செவ்வாய், 19 ஜூன், 2012

எழுவாய் இல்லாத பயனிலை

 இது காதல் ''அந்தாதி''
என் கவித்துவத்தில் பாதி.....


(''அந்தாதி'' என்பது யாப்பியலில் ஒரு தொடை வகையையும், ஒரு பிரபந்த வகையையும் குறிக்கும். அந்தாதி என்னும் சொல்; முடிவு என்னும் பொருள்படும் அந்தம், தொடக்கம் என்னும் பொருள்படும் ஆதி ஆகிய இரு சமஸ்கிருதக் சொற்களின் சேர்க்கையால் உருவானது. இதற்கேற்ப, ஒரு பாடல் முடிவில் உள்ள எழுத்து, அசை, சீர், சொல்சொல் அல்லது அடி அடுத்து வரும் பாடலின் தொடக்கமாக அமையும் பாடல்களால் ஆனது அந்தாதிச் செய்யுள் ஆகும். )

அந்தாதியினை பல கவிஞர்களும் கவிதையிலே கையாண்டுள்ளனர்.சில மணிநேரத்துக்கு முன்பு பாடலாசிரியர் கார்க்கி வைரமுத்தின் வலைப்பூவில் ''பொன்மாலை பொழுது'' திரைப்படத்தில் இடம் பெற்ற ''நீ இன்றி'' என ஆரம்பிக்கும் ''அந்தாதி'' வடிவில் அமைந்த பாடலொன்றை படித்தேன் அது என்னை மிகவும் கவர்ந்தது அதன் பின்னர் எனக்குள் முளைத்த கவிதை இது..

விழிகள் இரண்டும் இறக்கைகட்டி
விடியும் வரைக்கும் பறந்தது

பறவை மனசு நினைவை சுமந்து
பள்ளிக் கூடம் அலைந்தது

அலையாய் எழுந்து நுரையாய் கலைந்த
அவளின் தெருவில் நடந்தது

 
நடந்ததெல்லாம் நாடகம்போலே
மீண்டும் என்னை கடந்தது

கடந்த கால வாழ்வின் நிழலோ
கவலை போன்றே படர்ந்தது

படபடவென்று துடித்த இதயம்
பாவம் மீண்டும் இறந்தது

இறந்தபோதும் மீண்டும் உயிர்த்து
இயேசு பிரான்போல் எழுந்தது..

எழுவாய் இல்லா பயனிலைபோலே
ஏங்கும் வகுப்பில் அழுதது..

அழுக்கைப் போலே எந்தன் அன்பை
அவளும் எறிந்ததை நினைந்தது

நினைந்து நினைந்து குலைந்து பின்னர்
நிமிர்ந்து நேராய் நடந்தது...

 
நடந்ததெல்லாம் நன்மையானதால்
நான்கு திசையும் விழித்தது...!!


19.6.12

சனி, 16 ஜூன், 2012

''தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பே இல்லை''


   நான் திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமாகும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் ''நான்'' திரைப்படம் பற்றி இலங்கையின் பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் இவை. செய்திகளை வெளியிட்ட அனைத்து பத்திரிகைகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

  • வீரகேசரி
  • தினக்குரல்
  • தினகரன் வாரமஞ்சரி
  • உதயசூரியன்
  • மித்திரன் வாரமலர்
  • தினமுரசு
  • சுடர்ஒளி

                                          
   தினகரன் வாரமஞ்சரி 17/6/12

உதயசூரியன்-01
உதயசூரியன்-02

மித்திரன் வாரமலர்
தினமுரசு வாரமலர்
நன்றி நவமணி

தினக்குரல்
வீரகேசரி
சுடர்ஒளி
வீரகேசரி

வெள்ளி, 15 ஜூன், 2012

என்னை அடையாளப்படுத்திய ''இசை இளவரசர்கள்'''

கவிதை எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்தே நான் பாடல் எழுதிக் கொண்டிருந்தாலும் என்னை சரியாக நெறிப்படுத்தி பட்டை தீட்டி முழு இலங்கைக்கும் என்னை அடையாளப்படுத்தியது சக்தி Tv யினால் 2008ஆம் ஆண்டு நடத்தப்பட்ட "இசை இளவரசர்கள்'' நிகழ்ச்சியென்றால் மிகையில்லை. அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளராக இருந்த ஷியாவுக்கு இவ்வேளையில் நான் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் தென்னிந்திய திரைப்பட பாடலாசிரியர்களை இசையமைப்பாளர்களை இயக்குநர்களை சந்திக்கும் வாப்பு எனக்கும் கிட்டியது. எமது ஹம்சத்வனி குழுவுக்கு இயக்குநர் ஏ.வெங்கடேஷ் பாடல் உருவாகும் கதைச்சூழலை சொல்லியிருந்தார். இசையமைப்பாளர் பரத்வாஜ் கதைக்கு இசையமைக்க வேண்டிய நுணுக்கங்களை சொல்லித்தந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் பாடலாசிரியர்களான பா.விஜ, நா.முத்துக்குமார், சினேகன், விவேகா போன்றோர்களை சந்தித்து பாடல் எழுதும் நுட்பம் பற்றி என்னால்கற்க முடிந்தது. 
 
மோகனின் இசையில் எனது வரிகளுக்கு ரணில் மற்றும் சுவர்ணியா ஆகியோர் "வா வா அன்பே நீ வா...' என ஆரம்பிக்கும் பாடலை உருவாக்கினோம். அதுவே ஒலி ஒளி வடிவில் வெளிவந்த எனது முதல் பாடலாகும்.அதன் பின்னர் கந்தப்பு ஜெயந்தனின் இசையில் நான் எழுதிய "எங்கோ பிறந்தவளே' என ஆரம்பிக்கும் பாடல் சர்வதேசமெங்கும் மிகுந்த வரவேற்பை பெற்று பலரதும் கைதட்டல்களை எமக்கு பெற்றுத்தந்தது. டிரோன் பெர்ணான்டோ, நலிந்த, ராஜ் தில்லையம்பலம், ஆனந்த், விமல்ராஜா, வேரணன் சேகரம், காதல்வைரஸ் போன்ற நம் நாட்டு இசைக் கலைஞர்களோடும் புலம்பெயர் கலைஞர்களோடும் நான் பணியாற்றியுள்ளேன்.
 
இசையமைப்பாளர் டிரோனின் இசையில் நான் எழுதிய "புறப்படு தோழா' பாடல் வியர்வையின் ஓவியம் நிகழ்வில் முதலாமிடம் பெற்று 2010ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியருக்கான விருதினை எனக்கு பெற்றுக் கொடுத்தது.அதே போன்று 2011ஆம் ஆண்டு வியர்வையின் ஓவியம் நிகழ்வில் ஜெயந்தனின் இசையில் நான் எழுதிய "எங்கோ பிறந்தவளே' மீண்டும் சிறந்த பாடலாசிரியருக்கான விருதினை எனக்கு பெற்றுத்தந்தது. அதன் பிறகு ஜெயந்தனின் இசையில் நான் எழுதிய ‘காந்தள் பூக்கும் தீவிலே’ பாடலை தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் புலம் பெயர்ந்த நம்மவர்கள் என பலரும் பெரிதாகப் பாராட்டினார்கள். 
 
பாடலை ஜெயந்தனுடன் சேர்ந்து அவரது சகோதரி ஜெயப்பிரதா பாடியிருந்தார். இந்தப் பாடலை ரசித்து இயக்குநர் ஏ.வெங்கடேஷ் அவரது அடுத்த படத்தில் எனக்கு வாப்புத் தருவதாக சொல்லியிருந்தார். சில உள்ளூர் வானொலிகள் எமது இந்தப் பாடலை கண்டுகொள்ளாத நிலையில் வெற்றி வானொலி ‘விடியல்’ நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியது. ஆனால் புலம்பெயர் நாடுகளில் இந்தப் பாடல் ஒலிக்காத வானொலி நிலையங்கள் இல்லை என்றே சொல்லலாம். அந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எமது பாடலை ஒலிபரப்பின. எமது நாட்டு ரசிகர்கள் இந்தப்பாடலை கேட்காமல் இருப்பது துரதிர்ஷ்டமே. 
youtube இணையத்தளத்தில் இந்தபாடலை ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் பார்வையிட்டுள்ளனர். இலங்கையில் வெளிவந்த தமிழ் பாடல்களில் அதிக ரசிகர்கள் பார்வையிட்ட பாடல் என்ற சாதனையும் இப்பாடல் நிகழ்த்தியுள்ளது.
 
இதன் பிறகு திரைப்படத்தில் பாடல் எழுதுவது, முதலாவதாக எனக்கு ‘பனைமரக்காடு’ திரைப்படத்தின் மூலமே சாத்தியமானது. இயக்குநர் கேசவாஜின் இயக்கத்தில் விமல்ராஜாவின் இசையில் ‘உயிரிலே’ என ஆரம்பிக்கும் பாடலை எழுதியிருந்தேன். இந்தப்பாடலை பின்னணி பாடகர் ஆனந்த் பாடியிருந்தார்.
 
அதன்பிறகு பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் விஜ அன்ரனியின் இசையில் ‘நான்’ என்ற திரைப்படத்தில் பாடல் எழுதியுள்ளேன். இந்தப் பாடலில் எனக்கு வாப்பு கிடைத்தது சர்வதேச ரீதியாக வைத்த போட்டி ஒன்றின் மூலமே ஆகும்.
 
இசையமைப்பாளர் விஜ அன்ரனி பல புதிய பாடகர்களை பாடலாசிரியர்களை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர். எனவே தான் தயாரித்து, இசையமைத்து, கதாநாயகனாக அறிமுகமாகும் ‘நான்’ திரைப்படத்தில் புதிய பாடலாசிரியரை அறிமுகம் செயும் நோக்கோடு தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் இணையத்தளங்கள் வாயிலாக ஒரு போட்டி ஒன்றை அறிவித்திருந்தார். போட்டியில் வெற்றி பெறுபவர் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவருக்கு வாப்பளிப்பதாக அறிவித்திருந்தார். அவரால் வழங்கப்பட்ட கதைசூழல், இசைக்கேட்ப நானும் பாடலை எழுதி அனுப்பியிருந்தேன். பல மாதங்கள் கடந்தும் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை திடீரென ஒருநாள் எனக்கு அழைப்பை ஏற்படுத்தி வாழ்த்து சொன்ன அவர் போட்டியில் நான் வெற்றியீட்டியதாக அறிவித்ததோடு உடனே சென்னைக்கு வருமாறு அழைத்திருந்தார். 
 
நான் சென்னை சென்று இரண்டு நாட்கள் அவரோடு தங்கியிருந்து முழுப்பாடலையும் எழுதிக் கொடுத்துவிட்டு வந்திருக்கின்றேன். பாடல் வெளியீட்டு விழா மிகவிரைவில் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது. அதற்கும் என்னை அழைக்க இருக்கின்றனர். விஜ அன்ரனி பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். கடின உழைப்பாளி. தனது ஒவ்வொரு இரவையும் பகலாக்கி உழைத்ததினால்தான் இன்று அவரால் முன்னணி இசையமைப்பாளர்கள் வரிசையில் இடம்பிடிக்க முடிந்துள்ளது. 
 
தெரிந்தவர்களையே தெரியாது என்று கூறும் வறட்டு சிந்தனையுள்ள படைப்பாளிகளுக்கு மத்தியில் அவர் பண்பாளர். அவரோடு பணிபுரிந்த அந்த இரண்டு நாட்களும் என் வாழ்வில் மறக்கமுடியாத அழகிய நாட்கள்.
‘நான்’ திரைப்படம் என்னைப்போன்று முன்னேறத்துடிக்கும் இளைஞனின் கதை. முற்றிலும் மாறுபாடான கதைக்களம். நான் நிச்சயம் வெற்றிபெறும். இத்திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரைத்துறையில் எனக்கு மட்டுமல்ல இலங்கை கலைஞர்கள் பலருக்கும் கதவு தானாக திறக்கும் என்று நான் எதிர்பார்க்கின்றேன்.
 
நன்றி ''உதய சூரியன்''

விஜய் ஆண்டனியின் ''நான்'' படத்தில் இலங்கையரின் பாடல் வரிகள்.


டைகள் பல தகர்த்தெறிந்து தானும் மண்ணின் மைந்தன் என மார் தட்டிக்கொள்ளும் அளவிற்கு தன்னுடன் சேர்த்து இலங்கையின் புகழையும் பாரினில் பரவ துடிக்கும் 'இசை இளவரசர்கள்'' புகழ் கவிஞர் பொத்துவில் அஸ்மின், தென்னிந்திய திரைப்படத்துறையில் ஜீவா சங்கரின் இயக்கத்தில் உருவாகும் 'நான்' திரைப்படத்தின் தயாரிப்பாளரும் நாயகனுமான முன்னணி இசையமைப்பாளர் விஜய் அன்டனியின் இசையில் பாடல் ஒன்றை எழுதி எம்மவரின் படைப்புக்களின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்று நாட்டுக்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.

இந்திய  சினிமாவில் தனது பாடலுக்கும் ஓர் அங்கீகாரம்     கிடைத்துள்ளதையிட்டு பெரும் சநதோஷத்துடனான வெற்றிக்களிப்பில் இருக்கும் அவர் விஜய் அன்டனி மற்றும் தனது வாய்ப்பு பற்றி எம்முடன் பகிர்ந்துக்கொண்ட விடயங்களை எமது வாசகர்களுக்காக தொகுத்து தருகின்றோம்.

 திரைப்படத்தில் பாடல் எழுதுவது முதலாவதாக எனக்கு 'பனைமரக்காடு'' திரைப்படத்தின் மூலமே சாத்தியமானது செவ்வேளின் தயாரிப்பில் இயக்குனர் கேசவாஜின் இயக்கத்தில் விமல்ராஜாவின் இசையில் 'உயிரிலே..''; என ஆரம்பிக்கும் பாடலை எழுதியிருந்தேன் பாடலை பின்னணி பாடகர் ஆனந்த் பாடியிருந்தார். அதன்பிறகு விஜய் அன்டனியின் இசையில் 'நான்'' என்ற திரைப்படத்தில் பாடல் எழுதியுள்ளேன். இந்தப்பாடலில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது சர்வதேச ரீதியாக வைத்த போட்டி ஒன்றின் மூலமே ஆகும்.

இசையமைப்பாளர் விஜய் அன்டனி அவர்கள் பல புதிய தலைமுறை பாடகர்களை, பாடலாசிரியர்களை அறிமுகப் படுத்திய பெருமைக்குரியவர் அவர் கதாநாயகனாக அறிமுகமாகும் 'நான்'' திரைப்படத்தில் புதிய பாடலாசிரியரை அறிமுகம் செய்யும் நோக்கோடு தென்னிந்திய ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள் வாயிலாக பாடல் இயற்றல் போட்டி ஒன்றை அறிவித்திருந்தார் பாடலுக்கான மெட்டினை அவரது இணையத்தளத்தில் இட்டிருந்ததோடு பாடல் உருவாகும் கதைச்சூழலையும் குறிப்பிட்டிருந்தார்.அத்தோடு வெற்றி பெறுபவர் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவருக்கு வாய்ப்பளிப்பதாக அறிவித்திருந்தார். அவரால் வழங்கப்பட்ட கதைச்சூழல், இசைக்கேட்ப நானும் பாடலை எழுதி அனுப்பியிருந்தேன்.

பல மாதங்கள் கடந்தும் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை திடீரென ஒருநாள் எனக்கு அழைப்பை ஏற்படுத்தி வாழ்த்து சொன்ன அவர் போட்டியில் நான் வெற்றியீட்டியதாக அறிவித்ததோடு உடனே சென்னைக்கு வருமாறு அழைத்திருந்தார். நான் கடந்த மார்ச் மாதம் சென்னை சென்று இரண்டு நாட்கள் அவரோடு தங்கியிருந்து முழுப்பாடலையும் எழுதிக்கொடுத்துவிட்டு வந்திருக்கின்றேன். பாடல் வெளியீட்டு விழா மிகவிரைவில் பிரமாண்ட முறையில் நடைபெறவுள்ளது.

விஜய் அன்டனி பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். கடின உழைப்பாளி தனது ஒவ்வொரு இரவையும் பகலாக்கி உழைத்ததினால்தான் இன்று அவரால் முன்ணணி இசையமைப்பாளர்கள் வரிசையில் அவரால் இடம்பிடிக்க முடிந்துள்ளது.

அவரோடு பணிபுரிந்த அந்த இரண்டு நாட்களும் என் வாழ்வில் மறக்கமுடியாத அழகிய நாட்கள். 'நான்'' திரைப்படம் என்பது முன்னேறத்துடிக்கும் இளைஞனின் கதை. முற்றிலும் மாறுபாடுடைய ஒரு கதைக்களம். 'நான்' நிச்சயம் வெற்றிபெறும் என்று எதிர்ப்பார்க்கின்றேன். இத்திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் எனக்கு மட்டுமல்ல இலங்கை கலைஞர்கள் பலருக்கும் கதவு தானாக திறக்கும் என்று எதிர்பார்க்கின்றேன்.

நான் எழுதியுள்ள பாடல் தத்துவார்த்தமான பாடல் இன்றைய காலகட்டத்தின் யதார்த்தத்தை பாடலில் பதிவு செய்துள்ளேன். வாழ்வில் முன்னேறத் நினைக்கும் ஒருவன் நேரான பாதையில் தனது பயணத்தை ஆரம்பிக்கின்றான் அவன் போகும் பாதை எங்கும் தடைகளே அதிகம் இருக்கின்றன. எனவே, தப்பு செய்து முன்னேறுகின்றான் அவன்

செய்யும் தப்பு தப்பாக இருந்தாலும் அதனை பார்க்கின்ற மனிதர்களுக்கு தப்பாக அது தோன்றவில்லை அது சரியாகவே இருக்கின்றது. அந்த சூழலில் 'தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பு இல்லை' என்று பாடலின் பல்லவி ஆரம்பிக்கின்றது. இந்த பாடலின் சரணங்களுக்காக சுமார் 50 பாடலுக்குரிய வரிகளை எழுதி இருப்பேன் இறுதியாக 2 சரணங்கள் தெரிவாகியது.

என தனது பாடல்களை பற்றி விவரித்துக்கொண்டிருந்தர் மெல்ல அவரது கவிதை வாழ்கைப் பக்கம் பற்றிப் பேசும் போது,
இலங்கையின் தென்கிழக்கு பிராந்தியத்தில் நாட்டார் பாடல்களின் விளைநிலங்களில் ஒன்றாக விளங்கும் பொத்துவில்தான் நான் பிறந்த இடம்.நான் பொத்துவிலை சேர்ந்தவன் என்று சொல்லிக்கொள்வதில் மிகவும் பெருமைப்படுகின்றேன். நகரத்தின் புகையை குடித்து வாழ்பவர்களை விட கிராமத்தின் புழுதியை குடித்து வளர்பவர்களுக்கு நன்றாகவே கவிதை வரும். என் கிராமமே அழகிய கவிதை அதை வாசிக்க வாசிக்க நானும் கவிஞனாக மாறிவிட்டேன். ஒரு கவிஞனை கற்பித்து வளர்க்க முடியாது. ஒருவன் கவிஞனாக மிளிர்வதற்கு கருவிலே திருவாக வேண்டும்.ஆரம்பத்தில் கவிதைகளோடு கைகுலுக்கிக்கொண்ட நான்  பலதுறைகளிலும் பயணிக்க ஆரம்பித்தேன். என்னுடைய படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகள்  சஞ்சிகைகள் மட்டுமல்லாது சர்வதேச தமிழ் சஞ்சிகைகள் இணைய இலக்கிய இதழ்கள் பலவற்றிலும் களம் கண்டுள்ளன.

 இன்று பாடல் எழுதுவதற்கு பலரும் ஆர்வமாக உள்ளார்கள். இன்றைய இசையமைப்பாளர்கள் போடும் மெட்டுக்குத்தான் நாம் வரிகளை எழுதவேண்டி இருக்கின்றது. எனவே வரிகளை இசைக்கேட்ப எழுதுவதற்கு நிறையவே பயிற்சி வேண்டும். எமக்கு முன்பு வாழ்ந்து மறைந்த படைப்பாளிகளை நன்றாக வாசிக்கவேண்டும். அவர்களது படைப்புக்களின் வெற்றியை நாம் ஆய்ந்து எமக்கென்றொரு புதிய பாதை வகுத்து செயல்படவேண்டும். இன்று நாட்டை ஆள்பவர்களும் பாட்டை ஆள்பவர்களும் கிராமத்திலே இருந்து நகரத்து வந்தவர்களே. முயற்சி மெய்வருந்தக் கூலிதரும் என்று சொல்வார்கள் எனவே வாழ்வில் முயற்சி செய்தால் முடியாதது ஒன்றுமே இல்லை. 

நன்றி ''வீரகேசரி''

வியாழன், 7 ஜூன், 2012

மித்திரன் வாரமலரில் இடம்பெற்றுள்ள பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மினின் நேர்காணல்

வசந்தம் TVயில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் பணிபுரியும் கவிஞர் அஸ்மின் ஈழத்தில் மரபுக் கவிதை எழுதி வரும் இளம் கவிஞர்களுள் முக்கிய கவிஞராகவும், திரைப்பட பாடலாசிரியராகவும்,அறியப்பட்டு வருகின்றார். சக்திTVயினால் நடாத்தப்பட்ட'இசை இளவரசர்கள்' போட்டி நிகழ்ச்சி மூலம் பாடலாசிரியராக அறிமுகமான இவர்,தேசியமட்ட கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு ஜனாதிபதி விருது(2001),பேராதனை பல்கலைக்கழகத்தின் தங்கப் பதக்கம் (2003) பெற்றுள்ளதோடு 2 முறை சிறந்த பாடலாசிரியருக்கான விருது (2010,2011) அகஸ்தியர் விருது (2011), உட்பட 10க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.
சுபாசெவ்வேளின் தயாரிப்பில் இயக்குனர் கேசவராஜின் இயக்கத்தில் வெளிவரவுள்ள ''பனைமரக்காடு'' தமிழ் திரைப்படத்தில் பாடல்களை எழுதியிருக்கும் இவர் ஜீவா சங்கரின் இயக்கத்தில் விஜய் அன்டனியின் நடிப்பில் வெளிவரவுள்ள ''நான்'' திரைப்படத்தில்  இசையமைப்பாளர் விஜய் அன்டனியின் இசையில் பாடல் எழுதியுள்ளார்.


1. இந்திய திரைப்படம் ஒன்றிற்கு பாடல் எழுதும் வாய்ப்பினை எப்படி பெற்றீர்கள்?

திரைப்படத்தில் பாடல் எழுதுவது முதலாவதாக எனக்கு 'பனைமரக்காடு' திரைப்படத்தின் மூலமே சாத்தியமானது.செவ்வேளின் தயாரிப்பில் இயக்குனர் கேசவாஜின் இயக்கத்தில் விமல்ராஜாவின் இசையில் 'உயிரிலே..' என ஆரம்பிக்கும் பாடலை எழுதியிருந்தேன். இந்தப்பாடலை தென்னிந்திய பின்னணி பாடகர் ஆனந்த் பாடியிருந்தார். அதன்பிறகு இவ்வருடம் பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் இசையில் 'நான்' என்ற திரைப்படத்தில் பாடல் எழுதியுள்ளேன்.இந்தப்பாடலில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது சர்வதேச ரீதியாக வைத்த போட்டி ஒன்றின் மூலமே ஆகும்.

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்கள் பல புதிய தலைமுறை பாடகர்களை,பாடலாசிரியர்களை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.எனவே, தான் தயாரித்து இசையமைத்து கதாநாயகனாக அறிமுகமாகும் 'நான்' திரைப்படத்தில் புதிய பாடலாசிரியரை அறிமுகம் செய்யும் நோக்கோடு தென்னிந்திய தொலைக்காட்சிகள் மற்றும் இணையத்தளங்கள் வாயிலாக ஒரு போட்டி ஒன்றை அறிவித்திருந்தார். போட்டியில் வெற்றி பெறுபவர் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவருக்கு வாய்ப்பளிப்பதாக அறிவித்திருந்தார்.அவரால் வழங்கப்பட்ட கதைச்சூழல், இசைக்கேட்ப நானும் பாடலை எழுதி அனுப்பியிருந்தேன்.பல மாதங்கள் கடந்தும் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை திடிரென ஒருநாள் எனக்கு அழைப்பை ஏற்படுத்தி வாழ்த்து சொன்ன அவர் போட்டியில் நான் வெற்றியீட்டியதாக அறிவித்ததோடு உடனே சென்னைக்கு வருமாறு அழைத்திருந்தார். நான் கடந்த மார்ச் மாதம் சென்னை சென்று இரண்டு நாட்கள் அவரோடு தங்கியிருந்து முழுப்பாடலையும் எழுதிக்கொடுத்துவிட்டு வந்திருக்கின்றேன்.பாடல் வெளியீட்டு விழா மிகவிரைவில் பிரமாண்ட முறையில் நடைபெறவுள்ளது.அதற்கும் என்னை அழைக்க இருக்கின்றனர்.

2. அந்தப் பாடல் பற்றி...

'நான்' திரைப்படம் என்னைப் போன்று முன்னேறத்துடிக்கும் இளைஞனின் கதை முற்றிலும் மாறுபாடான கதைக்களம்.நான் நிச்சயம் வெற்றிபெறு ம் இத்திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய  திரையுலகம் இலங்கையை திரும்பிப்பார்க்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அது தத்துவார்த்தமான பாடல் இன்றைய காலகட்டத்தின் யதார்த்தத்தை பாடலில் நான் பதிவு செய்துள்ளேன்.வாழ்வில் முன்னேறத் நினைக்கும் ஒருவன் நேரான பாதையில் தனது பயணத்தை ஆரம்பிக்கின்றான் அவன் போகும் பாதை எங்கும் தடைகளே அதிகம் இருக்கின்றன.எனவே, தப்பு செய்து முன்னேறுகின்றான் அவன் செய்யும் தப்பு தப்பாக இருந்தாலும் அதனை பார்க்கின்ற மனிதர்களுக்கு தப்பாக அது தோன்றவில்லை அது சரியாகவே இருக்கின்றது.அந்த சூழலில்  'தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பு இல்லை'என்று பாடலின் பல்லவி ஆரம்பிக்கின்றது.இந்த பாடலின் சரணங்களுக்காக சுமார் 50 பாடலுக்குரிய வரிகளை எழுதி இருப்பேன் இறுதியாக 2 சரணங்கள் தெரிவாகியது.

3. இந்தியாவில் புதிய புதிய கவிஞர்கள் உருவாகிக்கொண்டிருக்கும் நிலையில் உங்கள் கவிதை வரிகள் அவர்களை ஈர்க்கும் என எதிர்பார்த்தீர்களா?

 நிச்சயமாக எதிர்பார்த்தேன்.தேசிய மட்டத்தில் நடைபெற்ற பல போட்டிகளில் வெற்றியீட்டி அனுபவமும் எனக்குள் நம்பிக்கை விதைகளை நட்டுச்சென்றது.மேலும் இந்திய கவிஞர்களுக்கு இலங்கையில் உள்ள கவிஞர்கள் ஒருபோதும் சோடைபோனவர்களல்ல.வாய்ப்புக்கிடைத்தால் வரலாற்றை புரட்டிப்போடுகின்ற வலிமை இலங்கை கவிஞர்களின் பேனாவுக்கு இருக்கிறது.அங்கே அவர்கள் மையைத் தொட்டு எழுதிய போது இங்கே ரத்தத்தில் நனைத்து எழுதியவர்கள் எமது படைப்பாளிகள்.அந்த வழியில் நான் வெறும் வார்த்தைகளை விதைப்பவன் அல்ல வாழ்க்கையை உழுபவன்  வலிகளுக்கு வழிகள் சொல்கின்ற வாண்மை எனது எழுத்துக்கு இருக்கின்றது நான் நம்பகின்றறேன்.


4. உங்கள் கவிதை வரிகளை இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு அனுப்பிவைத்த பின்னர் எதிர்பார்ப்போடு காத்திருந்தீர்களா?அல்லது நீங்கள் இதனை எதிர்பார்க்கவே இல்லையா?

'நீ எதுவாக ஆக நினைக்கின்றாயோ  அதுவாகவே மாறிவிடுகின்றாய் ' என்று சொல்வார்கள்.அந்தவகையில் நான் இந்த போட்டியில் முதன்மை நிலைபெறவேண்டும் என்றே நினைத்தேன். வெற்றி கிடைத்தது.பாடலை எழுதி முடித்தவுடன் எனக்குள் பாடல் தெரிவாகும் என்ற நம்பிக்கை எனக்குள் அதிகரித்தது.என்றாலும் சில சந்தேகங்கள் இருந்தது பல்லாயிரக்கணக்கான பாடல்களுக்குள் என்னுடைய பாடலை அவர் சரியாக பார்ப்பாரா என்று மனசு அலைபாய்ந்தது எனவே 'வந்தா மஸ்தான் போன சுல்தான்' என்ற நிலையில் இருந்து விட்டேன்.பாடலை எழுதி முடித்துவிட்டு நண்பர்கள் சிலரிடம் காட்டினேன் பாடல் தரமாக இருக்கின்றது நிச்சயமாக வெற்றிபெறும் என்று உற்சாக மூட்டினார்கள்.ஆனால் முடிவை ஜனவரி முதலாம் திகதி அறிவிப்பதாக அவர் அறிவித்திருந்தார் முடிவு வெளியாகததால் சோர்ந்து போயிருந்தேன் மார்ச் மாதம் 5ம் திகதி திடிரென விஜய் ஆண்டனி தொலைபேசியில் அழைத்து வெற்றி பெற்றதை அறித்தவுடன் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.எனது உழைப்பும் நம்பிக்கையும் வெற்றி பெற்றது.

5. கவிதைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன என அறிந்த பின்னரான உங்களது மனப்பாண்மை எவ்வாறு இருந்தது?
மகிழ்ச்சியாக இருந்தது.இன்னும் என் எழுத்தின் மீதான நம்பிக்கை எனக்கு அதிகரித்தது.நான் இன்று கண்டிருக்கும் ஒவ்வொரு வெற்றிப்படிகளும் நேற்று நான் கண்ட கனவுகளே.வாழ்வில் ஜெயிக்கவேண்டும் என்றால் போராடவேண்டும்.நான் ஜெயிக்க பிறந்தவன் போராடிக் கொண்டே இருப்பேன்.

6. உங்கள் கவிதைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன என அறிந்த பின்னரான ஆதரவுகள் வரவேற்புகள் எவ்வாறு உள்ளன.

முகநூலில் பல்லாயிரக்கணக்கானோர் பாராட்டினார்கள்.புலம்பெயர் நாடுகளில் உள்ள எமது உறவுகள் தொலைபேசி மூலம் வாழ்த்தினார்கள்.இணையத் தளங்கள் உள்ளூர் ஊடகங்கள் என பலர் எனது செய்திகளை பிரசுரித்து என்னை ஊக்கப்படுத்தினார்கள்.அவர்களுக்கு நன்றி சொல்ல இவ்வேளையில் கடமைப்பட்டுள்ளேன்.

7. இலக்கிய துறையில் எதிர்கால திட்டங்கள்.

2001, 2002 ம் ஆண்டுகளில் 'விடைதேடும் வினாக்கள்', 'விடியலின் ராகங்கள்' என இரண்டு கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன.எனது 3வது கவிதை நூலான 'ரத்தம் இல்லாத யுத்தம்' மிகவிரைவில் வெளிவர இருக்கிறது.நூலின் அணிந்துரையை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். இதில் அடங்கியுள்ள கவிதைகளை ஆங்கிலத்திதில் கலாபூஷணம் கவிஞர் மீஆத் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார்.இந்த நூல் வெளிவருவதற்கான முழுப்பொறுப்பினையும் லண்டனில் உள்ள என்னுடைய நண்பர் அருளினி சிவனேஷன் அவர்கள் ஏற்றிருக்கின்றார் நூல் இருமொழிகளிலும் மிகச்சிறப்பாக தயாராகிக்கொண்டிருக்கிறது நான் அதனால் தாயாராகிக்கொண்டிருக்கின்றேன்.

8. உங்களுடை வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகள் ஏதாவது உண்டா?

என்னுடைய வாழ்வில் மறக்கமுடியதா நிகழ்வுகள் பல இருக்கின்றன.2001ம் ஆண்டு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவினால் கிடைக்கப் பெற்ற விருது அதன் பிறகு மலேசியாவில் மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் இடம்பெற்ற சர்வதேச கவியரங்கில் கவிக்கோ அப்துல்ரஹ்மான் தலைமையில் சிறப்பாக கவிதைபாடி அவரது பாராட்டினை பெற்றுக்கொண்டது.அந்த நிகழ்வினை பற்றி மலேசியாவில் தமிழ் ஊடகங்களும் பாராட்டி எழுதியிருந்தன.இலங்கையின் நீதியமைச்சர் ரவூப்ஹக்கீம் உட்பட பல முக்கியஸ்தர்கள் என்கவிதா ஆற்றுகைக்கு  பாராட்டு தெரிவித்திருந்தார்கள்.எனக்கு கிடைத்த அந்த அரிய வாய்ப்பை சரியாக பயன்படுத்தியதன் விளைவாக இலங்கையிலும் பல தடவை என்னை கௌரவித்திருந்தார்கள்.

9. உங்கள்  காந்தள் பூக்கும் என்ற பாடல் சர்வதேச தமிழ் வானொலியெங்கும் ஒலிப்பதாக அறிந்தோம் அது பற்றி சொல்லுங்கள்.

 2010ம் ஆண்டு கந்தப்பு ஜெயந்தனின் இசையில் நான் எழுதிய எங்கோ பிறந்தவளே என ஆரம்பிக்கும் பாடல் சர்வதேசமெங்கும் மிகுந்த வரவேற்பை பெற்று பலரதும் கைதட்டல்களை எமக்க பெற்றுத்தந்து.
அதன்பிறகு ஜெயந்தனின் இசையில் நான் எழுதிய ஒரு பாடலை தென்னிந்திய திரைப்பட இயக்குனர்கள் புலம்பெயர்ந்த நம்மவர்கள் என பலரும் பெரிதாகப் பாராட்டினார்கள்.அந்தப்பாடல்தான் காந்தள்பூக்கும் தீவிலே என்ற பாடலாகும்.இந்தப்பாடலை ஜெயந்தனுடன் சேர்ந்து அவரது சகோதரி ஜெயப்பிரதா பாடியிருந்தார்.இந்தப்பாடலை ரசித்து இயக்குனர் .வெங்கடேஷ் அவரது அடுத்த படத்தில் எனக்கு வாய்ப்புத் தருவதாக சொல்லியிருந்தார்.உள்ளுர் வானொலிகள் எமது இந்தப் பாடலை கண்டுகொள்ளதா நிலையில் வெற்றி  வானொலி விடியல் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியது. ஆனால் புலம்பெயர் நாடுகளில் இந்த பாடல் ஒலிக்காத வானொலி நிலையங்கள் இல்லை என்றே சொல்லலாம். அந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எமது பாடலை ஒலிபரப்பின. எமது நாட்டு ரசிகர்கள் இந்தப்பாடலை கேட்காமல் இருப்பது துரதிஷ்டமே.Youtube இணையத்தளத்தில் இந்தபாடலை ஒருலட்சத்துக்கும் அதிகமான  ரசிகர்கள் பார்வையிட்டுள்ளனர்.இலங்கையில் வெளிவந்த தமிழ் பாடல்களில் அதிக ரசிகர்கள் பார்வையிட்ட ஒரு பாடல் என்ற சாதனையும் இப்பாடல் நிகழ்த்தியுள்ளது.


10.புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் இளம் கலைஞர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?

இன்று பாடல் எழுதுவதற்கு பலரும் ஆர்வமாக உள்ளார்கள்.இன்றைய இசையமைப்பாளர்கள் போடும் மெட்டுக்குத்தான் நாம் வரிகளை எழுதவேண்டி இருக்கின்றது.எனவே வரிகளை இசைக்கேட்ப எழுதுவதற்கு நிறையவே பயிற்சி வேண்டும். எமக்கு முன்பு வாழ்ந்து மறைந்த படைப்பாளிகளை நன்றாக வாசிக்கவேண்டும். அவர்களது படைப்புக்களின் வெற்றியை நாம் ஆய்ந்து எமக்கென்றொரு புதிய பாதை வகுத்து செய்படவேண்டும். இன்று நாட்டை ஆள்பவர்களும் பாட்டை ஆள்பவர்களும் கிராமத்திலே இருந்து நகரத்து வந்தவர்களே.முயற்சி மெய்வருந்தக் கூலிதரும் என்று சொல்வார்கள் எனவே வாழ்வில் முயற்சி செய்தால் முடியாதது ஒன்றுமே இல்லை.
வாசி வாசிக்கப்படுவாய்! எழுது எழுதப்படுவாய்!