சனி, 31 ஜூலை, 2010

நேசமென்னும் தென்றல்வர நெஞ்சத்தை திறந்திடுவோம்...!!

லங்கையர்கள் நாங்களெல்லாம் சகோதரர்கள் என்றிடுவோம்!
இசையோடு நாதம்போல் இணைந்தேநாம் நின்றிடுவோம்!
கலங்குவதால் பயனில்லை கவலைகளை கொன்றிடுவோம்!
விலங்குகளாய் விளங்காமல் விலங்குகளை வென்றிடுவோம்..!

உலகத்தின் ஐக்கியத்தை ஒன்றாகி நெய்திடுவோம்..!
உலர்ந்துநிற்கும் மனங்களுக்குள் மழையாக பெய்திடுவோம்..!
கலகத்தை காதலிக்கும் உணர்வுகளை கொய்திடுவோம்..!
களைவளர்ந்த பூமியிலே கலைவளர செய்திடுவோம்..!

நேசமென்னும் தென்றல்வர நெஞ்சத்தை திறந்திடுவோம்!
நேர்வழியில் பூப்பறித்து பாரினிலே சிறந்திடுவோம்!
சிரமம்தான் என்செய்ய கடந்தவற்றை மறந்திடுவோம்!
சிக்கல்களை விட்டுவிட்டு சிறகடித்து பறந்திடுவோம்!

சாதிமதம் பார்க்கின்ற சறுகுகளை உதைத்திடுவோம்!
சாத்தானின் சரித்திரத்தை குழிதோண்டி புதைத்திடுவோம்!
சாந்தியினை ஊர்கூடி உலகெங்கும் விதைத்திடுவோம்!
சண்டையிட்டு சரிந்தவர்கள் உளம்திறந்து கதைத்திடுவோம்..!

அடிமைக்கும் மிடிமைக்கும் கொடுமைக்கும் கொள்ளிவைப்போம்!-எம்மை
அழவைக்கும் விழவைக்கும் தவறுகளை தள்ளிவைப்போம்!
புரிந்துணர்வு கோலமிட புன்னகையால் புள்ளிவைப்போம்-நாம்
புரிந்துகொண்ட சேதிகளை பூக்களுக்கும் சொல்லிவைப்போம்..!

எம்நாடு முன்னேற எம்மவர்கள் சேரவேண்டும்!
நம்நாடு இலங்கையென நம்மவர்கள் கூறவேண்டும்!
கண்ணோட வலிதந்த காயங்கள் ஆறவேண்டும்!
மண்ணோடு போய்விடமுன் மனதெல்லாம் மாறவேண்டும்!

எம்துயரம் இன்றோடு வீழவேண்டும்.
எமக்குள்ளே நல்லுறவு சூழவேண்டும்-நாம்
ஒருதோப்பு குயிலாக வாழவேண்டும்-எம்
ஒற்றுமையால் எம்தேசம் வாழவேண்டும்.

மண்ணாகும் வாழ்வினிலே மனமுவந்து விட்டுக்கொடு!
மாற்றானின் முயற்சிக்கும் துவேசமின்றி முட்டுக்கொடு!
இல்லாத மனிதருக்கு இருப்பதனை பெற்றுக்கொடு-நாம்
இலங்கையராய் வாழ்வதற்கு உன்குழந்தைக்கும் கற்றுக்கொடு..!

மடமைகளை துரத்திவிட்டு மனங்களினை வாசிப்போம்!
மறைந்திருக்கும் கலைஞர்களை மனமுவந்து ஆசிப்போம்!
இனமதங்கள் நாம்கடந்து தாய்நாட்டை நேசிப்போம்.!
இருக்குவரை இறக்கும்வரை தமிழ்மொழியை சுவாசிப்போம்...!!

                  நன்றி
  * வார்ப்பு
 *தமிழ் ஆதர்ஸ்
 *பதிவுகள்

 *பட்சிகளின் உரையாடல்(கவிதை நூல்)

சருகல்ல இவனென்று சாற்று.

'தேமாங்காய்'' ''புளிமாங்காய்'' ஒரு மண்ணும் விளங்காமல்
தெம்மாங்காய் பாடுகிறேன் பாட்டு-ஆமையா!
நான்பாடும் பாட்டை நானறியேன் பெருங்கவியே
கூனுண்டோ ஆயந்துநீர் கூறும்.

கிறுக்கும் கவியெல்லாம் கீழென்று வளர்கவியை
நறுக்கி பின்னவரே நாறுகின்றார்-திருக்கவியே
நொறுக்கி என்நெஞ்சில் நோக்காடு தந்தோர்முன்
சருகல்ல இவனென்று சாற்று.

அழகுத்தமிழ் கவியின் ஆற்றலினை உணராதோர்'
மிளகாய் போல்மரபை நினைக்கின்றார்'-விலகாமல்
 பழகும் தமிழ்மொழியில் மரபுத்தாய் மாண்புகளை
உலகுக்கு சொல்வீர் உணர்ந்து.

நன்றி.
*பதிவுகள்

*காற்றுவெளி- செப்டம்பர் -2010
*சம்மாந்துறையில் நடைபெற்ற தென்கிழக்கு தமிழ்சங்கத்தின் 'அடையாளம்' கவிதை நூல் வெளியிட்டு விழாவில் பாடப்பட்டது.-2010.12.23