வெள்ளி, 20 ஜனவரி, 2012

படைப்பாளி அறிமுகம் - 22 எழுத்தாளர் 'தமிழ் மணி' அகளங்கன்



இலங்கையின் வவுனியா மாவட்டத்தின்  பம்பைமடு என்னும் அழகிய சிறிய விவசாயக் கிராமத்தில்  சேனாதிராஜா நாகலிங்கம்நல்லம்மா தம்பதிகளுக்கு ஏழாவது புதல்வராக 1953 ஆம் ஆண்டு பிறந்தவர் எழுத்தாளர் அகளங்கன். இவரது இயற்பெயர் நா .தர்மராஜா
பம்பைமடு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், இடை நிலைக் கல்வியை வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்திலும்க .பொ .த உயர்தரத்தை யாழ்ப்பாணத்து சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியிலும் பல்கலைக்கழகக் கல்வியை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணித விஞ்ஞானத் துறையிலும் கற்று பின்னர் கணித புள்ளிவிபரவியல் துறையில் பட்டப் படிப்பையும் பூர்த்தி செய்துள்ளார்.

இருபத்தைந்து  ஆண்டுகளுக்கு மேலாக  கணித ஆசிரியராகக் கடமையாற்றியுள்ள இவர் பின்னர் அச் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார். அத்தோடு கலை இலக்கிய ஈடுபாடுள்ள இவர் பாடசாலைக் காலத்திலேயே  கவிதை எழுதத் தொடங்கினார்  வில்லுப்பாட்டு எழுதி நண்பர்களோடு மேடை ஏற்றினார். கவியரங்குகளில் பங்கு கொண்டார். பேச்சுத் துறையில் ஈடுபாடு கொண்டார்.
ஆசிரியப்பணி புரிந்தபோது, சுயமாகவே பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்று, பழந்தமிழ் இலக்கியக் கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அக்காலத்தில்  "இலக்கியச்சிமிழ்", "இலக்கியத்தில் நகைச்சுவை" என்ற தலைப்புக்களில் இரு கட்டுரைத் தொடர்களை சிரித்திரனில் எழுதியதோடு, "வாலி கொலைச்சரமும் கேள்விச்சரமும்" என்ற தலைப்பில் ஈழநாடு பத்திரிகையில் தொடர்கட்டுரை ஒன்றையும் எழுதினார்.தொடர்ந்து ஈழமுரசு, முரசொலி, வீரகேசரி, தினகரன், தினக்குரல் ஆகிய பத்திரிகைகளிலும், பல சஞ்சிகைகளிலும் பல பழந்தமிழ் இலக்கிய கட்டுரைகளை எழுதியிருக்கின்றார். எழுதுவதுடன் பட்டி மன்றங்கள், கவியரங்கங்கள், ஆலயங்களில் சொற்பொழிவுகள் என பல நிகழ்வுகளைச் செய்துள்ளார்.
வானொலி, தொலைக்காட்சி என்பனவற்றிலும் நிகழ்ச்சிகளை வழங்கிய இவரது மெல்லிசைப்பாடல்கள் வெளிவரத்தொடங்கிவிட்டன. அதில் "சேற்றுவயல் காட்டினிலே" என்ற கிராமிய மெட்டுக் கொண்ட பாடல் புகழ் பெற்ற பாடல். எண்பதுகளின் ஆரம்பத்தில் பல சொற்பொழிவுகளை ஆற்றிய இவர், எண்பதுகளின் பிற்பகுதியில் இருந்து ஏராளமான வானொலி நாடகங்களையும் எழுதியுள்ளார்.. தொண்ணூறுகளின் ஆரம்பத்திலிருந்து கவியரங்கங்கள், கவிதைக்கலச நிகழ்வுகளில் ஏறக்குறைய நூறு நிகழ்ச்சிகள் நடத்தி, இளங்கவிஞர்களது பல கவிதைகளை வானலையில் தவழ விட்டார்.
இவரின் ஜின்னாவின் "இரட்டைக்காப்பிய ஆய்வு" என்ற நூல் தமிழ்நாட்டு ஆளுநர் பாத்திமா பீபியால் வெளியிடப்பட்டது. மகாகவி பாரதியாரின் சுதந்திரப்பாடல்கள் ஆய்வு நூல் தமிழ் நாட்டில் வெளியிடப்பட்டது. வாலி ஆய்வு நூல் பட்டப்படிப்பு துணைப்பாடநூலாக பயன்படுகின்றது. ஏற்கெனவே வெளியிடப்பட்ட இவரது 30 நூல்களோடு, - கம்பனில் நான்- கட்டுரைகள்,`தமிழர்- கட்டுரைகள்,`பாரதியாரும் பாவையரும்'-ஆய்வு ஆகிய மூன்று நூல்கள் அச்சில் உள்ளன, அவற்றை விரைவில் வெளியிடவுள்ளார்.
இவருக்கு  இதுவரை   காவியமாமணி, தமிழ்மணி, திருநெறிய தமிழ் வேந்தர்,கவிமாமணி,தமிழறிஞர், பல்கலைஎழில், புராணபடன புகழ்தகை,புராணபடன வித்தகர், வாகீசகலாநிதி, சிவனருட் செல்வர் ஆகிய பட்டங்களும்    தேசிய சாகித்திய மண்டல விருது, வடக்கு கிழக்கு மாகாண சாகித்திய மண்டல விருது, வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர் விருது ஆகிய விருதுகளும் இதுவரை கிடைத்துள்ளன.

திங்கள், 16 ஜனவரி, 2012

''எந்தன் காதலி'' இது புதிய ஆண்டின் புத்தம் புதிய பாடல்



''எந்தன் காதலி'' இது புதிய ஆண்டின் புத்தம் புதிய பாடல். இசையமைப்பாளர் வேரணண் அவர்களின் இசையில் நான் எழுதியுள்ள இந்த பாடலை லண்டனை சேர்ந்த பாடகர் ஆனந் பாடலை பாடியுள்ளார்.அழகான காட்சியமைப்புக்களுடன் பாடல் வெளிவந்துள்ளது.

இந்த பாடல் உருவான விதம் சுவாரசியமானது.எனது முகநூலில் நான் தினம் தினம் கவிதை மாதிரிகளையும் என்னுடைய பாடல் வரிகளையும் விதைப்பது வழக்கம்.அதை கண்ணுற்ற ஆனந் மற்றும் வேரணன் ஆகியோருக்கு வரிகள் பிடித்துப்போக என்னை ஆச்சரியப்படுத்தும் ஆர்வத்தில் பாடலுக்கு இசையமைத்து பாடி புத்தாண்டு பரிசாக எனக்கு அனுப்பிவைத்தார்கள்.

ஒரு சில வரிகள் நான் முன்பு எழுதியுள்ள பாடலில் இடம்பெற்றுள்ளன.அதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.இருந்தும் இசை அதற்கு வித்தியாசமாக ஆடைகட்டி அழகு பார்த்திருக்கிறது....



Singer: Ananth VS (UK)
Lyrics: Kavignar Asmin (Sri-Lanka)
Music: Vernon G Segaram (UK)
Video Editing: Ragenthan K (UK)
Starring - RaguJan - RJ
Cinematography | Edit | Direction - Cinematic Production.