சுடர் ஒளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுடர் ஒளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 2 பிப்ரவரி, 2011

நாக்கறுத்து கொடுத்துவிட்டு... நாய்வாலை ஆட்டி ..ஆட்டி...


நானிலம் செழிப்பதற்கு
               நல்வினைகள் புரிபவரை
               நாடிநிதம் தேடுவதா பட்டம்?
பாநிலத்தில் கவிதை நட்டு
               பாருலகை வென்று நிற்கும்
              பாவுழவர் சூடுவதா பட்டம்?

தேனமுதாய் கல்விதனை
              தேர்ந்து நிதம் கற்பவரை
              தேடிபுகழ் கூட்டுவதா பட்டம்?
வானமதில் இளசு எலாம்
              வண்ண வண்ண மாகவிட்டு
              வாழ்வின் நிலை காட்டுவதா பட்டம்?

தகுதியற்ற முண்டமெலாம்
              தலைவராகி ஊர்புகழ
              தன்பெயர்முன் போடுவதா பட்டம்?
பகுதி விகுதி தெரியாத
              படைப்புலக குப்பையெலாம்
              பல்லிளித்து வாங்குவதா பட்டம்?

காக்கை பிடிப்பவர்க்கு
             கற்பிக்கத் தகுதி பெற்றோர்
             கால்பிடித்து வாங்குவதா பட்டம்?
நாக்கறுத்து கொடுத்துவிட்டு
             நாய்வாலை ஆட்டியாட்டி
            நக்கரைத்து வாங்குவதா பட்டம்?

'உனக்கு நாளை சூட்டுகிறேன்
            எனக்கு இன்று சூட்டு' என்று
           திட்டமிட்டு திருடுவதா பட்டம்?
கணக்கற்ற பட்டம் வேண்ட
           கலங்காதே தோழா நீயும்
           காசிருந்தால் வாங்கிடலாம் பட்டம்..!!


                          நன்றி.
தினகரன் வாரம *ஞ்சரி
*சுடர் ஒளி
*இலங்கை வானாலி முஸ்லிம் சேவை
*பதிவுகள்

ஒன்ன நெனைக்காம ஒருபொழுதும் போனதில...!








ங்கோ மலர்ந்திருந்து
எனக்குள்ளே மணப்பவளே...
நெலவே ஒன்னால
நெலமறந்து நிக்கேன்டி...

கலபேசும் கண்ணால
வலவீசிப் போனவளே...
நாளுமொன நெனச்சி
வாழுதடி ஏ..உசுரு..

பாகக்கா இனிக்குதடி...
பால்புக்க கசக்குதடி...
ஒன்ன நெனச்சாக்கா
ஒலகமெலாம் வெறுக்குதடி

முருங்கப்பூ பல்லழகே
முட்டநிற தோலழகே
கஸ்தூரி பாக்குநிற
கரும்புதட்டுக் காரிகையே...

சோளகன் மீசநிற
சோக்கான ஓமுடியில்
ஏமனச முடிஞ்சதுநீ
ஏமாத்தி போய்விடவா...

ஆசவடிஞ்சிடுச்சா
அன்புத்தீ நூந்திடிச்சா
காசக் கண்ட மனம்
காதலன மாத்திடிச்சா...

அண்டுநீ சொன்னதெல்லாம்
அடிநெஞ்சில் கேக்குதடி...
இண்டு அதநெனச்சி
இதயஅற கொளருதடி...

பகலிரவாய கதச்சதெல்லாம்
பழயகத ஆயிடுமா..?
நாம்கதச்சி கொண்டதெல்லாம்
நா மறந்து போயிடுமா...?

பிரியத்த வெதச்சிபுட்டு
பிஞ்சியில பிச்சபுள்ள
நெஞ்சபத்த வெச்சி
நெனப்பெல்லாம் நீயானாய்...

'சினேகா' சிரிப்பினிலே
சிறகடிச்சு நான்பறந்து
'சல்வார்' கனவுகளில்
சாஞ்சகத நெனப்பிருக்கு

காசித் திமிரொழுக
கட்டழகி நீபோக
எட்டா பழமெண்டு
எண்ணியது நெனப்பிருக்கு...


ஏங்கவித நீபடிச்சி
ஏக்கமுடன் தூதனுப்ப
'ஆம்ஸ்ரோங்காய்' நானன்று
ஆனதெல்லாம் நெனப்பிருக்கு....

பாடப் புத்தகத்த
படிக்கிறத்த நான்விடுத்து
பலதடவ ஓமடலில்
படிச்சதெல்லாம் நெனப்பிருக்கு...

'டியுசனுக்கே' நாமொருநாள்
'டிமிக்கி' குடுத்துபுட்டு
காதலில புதுப்பாடம்
கற்றதெல்லாம் நெனப்பிருக்கு...

நான்தின்ன நீதின்ன
நம்மிதழ தேன்தின்ன
சின்னவிழி சொக்கி
சிணுங்கியது நெனப்பிருக்கு...

விழிகளில மீன்புடிச்சி
விரல்களில சுளுக்கெடுத்து
ராத்திரியில் நாம்செய்த
ரகசியங்கள் நெனப்பிருக்கு...

வீட்டார் இதஅறிஞ்சி
வீணாக ஒனக்கடிக்க
புழவா நாந்துடிச்சி
புழுங்கியது நெனப்பிருக்கு...

அலரிவெத அரச்சி
ஆத்திரமாய் நீதின்ன
அலறி நாந்துடிச்சி
ஒளறியது நெனப்பிருக்கு....

ஒன்னப்பாத்துவர
ஓரிரவில் மனசுவெர..
நாய்வெரசி நானுழுந்து
நடுங்கியது நெனப்பிருக்கு...

கொழந்த மனசறிஞ்சும்
கொரல்வலய முறிச்சவளே..
எல்லாம் நெனப்பிருக்கு
என்னெப்பு ஒனக்கிருக்கா...

ஒன்ன நெனைக்காம
ஒருபொழுதும் போனதில
ஏய்புள்ள... நீசொல்லு..
என்னொனக்கு நெனப்பிருக்கா...?

நன்றி.


*இலங்கை ஊவா சமூக வானொலி
*சுடர் ஒளி வாரவெளியீடு
*இருக்கிறம்

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

மாடுகள் கூட்டிய மாநாடு...!


ருதுகளுக்கு
விருதுகள் வழங்க
மாடுகள் கூட்டிய
மாநாடு அது…

நடப்பன ஊர்வன
நடிப்பன பறப்பன
விலங்குகள் சிலவும்
விழாவுக்கு வந்தன…


காணிகளை
களவாக மேய்வதில்
‘கலாநிதி' முடித்த
கிழட்டுக் கிடாக்கள்தான்
கிரீடத்தை சூட்டுகின்றன…


இலவம் பழத்துக்காய்
இலவுகாத்த
மூளையே இல்லாத
முட்டாள் கிளிகள்

கீச்சுக் குரலில்
மூச்சு விடாமல்
சிறுநீரை பற்றி
சிலாகித்து பேசின…

ஒலிவாங்கியை
எலி வாங்கி
எருமைகள் பற்றியே
எடுத்துவிட்டன…


பாவம் பசுக்கள்…!
பாலைப் பலருக்கும்
பருகக் கொடுத்துவிட்டு
குட்டிகளோடு
குமுறிக் கொண்டிருந்தன
குளக்கரையில்.


பசுக்களை
கொசுக்கள் கூட
கணக்கில் எடுக்கவில்லை….


பாம்புகள்
பாலுக்காய்
படப்பிடிப்பிலிருந்தன…

வெட்கமில்லாத
வெண்பசுக்கள்
முலைகளை
மூடிமறைக்காததால்
முள்ளம் பன்றிகள் பார்த்து
மூச்சிரைத்தன…
பார்க்கு மிடமெங்கும்
பாலே ஓடியது…


பூனைகள் எலிகளோடு
புன்னகைத்தவாறு
முயல்களை
முழங்குவது போல் பார்ப்பதில்
மும்முரமாய் இருந்தன…


எருதுகளுக்கு
விருதுகள் வழங்க
மாடுகள் கூட்டிய
மாநாடு அது…


வாழ்த்துப் பாடின
வால் பிடித்தே
வயிறு வளர்க்கும்
வாலான் தவளைகள்….

கால் பிடித்தே
காரியம் முடிக்கும்
காகங்களும்
கழிசரைக் கழுதைகளும்
காளைகளுக்கு மாறி மாறி
கவரிவீசின…

மாக்கள் கூடிய
மாநாடு அல்லவா…?
பூக்களுக் கங்கே
புகழாரமில்லை

அழுக்குத்தான் அன்று
அரியணையில் இருந்ததால்
சாணமே அங்கு
சந்தனமாயிருந்தது…

தயிர்ச் சட்டிளாலும்
நெய் முட்டிகளாலும்
இவ்வருடத்திற்கான விருதுகள்
இழைக்கப்பட்டிருப்பதாகவும்
பருந்துகளுக்கு
விருந்து வழங்கினால்தான்
அடுத்த வருடத்திற்கான
‘ஆளுநர்' தெரிவாவரென்றும்
அதிலும்
முதுகு சொரிவதில்
‘முதுமாணி’ முடித்தவர்களுக்கே
முன்னுரிமை இருப்பதாகவும்
முதலைகள்
முணுமுணுத்தன…

எருதுகளுக்கு
விருதுகள் வழங்க
மாடுகள் கூட்டிய
மாநாடு அது…

நாக்கிலுப்புழு ஒன்றே
நடுவராக இருந்ததால்
மான்களுக்கும்
மயில்களுக்கும்
மரியாதை அங்கில்லை.
வான் கோழிகளுக்குத்தான்
வரபேற்பிருந்தது.
பரிகளும் வரவில்லை
நரிகளும்
நாய்களுமே
நாற்காலியை நிறைத்திருந்தது.

மாநாட்டின் ஈற்றில்
எருமைகள் பற்றி
பெருமையாய்
சாக்கடை ஈக்கள்
சங்கீத மிசைத்தன….


மரம்விட்டு
மரம்தாவும்
மந்தி
மந்திரிகள்
கையடித்தன
கைலாகு கொடுத்தன…
எதுவுமே தெரியாத
எருமைகளுக்கு
பன்னாடைகளால
பொன்னாடை போர்த்தி
பொற்கிழி வழங்கின…

மாடுகளின் மாநாட்டில்
விருதுகள் பெற்ற
எருதுகளின்
வீர பிரதாபங்களும்
பல்லிளிப்புடன் கூடிய
படங்களும்
விளம்பரமாய்
நாளை வரலாம்
நாய்களின் பத்திரிகையில்...

*சுடர் ஒளி, 
*செங்கதிர், 
*தினகரன் வாரமஞ்சரி, 
*பதிவுகள், 
*வார்ப்பு

சனி, 29 ஜனவரி, 2011

நவீன துச்சாதனனும் நாயான யூதாஸும்!

பாலாறு தேனாறு ஓடிநின்ற பூமி!
படுபாவிகளினாலே அழியுதடா சாமி!
யாழ்தன்னைப் பந்தாடத் துடிக்குதடா ‘ஆமி’!
யாரென்று உனைக்காட்ட ‘துவக்கெடுத்து காமி!

நாள்தோறும் நல்லவரை ‘கொட்டி'யென்றடைப்பார்
நடுறோட்டில் அவர்பின்னே பிணமாக கிடைப்பார்!
காலாற நடந்தாலே காணமல் போவோம்!
கண்ணிவெடி கிளைமோரில் கால்பறந்து சாவோம்!

கோளாறு கொண்டோரை கொன்றன்று வென்றோம்!
கோடாலிக் காம்புகளால் பின்வாங்கிச் சென்றோம்!
ஏழாறு நாள்போதும் மீண்டுமதை வெல்வோம்!
எமன்வந்து தடுத்தாலும் அவனையுமே கொல்வோம்!

பாவிகளின் இடுப்பொடிக்க ஒருபோதும் அஞ்சோம்!
பல்லிளித்து ஈழம்தா என்றும்நாம் கெஞ்சோம்!
ஆவிபறி போனாலும் மீண்டும்நாம் பிறப்போம்
அடிவருடி களையொழிக்க உயிருறவை துறப்போம்!

எம்மவனே எமையழிக்க யூதாஸாய் போனான்!
எச்சிலைக்காய் வாலாட்டும் நாய்போன்றே ஆனான்!
அம்மாவின் சேலையினை ‘துச்சாதன்' உரித்தான்!
ஆஹாகா! மேலுமுரி எனப்பிள்ளை சிரித்தான்!

ஐவிரலும் ஒன்றல்ல! அவன்பிள்ளை யல்ல!
ஐயையோ என்றலர்வான் எதிரிகளே கொல்ல!
பொய்யுலர பூமலரும் போரொருநாள் ஓயும்!
பொறுதமிழா! உன்வாழ்வில் இன்பத்தேன் பாயும்!




          நன்றி.
*பதிவுகள்
*சுடர் ஒளி
*தாயகம்
*வார்ப்பு




வியாழன், 6 மே, 2010

மாட்டுக்கு மாலை போடு..



காலினைப் பிடித்தேன் என்றன்
கழுத்துக்கு மாலை வேண்டாம்!

எழுத்திலே காணின் ஏதும்
எழுதுவீர் அதுவே போதும்!

வாலினை பிடிப்ப வர்தான்
வாழுவர் தெரியும் கெட்ட

தேளினை பிடித்தோர் கூட
தேம்புவர் எனவே உங்கள்

காலினைப் பிடித்தே னையா
கழுத்துக்கு மாலை வேண்டாம்!

கழுதையும் குரங்கும் மாடும்
கழுத்திலே மாலை பூண்டு…

மூலைக்கு மூலை கூடி
“முதுகினை சொரிந்து” எங்கும்

“போட்டோக்கு” பல்லைக் காட்டி
“போஸினை’’ கொடுத்து பின்னர்

எங்களை வெல்லும் கொம்பன்
எவனடா இங்கு உண்டு…?

என்றுதற் புகழ்ச்சி தன்னில்
எம்பித்தான் குதிக்கும் போது

அற்பன்நான் அவைகள் பாத
அடியிற்கு இன்னும் கீழே

ஆகையால் மாலை வாங்க
அடியேனுக் காசை யில்லை

காலினைப் பிடித்தேன் ‘வாப்பா’
கழுத்துக்கு மாலை வேண்டாம்!

மாண்டுநாம் மடிந்த பின்தான்
மனதினால் மாலை இடுவர்

ஈண்டிவர் போடும் மாலை
இதயத்த லல்ல வேசம்..

மாலையில் மாலை போட்டு
மாலைதான் மறையுமுன்னே

கூழையன் நாங்கள் போட்ட
“கூழுக்கு” ஆடிப் போனான…

ஆளினைப் பிடித்து வைத்தால்
ஆளலாம் என்பீர் உங்கள்

காலினைப் பிடித்தேன் ‘’வாப்பா’’
கழுத்துக்கு மாலை வேண்டாம்!

எலும்புக்காய் எச்சிலைக்காய்
எங்கள்நாய் வாலை ஆட்டும்

பிணமான பின்தான் உண்மை
பிரியத்தை அதுவும் காட்டும்

ஆகையால் மாலை சூட்ட
ஆருமே வராதீர் தேடி!

எழுத்திலே ஏதும் காணின்
எழுதுவீர் அதுவே கோடி!!

          நன்றி.
*சுடர் ஒளி வாரவெளியீடு
*தினகரன் வாரமஞ்சரி
*வார்ப்பு

*செங்கதிர்
*பதிவுகள்