இஸ்லாமிய கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்லாமிய கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

உம்மாநான் சவூதிக்கு போறேன்...!


இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களில் குறிப்பாக தென்கிழக்கு முஸ்லிம்களின்  பேச்சுவழக்கில்  இக்கவிதை அமைந்துள்ளது.


உம்மாநான் சவூதிக்கு போறேன்-எங்கட
கவலைகள் கஷ்டங்கள் கலஞ்சோடிப்போக...!
உம்மென்று இருக்காதே நீயும்-என்ட
கண்ணப்போல் உனையென்றும் புள்ளநான் காப்பேன்!

வாப்பாநீங்க ஒழச்சது போதும்-ஒங்கட
பெரச்சின லாத்தையும் நானினி பாப்பேன்...!
சாப்பாட்டுக் கினியென்ன பஞ்சம...?-ஒங்கள
மௌத்தாகும் வரைக்கும்நான் மனசாற பாப்பேன்..!

கலியாண வயசுள்ள என்ன-நீங்க
கரசேக்க படுகிற பாட்ட நான் அறிவேன்...!
என்னகா செய்றநான் உம்மா
பொம்புளயா  பொறந்தது யாரோட குத்தம்..?

அப்பம் வித்து காக்கா படிச்சார்
கடசியில் நமக்கெல்லாம் என்னத்த கிழிச்சார்...?
கொமர நெற வேத்த முந்தி-காக்கா
கொறுக்காட பேத்திய  கலியாணம் முடிச்சார்...

புழிஞ்ச தேங்காப் பூவப்போல
புளிச்சித்தான் போனோம் அவருக்கும் நாங்க
கிழிஞ்ச 'சல்வார' மாத்த-உம்மா
ஒங்கிட்ட காசில்ல யார்ட்ட வாங்க...?

படிச்சாக்கள் இப்பெல்லாம் கூட-இஞ்ச
படிப்புத்தான் உசிரென்றோர் சோத்துக்கு வாட-நான்
பட்டங்கள் படிச்சதும் வீந்தான்-இப்ப
தொழிலின்றி இருந்திட்டா கெடைக்குமோ தீன்தான்...?

அரசாங்க தொழிலையும் காணோம்-நாங்க
அலையால மழையால அழிஞ்சிதான் போனோம்
'எம்பி'மார் பொய்கள கேட்டா-உம்மா
இதவிட மோசமா அழிஞ்சுதான் போவோம்...!

அதுவரும் இதுவரும் என்பார்-உம்மா
ஆனைய குடுத்தாலும் சோத்தோட திம்பார்
ஊட்டுக்கு தேடிநாம் போனா-'சேர';
எடுபிடி அனுப்பி 'பிஸி' எனச்சொல்வார்...

வக்கின்றி வாக்குகள் கேட்டு-ஊட்ட
வருவோர்க்கு உம்மாநீ வாருகள் காட்டு
எருமைங்க கதையல கேட்டு
ஏமாந்து இனிமேலும் போடாதே ஓட்டு....

ஒழைக்காட்டி ஒசந்தவர் யாரு? -நாங்க
ஒழைக்காம தின்டிட்டா மதிக்குமா ஊரு?
ஒழச்சத்தான் கக்கிஷம் போகும்-இத
ஒணராட்டி எப்புடி சோகங்கள் சாகும்..,?

நெனச்சமாரி நாங்க உடுக்க-இழிவா
நெனச்ச மச்சானுக்கு சீதனம் குடுக்க
சவூதிக்கு உம்மாநான் போறேன்-எல்லாம்
சரியாக வந்திடும் சிலநாளில் பாரேன்.

சொளையாக அனுப்புறன் காசி- ஊட்டில்
சொகமாநீ வாழலாம் பூட்டும்மா 'ஏசி'
தொணையாக இருக்கிறேன் உம்மா-நீயும்
கொளராத கக்கிஷம் போய்விடும் சும்மா...

சொர்க்கத்த வாங்கிட்டு வருவேன்-அந்த
மக்கத்து சொகமெல்லாம் ஒனக்குத்தான் தருவேன்
சொத்துக்கள் உம்மாநீ வாங்கு-எங்கட
சொர்க்கத்தில் இனியாச்சும் சொகமாக தூங்கு...!

மனம்வெச்சி என்னநீ அனுப்பு-சவூதி
நானிப்ப போனாத்தான் எரியும்நம் அடுப்பு..!
போஎன்டு செல்லித்தான் பாரு..-சொட்டு
நாளைக்குள் ஓடும்மா தங்கத்தில் ஆறு.....

ஒயித்தாட புள்ளநான் என்று
ஒதுக்கித்தான் பாக்காங்க ஊராக்கள் இன்று
அவியலின் முன்னால நாங்க
ஆரேண்டு காட்டித்தான் வாழனும் ஓங்க...

உம்மாநான் சவூதிக்கு போறேன்-எங்கட
கக்கிஷம் எல்லாமே காத்துல போகும்-என்ன
சும்மா நெனைக்காதே நீயும்-நாங்க
சொகுசாக வாழலாம் சொமையெல்லாம் தீயும்...!!

நன்றி
*விடிவெள்ளி(24.02.11)
*விடியலின் ராகங்கள்-2001



கவிதையில் இடம்பெற்றுள்ள கிராமிய வழக்குச் சொற்கள்.

பெரச்சின- பிரச்சினை       
லாத்தையும்- எல்லாவற்றையும்
கரசேக்க- கரை சேர்க்க     
காக்கா- மூத்த சகோதரன்
உம்மா-தாய்            
வாப்பா-தந்தை
பொம்புளயா-பெண்ணாக
என்னகா-என்ன?
என்னத்த?-எதை?
கொமர-கன்னிப்பெண்
நெறவேத்த- நிறைவேற்ற
தீன்-உணவு
ஆனை-யானை
கொறுக்காட-கறுப்பானவர்களை குறிக்கும் பட்டப்பெயர்
வக்கில்லா- தகுதியின்றி
ஊட்ட-வீட்ட
கக்கிஷம்-கஷ்ட்டம்
வாருகள்-வீட்டின் முற்றத்தில் இருக்கும் குப்பைகளை அகற்ற உதவும் பொருள்
சொளையாக-சுளையாக
தொணையாக-துணையாக
கொளராத-அழாதே
எண்டு-என்று
சொட்டு-சிறிது
ஒயித்த- இஸ்லாமியர்களுக்கு விருத்தசேதனம் செய்பவர்
அவியல்- அவர்கள்
ஆரேண்டு-யார் என்று

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

புத்தியுடன் செயற்படுவோம்!


 மாண்புமிகு இஸ்லாத்தின்
மகத்துவத்தை பறைசாற்றும்
நோன்புதனை தினம்நோற்று
தீன்வழியில் நடந்திடுவோம்

வீண்பேச்சு சபலங்கள்
விளையாட்டு விவாதங்கள்
கூண்டோடு அத்தனையும்
குழிதோண்டி புதைத்திடுவோம்

காலைமுதல் மாலைவரை
கவனமுடன் நோன்பிருப்போம்
ஏழைகளின் பசிதன்னை
எப்படியென் றறிந்திடுவோம்

நாட்கள் முப்பதும் நாம்
நல்லபடிநோன்பிருந்து
பாவங்கள் கழுவி இன்றே
பரிசுத்த மாகிடுவோம்

புறம்கூறல் பொய்சொல்லல்
பொறாமையிலே குழிபறித்தல்
அறமல்ல என்றுணர்ந்து
அனைவருமே ஒழுகிடுவோம்

நோய்தீரும் என்பதற்காய்
நோன்புதனை நோற்காமல்
வாய்காட்டி வாழாமல்
வாய்மையுடன் வாழ்ந்திடுவோம்

அநியாயம் அக்கிரமம்
அத்தனையும் தவிர்த்திடுவோம்
துனியாவில் இஸ்லாத்தின்
தூய்மையினை எடுத்துரைப்போம்

இல்லாத மக்களுக்கு
இயன்றவரை ஈந்திடுவோம்
பொல்லாத குணங்களினை
போரிட்டு பொசுக்கிடுவோம்

அல்லாஹ்வின் நாமத்தை
அடிநெஞ்சில் வளர்த்திடுவோம்
வல்லோனின் சொல்லொன்றே
வாழ்வென்று வாழ்ந்திடுவோம்

தேன்போன்ற நபிகளாரின்
சுன்னத்தை கடைப்பிடிப்போம்
ஆண்பெண்கள் அனைவருமே
அல்குர்ஆன் வழி நடப்போம்

மதம் எதுவாயிருந்தாலும்
மரியாதை கொடுத்திடுவோம்
புரிந்துணர்வை நாம்வளர்த்து
புத்தியுடன் செயற்படுவோம்

                                    நன்றி
*வசந்தம் தொலைக்காட்சி-.இலங்கை