ஆறாவது விரல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆறாவது விரல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 23 மார்ச், 2011

உலகக்கோப்பையை வென்ற 'சுனாமி'...!

 ஆடும்மனிதன் ஆட்டம்காண அலைகளொன்றாய் கூடின!
ஆசைதீர பூமிப்பந்தை அடித்துவிளை யாடின!
ஆடுமாடு கோழிபூனை அழுதுகண்ணை மூடின!
ஆறுகுளங்கள் நதிகள்சேர்ந்து ஊழிப்பாடல் பாடின!

மேடுபள்ளம் பாய்ந்தவெள்ளம் மேலெழுந்து சென்றன!
மேகக்கூட்டம் வானைப்பார்த்து பாவம்பூமி என்றன!
பாடுபட்டு சேர்த்தவற்றை பகிர்ந்து அலைகள் தின்றன!
படையைகண்ட தமிழர்போல பயந்துயாவும் நின்றன!

வீடுகாணி 'கார்'கள்கூட கால்முளைத்து நடந்தன!
வியக்குமளவு கப்பல்
கள்கூட வீட்டின்மேலே கிடந்தன!
வாடும்மனிதன் வாட்டம்கண்டு வானம்பூமி அழுதன!
வாழவேண்டும் உயிர்களென்று வையம்யாவும் தொழுதன!

சூடுபட்டபாலை மீண்டும் சுனாமிப்பூனை
கள் நக்கின!
'சூச்சூ..'என்று விரட்டிப்பார்த்தும் கழிவையெங்கும் கக்கின!
கேடுகெட்ட மனிதவாழ்க்கை கிடந்து அதற்குள் சிக்கின!
கேள்விகேட்ட அறிவும்கூட தோல்வியுற்று முக்கின!

உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு உயிர்கள்யாவும்  கெஞ்சின!
'உலகக்கோப்பை வென்றார்போலே அலைகள்கூடிக் கொஞ்சின!
அகிலமின்றே அழியுமென்று இருக்கும்நிலங்கள் அஞ்சின!
அலைகள்தின்று போட்ட மிச்சம் இமயமலையை விஞ்சின.

காடுகழனி யெங்கும்வெள்ளம் கரைபுரண்டு ஓடின!
கடவுளில்லை என்றவாயும் கடவுள்நாமம் கூறின!
காடுகரை யெங்கும்பிணங்கள் அழுகிப்புழுத்து நாறின.
நாடுஎட்டாம் நரகம்போன்று இமைக்கும்பொழுதில் மாறின!




நன்றி.
*தமிழ் ஆதர்ஸ்    

*விடிவெள்ளி (ஆறாவது விரல்) 24.3.11
*இருக்கிறம் (04.04.11)
 *சிகரம் (துபாய் ) 15.04.2011




வியாழன், 3 பிப்ரவரி, 2011

தலையில்லா முண்டங்கள்..!





லையெழுத்தை தலைகீழாய் எழுதிவைத்த ஆண்டவனே
தந்துவிடு நல்வாழ்வை எமக்கு!-'தங்கத்
தலைவரினை' இழந்துவிட்டு தவிக்கின்ற 'எம்சமூகம்'
தலையிழந்து முண்டமெனக் கிடக்கு!

தலைவர்நாம் என்றவர்கள் தறுதலைகள் முன்னாலே
தலைகவிழ்ந்து நிற்கின்றார் எதற்கு-?அவர்
தலையாட்டி பொம்மைகள்போல் தனித்துவத்தை விட்டுவிடின்
தருவாரே சிலஎலும்பு அதற்கு!

தலையில்லாத் தலைகளினை தலைவரென நினைத்ததற்காய்
தலையிடிதான் எங்களுக்குப் பரிசு!-பதவிக்காய்
தலைசொறிந்து பல்லிளிக்கும் தலைவர்களால்
தடுமாறும் எம்வாழ்க்கை தரிசு!

தலைதடவி கண்களிலே கண்கெட்டோர் கைவைக்க
தலையணையில் எம்தலைகள் இருக்கு!-தங்கள்
தலைதப்பி னால்போதும் என்கின்ற கோழையரை
தேர்ந்தெடுத்த நாங்கள்தான் கிறுக்கு!

தலைப்பிறையை மேகத்தால் தகர்த்தெறிய முடியாது
தலைவர்களே கொண்டிடுவீர் ஒப்பு!-உங்கள்
தலைகளினை காப்பாற்ற கண்ணிருந்தும் குருடர்களாய்
தவறுகளை பார்த்திருத்தல் தப்பு!

தலையில்லா முண்டங்களாய் மாறிவிட்ட எம்மவர்க்கு
தலையாக ஒருதலைவன் எழுவான்!-அவன்
தலைவரவர் சுவடுகளில் தயங்காமல் நிதம்நடக்க
தளையொடிந்து சிரிக்குமெங்கள் எழுவான்!!




                         நன்றி.
*சுடர் ஒளி
*அடையாளம்(கவிதை நூல்)
*வார்ப்பு
*இருக்கிறம்-பெப்ரவரி-2011
*விடிவெள்ளி (10.03.2011)