்த்துவோம்.


திங்கள், 2 மே, 2011

படைப்பாளி அறிமுகம் -11 எழுத்தாளர் வீ.ஜீவகுமாரன்.


புலம் பெயர் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவரான வீ.ஜீவகுமாரன் அவர்கள் யாழ்ப்பாணம் சங்கானையை பிறப்பிடமாகக் கொண்டவர்.
இவர் தற்போது டென்மார்க் அரச நூலகத்தின் தமிழ் பகுதி பொறுப்பாளராகவும் மொழி பெயரப்பாளராகவும்  கடமை புரிந்து வருகின்றார்.

கவிதை,சிறுகதை,நாவல்,பதிப்புத்துறை போன்றவற்றில் தடம்பதித்துவரும் இவரது படைப்புக்கள்  புலம்பெயர் இதழ்களிலும் இணையத்தளங்களிலும் இலத்திரனியல் ஊடகங்கள் பலவற்றிலும் களம் கண்டுள்ளன.


தமது வெளியீடாக வரும் நூல்களை  இலவசமாக இலங்கையில் உள்ள தமிழ் பாடசாலை நூலகங்களுக்கு வழங்கும் முனைப்போடு செயற்பட்டு வரும்
விஸ்வசேது இலக்கியபால பதிப்பகத்தின்  பொறுப்பாளராக இருக்கும் இவர் 'மக்கள் மக்களால் மக்களுக்காக' என்ற நாவலுக்காக சிறந்த நாவலுக்குரிய பரிசினை பெற்று அண்மையில் மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தினால் 'தமிழியல் விருது' வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு 'தகவம்' கதைஞர் வட்டம் நடாத்திய தேசிய மட்ட சிறுகதைப்போட்டியில்

•    கிராமத்து பெரிய வீட்டுக்காரி
•    அகால மரணம்


ஆகிய சிறுகதைகளுக்காக முதலாம் இரண்டாம் இடங்களை பெற்றிருக்கின்றார்.


2008ம் ஆண்டு இணையத்தளத்தில் எழுதும் இளையோர்களின் கவிதைகளை தொகுத்து 'மெல்லத் தமிழினி துளிர்க்கும்' எனும் பெயரில் நூலாக  வெளியிட்டிருக்கும் இவர்


    டெனிஷ் - தமிழ் - ஆங்கில மருத்துவ அகராதியும் கையேடும்

    யாவும் கற்பனைஅல்ல (சிறுகதை தொகுதி)

    மக்கள் மக்கள் மக்களுக்காக (நாவல்)

    சங்கானைச் சண்டியன்  (சிறுகதை தொகுதி)

    இப்படிக்கு அன்புள்ள அம்மா (மொழி பெயர்ப்பு நூல் )



ஆகிய நூல்களை வெளியிட்டிருப்பதோடு ஈழத்து எழுத்தாளர்கள்
50 பேரின் சிறுகதைகளை தொகுத்து 'முகங்கள்' எனும் பெயரில் நூலாகவும் வெளியிட்டுள்ளார்.


தனது எழுத்துக்கள் மூலம் ஈழத்து எழுத்துத்துறைக்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர் வீ.ஜீவகுமாரனை நாமும் வாழ்த்துவோம்.

ஞாயிறு, 1 மே, 2011

படைப்பாளி அறிமுகம் -10 - கவிதாயினி நிஹாஸா நிசார்



இலங்கையின் கம்பஹா மாவட்டத்தில் ''கஹட்டோவிட்ட'' என்ற இடத்தை பிறப்பிடமாக கொண்ட 'நிஹாஸா நிஸார்' ஒரு வளர்ந்து வரும் கவிஞரும், எழுத்தாளருமாவார்.

கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயம், மாவனல்லை ஸாஹிரா தேசிய பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவியான இவர் தனது தீவிரமான வாசிப்பின் ஊடாகவும் ஆசிரியர்களின் வழிநடத்தல் போன்றவைகளாலும் இன்று ஒரு எழுத்தாளராக பரிணமித்திருக்கின்றார்.


கற்கின்ற காலத்தில் எழுத்துத்துறைக்குள் நுழைந்த  இவரின்;
கவிதை, சிறுகதைகள் இலங்கையின் தேசிய பத்திரிகைகளில் களம்கண்டுள்ளன.
உயர்தரம் கல்வி கற்கும் காலத்தில் இலக்கிய போட்டிகளில் கலந்துகொண்டு பல தடவை வெற்றியீட்டியுள்ளார்.குறிப்பாக இவர் 2002 ம் ஆண்டு அகில இலங்கை மட்டத்தில்  நடாத்தப்பட்ட தமிழ் தினப்போட்டியில் கவிதைப் பிரிவில் 2ம் இடத்தை பெற்று வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுள்ளார்.

இவரது முதலாவது கவிதை நூல் 'கண்ணீர் வரைந்த கோடுகள்'' அண்மையில் 'வேகம்' பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்து இலக்கிய ஆர்வலர் பலரதும் கவனத்தை பெற்றுள்ளது.




இவர் தனது அடுத்த வெளியீடாக 'பூமாலையாகாமல்....' என்ற நாவலை தர இருக்கின்றார். கணவரோடு கட்டாரில் வசித்து வரும் இவர் அங்கிருக்கும் தனிமை,வெறுமை மட்டுமல்லாது  வாழ்வின் பல கூறுகளையும் கவிதைகளால் மொழி பெயர்க்க முயல்கின்றார்.
இவரது படைப்புலக பணி மேலும் சுவடுகளை  பதிக்க நாமும் வாழ்த்துவோம்.






படைப்பாளி அறிமுகம் -09 - கவிஞர் மன்னார் அமுதன்


லங்கையின் இளைய தலைமுறை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவரான கவிஞர் மன்னார் அமுதன்; மன்னார் மாவட்டத்தில் சின்னக்கடை என்ற இடத்தை பிறப்பிடமாக கொண்டவர்.
கவிஞருடன் & கவிஞர் கிண்ணியா அமீர் அலி
 இளநிலை கணணி விஞ்ஞானவியல் பட்டதாரியான இவர் அமைச்சின் தகவல் தொடர்பு மற்றும் வலையமைப்புப் பிரிவில் அபிவிருத்தி உதவியாளராக கடமையாற்றி வருகின்றார்.


கவிதை, சிறுகதை, கட்டுரை, திறனாய்வு போன்ற துறைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும்  இவரின் படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகள்,சஞ்சிகைகள்  மற்றும் இணைய சஞ்சிகைகள் பலவற்றிலும் களம் கண்டுள்ளன. தனது வலைப்பூவிலும் தனது படைப்புக்களை படைத்துவருகின்றார்.



கொழும்பு தமிழ்சங்கம், மன்னார் தமிழ்சங்கம், கொழும்பு திருமறை கலாமன்ற இலக்கிய பாசறை பொறுப்பாளராகவும் மன்னார் இலக்கியவட்டத்தின் தலைவராகவும்  இருக்கும் இவர்  வானொலி, தொலைக்காட்சி கவியரங்கங்களிலும் பங்குபற்றி தனது கவிதை ஆளுமையை வெளிப்படுத்தி  வருகின்றார். இவர் மன்னார் செம்மொழி மாநாட்டின் கவியரங்கில் பாடிய கவிதை இவரது ஆளுமையை அளவிட போதுமானது.


2009இல் வெளிவந்த இவரின் முதலாவது கவிதைத் தொகுதியான   
'விட்டு விடுதலை காண்'  வெளிப்படுத்திய அதிர்வு தணிவதற்குள்  அண்மையில் 'அக்குரோணி' என்ற பெயரில் மற்றுமொரு கவிதை நூலை இலக்கிய உலகுக்கு தந்திருக்கின்றார்.மரபில் புதுமையையும் புதுமையில் மரபையும் கலந்து கவிபாடும் இவரது கவித்துவத்தையும் தனித்துவத்தையும் இத்தொகுதியில்  தரிசிக்க  முடியும்.

தனது காத்திரமான படைப்புக்கள் மூலம்  இலங்கையின் இலக்கியத்தில் முத்திரை பதித்துவரும் கவிஞர் மன்னார் அமுதனின்   படைப்புலக பணி மேலும் சுவடுகளை  பதிக்க நாமும் வாழ்த்துவோம்.!!


வியாழன், 17 மார்ச், 2011

படைப்பாளி அறிமுகம் -07- கவிஞர் வதிரி சி.ரவீந்திரன்

 
லங்கையின் படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவரான கவிஞர் வதிரி.சி.ரவீந்திரன் அவர்கள் யாழ்ப்பாணம், சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்டவர்.
கலை-இலக்கியத்தில்  தன்னை உருவாக்கிய தான் வளர்ந்த 'வதிரி'மண்ணுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தனது பெயரோடு 'வதிரி'என்ற பெயரையும் இணைத்து படைப்புக்களை படைத்து வருகின்றார்.

1970ம் ஆண்டு முதல் எழுத்துலக பயணத்தை ஆரம்பித்த இவரின் படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகள்,சஞ்சிகைகள், வானொலிகளில் களம் கண்டுள்ளன.

பாடசாலை காலத்திலிருந்தே இவருக்குள் இருந்த வந்த இடையறதா வாசிப்பும் பல சிரேஷ்ட்ட எழுத்தாளர்களோடு இருந்த தொடர்பும் இவரை சிறந்ததொரு படைப்பாளியாக பரிணமிக்க வைத்துள்ளது.
சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு- இலங்கை

கவிதை,கட்டுரை,விமர்சனம்,ஆய்வு,நேர்காணல், நாடகம்,மெல்லிசைப்பாடல் போன்றவற்றில் தனது ஆற்றலை வெளிப்படுத்திவரும் இவர் கவிஞர்  காரை செ.சுந்தரம்பிள்ளை அவர்களின் கவிதைகளினால் ஆகர்ஷிக்கப்பட்டு அவரை தன் மானசீக குருவாக கொண்டு பல அர்த்தபுஷ்டியுள்ள மரபுக்கவிதைகளை படைத்திருந்தாலும் பின்னர் ஏற்பட்ட புதுக்கவிதை வளர்ச்சியினால் புதுக்கவிதை படைப்பதிலும் ஈடுபட்டு மரபு,புதுமை இரண்டிலும் தனது ஆற்றலை வெளிபடுத்தி வருகின்றார்.

இவரின் மெல்லிசைப்பாடல்கள் பல இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகி வருகின்றன.

மரபுக் கவிதையிலே இவருக்கு இருந்த ஈடுபாடும்,அறிவும் சந்தம் நிறைந்த பல மெல்லிசை பாடல்களை எழுதுவதற்கு கைகொடுத்துள்ளது.

பத்திரிகைகளிலும்,இணையத்தளங்களிலும் இவர் எழுதியுள்ள இலங்கையின் 

மெல்லிசைத் துறை பற்றிய  ஆய்வுக்கட்டுரை இவருக்கு இருந்த மெல்லிசைத்துறை பற்றிய தேடலையும்  இவரின் அகன்ற பார்வையையும்  எடுத்துக்காட்டியுள்ளது.


தேசிய நாடக சபை உறுப்பினரான கவிஞர் வதிரி சி.ரவீந்திரன்
பல நாடகங்களில் நடித்துள்ளதோடு பல நாடகங்களை எழுதியும் இருக்கின்றார்.
இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகிய'வாலிபர் வட்டம்','பாவளம்' போன்ற காத்திரமான இலக்கிய நிகழ்ச்சிகளில் புடம்போடப்பட்ட இவர் பல கவியரங்குகளில் கலந்து கொண்டும் தலைமை வகித்தும் கவிதை பாடி ரசிகர்களின் மனதில்  என்றும் அழியாத சுவடுகளில் பதித்திருக்கின்றார்.





இவர் எழுத்துறைக்குள்  நுழைந்து நான்கு தசாப்தங்கள் கடந்திருந்தாலும் இவரது கவிதை நூல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை அந்தக் குறை சிங்கள் மொமியில் பல நூல்களை வெளியிட்டு விருதுகள் பலவற்றை வென்றெடுத்த பிரபல புத்தக வெளியீட்டு நிறுவனமான 'கொடகே' யினால் மிக விரைவில் வெளியிடப்பட இருக்கும்
'மீண்டு வந்த நாட்கள்' என்ற கவிதை நூல் மூலம் நிறைவு செய்யப்பட இருக்கின்றது.

தனது  படைப்புக்கள் மூலம்  இலங்கையின் இலக்கியத்தில் முத்திரை பதித்துவரும்
கவிஞர் வதிரி.சி.ரவீந்திரன் அவர்களின் படைப்புலக பணி மேலும் சுவடுகளை  பதிக்க நாமும் வாழ்த்துவோம்.

வியாழன், 24 பிப்ரவரி, 2011

படைப்பாளி அறிமுகம்-05- எழுத்தாளர் இரா.சடகோபன்


எழுத்தாளர்,கவிஞர் இரா.சடகோபன்
லங்கையின் மூத்த தலைமுறை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க எழுத்தாளரும் கவிஞருமான  இரா.சடகோபன் அவர்கள் நாவல் நகர் என்று சிறப்பாக அழைக்கப்படும்  மலையகத்தின் மத்தியில் இருக்கும் சிறு நகரமான நாவலபிட்டியின் அருகில் அமைந்துள்ள மொஸ்வில்ல தோட்டத்தை பிறப்பிடமாக கொண்டவர்.

மொஸ்வில்ல தோட்ட பாடசாலை,நாவலப்பிட்டிய கதிரேஷன் கல்லூரி ஆகியவற்றில் கற்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில்  புவியியல் துறையில் சிறப்புப்பட்டத்தை பெற்றதோடு இலங்கை சட்டக்கல்லூரிக்கும்  பிரவேசித்து சட்டத்தரணியாகி தன் உழைப்பால் உயர்ந்தவர்.

கவிஞராக,பத்திரிகை ஆசிரியராக,மொழி பெயர்ப்பாளராக,சமூக ஆய்வாளராக, ஓவியராக இன்று பல்துறையிலும் காலூன்றித் தடம்பதித்துள்ள  படைப்பாளியான இரா.சடகோபன்  9ஆம்  தரத்தில்  கல்வி கற்கும் காலத்திலேயே எழுத்து,கவிதை,நாடகம்,பேச்சு,வில்லுப்பாட்டு என பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர்.

1976 ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழக பொன்விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில்  தனது 17ஆவது வயதில் தேனீர் மலர்கள் என்ற கவிதைக்காக மூன்றாம் பரிசினை பெற்றதன் மூலம் கவிஞர் என்ற அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டார்.

இவரின் படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகள்,கலை-இலக்கிய சஞ்சிகைகளிலும் வெளிவந்திருக்கின்றன.விஜய் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரான இவர் தற்போது சுகவாழ்வு ஆரோக்கிய சஞ்சிகையின் ஆசிரியராகவும் செயற்பட்டு வருகின்றார்.
இவரது முதலாவது கவிதை தொகுப்பான  ''வசந்தங்களும் வசீகரங்களும்'' என்ற கவிதை நூல் 1998ம் ஆண்டு வெளிவந்தது.அன்றிலிருந்து
2002ம் ஆண்டு ''ஆயிரம் ஆண்டுகால மனிதர்கள்'' எனும் சிறுவர் இலக்கிய நூலையும்  2008ம் ஆண்டு ''உழைப்பால் உயர்ந்தவர்கள்'' என்ற மொழி பெயர்ப்பு நாவலினையும்  வெளியிட்டுள்ளார்.தற்போது ஆங்கில  வரலாற்று நாவலை  ''கசந்த கோப்பி'' எனும் பெயரில்  தமிழில் மொழி பெயர்த்து இலங்கையின் தமிழ் இலக்கியத்துக்கு வளம்சேர்த்து இருக்கின்றார்.


மலையக மக்கள் ஆய்வு மன்றத்தின் தலைவராக,மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் இணைச் செயலாளராக,தமிழ்-சிங்கள எழுத்தாளர் ஒன்றியத்தின் துணைச் செயலாளராக, மார்ட்டின் விக்கிரமசிங்க அறக்கட்டளை நிறுவனத்தின் இணைப்பாளராக செயற்பட்டு வரும்
எழுத்தாளர் இரா.சடகோபன் 35க்கும் மேற்பட்ட நூல்களுக்கு அட்டைப்படங்களையும் வரைந்துள்ளார்.
தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட கலை-இலக்கிய போட்டிகளில் வெற்றியீட்டி பலதடவை பரிசில்களை பெற்றுள்ள இவர் 1993ம் ஆண்டு சிறந்த பத்திரிகையாளருக்கான   எஸ்மன்ட் விக்கிரம சிங்க ஞாபகார்த்த ஜனாதிபதி விருதினையும் 2000ம் ஆண்டு வசந்தங்களும் வசீகரங்களும்  கவிதை நூலுக்கான மத்திய மாகாண சாஹித்திய விருதினையும் 2008ம் ஆண்டு மொழி பெயர்ப்பு நாவலுக்கான தேசிய சாஹித்திய மண்டல விருதினையும் பெற்றிருக்கின்றார்.

தனது காத்திரமான கவிதைகள் மூலமும் தனித்துவமான படைப்புக்கள் மூலம்  இலங்கையின் இலக்கியத்துறையில் முத்திரை பதித்துவரும்  எழுத்தாளர இரா.சடகோபன் படைப்புக்கள் இன்னுமின்னும் இலக்கிய உலகில் அழியாத சுவடுகளை பதிக்க நாமும் வாழ்த்துவோம்.