நேர்காணல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நேர்காணல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 13 ஏப்ரல், 2013

வசந்தம் TVயில் இடம் பெற்ற திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் அஸ்மின் அவர்களின் நேர்காணல்.



2013 சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வசந்தம் தொலைக்காட்சியில்''இசையால் வெல்வோம்'' சிறப்பு நிகழ்ச்சியில் இடம் பெற்ற தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் அஸ்மின் அவர்களின் நேர்காணல்.

வியாழன், 7 ஜூன், 2012

மித்திரன் வாரமலரில் இடம்பெற்றுள்ள பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மினின் நேர்காணல்

வசந்தம் TVயில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் பணிபுரியும் கவிஞர் அஸ்மின் ஈழத்தில் மரபுக் கவிதை எழுதி வரும் இளம் கவிஞர்களுள் முக்கிய கவிஞராகவும், திரைப்பட பாடலாசிரியராகவும்,அறியப்பட்டு வருகின்றார். சக்திTVயினால் நடாத்தப்பட்ட'இசை இளவரசர்கள்' போட்டி நிகழ்ச்சி மூலம் பாடலாசிரியராக அறிமுகமான இவர்,தேசியமட்ட கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு ஜனாதிபதி விருது(2001),பேராதனை பல்கலைக்கழகத்தின் தங்கப் பதக்கம் (2003) பெற்றுள்ளதோடு 2 முறை சிறந்த பாடலாசிரியருக்கான விருது (2010,2011) அகஸ்தியர் விருது (2011), உட்பட 10க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.
சுபாசெவ்வேளின் தயாரிப்பில் இயக்குனர் கேசவராஜின் இயக்கத்தில் வெளிவரவுள்ள ''பனைமரக்காடு'' தமிழ் திரைப்படத்தில் பாடல்களை எழுதியிருக்கும் இவர் ஜீவா சங்கரின் இயக்கத்தில் விஜய் அன்டனியின் நடிப்பில் வெளிவரவுள்ள ''நான்'' திரைப்படத்தில்  இசையமைப்பாளர் விஜய் அன்டனியின் இசையில் பாடல் எழுதியுள்ளார்.


1. இந்திய திரைப்படம் ஒன்றிற்கு பாடல் எழுதும் வாய்ப்பினை எப்படி பெற்றீர்கள்?

திரைப்படத்தில் பாடல் எழுதுவது முதலாவதாக எனக்கு 'பனைமரக்காடு' திரைப்படத்தின் மூலமே சாத்தியமானது.செவ்வேளின் தயாரிப்பில் இயக்குனர் கேசவாஜின் இயக்கத்தில் விமல்ராஜாவின் இசையில் 'உயிரிலே..' என ஆரம்பிக்கும் பாடலை எழுதியிருந்தேன். இந்தப்பாடலை தென்னிந்திய பின்னணி பாடகர் ஆனந்த் பாடியிருந்தார். அதன்பிறகு இவ்வருடம் பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் இசையில் 'நான்' என்ற திரைப்படத்தில் பாடல் எழுதியுள்ளேன்.இந்தப்பாடலில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது சர்வதேச ரீதியாக வைத்த போட்டி ஒன்றின் மூலமே ஆகும்.

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்கள் பல புதிய தலைமுறை பாடகர்களை,பாடலாசிரியர்களை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.எனவே, தான் தயாரித்து இசையமைத்து கதாநாயகனாக அறிமுகமாகும் 'நான்' திரைப்படத்தில் புதிய பாடலாசிரியரை அறிமுகம் செய்யும் நோக்கோடு தென்னிந்திய தொலைக்காட்சிகள் மற்றும் இணையத்தளங்கள் வாயிலாக ஒரு போட்டி ஒன்றை அறிவித்திருந்தார். போட்டியில் வெற்றி பெறுபவர் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவருக்கு வாய்ப்பளிப்பதாக அறிவித்திருந்தார்.அவரால் வழங்கப்பட்ட கதைச்சூழல், இசைக்கேட்ப நானும் பாடலை எழுதி அனுப்பியிருந்தேன்.பல மாதங்கள் கடந்தும் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை திடிரென ஒருநாள் எனக்கு அழைப்பை ஏற்படுத்தி வாழ்த்து சொன்ன அவர் போட்டியில் நான் வெற்றியீட்டியதாக அறிவித்ததோடு உடனே சென்னைக்கு வருமாறு அழைத்திருந்தார். நான் கடந்த மார்ச் மாதம் சென்னை சென்று இரண்டு நாட்கள் அவரோடு தங்கியிருந்து முழுப்பாடலையும் எழுதிக்கொடுத்துவிட்டு வந்திருக்கின்றேன்.பாடல் வெளியீட்டு விழா மிகவிரைவில் பிரமாண்ட முறையில் நடைபெறவுள்ளது.அதற்கும் என்னை அழைக்க இருக்கின்றனர்.

2. அந்தப் பாடல் பற்றி...

'நான்' திரைப்படம் என்னைப் போன்று முன்னேறத்துடிக்கும் இளைஞனின் கதை முற்றிலும் மாறுபாடான கதைக்களம்.நான் நிச்சயம் வெற்றிபெறு ம் இத்திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய  திரையுலகம் இலங்கையை திரும்பிப்பார்க்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அது தத்துவார்த்தமான பாடல் இன்றைய காலகட்டத்தின் யதார்த்தத்தை பாடலில் நான் பதிவு செய்துள்ளேன்.வாழ்வில் முன்னேறத் நினைக்கும் ஒருவன் நேரான பாதையில் தனது பயணத்தை ஆரம்பிக்கின்றான் அவன் போகும் பாதை எங்கும் தடைகளே அதிகம் இருக்கின்றன.எனவே, தப்பு செய்து முன்னேறுகின்றான் அவன் செய்யும் தப்பு தப்பாக இருந்தாலும் அதனை பார்க்கின்ற மனிதர்களுக்கு தப்பாக அது தோன்றவில்லை அது சரியாகவே இருக்கின்றது.அந்த சூழலில்  'தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பு இல்லை'என்று பாடலின் பல்லவி ஆரம்பிக்கின்றது.இந்த பாடலின் சரணங்களுக்காக சுமார் 50 பாடலுக்குரிய வரிகளை எழுதி இருப்பேன் இறுதியாக 2 சரணங்கள் தெரிவாகியது.

3. இந்தியாவில் புதிய புதிய கவிஞர்கள் உருவாகிக்கொண்டிருக்கும் நிலையில் உங்கள் கவிதை வரிகள் அவர்களை ஈர்க்கும் என எதிர்பார்த்தீர்களா?

 நிச்சயமாக எதிர்பார்த்தேன்.தேசிய மட்டத்தில் நடைபெற்ற பல போட்டிகளில் வெற்றியீட்டி அனுபவமும் எனக்குள் நம்பிக்கை விதைகளை நட்டுச்சென்றது.மேலும் இந்திய கவிஞர்களுக்கு இலங்கையில் உள்ள கவிஞர்கள் ஒருபோதும் சோடைபோனவர்களல்ல.வாய்ப்புக்கிடைத்தால் வரலாற்றை புரட்டிப்போடுகின்ற வலிமை இலங்கை கவிஞர்களின் பேனாவுக்கு இருக்கிறது.அங்கே அவர்கள் மையைத் தொட்டு எழுதிய போது இங்கே ரத்தத்தில் நனைத்து எழுதியவர்கள் எமது படைப்பாளிகள்.அந்த வழியில் நான் வெறும் வார்த்தைகளை விதைப்பவன் அல்ல வாழ்க்கையை உழுபவன்  வலிகளுக்கு வழிகள் சொல்கின்ற வாண்மை எனது எழுத்துக்கு இருக்கின்றது நான் நம்பகின்றறேன்.


4. உங்கள் கவிதை வரிகளை இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு அனுப்பிவைத்த பின்னர் எதிர்பார்ப்போடு காத்திருந்தீர்களா?அல்லது நீங்கள் இதனை எதிர்பார்க்கவே இல்லையா?

'நீ எதுவாக ஆக நினைக்கின்றாயோ  அதுவாகவே மாறிவிடுகின்றாய் ' என்று சொல்வார்கள்.அந்தவகையில் நான் இந்த போட்டியில் முதன்மை நிலைபெறவேண்டும் என்றே நினைத்தேன். வெற்றி கிடைத்தது.பாடலை எழுதி முடித்தவுடன் எனக்குள் பாடல் தெரிவாகும் என்ற நம்பிக்கை எனக்குள் அதிகரித்தது.என்றாலும் சில சந்தேகங்கள் இருந்தது பல்லாயிரக்கணக்கான பாடல்களுக்குள் என்னுடைய பாடலை அவர் சரியாக பார்ப்பாரா என்று மனசு அலைபாய்ந்தது எனவே 'வந்தா மஸ்தான் போன சுல்தான்' என்ற நிலையில் இருந்து விட்டேன்.பாடலை எழுதி முடித்துவிட்டு நண்பர்கள் சிலரிடம் காட்டினேன் பாடல் தரமாக இருக்கின்றது நிச்சயமாக வெற்றிபெறும் என்று உற்சாக மூட்டினார்கள்.ஆனால் முடிவை ஜனவரி முதலாம் திகதி அறிவிப்பதாக அவர் அறிவித்திருந்தார் முடிவு வெளியாகததால் சோர்ந்து போயிருந்தேன் மார்ச் மாதம் 5ம் திகதி திடிரென விஜய் ஆண்டனி தொலைபேசியில் அழைத்து வெற்றி பெற்றதை அறித்தவுடன் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.எனது உழைப்பும் நம்பிக்கையும் வெற்றி பெற்றது.

5. கவிதைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன என அறிந்த பின்னரான உங்களது மனப்பாண்மை எவ்வாறு இருந்தது?
மகிழ்ச்சியாக இருந்தது.இன்னும் என் எழுத்தின் மீதான நம்பிக்கை எனக்கு அதிகரித்தது.நான் இன்று கண்டிருக்கும் ஒவ்வொரு வெற்றிப்படிகளும் நேற்று நான் கண்ட கனவுகளே.வாழ்வில் ஜெயிக்கவேண்டும் என்றால் போராடவேண்டும்.நான் ஜெயிக்க பிறந்தவன் போராடிக் கொண்டே இருப்பேன்.

6. உங்கள் கவிதைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன என அறிந்த பின்னரான ஆதரவுகள் வரவேற்புகள் எவ்வாறு உள்ளன.

முகநூலில் பல்லாயிரக்கணக்கானோர் பாராட்டினார்கள்.புலம்பெயர் நாடுகளில் உள்ள எமது உறவுகள் தொலைபேசி மூலம் வாழ்த்தினார்கள்.இணையத் தளங்கள் உள்ளூர் ஊடகங்கள் என பலர் எனது செய்திகளை பிரசுரித்து என்னை ஊக்கப்படுத்தினார்கள்.அவர்களுக்கு நன்றி சொல்ல இவ்வேளையில் கடமைப்பட்டுள்ளேன்.

7. இலக்கிய துறையில் எதிர்கால திட்டங்கள்.

2001, 2002 ம் ஆண்டுகளில் 'விடைதேடும் வினாக்கள்', 'விடியலின் ராகங்கள்' என இரண்டு கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன.எனது 3வது கவிதை நூலான 'ரத்தம் இல்லாத யுத்தம்' மிகவிரைவில் வெளிவர இருக்கிறது.நூலின் அணிந்துரையை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். இதில் அடங்கியுள்ள கவிதைகளை ஆங்கிலத்திதில் கலாபூஷணம் கவிஞர் மீஆத் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார்.இந்த நூல் வெளிவருவதற்கான முழுப்பொறுப்பினையும் லண்டனில் உள்ள என்னுடைய நண்பர் அருளினி சிவனேஷன் அவர்கள் ஏற்றிருக்கின்றார் நூல் இருமொழிகளிலும் மிகச்சிறப்பாக தயாராகிக்கொண்டிருக்கிறது நான் அதனால் தாயாராகிக்கொண்டிருக்கின்றேன்.

8. உங்களுடை வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகள் ஏதாவது உண்டா?

என்னுடைய வாழ்வில் மறக்கமுடியதா நிகழ்வுகள் பல இருக்கின்றன.2001ம் ஆண்டு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவினால் கிடைக்கப் பெற்ற விருது அதன் பிறகு மலேசியாவில் மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் இடம்பெற்ற சர்வதேச கவியரங்கில் கவிக்கோ அப்துல்ரஹ்மான் தலைமையில் சிறப்பாக கவிதைபாடி அவரது பாராட்டினை பெற்றுக்கொண்டது.அந்த நிகழ்வினை பற்றி மலேசியாவில் தமிழ் ஊடகங்களும் பாராட்டி எழுதியிருந்தன.இலங்கையின் நீதியமைச்சர் ரவூப்ஹக்கீம் உட்பட பல முக்கியஸ்தர்கள் என்கவிதா ஆற்றுகைக்கு  பாராட்டு தெரிவித்திருந்தார்கள்.எனக்கு கிடைத்த அந்த அரிய வாய்ப்பை சரியாக பயன்படுத்தியதன் விளைவாக இலங்கையிலும் பல தடவை என்னை கௌரவித்திருந்தார்கள்.

9. உங்கள்  காந்தள் பூக்கும் என்ற பாடல் சர்வதேச தமிழ் வானொலியெங்கும் ஒலிப்பதாக அறிந்தோம் அது பற்றி சொல்லுங்கள்.

 2010ம் ஆண்டு கந்தப்பு ஜெயந்தனின் இசையில் நான் எழுதிய எங்கோ பிறந்தவளே என ஆரம்பிக்கும் பாடல் சர்வதேசமெங்கும் மிகுந்த வரவேற்பை பெற்று பலரதும் கைதட்டல்களை எமக்க பெற்றுத்தந்து.
அதன்பிறகு ஜெயந்தனின் இசையில் நான் எழுதிய ஒரு பாடலை தென்னிந்திய திரைப்பட இயக்குனர்கள் புலம்பெயர்ந்த நம்மவர்கள் என பலரும் பெரிதாகப் பாராட்டினார்கள்.அந்தப்பாடல்தான் காந்தள்பூக்கும் தீவிலே என்ற பாடலாகும்.இந்தப்பாடலை ஜெயந்தனுடன் சேர்ந்து அவரது சகோதரி ஜெயப்பிரதா பாடியிருந்தார்.இந்தப்பாடலை ரசித்து இயக்குனர் .வெங்கடேஷ் அவரது அடுத்த படத்தில் எனக்கு வாய்ப்புத் தருவதாக சொல்லியிருந்தார்.உள்ளுர் வானொலிகள் எமது இந்தப் பாடலை கண்டுகொள்ளதா நிலையில் வெற்றி  வானொலி விடியல் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியது. ஆனால் புலம்பெயர் நாடுகளில் இந்த பாடல் ஒலிக்காத வானொலி நிலையங்கள் இல்லை என்றே சொல்லலாம். அந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எமது பாடலை ஒலிபரப்பின. எமது நாட்டு ரசிகர்கள் இந்தப்பாடலை கேட்காமல் இருப்பது துரதிஷ்டமே.Youtube இணையத்தளத்தில் இந்தபாடலை ஒருலட்சத்துக்கும் அதிகமான  ரசிகர்கள் பார்வையிட்டுள்ளனர்.இலங்கையில் வெளிவந்த தமிழ் பாடல்களில் அதிக ரசிகர்கள் பார்வையிட்ட ஒரு பாடல் என்ற சாதனையும் இப்பாடல் நிகழ்த்தியுள்ளது.


10.புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் இளம் கலைஞர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?

இன்று பாடல் எழுதுவதற்கு பலரும் ஆர்வமாக உள்ளார்கள்.இன்றைய இசையமைப்பாளர்கள் போடும் மெட்டுக்குத்தான் நாம் வரிகளை எழுதவேண்டி இருக்கின்றது.எனவே வரிகளை இசைக்கேட்ப எழுதுவதற்கு நிறையவே பயிற்சி வேண்டும். எமக்கு முன்பு வாழ்ந்து மறைந்த படைப்பாளிகளை நன்றாக வாசிக்கவேண்டும். அவர்களது படைப்புக்களின் வெற்றியை நாம் ஆய்ந்து எமக்கென்றொரு புதிய பாதை வகுத்து செய்படவேண்டும். இன்று நாட்டை ஆள்பவர்களும் பாட்டை ஆள்பவர்களும் கிராமத்திலே இருந்து நகரத்து வந்தவர்களே.முயற்சி மெய்வருந்தக் கூலிதரும் என்று சொல்வார்கள் எனவே வாழ்வில் முயற்சி செய்தால் முடியாதது ஒன்றுமே இல்லை.
வாசி வாசிக்கப்படுவாய்! எழுது எழுதப்படுவாய்!

திங்கள், 31 ஜனவரி, 2011

என் கிராமத்தின் நதியைப்போல......



 இலங்கையின் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் 'ஜீவநதி' கலை -இலக்கிய சஞ்சிகையில் இடம்பெற்ற  இந்த  நேர்காணல்.''ஜீவநதி நேர்காணல்கள்'' என்ற நூலிலும் இடம்பெற்றுள்ளது.

                                    நேர்கண்டவர்:-கலாமணி பரணிதரன்-  

01.கவிஞர் அஸ்மின் அவர்களே, நீங்கள் கவிதைத்துறையில், குறிப்பாக மரபுக்கவிதைத்துறையில் ஈடுபாடு கொண்டமைக்கு பின்னணியாக இருந்த காரணி பற்றிக் கூற முடியுமா?

தென்றலே கவிபாடும் தென்கிழக்குமண் கவிஞர்களின் கலைஞர்களின் கருவறையாக இருக்கின்றது.அதிலும் தேனொழுகும் நாட்டார் பாடல்களின் விளைநிலங்களில் ஒன்றாக விளங்குகின்ற பொத்துவில் மண்ணின் வித்தாக இருக்கும் நான் கவிஞனாக விளங்குவதில் வியப்பேதுமில்லை
நகரத்தின் புகையை குடித்து வாழ்பர்களைவிட கிராமத்தின் புழுதியை குடித்து வளர்பவர்களுக்கு நன்றாக கவிதை வரும்.என் கிராமமே ஒரு அழகிய கவிதை அதை வாசிக்க வாசிக்க நானும் கவிஞனாக மாறிவிட்டேன்
ஒரு கவிஞனை கற்பித்து வளர்க்க முடியாது.ஒருவன் கவிஞனாக மிளிர்வதற்கு கருவிலே திருவாக வேண்டும்.தான் வாழும் காலத்தின் கோலத்தை வார்த்தைக் கோடுகளால் வரைந்துவிடும் கவிஞனின் நாளத்திலே,நெஞ்சின் ஆழத்திலே,கற்பனைத்தீ உற்பத்தியாகி அது கவித்துவத்தோடு கனன்று எரிவதற்கு முதலில் அவன் பிறப்பின் மூலத்திலே கவிதை இருக்கவேண்டும்.எனக்குள் பந்தலிடும் பாட்டுப்பூக்களுக்குள் இருந்து என் பாட்டன் முப்பாட்டன் முன்னோர்கள் அனைவரும் முறுவலிக்கின்றார்கள்.
மேலும்சிறிய வயதில் இருந்தே எனக்குள் இருந்த இடையறாத வாசிப்பும் என்னை வளப்படுத்தியிருக்கின்றது.இற்றை வரை என்னை பலப்படுத்தி வருகின்றது.அத்தோடு பாடசாலைக்காலத்தில் என் கவிதைகளுக்கு கிடைத்த சின்னச் சின்ன பாராட்டுதல்கள்,பெரிய பெரிய விமர்சனங்கள் தேசிய மட்ட கவிதைப்போட்டிகளில் கிடைத்த அங்கீகாரங்கள் என்படைப்பு நிலத்தில் நம்பிக்கை விதைகளை நட்டுவைத்தன
பாலர் வகுப்பில் படிக்கும் போது ஆசிரியர் பாடப்புத்தகத்தில் உள்ள பாடல்களை இசையோடு பாடிக்காட்டுவார் அதிலே எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. பின்னர் ஐந்தாம் ஆறாம் தரங்களில் படிக்கின்றபோது புத்தகத்தில் உள்ள பாடல்களை ஓசை நயத்தோடு நானும் பாட ஆரம்பித்துவிடடேன்.அது இற்றைவரை தொடர்கின்றது.இப்பொழுதும் பாரதி,பாரதிதாசன்,காசியானந்தன்,நீலாவணன்,சுபத்திரன், கவிதைகளை ரசித்து ஓசையோடு பாடும் பழக்கம் இருக்கின்றது.அதுவும் எனக்குள் என்னையறியாமல் மரபறிவை விதைத்து சென்றிருக்கலாம்.பிற்காலத்தில் மறைந்த கவிஞர் ஈழக்குயில் இத்ரீஸ் மற்றும் காவியப் புலவர் கலாநிதி ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களிடமும் யாப்பிலக்கணத்தை கற்றுக்கொண்டேன்.


2) ஊடகத்துறையில் அதிக ஆர்வம் காட்டும் நீங்கள் வலுவான ஊடகமாக எதனைக் கருதுகின்றீர்கள்?

டகங்கள் யாவும் வலுவாகத்தான் இருக்கின்றன.சில கூஜா தூக்குவதில் வலுவாக இருக்கின்றன,சில பகைமையை தீயை பற்றவைத்து அதில் குளிர்காய்வதில் வலுவாக இருக்கின்றன.சில வாணிகம் செய்கின்றன,சில வளைந்து கொடுக்கின்றன.இன்னும் சில அன்னை மொழி அநாதையாய் கிடக்க அடுத்தவன் மொழியை ஆலாபனை செய்வதில் ஆர்வமாய் இருக்கின்றன.
இங்கே நிலைத்து நிற்பதற்கு கடினமாக உழைக்கத் தெரிந்திருக்கவேண்டும். அதைவிட காலத்தை அறிந்து பிழைக்கத் தெரிந்திருக்கவேண்டும்.இன்னும் குதிரை வேஷம் போட்டாலும் குரைக்கச் சொன்னால் குரைக்கத் தெரிந்திருக்கவேண்டும். அதைவிடுத்து முறைத்துக்கொண்டிருந்தால் இத்துறையில் முன்னேற முடியாது மூக்குடைபட நேரிடும்.மானுடத்தின் விடியலுக்கு மகுடி ஊதப்போனால் புகழ்வந்து புல்லாங்குழல் ஊதுகின்றதோ இல்லையோ சத்தியமாய் காலம் அவைகளுக்கு சங்கூதிவிடும்.எனவே, மக்களுக்காக குரல்கொடுத்து சிக்கலுக்குள் மாட்டி சீரழிந்து போகுமளவுக்கு யாரும் சிந்திப்பதில்லை.துணிவு வெறும் வார்த்தையாக இருக்கின்றதே தவிர வாழ்க்கைக்குள் கொண்டுவர முடிவதில்லை.அதனால் ஊடகங்கள் உண்மையை மட்டும் உரத்து பேசுவதாய் நாடகம் போடுகின்றன.உற்று நோக்கினால்  ஒவ்வொன்றுக்குள்ளும் ஒவ்வொறு அரசியல் இருக்கின்றது.சில அச்சம் காரணமாக அடக்கி வாசிக்கின்றன. ஏனையவை பல்லக்கு தூக்குகின்றன.இப்பொழுது சொல்லுங்கள் ஊடகங்கள் இங்கே வலுவாக இருக்கின்றதா?

3) உங்களுடைய நூலாக்கங்கள் பற்றிக் குறிப்பிட்டு அவை குறித்த விமர்சனங்கள் உங்களில் என்ன தாக்கத்தை உண்டு பண்ணின எனவும் கூறுங்கள்?

விண்ணைத்தாண்டி என் படைப்புக்கள் போவதாக இருந்தாலும் முதலில் அது என்னைத் தாண்டித்தான் போகவேண்டும்.அந்த வகையில் எனது படைப்புக்களின் முதல்வாசகனாகவும்,முதல் விமர்சகனாகவும் நானே இருக்கின்றேன்.நான் பொத்துவில் மத்திய கல்லூரியின் உயர்தர மாணவனாக இருக்கும் போதுதான் எனது இரண்டு கவிதை நூல்களும் வெளிவந்தன. 2001இல் வெளிவந்த 'விடைதேடும் வினாக்கள்' என்னை கடன்காரனாக்கியது.2002 இல் வெளிவந்த 'விடியலின் ராகங்கள் 'என்னை கவிஞனாய் மாற்றியது.ஸம்ஸம் இளைஞர் கழகத்தினால் வெளியிடப்பட்ட எனது கவிதை நூலுக்கு பொத்துவிலின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.பீ.ஏ.அஸீஸ் அவர்கள் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கிட்டின் மூலம் உதவி நல்கியிருந்தார் இவ் வேளையில் அவரை நான் நினைவுகூற விரும்புகின்றேன்.
நாம் எதையாவது எழுதினால் நாலுபேர் பாராட்ட வேண்டும் இல்லாவிட்டால் திட்டவாவது வேண்டும்.இரண்டும் இல்லையென்றால் எழுதாமலே இருந்துவிடலாம்என் கவிதை தொகுப்புக்களுக்கு விமர்சனங்களை விட பாராட்டுதல்கள்தான் அதிகம் கிடைத்திருக்கின்றன.எனினும் நான் பாராட்டுக்களை கேட்டு மயங்கி நின்றதில்லை.அவைகளை தாலாட்டுகளாகவே கருதி வந்திருக்கின்றேன்.நாங்கள் படைப்பு நிலத்தில் வேர்பாய்ச்சி நிற்பதற்கு விமர்சனங்கள்தான் நீர்பாய்ச்சுகின்றன இங்கு வழி சொல்லாமல் பழிசொல்லும் விமர்சகர்களும் இருக்கவே செய்கின்றார்கள்.விமர்சகர்களுக்கு போதிக்க தெரியுமே தவிர சாதிக்க முடிவதில்லை. நல்ல விமர்சனங்கள் எம்மை அழவைத்தாலும் விழவைக்காது என்றோ ஒரு எழவைக்கும் அதுதான் எனக்கு நடந்திருக்கின்றது.மூத்த படைப்பாளிகளாக இருந்தாலும் அன்போடு சொல்லும் விமர்சனங்களை அரவணைப்பேன் அகங்காரத்தோடு சொல்பவற்றை அடித்துவிரட்டிவிடுவேன்.சுருக்கமாய் சொன்னால் உண்மை விமர்சனங்களால் என்னை நான் செதுக்கிக்கொள்வேன்;இமற்றையவைகளை ஒதுக்கிக்கொள்வேன்.


4) இன்றைய சஞ்சிகைகளில் தரங்குறைந்த கவிதைகளைக் காணும்போது உங்கள் மனநிலை எப்படியிருக்கும்
ன்று கணிதத்தை விட கவிதையை விளங்குவது கடினமாய் இருக்கின்றது.புதுக்கவிதை என்ற பெயரில் சிலர் புலம்பல்களை அவிழ்க்கின்றார்கள்.கேட்டால் உலகத்தரம் வாய்ந்த படைப்பு அப்படித்தான் இருக்குமென்று பீற்றுகின்றார்கள்.வாய்க்கு வரும் வார்த்தைகளை ஓன்றன்பின ஒன்றாக ஒடித்துப்போட்டால் அதை கவிதை என்று இளையதலைமுறையினரில் ஒரு சிலர் நம்பிக்கொண்டிருக்கின்றார்கள்.தெருவுக்கு தெரு முளைத்திருக்கும் இத்தகைய காளான்களால் நல்ல கவிஞர்களின் பெயரும் நாறிக் கிடக்கின்றது.எனக்கு ஒன்றோடு ஒன்பதாகிப்போவதில் உடன்பாடில்லை.அதனால்தான் புதுமையென்னும் கவசத்தை அணிந்துகொண்டு மரபென்னும் போர்வாளை கையிலெடுத்தேன்.நான் மரபோடு கைகுலுக்கிக்கொள்வதால்தான் இன்று இருக்கின்ற இளையதலைமுறைக் கவிஞர்களில் இருந்து என்னால் வேறுபட்டு நிற்கமுடிகின்றது. மரபு என்பது அடித்தளம். இலக்கியத்தின் எத்தளத்திற்கு செல்வதாயினும் இத்தளத்தில் இருந்தே ஆரம்பிக்கவேண்டும்.அகரம் அறியாதவன் உகரத்தை உச்சரிக்கவே கூடாது.எட்டயபுரத்து கவிஞன் தொடக்கம் எங்கள் தேசத்தின் மூத்தகவிஞர்கள் வரை மரபு தெரியாமல் புதுமைக்குள் புகுந்தவர்கள் அல்லர்.அவர்கள் தம்முன்னோர்களைக் கற்று முத்துக்குளித்தவர்கள்.அதனால்தான் அவர்களால் முத்தமிழிழும் பிரவாகிக்க முடிந்தது.இற்றைவரை முழுநிலவாக பிரகாசிக்க முடிந்தது.எனவே,இளைய தலைமுறைப்படைப்பாளிகள் மரபு இலக்கியங்களை கசடற கற்றுக்கொள்ள வேண்டும். மூத்த படைப்பாளிகளின் அறிவுரைகளை பெற்றுக்கொள்ளவேண்டும்.அப்பொழுதுதான் வயதில் இளையவராக இருந்தாலும் எழுத்தில் முதியவராக எம்மால் மிளிர முடியும். காகிதச்சோலைகளில் மலரும் கவிதைப்பூக்களுக்கு காலம் கல்மாரி பொழிவதும் கல்வெட்டு செய்வதும் அவரவர் கவித்துவ ஆளுமையிலே அடங்கி இருக்கின்றது.மரபெனும் மகுடத்தை, பழந்தமிழ் கவிதைகளை,பழஞ்சோற்றைப்போல் பார்ப்பவர்களின் படைப்புக்களுக்கு எதிர்காலம் நல்ல சவப்பெட்டிகளை செய்துவைத்து காத்திருக்கின்றது.


5) இலங்கையில் இருக்கும் ஊடகங்கள் உங்களது பாடல்களுக்கு எந்தளவுக்கு களம்கொடுக்கின்றன
ம்மவர்கள் இங்கே இருக்கின்ற கலைஞர்களிடம் வைரமுத்து இளையராஜா ஏ.ஆர்.ரஹ்மான் போன்றோரின் அளவுக்கு எமது படைப்பு இருக்கின்றதா என்றே தேடுகின்றனர். அவர்களது உயரத்துக்கு எமது கலைஞர்களையும் கொண்டு வருவோம் என்று முனைவதில்லை.இனிமேலாவது எமது கலைஞர்கள் பற்றி எம்மவர்கள் சிந்திக்கவேண்டும்.இதனை ஒட்டுமொத்த இலங்கை கலைஞர்களின் உள்ளக் குமுறலாகவும்எடுத்துக்கொள்ளலாம்.
வானொலி,தொலைக்காட்சி,பத்திரிகை,இணையம் போன்ற ஊடகங்கள் எமது கலைஞர்களின் படைப்பாளிகளின் திறமைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கின்ற வள்ளங்கள்.இங்கு வள்ளங்கள் நிறையவே இருக்கின்றன நல்ல உள்ளங்கள் அரிதாகவே கிடைக்கின்றன.இந்த வேளையில் எனது பாடலுக்கு களம்கொடுத்த வசந்தம்FM,பிறைFM,வெற்றி FM,தென்றல்,லண்டன் ஐ.பிஸி,இணைய வானொலிகள் அனைத்தையும் நினைவுகூற விரும்புகின்றேன்.கடையில் இருக்குக்கும் கடதாசி பூக்களுக்கு காசு கொடுக்கும் எம்மவர்கள் முற்றத்தில் இருக்கும் மல்லிகைப்பூக்களுக்கு முகம் கூட கொடுப்பதில்லை.உள் நாட்டின் அசல்களை காட்டிலும் வெளிநாட்டின் நகல்களுக்குத்தான் அதிகம் கிராக்கி இங்கு.இந்த நிலை தொடர்ந்தால் எமது தேசத்தின் கலை நதி வற்றிவிடும்.இலக்கிய செடிகள் செத்துவிடும்.எனது பாடல்கள் மட்டுமல்ல இலங்கையில் வெளிவருகின்ற எந்த பாடலையும் இவர்கள் கண்டுகொள்ளவதில்லை.தென்னிந்திய சினிமா பாடல்கள் வெளிவந்தால் தேடித்தேடி தரவிரக்கம் செய்து ஒலிபரப்பம் வானொலிகள் நாங்கள் தேடிப்போய் கொடுத்தலும் கண்டுகொள்வதில்லை.ஆனால் சகோதர மொழி இசைத்துறையை பொறுத்தவரையில் இந்த நிலை இல்லை.இன்றைய சகோதர மொழி இசைக்கலைஞர்களின் மாபெரும் வளர்ச்சியில் அவர்களது ஊடகங்கள்தான் அதிகமான செல்வாக்கு செலுத்துகின்றன.ஒரு ஊடகத்தின் போட்டி நிகழ்ச்சி மூலம் ஒருவர் அறிமுகமாகினால் மற்றைய ஊடகங்கள் அவரை புறக்கணிக்கின்றன.தென்னிந்தியாவில் இந்த நிலை இல்லை அவர்கள் கலைஞர்களை கலைஞர்களாகவே பார்க்கின்றனர.அந்த கலைஞருக்கு பின்னால் இருக்கும் அரசியலை தேட முனைவதில்லை.அதுதான் அங்கே சாதாரண கலைஞர்களும் சாதனை வீரர்களாக மாறிவிடுகின்றார்கள்.எனவே,இந்த வரட்டு நிலையிருந்து வளர்ச்சி நிலைக்கு செல்ல எமது ஊடகங்கள் முன்வரவேண்டும்.எனவே,எம்மண்ணிலே மாற்றங்கள் மலரவேண்டுமானால் நாற்றங்கள் உலரவேண்டுமானால்,ஏற்றங்கள் வளரவேண்டுமானால் இலங்கை எங்கள் தேசம் அது என்றும் எங்கள் சுவாசம் அந்த மண்ணில் தோன்றும் புற்கள் கூட பூக்கள் போன்று வாசம் என்று நேசம் கொண்டு எங்கள் படைப்பு பயிர்களுக்கு நாங்கள் பாத்திகட்டவேண்டும்.எமது நிலத்தில் நாம் விதைகளை தூவாமல் அடுத்தவர் பழத்தில் பல்லைப்பதிப்பதை நாங்கள் நிறுத்தவேண்டும் எம்மை நாம் திருத்தவேண்டும். வெளிச்சத்துக்கு மட்டும்விளக்கு பிடிக்க முனையும் ஊடகங்கள் காய்த்தல், உவத்தல், குத்தல்,வெட்டல் இன்றி 'இருட்டின்'மீது தமது வெளிச்சத்தை பாய்ச்ச முயன்றால்தான் வளர்ந்துவரும் இளைய தலைமுறை கலைஞர்களுக்கு விமோசனம் கிட்டும்.அவர்கள் குரல்களும் எட்டுத்திக்கும் எட்டும். இல்லாவிட்டால் வெங்காயம் நட்டால் வெடிகுண்டுதான் முளைக்கும்.


06. இந்த வரும் சிறந்த பாடலாசிரியருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது அது பற்றி கூறுங்கள்?
சை இளவரசர்கள் நிகழ்ச்சி மூலம் என்னை பாடலாசிரியனாக அறிமுகப்படுத்தி அங்கீகாரம் கொடுத்த சக்தி தொலைக்காட்சிக்கு முதலில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.அவர்கள் போட்ட அத்திவாரத்தில்தான் எனது பாடலாசிரியர் என்ற கட்டடம் எழும்பி நிற்கின்றது.தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தினால் நடாத்தப்பட்ட வியர்வையின் ஓவியம் கலை விழாவில்புறப்படு தோழா வண்ணப்பூக்களாய் உலகை மாற்றலாம் என்ற பாடலுக்காக இந்த விருது வழங்கப்பட்டது.நம் நாட்டின் இளைய தலைமுறை இசையமைப்பாளர்களுள் ஒருவரான டிரோன் பெர்ணான்டோ இந்த பாடலுக்கு இசையமைத்திருந்தார்.இதில் இன்னுமொன்றை குறிப்பிட்டாக வேண்டும்.இந்தப் போட்டியில் என்னால் சமர்ப்பிக்கப்பட்ட எங்கோ பிறந்தவளே என்ற பாடலும்; போட்டியில் முதலிடத்துக்கு தெரிவாகி இருந்தது. இந்தப்பாடலுக்கு இசையமைத்திருந்தார் இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன்.விரைவில் வெளிவர இருக்கும் அவரின் யாழ்தேவிஇறுவட்டிலே இந்தப்பாடலும் இடம்பெற்றுள்ளது.காதல் பாடல் என்றபடியால் எங்கோ பிறந்தவளே பாடலை தவிர்த்து சமூக எழுச்சியை பேசுகின்ற புறப்படு தோழா பாடலை முதலாமிடம் என்று அறிவித்திருந்தார்கள்.
2008ம் ஆண்டு இசை இளவரசர்கள் நிகழ்ச்சியில் பாடலாசிரியராக தெரிவு செய்யப்பட்டு போட்டி நிமித்தம் சென்னை சென்றபோது இயக்குனர் ஏ.வெங்கடேஷ் அவர்கள் கதைச்சூழல் சொல்ல என்னால் ஓரிரு மணிநேரத்துக்குள் எழுதப்பட்டது எனது எங்கோ பிறந்தவளே.பாடல.இந்த பாடலைப் பற்றி பாடலாசிரியர்களான பா.விஜய்,நா.முத்துக்குமார்,விவேகா,சினேகன் ஆகியோர் நிறையவே சிலாகித்து பேசியிருந்தார்கள்.எனினும்துரதிஷ்ட வசமாக எமது ஹம்ஸத்வனி குழு இசையமைப்பாளரின் போதமையினால் இப்பாடல் பாட்டாகமல் பட்டுப்போனது.பின் இரண்டு வருடங்களுக்கு பிறகு,இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தன் அவர்களால் நிமிடங்களுக்குள் இசை அமைக்கப்பட்டு பாடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் கடல் கடந்தும் வரவேற்பு பெற்றுள்ளது வியப்பை தருகின்றது.பாடலை கேட்டுவிட்டு கடல் கடந்தும் தமிழகம் மற்றும் ஐரோப்பிய நண்பர்கள் பலரும் மின்னஞ்சல மூலமாகவும் தொலைபேசி வாயிலாகவும் தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.லண்டன் ஐ.பி.சி. வானொலியின் பாடல் தரப்படுத்தலில் ஏகோபித்த ரசிகர்களின் வாக்குக்கு இணங்க இரண்டுவாரம் எமது பாடல் இரண்டாமிடத்தில் இருந்துள்ளது.இது எமது இலங்கை கலைஞர்களுக்கும் எமது மண்ணுக்கும் கிடைத்த சிறப்பாகும்.

7) வசந்தம் தொலைக்காட்சியில் உங்கள் வகிபாகம் என்ன?
சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பினால் புதிய உலகின் பூபாளராகமாக 25.06.2009ம்  அன்று பதியமிடப்பட்ட வசந்தம் தொலைக்காட்சி குறுகிய காலப்பகுதிக்குள் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடித்து தமிழின் சுவாசமாக தமிழ்பேசும் மக்களின் விலாசமாக தடம்பதித்து வருகின்றது.வசந்தம் தொலைக்காட்சியின் முகாமையாளராக திரு.குலேந்திரன் முருகேசு அவர்களும் செய்திப்பிரிவு பொறுப்பதிகாரியாக திரு.இர்பான் முஹம்மட் அவர்களும் கடமையாற்றுகின்றனர்.நான் நிகழ்ச்சித் தொகுப்பாளராவும்,தயாரிப்பாளராவும் இயங்கி வருகின்றேன்.அனுபவமும்,ஆளுமையும் உள்ள இளையதலைமுறையினரின் கூட்டுமுயற்சியினால் பல்வேறு நிகழ்ச்சிகளையும் தயாரித்து வழங்கிவருகின்றோம்.இலைமறைகாய்களாக இருக்கின்ற ஆற்றலுள்ளகலைஞர்களையும் இளைஞர்களையும்,படைப்பாளிகளையும் இனம்கண்டு வாய்ப்புக்களை வழங்கி வருகின்றோம்.எமது சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும்படி எமது நிகழ்ச்சிகளை  நிரல்படுத்தியிருக்கின்றோம். எமது தொலைக்காட்சியின்; நேரடி நிகழ்ச்சிகளை http://www.vasantham.lk/ என்ற இணையத்தளம் ஊடாக உலகெங்கும் உள்ள தமிழ் ரசிகர்கள் கண்டுகளிக்க முடியும்.மேல் மாகாணம் மற்றும் வடக்கில் மட்டும் ஒளிபரப்பாகிவரும் எமது அலைவரிசையை  நாடுபூராவுமுள்ள தொலைக்காட்சி ரசிகர்கள் விரைவில் கண்டுகளிப்பதற்குரிய பூர்வாங்க ஏற்பாடுகள் முடியும் தருவாயில் உள்ளன.அதன்பின் எமது அடுத்த கட்ட இலக்காக இலங்கையிலிருந்து ஒளிபரப்பாகும் சர்வதேச தமிழ் தொலைக்காட்சியாக எமது தொலைக்காட்சியை மாற்றுவதாகும்.


08.உங்களுக்கு மிகவும் பிடித்தமான கவிஞர் யார்? அவரின் மீதான பிடிப்பிற்கு காரணம்?
னக்கு முன்வாழ்ந்த படைப்பாளிகளின் படைப்புக்களை வாசிக்க,நேசிக்க முடியாதா ஒருவரால் நல்ல படைப்பாளியாக மிளிர முடியாது. ஒரு கவிஞன் முதலில் நல்ல வாசகனாக இருக்கவேண்டும்.ஒரு கலைஞன் முதலில் நல்ல ரசிகனாக இருக்கவேண்டும்.வாசிப்பு உள்ளவர்களுக்கு வார்த்தை வாலாயப்பட்டுவிடும்.வார்த்தை வாலாயப்பட்டால் வாவென்று அழைக்கு முன்பே கவிதைகள் வந்து வாலாட்டி நிற்கும்.நான் புதுக்கவிதைமரபுக்கவிதை,நவீன கவிதைஇ பின் நவீனம் என்று பாகுபாடு இல்லாமல் அனைத்துவகையான படைப்புக்களை வாசிப்பேன் என்றாலும் எப்போதும் தனித்துவமாவே யோசிப்பேன்.பாரதி, பாரதிதாசனுக்கு பிற்பாடு நான் அதிகமாக நேசிப்பது உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்களைதான்.அவரை தமிழ் ஈழத்தின் பாரதி என்று சொன்னால் கூட தவறில்லைஅவர் எழுத்துகள் எளிமையானவை ஆனால் ஒவ்வொன்றும் வலிமையானவை. அந்த  உணர்ச்சிக் கவிஞனின் உண்மையுள்ள கவிதை என்றென்றும் உயிர்வாழும் அதன் முன் தோற்றுவிடும் எதிரியின் போர்வாளும்.


09.புதுக் கவிதைகள் மரபுக் கவிதைகளை நீங்கள் பார்க்கும் விதம் குறித்துக் கூறுங்கள்

நீங்கள் இதைக்கேட்கும் போது...
பழமை கிடந்து மனதுள் விழுந்து
பயிராகி
செழுமை நிறைந்து புதுமை குழைந்து
விளைவாகி
அழகும் பொழிந்துஅறமும் புதைந்து
கலையாகி
இளமைக்கயிற்றில்கனவைத் தொடுத்தல்
கவியாகும்
'கவிதை' என்ற தலைப்பில் அமைந்த கவிஞர் நீலாவணன் புனைந்த இந்தக் கவிதைதான் எனக்கு நினைவில் வருகின்றது.என்னைப் பொறுத்தவரையில் மரபிலே புதுமையை விதைக்கவேண்டும்.புதுமையுள் மரபினை புதைக்கவேண்டும்; இரண்டும் கெட்டு கவிதை போல் அரிதாரம்பூசி நடிக்கின்றவற்றை ஓடஓட உதைக்கவேண்டும்.எனினும் மரபுக்கவிதையை சிறுபிள்ளைத்தனமாக எழுதுகின்ற மூத்த கவிஞர்களும் புதுக்கவிதையை காத்திரமாக படைக்கின்ற இளைய கவிஞர்களும் இங்கு இல்லாமலில்லை.மரபு என்பது கவிதையின் ஆணிவேர் புதுக்கவிதை என்பது அதில் தோன்றும் பூக்கள்தான். ஆணிவேர் இல்லாமல் பூக்கள் பூக்குமா சொல்லுங்கள்..

10.) தாங்கள் பெற்ற விருதுகள் பற்றிக் குறிப்பிட முடியுமா? 
ப்பொழுதும் நான் எழுத்தைத்தான் சுவாசிப்பவனாகவும் சுவாசிப்பதைத்தான் எழுதுபவனாகவும் இருக்கின்றேன்.தரிசுகளுக்கு கிடைக்கும் பரிசுகளால் தரமற்ற காகிதங்கள் தலைப்பாகை சூடிக்கொள்ள வரம்பெற்ற காவியங்கள் வாய்பார்த்து நிற்கின்றன.இதனை அடிநாதமாக கொண்டு என்னால் எழுதப்பட்ட விருதுகள் பெறும் எருதுகள் கவிதை சர்வதேச தமிழ் இலக்கிய மட்டத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியது.போலிகளுக்கு கிடைக்கும் இத்தகைய பொய் அங்கீகாரங்களைத்தான் எனது கவிதையில் அவ்வாறு கேலி செய்திருந்தேன்.எனவே.உனக்கு நாளை சூட்டுகின்றேன் எனக்கு இன்று சூட்டு என்று திட்டம் போட்டு திருடப்பட்டதல்ல நான் பெற்ற விருதுகள் அத்தனையும் என் எழுத்தின் கழுத்தில் வீழ்ந்த பூமாலைகள்.என் எண்ணங்களுக்கு கிடைத்த கிண்ணங்கள்.அவைகளை ஆன்றோர்கள் என் ஒரு சில படைப்புக்களுக்கு வழங்கிய அங்கீகாரமாகவே கருதுகின்றேன்.எனினும் இனிவரும் என் ஒட்டுமொத்த படைப்புக்களின் ஆவணமாகஒருபோதும் கருதியதில்லை.
தேசியமட்டத்தில் நடாத்தப்பட்ட கவிதை போட்டிகளில் எட்டுக்கும் மேற்பட்ட தடவை வெற்றியீட்டியுள்ளேன்.அஸ்ரப் ஞாபகார்த்த மன்றத்தினால் அகில இலங்கை மட்டத்தில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் முதலாமிடம் பெற்றதற்காய் 2001.09.16 அன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த மகாநாட்டு மண்டபத்தில் வைத்து ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது.அந்த விருதினை அன்றைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எனக்கு வழங்கிவைத்தார்.2003ம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழக தமிழ்சங்கத்தின் பவளவிழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் முதலாம் இடம்பெற்றதற்காய் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவித்தார்கள்.இது தவிர அகில இலங்கை தமிழர் நற்பணி மன்றத்தினால் நடாத்தப்பட்ட சொல்லோவியப்போட்டி(2003), விபவியின் இளம் எழுத்தாளருக்கான படைப்பிலக்கிய போட்டி(2003),பேராதனைப் பல்கலைக்கழக்தின் தமிழ் சாஹித்தியவிழாவை முன்னிட்டு நடாத்தப்பட் கவிதைப்போட்டி(2002),தென் கிழக்கு பல்கலைக்கழக தமிழ் சங்கத்தினால் நடாத்தப்பட்டகவிதைப்போட்டி(2008),சக்தி தொலைக்காட்சியினால் நடாத்தப்பட்ட இசை இளவரசரகள் போட்டி (2008) ,2007 ஆம் ஆண்டு பிரான்சில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் ஞாபகார்த்த மன்றத்தினால் நடாத்தப்பட்ட சர்வதேச கவிதைப்போட்டி போன்றவற்றில் கலந்து கொண்டு இரண்டாம்,மூன்றாம் இடங்களை பெற்றுள்ளதோடு சிறப்பு இடங்களையும் பெற்றுள்ளேன். அண்மையில் தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தினால் அகில இலங்கை மட்டத்தில் நடாத்தப்பட்ட வியர்வையின் ஓவியம் கலை இலக்கிய போட்டிகளில்கவிதைப்போட்டியில் இரண்டாம் இடத்தையும் பாடலியற்றல் போட்டியில் முதலாமிடத்தையும் பெற்றுக்கொண்டேன்.பாடலியற்றல் போட்டியில் முதலாமிடம் பெற்றதற்காய் வியர்வையின் ஒவியம் கலை விழாவில் 2010ம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியருக்குரிய விருது வழங்கப்பட்டுள்ளதுஅது என் பாட்டுக்கு கிடைத்த விருது அல்ல அந்த பாடலை எழுதுவதற்காகவும் நான் பட்ட பாட்டுக்கு கிடைத்த விருதாகவே கருதுகின்றேன் இத்தகை விருதுகளின் நிழலில் நான் இளைப்பாறப்போவதில்லை. தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பேன் என் கிராமத்தின் நதியைப்போல......


                          நன்றி
*ஜீவநதி கலை- இலக்கிய சஞ்சிகை.
*ஜிவநதி நேர்காணல்கள்.