கவிதைப்பூங்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைப்பூங்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

கண்ணோடு கலந்திட்ட காதல் பூ!


ண்ணோடு கலந்திட்ட காதல் பூவே-என்னை
          கனிவோடு நீபார்த்து கவிதைபேசு!
என்னோடு நீவந்தால் என்றன் நெஞ்சே-என்றும்
         உன்னோடு வாழ்வேன்நான் காசுதூசு..!

படிப்போடு தானுள்ளேன் பவளத்தேரே-உயிர்
         துடிப்போடு தானுள்ளேன் துவண்டு போகேன்-உள
வெடிப்போடு இன்றுன்னால் வெந்து போனேன்-நீ
          வெறுப்போடு பார்க்கின்றாய் நொந்துபோனேன்..!

வளமோடு வாழ்கின்ற வண்ணப்பூவே-வண்டு
        வடிவோடு வந்தாலா இதயம் தேடும்..?
நலமோடு வாழ்கின்ற நங்கையுன்னை-வெள்ளை
        நரையோடு வாழ்ந்தாலும் இதயம்பாடும்

ஓடாத நதியென்னை ஓடவைத்தாய்-எவரும்
         பாடாத பாடல்கள் பாடவைத்தாய்-பெண்ணை
நாடாத என்நெஞ்சை நாடவைத்தாய்-இந்த
         நரகத்தில் பின்னேயேன் வாடவைத்தாய்

கூடாத கூட்டத்தில் கூடினேனா-எவரும்
           பாடாத பாடல்கள் பாடினேனா
தேடாத வழியில்யான் தேடினேனா-ஏன்
          வாடாத என்னைநீ வாட்டுகின்றாய்.?

விதியோடு விளையாடி பட்டுப்போனேன்-உன்
        விழியோடு விளையாடி கெட்டுப்போனேன்
சதியோடு விளையாடி சரிந்துபோனேன்-அடி
         'சல்வாரே' உன்னாலோ எரிந்துபோனேன்.!!




                                  நன்றி.
*தினகரன் வாரமஞ்சரி -2011.01.30
*கவிதைப்பூங்கா(கவிஞர் ரஷீத் எம். ரியாழ்)

அடிநெஞ்சில் நின்றிருந்தாய் மானாய் ...!


 டிநெஞ்சில் நின்றிருந்தாய் மானாய் -அடியே
அத்தனையும் நீமறந்து போனாய்...
வெடிநெஞ்சில் பட்டவன் போலானேன் -கொடும்
வெந்தழலில் நீறாகி போனேன்.........

சில்லென்ற தென்றல்வரும் காலை -நீ
சிரிப்புதிர்த்து பள்ளிசெல்லும் வேளை...
வள்ளென்று நாய்குரைக்கும் நேரம் -நான்
வாழ்ந்திருப்பேன் உன்னினைவின் ஓரம்...

வேலிக்கு மேலாலெட்டிப் பார்ப்பாய் -என்
வேதனையை புன்னகையால் தீர்ப்பாய்..
கேலிபலர் எனைச் செய்தபோதும்-அடி
கேள்கிளியே உன்நினைவே மோதும்.....

காண்பவரை மயங்கவைக்கும் அழகி...
காதல்கொண்டு என்னுடன்நீ பழகி
நீயின்றி நான்வாழேன் என்றாய்-பின்
தீயின்மேல் எனைவீசிக் கொன்றாய்......

கடற்கரையில் கைகோர்த்து நடந்தோம்
கால்நூற்றான்டை கால்நடையில் கடந்தோம் -எம்
உடல்கறையை காணாததும் உண்மை-அதை
உணர்த்தியதா கணவனுக்குன் பெண்மை..?

         நன்றி
*சுடர்ஒளி
*தினகரன் கவிதைப்பூங்கா (20.3.11)

சனி, 29 ஜனவரி, 2011

தூசு!

 பேராதனைப்பல்கலைக்கழக தமிழ்சங்கத்தின் பவளவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட 
தேசிய மட்ட கவிதைப்போட்டியில் முதலாமிடம் பெற்று
'தங்கப்பதக்கம்' பெற்ற கவிதை-2003.

மார்கழியில் மாற்றிடவா மாலை!-நீ
மனமுவந்தால் பூக்குமடி சோலை!-நான்
கார்வளவு கேட்டிடதா காளை!-எனை
காதலிக்க வந்திடுநல் வேளை!

மோருண்ட சுகம்தந்த பெண்ணே!-நிதம்
மோதுதடி என்மனசில் மின்னே!
நீர்காற்று வானமழை முன்னே-உயிர்
நீதானே வேணுமடி கண்ணே!

பேரழகி என்மனசு வெள்ள!-நீ
பேசிடாது போவதேன்டி முல்ல!
பாருலகில் உன்னழகை வெல்ல -எந்த
பேரழகும் ஊருலகில் இல்ல...!

பாடலிலே உன்னழகை சொல்ல!-தினம்
பாடுபட்டு பாணனிவன் துள்ள!-நீ
ஊடலிலே பார்வைகளால் கொல்ல!-பயந்து
உதிருதடி வார்த்தைகளும் மெல்ல!

பனிமலரே பரிவுடனே பாரு!-நீ
பாசமுடன் நேசமொழி கூறு..!
கனிமொழியே காதலுடன் சேரு!-நிதம்
கனிந்துடலால் பெற்றிடுவாய் பேறு!

மாரழகி மனம் திறந்து பேசு!-இளம்
மாருதமே தென்றலென வீசு!
சீர்வரிசை தேவலடி காசு!-அவையுன்
சிருங்கார மொழிமுன்னே தூசு!

                                                     நன்றி.
*இளங்கதிர் (பேராதனை பல்கலைக்கழக தமிழ் சங்க வெளியீடு-2003)
*கவிதைப்பூங்கா-தினகரன் வாரமஞ்சரி
*சுடர் ஒளி வாரவெளியீடு
*வார்ப்பு
*பதிவுகள்