செவ்வாய், 19 ஜூன், 2012

எழுவாய் இல்லாத பயனிலை

 இது காதல் ''அந்தாதி''
என் கவித்துவத்தில் பாதி.....


(''அந்தாதி'' என்பது யாப்பியலில் ஒரு தொடை வகையையும், ஒரு பிரபந்த வகையையும் குறிக்கும். அந்தாதி என்னும் சொல்; முடிவு என்னும் பொருள்படும் அந்தம், தொடக்கம் என்னும் பொருள்படும் ஆதி ஆகிய இரு சமஸ்கிருதக் சொற்களின் சேர்க்கையால் உருவானது. இதற்கேற்ப, ஒரு பாடல் முடிவில் உள்ள எழுத்து, அசை, சீர், சொல்சொல் அல்லது அடி அடுத்து வரும் பாடலின் தொடக்கமாக அமையும் பாடல்களால் ஆனது அந்தாதிச் செய்யுள் ஆகும். )

அந்தாதியினை பல கவிஞர்களும் கவிதையிலே கையாண்டுள்ளனர்.சில மணிநேரத்துக்கு முன்பு பாடலாசிரியர் கார்க்கி வைரமுத்தின் வலைப்பூவில் ''பொன்மாலை பொழுது'' திரைப்படத்தில் இடம் பெற்ற ''நீ இன்றி'' என ஆரம்பிக்கும் ''அந்தாதி'' வடிவில் அமைந்த பாடலொன்றை படித்தேன் அது என்னை மிகவும் கவர்ந்தது அதன் பின்னர் எனக்குள் முளைத்த கவிதை இது..

விழிகள் இரண்டும் இறக்கைகட்டி
விடியும் வரைக்கும் பறந்தது

பறவை மனசு நினைவை சுமந்து
பள்ளிக் கூடம் அலைந்தது

அலையாய் எழுந்து நுரையாய் கலைந்த
அவளின் தெருவில் நடந்தது

 
நடந்ததெல்லாம் நாடகம்போலே
மீண்டும் என்னை கடந்தது

கடந்த கால வாழ்வின் நிழலோ
கவலை போன்றே படர்ந்தது

படபடவென்று துடித்த இதயம்
பாவம் மீண்டும் இறந்தது

இறந்தபோதும் மீண்டும் உயிர்த்து
இயேசு பிரான்போல் எழுந்தது..

எழுவாய் இல்லா பயனிலைபோலே
ஏங்கும் வகுப்பில் அழுதது..

அழுக்கைப் போலே எந்தன் அன்பை
அவளும் எறிந்ததை நினைந்தது

நினைந்து நினைந்து குலைந்து பின்னர்
நிமிர்ந்து நேராய் நடந்தது...

 
நடந்ததெல்லாம் நன்மையானதால்
நான்கு திசையும் விழித்தது...!!


19.6.12
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

3 கருத்துகள்:

கருத்துரையிடுக