படைப்பாளி அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படைப்பாளி அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 4 பிப்ரவரி, 2012

படைப்பாளி அறிமுகம் - 23 ''சந்தக் கவிமணி'' கிண்ணியா அமீர் அலி.

''சந்தக் கவிமணி''  கிண்ணியா அமீர் அலி.

ந்தக் கவிதைகளால் சங்கத்தமிழுக்கு சரிகை கட்டி சாகாவரம் பெற்ற படைப்புக்களால் பல மனங்களுக்குள் பந்தலிட்டிருப்பவர் கவிஞர் கிண்ணியா அமீர் அலி அவர்கள்.

கொழும்பு, வடக்கு, கலைமகள் தமிழ் வித்தியாலயத்தில் கடமையாற்றிக் கொண்டிருக்கும் இவர் பத்திரிகை ஜாம்பவான் அமரர் எஸ்.டி. சிவநாயகம் அவர்களின் 'சிந்தாமணி' மூலம் பட்டை தீட்டப்பட்ட, நாடறிந்த நல்லதொரு மரபுக் கவிஞர்.

கலாபூஷணம் கவிஞர் ஏ.எம்.எம். அலி அவர்களிடம், 'கவிதை யாப்பிலக்கணம்' கற்றுத் தேர்ந்த இவர், சிறுகதை, நாடகம், குறுங்காவியம், மெல்லிசைப் பாடல்கள் எனப் பல்துறை சார்ந்து இலக்கியமே மூச்சாக இயங்கி வருகின்றார்.

திருகோணமலை மாவட்டத்தில்  கிண்ணியாவை பிறப்பிடமாககொண்ட இவர்
1984 ஆண்டு 'பதவி' என்ற கன்னிக்கவிதை மூலம் இலக்கிய உலகுக்குள் நுழைந்தார். அன்றிலிருந்து இற்றைவரை  சுமார் 500க்கும் மேற்பட்ட கவிதைளையும் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும்  எழுதியிருக்கும் இவர் 100க்கும் மேற்பட்ட பல மெல்லிசைப் பாடல்களையும் இலங்கையின் முக்கியமான இசையமைப்பாளர்களின் இசையில் எழுதியுள்ளார்.

யதார்த்தம் தொனிக்கும் எழுத்து நடையின் சொந்தக்காரரான
கிண்ணியா அமீர் அலி ஹாஸ்யம் கலந்து எழுதுவதில் தேர்ச்சிபெற்றவர்.தனது அனுபவங்களை ஒளிவு மறைவின்றி இயல்பாக இலக்கியத்தினூடக  வெளிப்படுத்துவதில் தயங்காதவர். கவியரங்குகளில் சந்தக் கவிதைகள் பாடும் இவரை, கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்கள் 'இஸ்லாமிய அருணகிரிநாதர்' என்று பாராட்டியுள்ளார்.

இவர் எழுதியுள்ள கவிதைகள், மெல்லிசைப்பாடல்கள் வானொலி நாடகங்கள்; இலங்கையின் தேசிய பத்திரிகை, சஞ்சிகைகளிலும் இலத்திரனியல் ஊடகங்கள் பலவற்றிலும் களம் கண்டுள்ளன.

1988ம் அண்டு தொடக்கம் இலங்கை வானொலியில் பகுதி நேர கலைஞராக பலதரப்படட்ட நிகழ்ச்சிகளில் பங்காற்றிவரும் இவர் கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக இலங்கை வானொலியில் கவிதைக்களம் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வருகின்றார். பிரபல இசையமைப்பாளர் சரத் விக்கரம அவர்களின் இசையில் ஏ.ஏம்.யேசு ரட்ணம் பாடிய 'பணமும் உறவும் நகமும் சதையும்' என்ற தத்துவப்பாடல் இவருக்கு நல்ல அடையாளத்தை பெற்றுக்கொடுத்த பாடலாகும் இவரது பாடல்கள் 'ரிதம் ஓப் லவ்' என்ற பெயரில் வெளிவந்துள்ளது.

இவரது இலக்கிய பணியை பாராட்டி பலவேறு அமைப்புக்கள் பொன்னாடை போர்த்தி பொற்கிழி வழங்கி கௌரவித்துள்ளன.
குறிப்பாக 2002 ஆம் ஆண்டு பண்டாரநாயக்கா மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ள கவிஞர் கிண்ணியா அமீர் அலி 2009 ஆம் ஆண்டு இலங்கை முஸ்லிம் கலைஞர் முன்னணி விருது விழாவில் 'சந்தக் கவிமணி' என்ற பட்டம் சூட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார். 2011ம் ஆண்டு 'தடாகம்' கலை இலக்கிய பேரவை 'அகஸ்தியர்' விருது வழங்கி இவரை கௌரவித்துள்ளது.

வெள்ளி, 20 ஜனவரி, 2012

படைப்பாளி அறிமுகம் - 22 எழுத்தாளர் 'தமிழ் மணி' அகளங்கன்



இலங்கையின் வவுனியா மாவட்டத்தின்  பம்பைமடு என்னும் அழகிய சிறிய விவசாயக் கிராமத்தில்  சேனாதிராஜா நாகலிங்கம்நல்லம்மா தம்பதிகளுக்கு ஏழாவது புதல்வராக 1953 ஆம் ஆண்டு பிறந்தவர் எழுத்தாளர் அகளங்கன். இவரது இயற்பெயர் நா .தர்மராஜா
பம்பைமடு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், இடை நிலைக் கல்வியை வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்திலும்க .பொ .த உயர்தரத்தை யாழ்ப்பாணத்து சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியிலும் பல்கலைக்கழகக் கல்வியை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணித விஞ்ஞானத் துறையிலும் கற்று பின்னர் கணித புள்ளிவிபரவியல் துறையில் பட்டப் படிப்பையும் பூர்த்தி செய்துள்ளார்.

இருபத்தைந்து  ஆண்டுகளுக்கு மேலாக  கணித ஆசிரியராகக் கடமையாற்றியுள்ள இவர் பின்னர் அச் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார். அத்தோடு கலை இலக்கிய ஈடுபாடுள்ள இவர் பாடசாலைக் காலத்திலேயே  கவிதை எழுதத் தொடங்கினார்  வில்லுப்பாட்டு எழுதி நண்பர்களோடு மேடை ஏற்றினார். கவியரங்குகளில் பங்கு கொண்டார். பேச்சுத் துறையில் ஈடுபாடு கொண்டார்.
ஆசிரியப்பணி புரிந்தபோது, சுயமாகவே பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்று, பழந்தமிழ் இலக்கியக் கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அக்காலத்தில்  "இலக்கியச்சிமிழ்", "இலக்கியத்தில் நகைச்சுவை" என்ற தலைப்புக்களில் இரு கட்டுரைத் தொடர்களை சிரித்திரனில் எழுதியதோடு, "வாலி கொலைச்சரமும் கேள்விச்சரமும்" என்ற தலைப்பில் ஈழநாடு பத்திரிகையில் தொடர்கட்டுரை ஒன்றையும் எழுதினார்.தொடர்ந்து ஈழமுரசு, முரசொலி, வீரகேசரி, தினகரன், தினக்குரல் ஆகிய பத்திரிகைகளிலும், பல சஞ்சிகைகளிலும் பல பழந்தமிழ் இலக்கிய கட்டுரைகளை எழுதியிருக்கின்றார். எழுதுவதுடன் பட்டி மன்றங்கள், கவியரங்கங்கள், ஆலயங்களில் சொற்பொழிவுகள் என பல நிகழ்வுகளைச் செய்துள்ளார்.
வானொலி, தொலைக்காட்சி என்பனவற்றிலும் நிகழ்ச்சிகளை வழங்கிய இவரது மெல்லிசைப்பாடல்கள் வெளிவரத்தொடங்கிவிட்டன. அதில் "சேற்றுவயல் காட்டினிலே" என்ற கிராமிய மெட்டுக் கொண்ட பாடல் புகழ் பெற்ற பாடல். எண்பதுகளின் ஆரம்பத்தில் பல சொற்பொழிவுகளை ஆற்றிய இவர், எண்பதுகளின் பிற்பகுதியில் இருந்து ஏராளமான வானொலி நாடகங்களையும் எழுதியுள்ளார்.. தொண்ணூறுகளின் ஆரம்பத்திலிருந்து கவியரங்கங்கள், கவிதைக்கலச நிகழ்வுகளில் ஏறக்குறைய நூறு நிகழ்ச்சிகள் நடத்தி, இளங்கவிஞர்களது பல கவிதைகளை வானலையில் தவழ விட்டார்.
இவரின் ஜின்னாவின் "இரட்டைக்காப்பிய ஆய்வு" என்ற நூல் தமிழ்நாட்டு ஆளுநர் பாத்திமா பீபியால் வெளியிடப்பட்டது. மகாகவி பாரதியாரின் சுதந்திரப்பாடல்கள் ஆய்வு நூல் தமிழ் நாட்டில் வெளியிடப்பட்டது. வாலி ஆய்வு நூல் பட்டப்படிப்பு துணைப்பாடநூலாக பயன்படுகின்றது. ஏற்கெனவே வெளியிடப்பட்ட இவரது 30 நூல்களோடு, - கம்பனில் நான்- கட்டுரைகள்,`தமிழர்- கட்டுரைகள்,`பாரதியாரும் பாவையரும்'-ஆய்வு ஆகிய மூன்று நூல்கள் அச்சில் உள்ளன, அவற்றை விரைவில் வெளியிடவுள்ளார்.
இவருக்கு  இதுவரை   காவியமாமணி, தமிழ்மணி, திருநெறிய தமிழ் வேந்தர்,கவிமாமணி,தமிழறிஞர், பல்கலைஎழில், புராணபடன புகழ்தகை,புராணபடன வித்தகர், வாகீசகலாநிதி, சிவனருட் செல்வர் ஆகிய பட்டங்களும்    தேசிய சாகித்திய மண்டல விருது, வடக்கு கிழக்கு மாகாண சாகித்திய மண்டல விருது, வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர் விருது ஆகிய விருதுகளும் இதுவரை கிடைத்துள்ளன.

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

படைப்பாளி அறிமுகம் - 16 - எழுத்தாளர் சுதாராஜ்

லங்கை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவரான எழுத்தாளர் சுதாராஜ் யாழ்ப்பாணம் நல்லூரை பிறப்பிடமா கொண்டவர்.
யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரி.
1972 இல் 'ஒளி' என்ற சஞ்சிகையில் 'இனிவருமோ உறக்கம்' என்ற சிறுகதை மூலம் இலங்கை தமிழ் இலக்கிய உலகில் அறிமுகமான இவர் நாவல், சிறுகதை, சிறுவர் இலக்கியம்,  என இலக்கிய வானில் தன் சிறகுகளை அகல விரித்திருந்தாலும் சிறுகதை துறையிலே தனது சுவடுகளை ஆழமாகவே பதித்திருக்கின்றார் என்று சொல்ல முடியும்.



ஒரு பொறியியலாளராக ஈராக் , குவைத் , பாகிஸ்தான் , இத்தாலி, கிறீஸ் , யமன் , அல்ஜீரியா, இந்தோனீஸியா என பல நாடுகளிலும் பணிபுரிந்து இருக்கும் இவர் அங்கு தனக்கு கிடைத்த அனுபவங்களை சிறுகதைகள் மூலம் வெளிக்கொணர்ந்திருக்கின்றார்.

இவரது படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகள் , சஞ்சிகைள் , இந்திய சஞ்சிகைகள் , புலம்பெயர் சஞ்சிகைகள் , பலவற்றிலும் களம் கண்டுள்ளன.


சுதாராஜின் முதற்சிறுகதை தொகுதியான 'பலாத்காரம்' 1977ம் ஆண்டில் வெளிவந்தது. இது பின்னர் இலங்கை அரசின் சாஹித்திய மண்டல பரிசினையும் பெற்றது.
2002 தன்னை இலக்கிய துறையில் தன்னை ஆற்றுப்படுத்திய சிரித்திரனை கௌரவிப்பதற்காக 'சிரித்திரன் சுந்தர்' விருதினை இலங்கை படைப்பாளிகளால் வெளியிடப்படும் நூல்களுக்கு சிறுகதை, கவிதை, சிறுவர் இலக்கியம் ஆகிய மூன்று துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நூல்களுக்கு வழங்கி வருகின்றார்.

இவர் இதுவரை 'பலாத்காரம்' , 'கொடுத்தல்'  'ஒரு நாளில் மறைந்த இரு மாலைப்பொழுகள்' , 'தெரியாத பக்கங்கள்' , 'சுதாராஜின் சிறுகதைகள்'  'காற்றோடு போதல்' , 'மனித தரிசனங்கள்' , 'மனைவி மஹாத்மியம்' , 'உயிர்கசிவு' என்ற ஒன்பது சிறுகதை நூல்களை வெளியிட்டிருக்கின்றார்


1981ம் ஆண்டு வீரகேசரியில் வெளிவந்த 'இளமைக்கோலம்' என்ற இவரது நாவல் 2006 இல் மணிமேகலை பிரசுரமாக வெளிவந்துள்ளது. அத்தோடு இவர் பல சிறுவர் இலக்கிய நூல்களையும் எழுதி வெளியிட்டிருக்கின்றார்.இவரது பல சிறுகதைகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கபட்டுள்ளன.

'கொடுத்தல்' சிறுகதை தொகுதிக்காக தேசிய சாஹித்திய மண்டல விருதினை பெற்றிருக்கும் இவர்; அதே நூலுக்காக இந்து சமய கலாச்சார அமைச்சின் 'இலக்கிய வித்தகர்' பட்டத்தினையும் பெற்றிருக்கின்றார்.
அத்தோடு 'தெரியாத பக்கங்கள்' எனும்  சிறுகதை தொகுதிக்காக விபவி கலாசார மையத்தின் சிறந்த சிறுகதை தொகுதிக்கான விருதினையும் பெற்றிருக்கின்றார். யாழ் இலக்கிய வட்டத்தின் விருது, தகவம் விருது, தமிழியல் விருது போன்றன இவரது சிறுகதை நூல்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஆனந்த விகடனின் வைரவிழா இலக்கிய போட்டியில் சிறந்த சிறுகதைக்கான விருதினை பெற்ற 'அடைக்கலம்' என்ற இவரது சிறுகதையை தழுவியே இயக்குனர் மணிரத்தினத்தின் 'கன்னத்தில் முத்தமிட்டால்' திரைப்படம் வெளிவந்தது என்ற சர்ச்சையும் இருக்கின்றது.

இவர் 2010ம் ஆண்டுக்கான இலங்கை அரசின் தேசிய சாஹித்திய மண்டல விருதினையும் 'புதிய சிறகுகள்' விருதினையும் 'மனைவி மகாத்மியம்' என்ற சிறுகதை நூலுக்காக பெற்றிருக்கின்றார் என்பதும் குறிப்படத்தக்கது.


சனி, 24 செப்டம்பர், 2011

படைப்பாளி அறிமுகம் - 15 - எழுத்தாளர் சித்தன்

இலங்கையின் இளைய தலைமுறை இதழியலாளர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவரான எழுத்தாளர் ஜிதேந்திர பிரசாத்  கொழும்பை  பிறப்பிடமாகக் கொண்டவர்.

சித்தன் எனும் யெரில் படைப்புக்களை படைத்து வரும் இவர் சமூகத்தில் புரையோடியிருக்கும் மூடநம்பிக்கை, சாதியப் பிரச்சினை போன்றவற்றின் முதுகெலும்பை உடைக்கும் ஆற்றலுள்ள எழுத்தின் சொந்தக்காரர்.
பத்தியெழுத்து, கவிதை, பாடலியற்றல்,கட்டுரை போன்றவற்றில் தனது ஆற்றலை நிரூபித்து வருகின்றார். 


ஆரம்பக் கல்வி முதல் உயர்தரம் வரை  கொழும்பு உவெஸ்லிக் கல்லூரியில் கற்ற இவர் பாடசாலை கல்வியை தொடர்ந்து பத்திரிகைத் துறையில் இணைந்து கொண்டார். ஆரம்பத்தில் சுடர் ஒளி பத்திரிகையில் பணியாற்றினார். அதன் பின்னர் வீரகேசரி பத்திரிகையில் சேர்ந்து இற்றைவரை பணியாற்றி வருகின்றார்.

2009ம் ஆண்டளவில  வீரகேசரி வாரவெளியீட்டில் வெளிவரும்  'சித்தன் பதில்கள்' பகுதியில் மூலம் தனது எழுத்துலக பயணத்தை ஆரம்பித்த  இவர் கேள்வி பதில் பகுதியில்  புதுமையை புகுத்தினார். இலக்கியம், சமயம்  வாழ்வியல் , விஞ்ஞானம் , பொருளாதாரம் இன்னோரன்ன விடயங்களில் வாகர்கள் கேட்கும்  பின் நவீனத்துவ கேள்விகளுக்கு இவர் வழங்கி வரும்  காத்திரமான பதில்கள்  அதிகளவிலான கவனத்தை வாசகர்களிடத்தில் பெற்றுள்ளன. இதன் மூலம் அதிகமாக  பேசப்பட தொடங்கினார்.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் 2010ம் ஆண்டு சிறந்த பத்தி எழுத்தாளருக்கான விருது வீரகேசரி பத்திரிகை சார்பாக இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.


இவரது முதலாவது நூல் 'கிழித்துபோடு'' எனும் தலைப்பில் 2010ம் ஆண்டு வெளிவந்தது.இதில் வீரகேசரி வாரவெளியீட்டில் வெளிவந்த இவரது சித்தன் பதில்கள் அடங்கியுள்ளன.பொது அறிவில் தேடல்  உள்ள அனைவருக்கும் ஒரு பொக்கிஷமாக இந்த நூல் அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து 'இதையும் கிழித்து  போடு' எனும் தலைப்பில் அடுத்த நூலை வெளியிடுவதற்குரிய  செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.

பழந்தமிழ் இலக்கியத்தில் சித்தர் பாடல்களில் தேடலும் ஆர்வமும் உள்ள இவர் இறை மறுப்புக் கொள்கையுடையவர் அதனை அடிப்படையாக வைத்து இவரால் எழுதப்பட்ட பாடல் அடங்கிய இறுவட்டும் மிகவிரைவில் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 17 செப்டம்பர், 2011

படைப்பாளி அறிமுகம் - 14 - கவிஞர் 'இளநெஞ்சன்' முர்ஷிதீன்


லங்கை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவரான கவிஞர் இளநெஞ்சன் முர்ஷிதீன் கொழும்பு மாளிகாவத்தையை பிறப்பிடமாககொண்டவர்.

1979ம்ஆண்டிலிருந்து  கவிதைகளோடு கைகுலுக்க ஆரம்பித்த இவர் இற்றைவரையும் ஒரு சமுதாய எழுத்தாளனாக தனது பயணித்து வருகின்றார்.

மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் மகாவித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியை சிங்களமொழியிலும்  அதன்பின்னர் தமிழ் மொழியிலும் கல்வி பயின்ற இவர் பேராதனை பல்கலைகழகத்தின் கலைப்பட்டதாரி.திறந்த பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறையில் டிப்ளோமா பட்டமும் அவுஸ்திரேலியாவில் சர்வதேச விவாகரங்களுக்கான பட்டப்பின் படிப்பையும் மேற்கொண்டுள்ளார்.


தினபதி, சிந்தாமணி, பத்திரிகையின் உதவியாசிரியராக கடமையாற்றியுள்ள இவர் தொலைக்காட்சி மற்றும் இணையத்தளங்களிலும் செய்தியாசிரியராக கடமைபுரிந்துள்ளார்.

1989ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச  இளைஞர்  இஸ்லாமிய தலைமைத்துவ பயிற்சி முகாமில் கலந்துகொண்டுள்ள இவர் , அமெரிக்கா, இங்கிலாந்து,ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா, லிபியா போன்ற நாடுகளில் நடைபெற்ற  ஊடகவியல் மனித உரிமைகள் சமாதான செயற்பாடுகள் தொடர்பான மாநாடுகளில் கலந்துகொண்டுள்ளார்.

வகவம் கவிதா பாசறையில் பட்டை தீட்டப்பட்ட இவரது கவிதை, சிறுகதை, கட்டுரை, படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகை, சஞ்சிகைகளிலும் இலத்திரனியல் ஊடகங்கள் பலவற்றிலும் களம் கண்டுள்ளன. 

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தேசிய மட்டத்தில் நடத்திய கவிதை, சிறுகதை, அறிவிப்பாளர் போட்டிகளில் முதலாமிடங்களை பெற்று ஜனாதிபதி விருதினை பெற்றிருக்கின்றார்.

இவரது முதலாவது வெளியீடாகிய 'இஸ்லாமிய கீதங்கள'1986ம் ஆண்டு வெளிவந்தது. அதன் பின்னர 1988ம் ஆண்டு  'ஒருவாசகனின் வாசகங்கள'; கவிதை நூலையும் 1990ம் ஆண்டு 'சமுதாய அகதிகள்' சிறுகதை நூலையும்
1995 இல் 'சமாதான யாசகங்கள்' கவிதை நூலையும்  2000ம் ஆண்டு 'மிலேனியம் கனவுகள்' கவிதை நூலையும் இலக்கிய உலகுக்கு தந்துள்ளார்.


எழுத்துக்களால் மட்டும்  சமூக முன்னேற்றம் பற்றி பேசிக்கொண்டிருக்காமல் இன்று இவர் சமுதாய முன்னேற்ற செயற்பாடுகளில் தன்னானான பங்களிப்பு செய்து வருகின்றார்.

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

படைப்பாளி அறிமுகம் -08- ''இருக்கிறம்'' சஞ்ஜீத்


லங்கையின் இளைய தலைமுறை இதழியலாளர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவரான அருளானந்தம் சஞ்ஜீத் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.இவர்புகைப்படக்கலை,கேலிச்சித்திரம்,குறுந்திரைப்படம்,ஊடகத்துறை போன்றவற்றில் தனது ஆற்றலை நிரூபித்து வருகின்றார்.  

ரம்பக் கல்வியை யாழ் மத்திய கல்லூரியிலும் பின் உயர்தரம் வரை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியிலும் கற்ற இவர் யாழ்.பல்கலைக்கழகத்தில் நுண்கலைமாணி பட்டத்தை நிறைவு செய்துவிட்டு தற்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு விரிவுரையாளராகவும் 'இருக்கிறம்' சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் கடமை புரிந்து வருகின்றார்.

2000ம் ஆண்டு மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த 'தினக்கதிர்' பத்திரிகையில் நிருபராகவும், கார்ட்டூனிஸ்டாகவும் பத்திரிகைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்த இவர், அதன் பின்னர் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் போதே பல உள்ளுர் ஊடகங்களுக்கும் சர்வதேச இணையத்தள ஊடகங்களுக்கும் பிரதேச செய்தியாளராகவும் கார்ட்டூனிஸ்டாகவும் பணிபுரிந்திருக்கின்றார்.



2003ம் ஆண்டளவில் யாழில் இருந்து வெளிவந்த பத்திரிகைகளில் இவர் செய்தி நிருபராக பல சமகால கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், மக்கள் மீதான அடக்குமுறைகளையும் அவர்களுடைய வேதனைகளையும் கார்ட்டூன்களால் சித்தரித்துள்ளார்.யாழில்  இருந்து  வெளிவந்த பத்திரிகைகளிலும், வெளிநாட்டு ஊடகங்களிலும் இவரது கேலிச்சித்திரங்கள் வெளிவந்திருக்கின்றன. 



மூகப் பிரச்சினைகளை தனது படைப்புக்களுடாக வெளிப்படுத்திவரும் இவர் சிறந்த புகைப்படக் கலைஞருமாவார்.
2007 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப்பீடத்தில் 'வர்ணமொழி' என்ற கண்காட்சியில் 'த கிளிக்' என்ற புகைப்படக் காட்சியொன்றை நடத்தினார். 2008 ஆம் ஆண்டும் யாழ்ப்பாணத்தில் 'விழிகளின் வழியே' என்ற என்ற புகைப்படக் கண்காட்சியொன்றையும் யாழ் பெரியபுலம் மாகாவித்தியாலயத்தில் யாழ் றோட்டரிக்கழக அனுசரணையில் நடத்தி பலரதும் கவனத்தையும் நல்லறிஞர்களின் பாராட்டையும் பெற்றார். 



மிழ்பேசும் மக்களின் தேசிய சஞ்சிகையாக 'இருக்கிறம்' சஞ்சிகையை பல சவால்களுக்கும் மத்தியில் வெற்றிகரமாக வெளியிட்டு சமூகத்து எதிரான அநீதிகளை தட்டிக்கேட்கும் துணிச்சல்மிக்க பத்திரிகையாக 2009 முதல் மாற்றியமைத்த இவரின் பணியை கௌரவப்படுத்தும் முகமாக 2010 ஆண்டு கொழும்பு தமிழ்ச்சங்கம் நடத்திய முத்தமிழ் விழாவில் 
''சிறந்த சஞ்சிகை ஆசிரியருக்கான விருது'' இவருக்குக் கிடைத்தது.



பல்கலைக்கழகத்தில் கற்கும் காலத்தில் இவரின் நெறியாள்கையில் உருவான 'வதை' 'நெருப்பு' என்ற இரண்டு குறுந்திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாக பத்திரிகைத்துறையில் பணியாற்றிவரும் இவர் இதுவரை தான் பத்திரிகைகளில் வரைந்த கேலிச்சித்திரங்களை தொகுத்து நூலாகவும் வெளியிட இருக்கின்றார்.

தனது காத்திரமான எழுத்து நடைமூலம் மூலமும் தனித்துவமான படைப்புக்கள் மூலமும் இலங்கையின் ஊடகத்துறையில் முத்திரை பதித்துவரும் இளம் ஊடகவியலாளர் அருள்-சஞ்ஜீத் அவர்களின் படைப்புலக பணியில் மேலும் பல சுவடுகளைப் பதிக்க நாமும் வாழ்த்துவோம்.


வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

படைப்பாளி அறிமுகம்-02- எழுத்தாளர் நீ.பி. அருளானந்தம்.



லங்கையின் சமகால படைப்பாளிகளுள் மிக முக்கியமானவராக கருதப்படுபவர் எழுத்தாளர் நீ.பி.அருளானந்தம் அவர்கள்.

யாழ்ப்பாணம் அச்சுவேலியை சேர்ந்த ஹென்றி தம்பித்துரை தம்பிமுத்து அவர்களுக்கும் சில்லாலையை சேர்ந்த  லூர்தம்மா அவர்களுக்கும் மகனாக வவுனியா சூசைப்பிள்ளையார்குளம் என்ற இடத்தில் 1947.11.12ம் திகதி பிறந்த இவர் இறம்பைக்குளம் அந்தோனியார் பாடசாலையில் ஆரம்பக்கல்வியையும் வவுனியா மகாவித்தியாலயத்தில் சாதாரண தரம்வரையும் கற்றவர்.

சிறுகதை,நாவல்,மட்டுமல்லாது இலக்கியத்தின் இதயமாக கருதப்படும் கவிதையிலும் தனது ஆற்றல்கள் மூலம் தடம்பதித்து வரும் எழுத்தாளர் நீ.பி.அருளானந்தம் அவர்களின் படைப்புக்கள் இலங்கையின்   தேசிய பத்திரிகைகள்,கலை-இலக்கிய சஞ்சிகைகளில் களம் கண்டுள்ளன.

01.மாற்றங்கள் மறுப்பதற்கில்லை
02.கபளீகரம்
03.ஆமைக்குணம்
04.கறுப்பு ஞாயிறு (அரசின் சாகி
த்திய விருது பெற்ற நூல்)
05.அகதி
06.ஒரு பெண்ணென்று  எழுது
07.வெளிச்சம்

ஆகிய 7 சிறுகதை நூல்களையும்
01.வாழ்க்கையின் நிறங்கள்
02.துயரம் சுமப்பவர்கள்
ஆகிய 2 நாவல்களையும்,

01.வேருடன் பிடுங்கிய நாளிலிருந்து
02.கடந்து போகுதல்

ஆகிய 2 கவிதை நூல்களையும் இதுவரை வெளியிட்டுள்ளார்.

அன்பு பாலம் இதழ் நடத்திய வல்லிக் கண்ணன்  சர்வதேச சிறுகதைப்போட்டியில் 'இரத்தம் கிளர்த்தும் முள்முடி'
சிறுகதைக்காக முதலாமிடம் பெற்று தென்னிந்தியாவின் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனிடம் இருந்து விருதினை பெற்றுக்கொண்டவர்.

இவர் தனது  கறுப்பு ஞாயிறு சிறுகதைத் தொகுதிக்காக இலங்கை அரசின் இலக்கியத்துகான உயரிய விருதான சாகித்திய மண்டல விருதினை பெற்றுக்கொண்டுள்ளார்.
இவரது வாழ்க்கையின் நிறங்கள் நாவல் அரச சாகித்திய விருதினையும் வடமாகாண சாகித்திய விருதினையும் பெற்றுக்கொண்டுள்ளது.


கின்னஸ் சாதனைகளில் சாதனை புரிந்து உலகத்தில் இரண்டாம் நிலையில் உள்ள இலங்கையை சேர்ந்த  பிரபல கின்னஸ் சாதனையாளர் சுரேஸ்ஜோக்கிம் அவர்கள் இவரது புத்திரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 வடபகுதி மக்களின் வாழ்வியலை பக்கசார்பின்றி படம்பிடித்துக்காட்டும் இவரது படைப்பக்கள் இன்னுமின்னும் இலக்கிய உலகில் அழியாத சுவடுகளை பதிக்க நாமும் வாழ்த்துவோம்.

















































வியாழன், 3 பிப்ரவரி, 2011

படைப்பாளி அறிமுகம்-01- கவிஞர் எம். ரிஷான் ஷெரீப்


லங்கையின் இளைய தலைமுறை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவரான கவிஞர் எம். ரிஷான் ஷெரீப், கேகாலை மாவட்டம், மாவனல்லையை பிறப்பிடமாகக் கொண்டவர். மாவனல்லை, பதுரியா மத்திய கல்லூரியில் உயர்தரக் கல்வியை கற்ற இவர், மொரட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை தொலைக்காட்சி பயிற்சிக் கல்லூரி போன்றவற்றில் தனது உயர்கல்வியை நிறைவு செய்துவிட்டு இத்தாலியிலிருந்து இயங்கும் சகோதர மொழி செய்மதி தொலைக்காட்சியான 'CHANNEL ONE SRI LANKA' இல் தமிழ் நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பாளராகவும், நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும்,தொகுப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.

கவிதை, சிறுகதை, ஓவியம், தன்னம்பிக்கைக்கட்டுரை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, புகைப்படத்துறை போன்றவற்றில் தனது ஆற்றலை வெளிப்படுத்திவரும் இவரின் படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகள், கலை,இலக்கிய சஞ்சிகைகளிலும் இந்தியாவிலிருந்து வெளிவரும் இதழ்களான காலச்சுவடு , விகடன், பூவுலகு, யுகமாயினி,  அம்ருதா, வடக்குவாசல், நவீனவிருட்சம், உன்னதம், மணல்வீடு, உயிர் எழுத்து, வார்த்தை, அகநாழிகை, கலைமகள் ஆகியவற்றிலும் மலேசியாவிலிருந்து வெளிவரும் இலக்கிய இதழ்களான அநங்கம், வல்லினம், சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் இலக்கிய இதழான 'நாம்' ஆகியவற்றிலும் மற்றும் இணைய இதழ்களான திண்ணை, வார்ப்பு, கீற்று, உயிர்மையின் உயிரோசை, மனிதம், தடாகம், அதிகாலை, புகலி, பதிவுகள், நவீன விருட்சம், சொல்வனம், இனியொரு, கூடு, சிக்கிமுக்கி, அதீதம் ஆகியவற்றிலும் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அத்தோடு இந்தியா 'வம்சி' பதிப்பகத்தின் 'கிளிஞ்சல்கள் பறக்கின்றன' தொகுப்பில் 2009ம் வருடத்துக்கான சிறந்த கவிதைகள் தொகுப்பில் இவரது கவிதையும்,'மரப்பாச்சியின் சில ஆடைகள்' 2009ம் வருடத்துக்கான சிறந்த சிறுகதைகளுக்கான தொகுப்பில் இவரது சிறுகதையும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற சர்வதேச எழுத்தாளர் மாநாட்டில் வெளியிடப்பட்ட 'முகங்கள்' எனும் இலங்கையின் முக்கிய 50 எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பிலும் இவரது சிறுகதை இடம்பெற்றிருக்கிறது.

இந்த மாதம் பிரபல இந்திய எழுத்தாளர் மதுமிதா தொகுத்து வெளிவந்திருக்கும்  'இரவுகள்' தொகுப்பிலும், பிரபல கவிஞர் குட்டிரேவதி தொகுத்து  வெளிவந்திருக்கும் 'முள்ளிவாய்க்காலுக்குப் பின்' தொகுப்பிலும் இவரது கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலிருந்து வெளிவரும் விகடனில் 'உனக்கென மட்டும்' எனும் தலைப்பில் 50 வாரங்கள் ஒரு கவிதை தொடரையும், 'இருப்புக்கு மீள்தல்' எனும் தொடர்கதையையும், கீற்று வார இதழில் 'நேசத்துக்குரிய ஒரே காதலுக்கு'  எனும் தலைப்பில் 30 வாரங்கள் ஒரு கவிதை தொடரையும், 'இயற்கை' எனும் தலைப்பில் பத்திக் கட்டுரையை தொடரொன்றை சிங்கப்பூரிலிருந்து  வெளிவரும் வல்லினம் இதழிலும் எழுதியிருக்கின்றார்.

இவரது   முதலாவது கவிதை தொகுப்பான 'வீழ்தலின்  நிழல்' கடந்த வருடம் இந்தியாவின் காலச்சுவடு பதிப்பகத்தின் மூலமாக வெளிவந்தது. அத்தோடு மொழி பெயர்ப்பு நாவலான 'அம்மாவின் ரகசியம்' மற்றும் சிங்கள கவிதைகளின் தொகுப்பு ஆகியன இந்தியாவின் காலச்சுவடு பதிப்பகம் மற்றும் லண்டன் 'எக்ஸில்' பதிப்பகம் மூலமாக விரைவில் வெளிவர இருக்கின்றன.

கவிஞர் எம். ரிஷான் ஷெரீப் கவிதைகளின்  ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் வெளிநாட்டு இதழ்களிலும் சிங்கள மொழி பெயர்ப்புக்கள் இலங்கையின் சிங்கள தேசிய பத்திரிகைகளிலும் வெளிவருகின்றன.

இலங்கை இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் மட்டுமல்லாது புலம்பெயர் நாடுகளிலும் தனது காத்திரமான படைப்புக்கள் மூலம் பரவலாக அறியப்பட்டுள்ள கவிஞர் எம். ரிஷான் ஷெரீப் எண்ணச் சிதறல்கள், எம். ரிஷான் ஷெரீப் கவிதைகள், எம்.ரிஷான் ஷெரீப் சிறுகதைகள், எனது விமர்சனங்கள், சிந்திக்கச் சில படங்கள், மொழி பெயர்ப்புகள் போன்ற தனது வலைப்பூக்களிலும் எழுதிவருகின்றார்.

ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக இலங்கையின் இலக்கிய வானை அலங்கரிக்கும் இவர் சர்வதேச ரீதியில் நடாத்தப்பட்ட பல கலை-இலக்கிய போட்டிகளில் விருதுகளை பெற்றுள்ளார். அதில்,

*2008ம் ஆண்டு சர்வதேச மட்டத்தில்  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய 'கந்தர்வன் சிறுகதைப்போட்டியில்  சிறப்புப் பரிசு.

*2009ம்ஆண்டு சர்வதேச மட்டத்தில் கனடா உதயன் பத்திரிகை நிறுவனம் உலக எழுத்தாளர்களுக்காக நடத்திய சிறுகதைப் போட்டியில் நான்காம் பரிசு.

*2010ம் ஆண்டு சர்வதேச புகைப்பட போட்டியில் முதல் பரிசு

*2010ம் ஆண்டு சர்வதேச மட்டத்தில் வலைப்பதிவர்களுக்கிடையே நடைபெற்ற உரையாடல் சிறுகதைப் போட்டியில் சிறப்புப்பரிசு.

*2010ம் ஆண்டு சர்வதேச மட்டத்தில் வலைப்பதிவர்களுக்கிடையே நடைபெற்ற உரையாடல் கவிதைப் போட்டியில் சிறப்புப்பரிசு.
போன்றவற்றை குறிப்பிடலாம்.
 

தனது காத்திரமான கவிதைகள் மூலமும் தனித்துவமான படைப்புக்கள் மூலம்  இலங்கையின் இலக்கியத்துறையில் முத்திரை பதித்துவரும் கவிஞர் எம்.ரிஷான் ஷெரீப் அவர்களின்  படைப்புலக பணி மேலும் மேலும் சுவடுகளை  பதிக்க நாமும் வாழ்த்துவோம்.


                                                  நன்றி.
*தூவானம் (29.01.11)- வசந்தம் தொலைக்காட்சி