இலங்கை எழுத்தாளர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கை எழுத்தாளர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 19 டிசம்பர், 2011

படைப்பாளி அறிமுகம் - 21 எழுத்தாளர் .DR.தி.ஞானசேகரன்.


லையக மண்ணில் இதுவரை வெளிவந்த நாவல்களுக்கெல்லாம் சிகரமா திகழ்வது 'குருதி மலை' என்ற நாவலாகும். இந்த நாவல் ஒரு இலக்கிய பிரதி மட்டுமல்லாது ஒரு காலகட்ட வரலாற்று ஆவணமாகவும் விளங்குகின்றது. இலங்கை அரசின் தேசிய சாஹித்திய மண்டல விருதினை பெற்றிருக்கும்; இந்த நாவல் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் ஆயு பட்டப்படிப்புக்கு பாடநூலாகவும் வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்புக்கள் பல பெற்ற நாவலினை தமிழ் உலகுக்கு தந்த பெருமைக்குரியவர்தான் எழுத்தாளர் DR.தி.ஞானசேகரன் அவர்கள்.




கடந்த 4 தசாப்தகாலத்துக்கும் மேலாக இலக்கிய பணியில் ஈடுபட்டு ஈழத்து இலக்கிய பரப்பில் தனது வேரினை ஆழப்பதித்திருக்கும் எழுத்தாளர் ஞானசேகரனை ஈழத்தின் பிரபல இலக்கிய இதழான 'மல்லிகை'யும் தனது முகப்பில் பதித்து கௌரவப் படுத்தியுள்ளது.

எழுத்தாளர்.தி.ஞானசேகரன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் புன்னாலை கட்டுவான் என்ற கிராமத்தை பிறப்பிடமாக கொண்டவர்.ஆரம்பக்கல்வியை உரும்பிராய் இந்துக்கல்லூரியில் கற்றார். பின்னர் இலங்கை மருத்து கல்லூரியில் மருத்துவ கல்வியினை பெற்றுக்கொண்டார்.அதனை தொடர்ந்து மலையகத்திலே மூன்று தசாப்தத்துக்கும் மேலாக வைத்தியராக கடமையாற்றினார். யாழ்பாணத்திலும் மலையகத்திலும் அவர் பெற்றுக்கொண்ட அனுபவங்களே சிறுகதைகளாகவும்இ நாவல்களானவும் மலர்ந்துள்ளதை அவதானிக்கலாம்.

ஈழத்தின் சிறுகதை இலக்கிய வளர்ச்சியினை பிரதிபலிக்கும் வகையில் அமைந்த இவரது படைப்புக்களில் புதிய நோக்கு இழையோடுகிறது. ஆழமான சமுதாய பார்வையை வீசி நிற்கும் இவரது கதைகளில் சுபீட்ஷமும் செழுமையும் நிறைந்து புதிய தொரு தரிசனத்தை தருகின்றன.
ஒரு தசாப்தகாலமாக 'ஞானம்' என்ற கலை இலக்கிய சஞ்சிகையினை இடைவிடாது மாதந்தோரும் வெளியிட்டு வரும் இவர் ஒரு வைத்தியராக இருந்தும் கலைமீது கொண்ட தீராத காதலால் பேராதனை பல்கலைக்கழகத்தில் வெளிவாரி பட்டப்படிப்பபையும் நிறைவுசெய்துள்ளார்.
உலகளாவிய ரீதியல் நடைபெற்ற பல கலை இலக்கிய நிகழ்வுகள் பலவற்றில் பங்குபற்றியுள்ள இவர் இலங்கையில் நடைபெற்ற உலக தமிழ் எழுத்தாளர் விழாவின் இணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
பல தேசிய மட்ட  இலக்கிய போட்டிகளில் பரிசில்கள் விருதுகள் பெற்றுள்ள எழுத்தாளர் ஞானசேகரன் அவர்களுக்கு இலங்கை அரசின் கலாபூஷண விருதும் வழங்கப்பட்டுள்ளது.

இவரது பல நூல்கள் வெளிவந்துள்ளன.அதில்

•    கா. சிவத்தம்பி - இலக்கியமும் வாழ்க்கையும்
•    ஞானசேகரன் சிறுகதைகள்
•    அவுஸ்திரேலியப் பயணக்கதை
•    புரிதலும் பகிர்தலும்
•    அல்ஷேசனும் ஒரு பூனைக்குட்டியும்
•    கவ்வாத்து
•    லயத்துச் சிறைகள்
•    குருதிமலை
•    புதிய சுவடுகள்
•    காலதரிசனம்

ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. அதில் 'அல்ஷேசனும் ஒரு பூனைக்குட்டியும்' என்ற இவரது சிறுகதை நூல் இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பாட நூலக வைக்கப்பட்டுள்ளது.



சனி, 22 அக்டோபர், 2011

படைப்பாளி அறிமுகம் - 20 எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்

 எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்
நாடறிந்த எழுத்தாளரான  தெளிவத்தை ஜோசப் அவர்கள்    கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக இலக்கிய வாழ்வு வாழ்ந்து மலையக இலக்கியத்தின் அடையாளத்திற்கும் தனித்துவத்திற்கும் தனது எழுத்துக்கள் மூலம் பெரும் பங்காற்றி மலையக இலக்கியத்தின் தலைமைப் படைப்பாளியாகத் திகழ்பவர் .

சந்தனசாமி ஜோசப் என்ற இயற்பெயர் கொண்ட  தெளிவத்தை ஜோசப் சிறுகதையாளர், நாவலாசிரியர், இலக்கிய ஆய்வாளர். அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர். சாதாரணத் தோட்டத் தொழிலில் அல்லாடிக்கொண்டிருக்கும் தொழிலாளிகளைப் போன்ற உதிரி மனிதர்களைப் பாத்திரங்களாகக் கொண்டவை இவரது படைப்புலகம்.

இவரது படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைளிலும் தமிழக சஞ்சிகைகளிலும் களம் கண்டுள்ளன.தனது தமிழாற்றலால் தான் பிறந்த மலையகத்திற்கும்,தெளிவத்தை ஊருக்கும் மாபெரும் புகழைச் சேர்த்தாலும் அவர் உலகத் தமிழ் இலக்கியத்தின் சொத்து, இதுவரை பல நூல்களை எழுதியுள்ள அவர் எண்ணிலடங்கா ஆய்வு மற்றும் பயணக் கட்டுரைகளை தேசியப் பத்திரிகைகளிலும் எழுதியுள்ளதுடன் அதற்கான உரிய கெளரவங்களை, தேசிய சர்வதேச மட்டத்திலும் பெற்றுள்ளார்.


ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதுவதோடு தனது இலக்கியப் பயணத்தை ஆரம்பித்த இவர், காலப் போக்கில் குறுநாவல், நாவல், விமர்சனம், ஆய்வு,திரைக்கதை, வானொலி நாடகம் எனப் பல தளங்களில் தனது உழைப்பை விஸ்தரித்து மலையக இலக்கியத்தை, அதனூடாக ஈழத்து இலக்கியத்தை வளப்படுத்தியதோடு உலகத்தமிழ் இலக்கியத்திற்கும் உரம் சேர்ந்தவர்.
'காலங்கள் சாவதில்லை' என்பது இவருடைய முக்கியமான நாவல் ஆகும். நாமிருக்கும் நாடே சிறுகதைத் தொகுதிக்காக இலங்கைச் சாகித்திய விருது பெற்றுள்ளார்.2000 ஆம் ஆண்டில் வெளிவந்த இவரது 'மலையகச் சிறுகதை வரலாறு' இவரை ஓர் சிறந்த ஆய்வாளராக இனங்காட்டியது. அவ்வாண்டிற்கான தேசிய சாகித்திய விருதினையும் யாழ். இலக்கிய வட்டத்தின் சம்பந்தன் விருதினையும் இந்நூல் பெற்றுக்கொண்டது.


துரைவி பதிப்பகத்தினூடாக இவர் வெளிக்கொணர்ந்த மலையகச் சிறுகதைகள் உழைக்கப் பிறந்தவர்கள் ஆகிய இரு தொகுப்புகள் மலையக இலக்கியத்துக்கு இவர் அளித்த அரிய செல்வங்களாகும். எழுபதுவருட காலத்துக்குரிய கதைகளைத் தேடித் தொகுத்து இரண்டு வருட கால எல்லையுள் இப்பணியினைச் செய்து சாதனை படைத்தவர் ஜோசப்.
இவரது குறுநாவல்களான 'பாலாயி' 'ஞாயிறு வந்தது' 'மனம் வெளுக்க' ஆகிய மூன்றும் ஒரே தொகுப்பாக 1997ல் வெளிவந்தது. தமிழ் நாட்டின் சுபமங்களா சஞ்சிகையும் தேசிய கலை இலக்கியப் பேரவையும் இணைந்து நடத்திய குறுநாவல் போட்டியில் இவரது குடைநிழல்' இரண்டாவது பரிசினைப் பெற்றது.

 1979ம் ஆண்டு 'நாமிருக்கும் நாடே'' சிறுகதைக் நூலுக்காக மலையக இலக்கிய நூலுக்கான முதல் சாஹித்திய விருதினை பெற்ற மலையக படைப்பாளிக்கான முதல் கலாபூஷணம் விருதினையும் பெற்றவர்.தமிழியல் விருது, தேசிய ஒற்றுமைக்கான சாஹித்திய விருது, பேராதனை பல்கலைக்கழகத்தின் இலக்கிய சாதனையாளர் விருது, மேல் மாகாண சபை மத்திய மாகாண சபை வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார்.

படைப்பாளி அறிமுகம் - 17 எழுத்தாளர் அனிஸ்டஸ் ஜெயராஜா


லங்கை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவரான  எழுத்தாளர் அனிஸ்டஸ் ஜெயராஜா திருகோணமலையை  பிறப்பிடமாக கொண்டவர்.

திருகோணமலை சென் ஜோசப் கல்லூரியின் பழைய மாணவரான இவர் சுயாதீன ஊடகவியலாளராக செயற்பட்டு வருவதோடு தனியார் நிறுவனமொன்றில் முகாமையாளராகவும் கடமையாற்றி வருகின்றார். இவரது படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகை,சஞ்சிகைகளிலும் வானொலிகளிலும் இணைய இதழ்களிலும் இடம்பெற்றுள்ளன.

கவிதை,சிறுகதை, நாவல்,அரசியல், கட்டுரை, நாடகம், என்று இலக்கியத்தில் பல துறைகளிலும் தனது சுவடுகளை  பதித்துள்ள இவர்.
எழுத்தாளர் வ.அ.இராசரத்தினத்தை தனது மானசீக குருவாக நினைந்து அவர் வழியில் படைப்புக்களை படைத்து வருகின்றார்.


1979ம் ஆண்டிலிருந்து எழுத்துக்களோடு கைகுலுக்க ஆரம்பித்த இவரது பேனாவின் முதல் பிரசவம் 'சேகுவரா' என்ற குறுநாவல் ஆகும்.
அது இவர் மேலான விமர்சகர்களின் பார்வையை அகலப்படுத்தியது எனலாம். அதன் பிறகு
 1.    மரண பூமி
2.    அப்பா
3.    நாக்கியா
4.    ஜனாதிபதியே ஜனநாயகம்
5.    மலையக மக்களுக்கு அடையாள அட்டை
6.    கிழக்கின் உதயம் தேசத்தின் இதயம்
7.    அஸ்ரப்  பெருக்கெடுத்த கதைகள்
8.    அஸ்ரபின் அந்த ஏழு நாட்கள்   என்று 9 நூல்களை வெளியிட்டிருக்கின்றார்.



'கிழக்கின் உதயம் தேசத்தின் இதயம்'  என்ற இவரது  நூல் மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரபின் வாழ்க்கை சரிதத்தை பின்னணியாக கொண்டதாக வெளிவந்த முதலாவது நூலாகும்.இந்த நூல் இவருக்கு பரவலான அறிமுகத்தை அனைத்து சமூகத்தின் மத்தியிலும் ஏற்படுத்திக் கொடுத்தது எனலாம்.

இவர் மிகவிரைவில்

1.    போரும் மனிதனும்
2.    மக்களும் மற்றவர்களும்
3.    ஒரு மாமன்னரின் பொற்காலம்
4.    சின்ன சின்ன எண்ணங்கள்
5.    மரணம் ஒரு முடிவல்ல
6.    இந்தியாவை நேசிக்கும் வரை
7.    எனது தேசம் எனது மக்கள்

தனது 7 நூல்களை வெளியீடு செய்வதற்குரிய பணியில் ஈடுபட்டு வருகின்றார். இவரது எழுத்துலக பணி மேலும் சிறக்க நாமும் வாழ்த்துவோம்.

சனி, 17 செப்டம்பர், 2011

படைப்பாளி அறிமுகம் - 14 - கவிஞர் 'இளநெஞ்சன்' முர்ஷிதீன்


லங்கை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவரான கவிஞர் இளநெஞ்சன் முர்ஷிதீன் கொழும்பு மாளிகாவத்தையை பிறப்பிடமாககொண்டவர்.

1979ம்ஆண்டிலிருந்து  கவிதைகளோடு கைகுலுக்க ஆரம்பித்த இவர் இற்றைவரையும் ஒரு சமுதாய எழுத்தாளனாக தனது பயணித்து வருகின்றார்.

மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் மகாவித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியை சிங்களமொழியிலும்  அதன்பின்னர் தமிழ் மொழியிலும் கல்வி பயின்ற இவர் பேராதனை பல்கலைகழகத்தின் கலைப்பட்டதாரி.திறந்த பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறையில் டிப்ளோமா பட்டமும் அவுஸ்திரேலியாவில் சர்வதேச விவாகரங்களுக்கான பட்டப்பின் படிப்பையும் மேற்கொண்டுள்ளார்.


தினபதி, சிந்தாமணி, பத்திரிகையின் உதவியாசிரியராக கடமையாற்றியுள்ள இவர் தொலைக்காட்சி மற்றும் இணையத்தளங்களிலும் செய்தியாசிரியராக கடமைபுரிந்துள்ளார்.

1989ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச  இளைஞர்  இஸ்லாமிய தலைமைத்துவ பயிற்சி முகாமில் கலந்துகொண்டுள்ள இவர் , அமெரிக்கா, இங்கிலாந்து,ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா, லிபியா போன்ற நாடுகளில் நடைபெற்ற  ஊடகவியல் மனித உரிமைகள் சமாதான செயற்பாடுகள் தொடர்பான மாநாடுகளில் கலந்துகொண்டுள்ளார்.

வகவம் கவிதா பாசறையில் பட்டை தீட்டப்பட்ட இவரது கவிதை, சிறுகதை, கட்டுரை, படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகை, சஞ்சிகைகளிலும் இலத்திரனியல் ஊடகங்கள் பலவற்றிலும் களம் கண்டுள்ளன. 

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தேசிய மட்டத்தில் நடத்திய கவிதை, சிறுகதை, அறிவிப்பாளர் போட்டிகளில் முதலாமிடங்களை பெற்று ஜனாதிபதி விருதினை பெற்றிருக்கின்றார்.

இவரது முதலாவது வெளியீடாகிய 'இஸ்லாமிய கீதங்கள'1986ம் ஆண்டு வெளிவந்தது. அதன் பின்னர 1988ம் ஆண்டு  'ஒருவாசகனின் வாசகங்கள'; கவிதை நூலையும் 1990ம் ஆண்டு 'சமுதாய அகதிகள்' சிறுகதை நூலையும்
1995 இல் 'சமாதான யாசகங்கள்' கவிதை நூலையும்  2000ம் ஆண்டு 'மிலேனியம் கனவுகள்' கவிதை நூலையும் இலக்கிய உலகுக்கு தந்துள்ளார்.


எழுத்துக்களால் மட்டும்  சமூக முன்னேற்றம் பற்றி பேசிக்கொண்டிருக்காமல் இன்று இவர் சமுதாய முன்னேற்ற செயற்பாடுகளில் தன்னானான பங்களிப்பு செய்து வருகின்றார்.

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

படைப்பாளி அறிமுகம்-13 -கவிஞர் 'மல்லியப்பு சந்தி' திலகர்

 இளையதலைமுறை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவரான மயில்வாகனம் திலகராஜா எனும் இயற்பெயர் கொண்ட 'மல்லியப்பு சந்தி' திலகர் மலையகத்தின் இதயமான நுவரெலியா மாவட்டத்தில் மடகொம்பரை எனும் தோட்டத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். கொழும்பு பல்கலைக்கழகத்தின் வணிகத்துறை பட்டதாரியான இவர் தொழில் ரீதியாக முகாமைத்துவ ஆலோசகராக செயற்படுகின்றார்.

பாடசாலைக் காலத்தில் இருந்தே வாசிப்பிலும் எழுதுவதிலும் ஆர்வம் காட்டிவந்த இவர் பாடசாலை காலத்தில் கவிதை, நாடகம், கட்டுரை, சிறுகதை, பேச்சு போட்டிகளில் பங்குபற்றியுள்ளார்.

1991ம் ஆண்டு கண்டி மாநகரில் நடந்த 'தேசிய சாகித்திய விழா'வில் பாடசாலை மாணவனாக இருக்கும்போதே 'சிறந்த நடிகர்' விருது பெற்ற இவர் 1993ம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகம் நடாத்திய திறந்த போட்டியில் பங்குபற்றி கவிதைக்கான பரிசினைப் பெற்றுள்ளதோடு
1995ம் ஆண்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடாத்திய கலை கலாசார போட்டிகளில் பங்குபற்றி மாவட்டமட்டத்தில் கவிதைக்காகவும் தேசிய ரீதியில் பேச்சுப்போட்டியல் ஜனாதிபதி விருதினையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

பல்கலைக் கழக காலத்தில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிறந்த பேச்சாளராக, அறிவிப்பாளராக விருது பெற்றுள்ளார்.



பத்தி எழுத்தாளராகவும் பத்திரிகைகளுக்கு அரசியல் கட்டுரைகளை எழுதிவரும் இவர் பல வானொலி கவியரங்குகளிலும் கலந்து கவிதை பாடியுள்ளார்

2002 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக் கழகத்தில் 'இதழியல் டிப்ளோமாவை' நிறைவு செய்ளள்ள இவர் 'சிறந்த பெறுபேற்றுக்காகவும், மலையக மக்களின் பிரச்சினைகளில் ஊடகங்களின் பங்களிப்பு குறித்த ஆய்வுக்காகவும்; ஜப்பானிய அரசால் வழங்கப்படும் 'ஜூயின் அஹோக்கி' விருதினை வென்றுள்ளார்.

மலையக மக்களின் அரசியல், தொழிற்சங்க பண்பாட்டு அம்சங்களை பிரதிபலிக்கும் 'மல்லியப்பு சந்தி' எனும் இவரது  கவிதைத் தொகுதி 2007இல்  வெளிவந்தது.

அதன் பின்னர் ' மல்லியப்பு சந்தி' திலகர் என இலக்கிய சூழலில் அறியப்படும் இவர் தனது தாயாரின் பெயரில் 'பாக்யா பதிப்பகம்' எனும் பதிப்பகத்தினை நடாத்தி வருகின்றார். நூல் வெளியீடுகள், நூல் விநியோகம், இலக்கிய செயற்பாடுகள் என முனைப்புடன் இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்.

ஞாயிறு, 5 ஜூன், 2011

படைப்பாளி அறிமுகம் -15 கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன்


தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட படைப்பாளியும் ஒளிபரப்பாளருமான கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் பன்முக ஆளுமைகொண்டவர்.

கவிதை,சிறுகதை கட்டுரை, பத்தியெழுத்து, சிறுவர் இலக்கியம், விமர்சனம் போன்ற துறைகளில் முத்திரை பதித்திருக்கும் இவரது படைப்புக்கள்  இலங்கையின் தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகள்,இணைய சஞ்சிகைகளில் களம் கண்டுள்ளன.இவர் 'நாட்டவிழி நெய்தல்' http://ashroffshihabdeen.blogspot.com எனும் தனது வலைப்பூவிலும் தொடர்ந்தும் எழுதி வருகின்றார்.

மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடியை பிறப்பிடமாக கொண்ட இவர் ஆரம்பத்தில் 'ஓட்டமாவடி அஷ்ரப்' எனும் பெயரிலும் பல படைப்புக்களை தந்திருக்கின்றார்.

ஹாஸ்யமும் சுவாரசியமும் கலந்த கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் எழுத்துக்கள் இளைய தலைமுறையினராலும் பரவலாக விரும்பி படிக்கப்படுகின்றன.
இவர் ,ஒரு முறை புதிதாக தன்னை வாசிக்க வருகின்ற ஒருவரை திரும்பவும் தன்னை நோக்கி திரும்ப செய்கின்ற எழுத்து நடையின் சொந்தக்காரர்.மரபுக் கவிஞனாக தன்னை அடையாளப்படுத்திய இவர் புதுக்கவிதையிலே சிறந்த ஆளுமை மிக்கவர்.இவருக்கு அதிகளவிலான சிறப்பை தேடிக்கொடுத்த ஷெய்த்தூன் கவிதை சர்வதேச கவிதைகளோடு வைத்து நோக்கத்தக்கது.

2002ம் ஆண்டு இலங்கை அரசு கொழும்பில் இலங்கை இஸ்லாமிய ஆய்வகத்தின் ஆதரவுடன் நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் செயலாளராக இயங்கியதை தனது வாழ்நாள் சாதனையாக கருதும் கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினதும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினதும் செயலாளராகவும் இயங்கிவருகின்றார்.


'யாத்ரா' எனும் தமிழ் கவிதைகளுக்கான சஞ்கையின் ஆசிரியரான இவர் 'மீஸான் கட்டைகளில் மீள எழும் பாடல்கள்' கவிதை தொகுதியின் பிரதான தொகுப்பாளராகவும் இருந்திருக்கின்றார்.


இதுவரை  
1.காணாமல் போனவர்கள்
2.என்னைத் தீயில் எறிந்தவள்
3உன்னை வாசிக்கும் எழுத்து'
 என்ற மூன்று கவிதை நூல்களையும்
1.புள்ளி
2.கறுக்கு மொறுக்கு
3.புல்லுக்கு அலைந்த மில்லா என்ற  
மூன்று சிறுவர் நூல்களையும் 
1.தீர்க்கவர்ணம்
2.ஸ்ரீலங்காவலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம்வரை 
என்ற பல்சுவை பத்திகளின் தொகுப்பு பயணக்கட்டுரை தொகுப்பு போன்றவற்றையும் தமிழ் இலக்கிய உலகத்திற்கு தந்திருக்கின்றார்.


இவரின் 'என்னைத் தீயில் எறிந்தவள்' கவிதை நூல்  2008ம் ஆண்டுக்கான இலங்கை அரசின் சாஹித்திய மண்டல பரிசினை பெற்றுக்கொண்டுள்ளது.


'தமிழியல் விருது' உட்பட பல உள்ளூர் விருதுகளையும்  பெற்றிருக்கும் கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன்  தமிழகத்தில் நடந்த 5வது உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழாவின் கவியரங்கில் சிறப்பாக கவிபாடி கவிக்கோ அப்துல் ரஹ்மானால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

முற்றிலும் உண்மைக்கதைகள் அடங்கிய இவரது புதிய நூலான '''ஒரு குடம் கண்ணீர்'' அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 4 ஜூன், 2011

படைப்பாளி அறிமுகம் -14 காப்பியக்கோ' DR.ஜின்னாஹ் ஷரிபுத்தீன்.

காப்பியக்கோ' DR.ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
ன்னிகரற்ற காவியங்களை தமிழுக்கு தந்திருக்கும் நாடறிந்த கவிஞரான வைத்திய கலாநிதி  ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்கள் காப்பியக் கவிஞராக கடல் கடந்தும் அறியப்படுபவர்.

தென்றலே கவிபாடும் தென்கிழக்கு மண்ணில் மருதமுனையை பிறப்பிடமாக கொண்ட இவர் விபுலானந்த அடிகளாரின் மாணவரும் கிழக்கிலங்கையின் முதல் முஸ்லிம் ஆசிரியருமான தமிழ் பண்டிதர் புலவர்மணி ஆ.மு.ஷரிபுதீன் அவர்களின் புதல்வர்.


கவிஞருக்கு ''காப்பியக்கோ' பட்டத்தை  வழங்குகின்றார் மலேசியா கல்வி வாரியத் தலைவர் ஹாஜி டத்தோ  முஹம்மது இக்பால்
அமர்ந்த இடத்தில் ஆயிரம் பாடல்களை எழுதும்  ஆற்றல் பெற்ற இவர், தமிழ் பேசும் உலகில் தலை சிறந்த மரபுக் கவிஞர். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மரபுப் பாக்களை பாடி புகழ் சூடியிருக்கின்றார்.

கவிஞர் முஹம்மது மேத்தாவுடன் நமது காப்பியக்கோ
எஸ்.டி. சிவநாயகம் அவர்களின் தினபதி கவிதா பண்ணையில்  புடம்போடப்பட்ட இவர் இதுவரை 20 நூல்களை எழுதி வெளியிட்டிருக்கின்றார்.இதில் இவரால் எழுதப்பட்ட ஏழு காவியங்களும் அடங்குகின்றன.
''காப்பியக்கோ''வுடன் கலந்துரையாடலில் கவிஞர்களான ஏ.இக்பால், அல்-அஸூமத், அஷ்ரப் சிஹாப்தீன்.

இருபதுக்கும் மேற்பட்ட தேசிய மட்ட இலக்கிய போட்டிகளில் பரிசில்களையும் விருதுகளையும் பெற்றிருக்கும்  கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன்  அவர்களின் 'பண்டாரவன்னியன்' காவியம் இலங்கை அரசின் சாஹித்திய மண்டல விருதினை பெற்றுள்ளது.அத்தோடு இவரது 'பெற்ற மனம்' சிறுகதை தொகுப்பு கலாசார அலுவல்கள் அமைச்சினால் பாடசாலை நூலக புத்தகமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.



கவிதாயினி மலீக்கா பாரூக்கின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில்
இவரது 'மஹ்ஜபீன்' மற்றும்  'புனித பூமியிலே' காவியங்களை ஆய்வு செய்து தமிழ்நாட்டை சேர்ந்த  பேராசிரியர்  எஸ்.முஹம்மது அவர்கள் கலாநிதி பட்டத்தை நிறைவு செய்திருக்கின்றார்.

இலங்கை இஸ்லாமிய ஆய்வகத்தின் தலைவராக,கொழும்பு தமிழ்சங்கத்தின் துணைத் தலைவராக,சர்வதே இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் இலங்கை கிளையின் தலைவராவும் இருக்கும் இவர்,கலாபூசணம்,தமிழ் மாமணி, கவிமாமணி,காவியத் தலைவன்,நற்கவிஞர் உட்பட பல கௌரவ பட்டங்களை பெற்றிருக்கின்றார்.

அண்மையில் தமிழ் நாட்டின் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்தினரால் 'காப்பியக் கோ' என்ற கௌரவ பட்டம் வழங்கப்பட்டும்
கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்கள் கௌரவிப்பட்டிருக்கின்றார்.

சனி, 14 மே, 2011

படைப்பாளி அறிமுகம் -13 கவிஞர் கிண்ணியா சபருள்ளா

இலங்கையின் இளைய தலைமுறை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவரான கவிஞர் கிண்ணியா சபருள்ளா திருகோணமலை மாவட்டம், கிண்ணியா பிரதேசத்தில், அடப்பனார் வயல் எனும் இடத்தை பிறப்பிடமாக கொண்டவர்.

கிண்ணியா மத்திய கல்லூரி,கொழும்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பழைய மாணவரான இவர் தனது சட்டமானி பட்டத்தை நிறைவுசெய்து அதிலே சிறப்பு தேர்ச்சி பெற்று சட்டபீடத்திலே சிறிது காலம் விரிவுரையாளராக கடமையாற்றினார்.அதன் பிற்பாடு இவர் கடந்த 7வருடங்களாக திருகோணமலை மாவட்ட நீதிமன்ற தொகுதியில் முன்னணி சட்டத்தரணியாக திகழ்வதோடு கிண்ணியா மாநகரசபையின் பிரதி மேயராகவும் கடமையாற்றி வருகின்றார்.

சட்டம், அரசியல்,சமூகம், மற்றும் இலக்கியம்,ஆன்மீகம் என பன்முகத்தளத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் கவிஞர் கிண்ணியா சபருள்ளா கவிதை, சிறுகதை, பாடுதல், பாடலியற்றல், பட்டிமன்றம், இசை,மேடைப்பேச்சு  என பல தளங்களில் தனது முத்திரையை பதித்துவருகின்றார்.
1989களில் எழுத்துலகுக்குள் நுழைந்த இவர்  இதுவரை 100க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளையும் அரசியல் கட்டுரைகளையும் இலங்கையின் தேசிய பத்திரிகைகள் சஞ்சிகைகளில் எழுதியிருக்கின்றார்.
இவரது முதலாவது கவிதை நூல் 'வியர்த்தொழுகும் மாலைப்பொழுது' அண்மையில் வெளியிடப்பட்டு பலரதும் கவனத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 தனது காத்திரமான கவிதைகள் மூலமும் தனித்துவமான படைப்புக்கள் மூலம்  இலங்கையின் இலக்கியத்துறையில் முத்திரை பதித்துவரும்  கவிஞர் கிண்ணியா சபருள்ளாவை  நாமும் வாழ்த்துவோம்.


ஞாயிறு, 8 மே, 2011

படைப்பாளி அறிமுகம் -12 கவிஞர் மட்டுவில் ஞானக்குமாரன்

லங்கையின் இளைய தலைமுறை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவரான கவிஞர் மட்டுவில் ஞானக்குமாரன் யாழ்ப்பாணம் நுணாவிலை பிறப்பிடமாக கொண்டவர்.
யாழ் மானிப்பாய் இந்துக் கல்லூரி, கிழக்கு பல்கலைக்கழகம் என்பவற்றின் பழைய மாணவரான இவர் புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வாழ்ந்து வருகின்றார்.



ஜேர்மனிய மொழி போதனாசிரியரான மட்டுவில் ஞானக்குமாரன் 
கவிஞர், எழுத்தாளர் , பாடலாசிரியர், குறுந்திரைப்பட இயக்குனர் என பன்முக ஆளுமைகொண்டவர்.
இவர் ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக புலம்பெயர் இலக்கியத்துக்கு வளம் சேர்த்து வருகின்றார்.


கவிதை, சிறுகதை, மேடை நாடகம், வானொலி நாடகம், குறுந்திரைப்படம் என பல துறைகளிலும்  தனது திறமை பறைசாற்றிவரும் மட்டுவில் ஞானக்குமாரனின் படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகளிலும் சர்வதேச சஞ்சிகைகளிலும் களம் கண்டுள்ளன. இணையத்தில் வெளிவரும் பல இலக்கிய சஞ்சிகைளிலும் தொடர்ந்து எழுதிவருகின்றார்.

2008ம் ஆண்டு தகவம் அமைப்பினரால் தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் 'பள்ளிக்கூடம்' சிறுகதைக்காக முதலாம் பரிசினை வென்று 'தகவம் விருதினை'  பெற்றிருக்கும் இவர் சுடர்ஒளி  பத்திரிகை சர்வதேச மட்டத்தில் நடத்திய சிறுகதைப் போட்டியில்  சிறப்பிடத்தையும் பெற்றிருக்கின்றார்.


'வெளிச்ச வீடுகள்' எனும் கவிதை இறுவட்டை பின்னணி இசையோடு தனது குரலில்  வெளியிட்டிருக்கும் மட்டுவில் ஞானக்குமாரன்  லண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பான 'கரையை தேடும் ஓடங்கள்' எனும் வானொலி நாடகத்தை எழுதி, இயக்கி, நடித்து பலரதும் பாராட்டை பெற்றிருக்கின்றார் .

வசந்தம் வரும் வாசல் (2004) முகமறியாத வீரர்களுக்காக (2000) சிறகு முளைத்த தீயாக (2011) எனும் மூன்று கவிதை நூல்களை இலக்கிய உலகுக்கு தந்திருக்கும் இவர் தற்போது 'ஒரு துளி கண்ணீர்' என்ற குறுந்திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இவரது ''ஊருக்குள் நூறு பெண்கள்'' சிறுகதை நூல் மிகவிரைவில் வெளிவருகின்றது.

தனது காத்திரமான கவிதைகள் மூலமும் தனித்துவமான படைப்புக்கள் மூலம்  இலங்கையின் இலக்கியத்துறையில் முத்திரை பதித்துவரும்  கவிஞர் மட்டுவில் ஞானக்குமாரன்
அவர்களை நாமும் வாழ்த்துவோம்.


திங்கள், 2 மே, 2011

படைப்பாளி அறிமுகம் -11 எழுத்தாளர் வீ.ஜீவகுமாரன்.


புலம் பெயர் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவரான வீ.ஜீவகுமாரன் அவர்கள் யாழ்ப்பாணம் சங்கானையை பிறப்பிடமாகக் கொண்டவர்.
இவர் தற்போது டென்மார்க் அரச நூலகத்தின் தமிழ் பகுதி பொறுப்பாளராகவும் மொழி பெயரப்பாளராகவும்  கடமை புரிந்து வருகின்றார்.

கவிதை,சிறுகதை,நாவல்,பதிப்புத்துறை போன்றவற்றில் தடம்பதித்துவரும் இவரது படைப்புக்கள்  புலம்பெயர் இதழ்களிலும் இணையத்தளங்களிலும் இலத்திரனியல் ஊடகங்கள் பலவற்றிலும் களம் கண்டுள்ளன.


தமது வெளியீடாக வரும் நூல்களை  இலவசமாக இலங்கையில் உள்ள தமிழ் பாடசாலை நூலகங்களுக்கு வழங்கும் முனைப்போடு செயற்பட்டு வரும்
விஸ்வசேது இலக்கியபால பதிப்பகத்தின்  பொறுப்பாளராக இருக்கும் இவர் 'மக்கள் மக்களால் மக்களுக்காக' என்ற நாவலுக்காக சிறந்த நாவலுக்குரிய பரிசினை பெற்று அண்மையில் மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தினால் 'தமிழியல் விருது' வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு 'தகவம்' கதைஞர் வட்டம் நடாத்திய தேசிய மட்ட சிறுகதைப்போட்டியில்

•    கிராமத்து பெரிய வீட்டுக்காரி
•    அகால மரணம்


ஆகிய சிறுகதைகளுக்காக முதலாம் இரண்டாம் இடங்களை பெற்றிருக்கின்றார்.


2008ம் ஆண்டு இணையத்தளத்தில் எழுதும் இளையோர்களின் கவிதைகளை தொகுத்து 'மெல்லத் தமிழினி துளிர்க்கும்' எனும் பெயரில் நூலாக  வெளியிட்டிருக்கும் இவர்


    டெனிஷ் - தமிழ் - ஆங்கில மருத்துவ அகராதியும் கையேடும்

    யாவும் கற்பனைஅல்ல (சிறுகதை தொகுதி)

    மக்கள் மக்கள் மக்களுக்காக (நாவல்)

    சங்கானைச் சண்டியன்  (சிறுகதை தொகுதி)

    இப்படிக்கு அன்புள்ள அம்மா (மொழி பெயர்ப்பு நூல் )



ஆகிய நூல்களை வெளியிட்டிருப்பதோடு ஈழத்து எழுத்தாளர்கள்
50 பேரின் சிறுகதைகளை தொகுத்து 'முகங்கள்' எனும் பெயரில் நூலாகவும் வெளியிட்டுள்ளார்.


தனது எழுத்துக்கள் மூலம் ஈழத்து எழுத்துத்துறைக்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர் வீ.ஜீவகுமாரனை நாமும் வாழ்த்துவோம்.

ஞாயிறு, 1 மே, 2011

படைப்பாளி அறிமுகம் -10 - கவிதாயினி நிஹாஸா நிசார்



இலங்கையின் கம்பஹா மாவட்டத்தில் ''கஹட்டோவிட்ட'' என்ற இடத்தை பிறப்பிடமாக கொண்ட 'நிஹாஸா நிஸார்' ஒரு வளர்ந்து வரும் கவிஞரும், எழுத்தாளருமாவார்.

கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயம், மாவனல்லை ஸாஹிரா தேசிய பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவியான இவர் தனது தீவிரமான வாசிப்பின் ஊடாகவும் ஆசிரியர்களின் வழிநடத்தல் போன்றவைகளாலும் இன்று ஒரு எழுத்தாளராக பரிணமித்திருக்கின்றார்.


கற்கின்ற காலத்தில் எழுத்துத்துறைக்குள் நுழைந்த  இவரின்;
கவிதை, சிறுகதைகள் இலங்கையின் தேசிய பத்திரிகைகளில் களம்கண்டுள்ளன.
உயர்தரம் கல்வி கற்கும் காலத்தில் இலக்கிய போட்டிகளில் கலந்துகொண்டு பல தடவை வெற்றியீட்டியுள்ளார்.குறிப்பாக இவர் 2002 ம் ஆண்டு அகில இலங்கை மட்டத்தில்  நடாத்தப்பட்ட தமிழ் தினப்போட்டியில் கவிதைப் பிரிவில் 2ம் இடத்தை பெற்று வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுள்ளார்.

இவரது முதலாவது கவிதை நூல் 'கண்ணீர் வரைந்த கோடுகள்'' அண்மையில் 'வேகம்' பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்து இலக்கிய ஆர்வலர் பலரதும் கவனத்தை பெற்றுள்ளது.




இவர் தனது அடுத்த வெளியீடாக 'பூமாலையாகாமல்....' என்ற நாவலை தர இருக்கின்றார். கணவரோடு கட்டாரில் வசித்து வரும் இவர் அங்கிருக்கும் தனிமை,வெறுமை மட்டுமல்லாது  வாழ்வின் பல கூறுகளையும் கவிதைகளால் மொழி பெயர்க்க முயல்கின்றார்.
இவரது படைப்புலக பணி மேலும் சுவடுகளை  பதிக்க நாமும் வாழ்த்துவோம்.






படைப்பாளி அறிமுகம் -09 - கவிஞர் மன்னார் அமுதன்


லங்கையின் இளைய தலைமுறை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவரான கவிஞர் மன்னார் அமுதன்; மன்னார் மாவட்டத்தில் சின்னக்கடை என்ற இடத்தை பிறப்பிடமாக கொண்டவர்.
கவிஞருடன் & கவிஞர் கிண்ணியா அமீர் அலி
 இளநிலை கணணி விஞ்ஞானவியல் பட்டதாரியான இவர் அமைச்சின் தகவல் தொடர்பு மற்றும் வலையமைப்புப் பிரிவில் அபிவிருத்தி உதவியாளராக கடமையாற்றி வருகின்றார்.


கவிதை, சிறுகதை, கட்டுரை, திறனாய்வு போன்ற துறைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும்  இவரின் படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகள்,சஞ்சிகைகள்  மற்றும் இணைய சஞ்சிகைகள் பலவற்றிலும் களம் கண்டுள்ளன. தனது வலைப்பூவிலும் தனது படைப்புக்களை படைத்துவருகின்றார்.



கொழும்பு தமிழ்சங்கம், மன்னார் தமிழ்சங்கம், கொழும்பு திருமறை கலாமன்ற இலக்கிய பாசறை பொறுப்பாளராகவும் மன்னார் இலக்கியவட்டத்தின் தலைவராகவும்  இருக்கும் இவர்  வானொலி, தொலைக்காட்சி கவியரங்கங்களிலும் பங்குபற்றி தனது கவிதை ஆளுமையை வெளிப்படுத்தி  வருகின்றார். இவர் மன்னார் செம்மொழி மாநாட்டின் கவியரங்கில் பாடிய கவிதை இவரது ஆளுமையை அளவிட போதுமானது.


2009இல் வெளிவந்த இவரின் முதலாவது கவிதைத் தொகுதியான   
'விட்டு விடுதலை காண்'  வெளிப்படுத்திய அதிர்வு தணிவதற்குள்  அண்மையில் 'அக்குரோணி' என்ற பெயரில் மற்றுமொரு கவிதை நூலை இலக்கிய உலகுக்கு தந்திருக்கின்றார்.மரபில் புதுமையையும் புதுமையில் மரபையும் கலந்து கவிபாடும் இவரது கவித்துவத்தையும் தனித்துவத்தையும் இத்தொகுதியில்  தரிசிக்க  முடியும்.

தனது காத்திரமான படைப்புக்கள் மூலம்  இலங்கையின் இலக்கியத்தில் முத்திரை பதித்துவரும் கவிஞர் மன்னார் அமுதனின்   படைப்புலக பணி மேலும் சுவடுகளை  பதிக்க நாமும் வாழ்த்துவோம்.!!