செவ்வாய், 29 மார்ச், 2011

எழுத்தாளர் (நடிகர் ) கே.எஸ். பாலச்சந்திரனுக்கு அமுதன் அடிகள் இலக்கியப் பரிசு


-குரு அரவிந்தன்-


ஆண்டுதோறும் பாகுபாடின்றி, தரமான இலக்கியப் படைப்புகளை தேர்ந்தெடுத்து, அவற்றின் படைப்பாளிகளுக்கு ‘‘அமுதன் அடிகள் வெள்ளிவிழா அறக்கட்டளை இலக்கியப்பரிசு” வழங்கிவரும் அமுதன் அடிகள் அறக்கட்டளை, முதன்முதலாக ஒரு இலங்கைப்படைப்பாளியின் நூலுக்கு இந்த விருதை வழங்கியுள்ளது. கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் எழுதிய ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள்” என்ற நாவலுக்கு 2009ம் ஆண்டுக்கான அமுதன் அடிகள் இலக்கியவிருது கிடைத்திருக்கிறது.

சென்ற மாதம் 26ந்திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தஞ்சாவூரில் பெசன்ட் அரங்கில் நடைபெற்ற விழாவில் வணிகவரித்துறை அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா அவர்கள் இவ்விருதை வழங்கிப் பாராட்டினார்.

இந்திய ரூபா 15,000 உள்ளிட்ட இந்த விருதை இதுவரை புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலர் பெற்றிருக்கிறார்கள். இந்திய சாகித்ய விருது பெற்ற பல எழுத்தாளர்கள் அடங்கிய இந்த வரிசையில்

  1. தோப்பில் முகமது மீரான் (1996)
  2. வல்லிக்கண்ணன் (1997)
  3. இந்திரா பார்த்தசாரதி (1998)
  4. நாஞ்சில் நாடன் (1999)
  5. பூமணி (2000)
  6. இமயம் (2001)
  7. மேலாண்மை பொன்னுசாமி (2002)
  8. பாமா (2003)
  9. பெருமாள் முருகன் (2004)
  10. எஸ்.வி. ராஜதுரை (2005)
  11. கவிஞர் சல்மா (2006)
  12. ஜோ டி குரூஸ் (2007)

ஆகியோர் இவ்விருதை இதுவரை விருதைப்பெற்றிருக்கிறார்கள்.

தஞ்சாவூரில் நடைபெறும் “அமுதன் அடிகள் அறக்கட்டளை” இலக்கிய விருதுவிழாவில், 2008 ம் ஆண்டுக்கான விருதை பிரபல நாவலாசிரியர் சோ.தர்மன் அவர்களும், 2009ம் ஆண்டுக்கான விருதை கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரனும், 2010ம் ஆண்டுக்கான விருதை பிரபல நாடகாசிரியர் முத்துவேலழகன் அவர்களும் பெற்றுக் கொண்டார்கள். தவிர்க்க முடியாத காரணங்களால் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களால் நேரடியாக விழாவில் கலந்து கொள்ள முடியாமற் போய்விட்டது.

உலகளாவிய ரீதியில் இந்த நாவல் வாசகர்களை சென்றடைந்தால், சிறந்த படைப்புக்களை சீர்தூக்கிப்பார்தது, விருது வழங்கிக் கௌரவிக்கும் ஆய்வாளர்கள் கையில் இந்நூல்  சென்றடைய ஆவன செய்தால், நிச்சயம் இந்த நூல் சிறந்த படைப்பிலக்கிய நாவலுக்கான அங்கீகாரம் பெறும். என்று பி.எச். அப்துல் ஹமீட் ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள் - நாவலுக்கான முன்னுரையில் குறிப்பிட்டதையும் இங்கே நினைவுகூரலாம். தமிழ்கூறும் நல்லுலகெங்கும் அறிமுகமான ஒரு சிறந்த தமிழ் அறிவிப்பாளரின்  மேற்குறித்த  வார்த்தைகள் இப்போது நிஜமாகியிருக்கின்றன.

பகலும் இரவும் முத்தமிட்டுக் கொள்ளும் அந்த மாலைப்பொழுதில்... மேற்கிலிருந்து அடித்த வாடைக் கச்சான் காற்று, கடற்கரையை பார்த்துக்கொண்டு நின்றிருந்த அந்தோனியின் பொத்தான்கள் இல்லாத சேர்ட்டை பின்னே தள்ளி நெஞ்சுக்கூட்டை குளிரினால் சில்லிட வைத்தது. -  “கரையைத்தேடும் கட்டுமரங்கள்” நாவலிலிருந்து சில வரிகளை மீட்டுப்பார்க்கும் நூலாசிரியர் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள்,  தினமும் வாழ்வுக்காக அலைகளோடு ஜீவமரணப்போராட்டம் நடத்தி மீளும் அல்லது தோற்றுப்போகும் ஒரு சமூகத்திடம் தனக்குள்ள நியாயமான மதிப்பும், இரக்கமும்தான் தன்னை இந்த நாவலை எழுதத்தூண்டியிருக்கிறது என்று அவருடனான உரையாடலின் போது குறிப்பிடுகின்றார்.

கலைஞர் பாலச்சந்திரன் இலங்கையில் யாழ்மாவட்டத்தில் வடபகுதியில் உள்ள கரவெட்டி என்னும் ஊரில் ஜூலை மாதம் 10ம் திகதி 1944ம் ஆண்டு பிறந்தவர். பாலச்சந்திரனின் தந்தையின் பெயர் கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் என்பதாகும். எல்லோராலும் கலைஞராக அறியப்பட்ட இவர் சிறந்த ஒரு எழுத்தாளருமாவார். கனடாவில் வாழும் இவர் பல சிறுகதைகளை தினகரன், வீரகேசரி போன்ற வாரஇதழ்களில் எழுதியுள்ளார். சுமார் 250ம் மேற்பட்ட வானொலி நாடகங்களை இலங்கை வானொலிக்காக எழுதியிருக்கிறார் இவர் எழுதிய கிராமத்துக் கனவு, விழுதுகள், வாத்தியார் வீட்டில், மனமே மனமே போன்ற வானொலி தொடர் நாடகங்களும், தூரத்துச் சொந்தம், ஒருகை ஓசை, ஒருநாள் கூத்து போன்ற தொலைக்காட்சி நாடகங்களும் மறக்க முடியாதன. சுமார் 12 தொலைக்காட்சி நாடகங்களை எழுதியிருக்கும்; இவர், வை.ரி.லிங்கம், நாதன் நீதன் நேதன், போன்ற தொலைக்காட்சித் தொடர்களையும் எழுதி நெறிப்படுத்தியிருக்கின்றார். சுமார் 20 மேற்பட்ட மேடை நாடகங்களை எழுதி, இயக்கியதோடு; இவர் சிரித்திரன், தினகரன், சிந்தாமணி போன்றவற்றில் எழுத ஆரம்பித்து, தொடர்ந்து ஒருபேப்பர், தாய்விடு, தூறல் போன்ற இதழ்களில் எழுதிக் கொண்டிருக்கின்றார். இலங்கையில் தயாரிக்கப்பட்ட வாடைக்காற்று திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர் இதுவரை சுமார் 5 திரைப்படப்பிரதிகளை எழுதி, இயக்கியிருக்கின்றூர். இவர் ஒருபேப்பரில் எழுதிய அனுபவத் தொடர், ‘நேற்றுப்போல இருக்கிறது’ என்ற  பெயரில் நூல்வடிவில் வெளியாகவருக்கிறது.

இந்த நாவல் வெளிவந்தபோது பல பத்திரிகைகள், சஞ்சிகைகளில் விமர்சகர்கள் பலர் அதைப்பற்றி விமர்சனம் செய்திருந்தார்கள். அவர்களில் செ.கலாயா – தினக்குரல், அதிபர் திரு.பொ.கனகசபாபதி, பி.எச். அப்துல் ஹமீட் - தீராநதி, என்.கே. மகாலிங்கம் - தாய்வீடு, பி.விக்னேஸ்வரன் - காலச்சுவடு, முல்லை அமுதன் - காற்றுவெளி, மனுவல் ஜேசுதாசன் - வீரகேசரி, குரு அரவிந்தன் - இணையம் - திண்ணை, பதிவுகள், தமிழ் ஆரம், கலைஞன் - இணையம் - யாழ்களம், வல்வை சாகரா - இணையம் - யாழ்களம் போன்றவற்றில் விமர்சனக் கட்டுரை எழுதி இவரது ஆளுமையை வெளியுலகிற்குத் தெரிய வைப்பதில் முன்னின்ற முக்கியமானவர்களை இங்கே குறிப்பிடலாம்.

கடலோடிகளின் கதையைச் சொல்லும் இந்த நாவல் பற்றி எழுத்தாளர் குரு அரவிந்தன் குறிப்பிடும் போது, தங்களைத் தாங்களே விமர்சகர்களாக ஆக்கிக் கொண்ட ஒருசில நவீன விமர்சகர்கள் ஈழத்து படைப்பிலக்கியத்தில் இந்த நாவலைச் சேர்த்துக் கொள்ளப் பின்நிற்பார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை. ஏனென்றால் ஏதாவது தகாத வார்த்தைப் பிரயோகங்களையோ, அல்லது பாலியல் உணர்வுகளைத் தூண்டிவிடக் கூடிய சம்பவங்களையோ ஆசிரியர் இந்த நாவலில் எந்த ஒரு இடத்திலும் வலிந்து புகுத்தவில்லை என்பதே அவர்களின் பெரிய குறையாக இருக்கும். ஆசிரியரின் முதல் நாவல் என்பதால் ஆசிரியர் இந்த சூட்சுமத்தை அறிந்திருக்கவில்லையோ, அல்லது மொழி நாகரிகம், பண்பாடு கருதி, சமுதாயம் சீரழிய எழுத்தாளன் காரணமாக இருக்கக்கூடாது என்ற தனது கொள்கை காரணமாக இதைப் புகுத்தவில்லையோ தெரியவில்லை. முப்பத்தைந்து, நாற்பது வருடங்களுக்கு முன் ஈழத்தமிழ் கடலோடிகளின் வாழ்க்கை எப்படி இருந்தது, அவர்கள் எங்கே, எப்படி வாழ்ந்தார்கள் என்பதை அறிந்து கொள்ள நீங்களும் விரும்பினால், இந்த அருமையான நாவலை ஒரு தடவையாவது வாசித்துப் பாருங்கள். மான்பாய்ஞ்சான் என்றொரு தமிழ் கிராமம் இருந்ததே அது எங்கே இருந்தது, அது ஏன்தொலைந்து போயிற்று என்று எங்கள் அடுத்த தலைமுறையினர்  தேடவேண்டி வந்தால் அதற்குப் பதில் சொல்ல இந்த நாவல் ஒரு ஆவணமாகப் பாதுகாக்கப்பட வேண்டும். ஈழத்து ஓவியர் ரமணி இந்த நாவலுக்கு அட்டைப்பட ஓவியம் வரைந்திருக்கிறார். பி.எச். அப்துல் ஹமீதின் முன்னுரையோடு, இந்த நாவலை வடலி பதிப்பகத்தினர் சிறப்பாக வடிவமைத்து பிரசுரித்திருக்கிறார்கள். தனது பண்பட்ட எழுத்து மூலம் கனடிய தமிழ் இலக்கியத்திற்கு மேலும் வளம் சேர்க்க வேண்டும் என்று கலைஞர், எழுத்தாளர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களை நாங்களும் வாழ்த்துவோமாக!


நன்றி: வடக்கு வாசல்   (குரு அரவிந்தன்-)

புதன், 23 மார்ச், 2011

உலகக்கோப்பையை வென்ற 'சுனாமி'...!

 ஆடும்மனிதன் ஆட்டம்காண அலைகளொன்றாய் கூடின!
ஆசைதீர பூமிப்பந்தை அடித்துவிளை யாடின!
ஆடுமாடு கோழிபூனை அழுதுகண்ணை மூடின!
ஆறுகுளங்கள் நதிகள்சேர்ந்து ஊழிப்பாடல் பாடின!

மேடுபள்ளம் பாய்ந்தவெள்ளம் மேலெழுந்து சென்றன!
மேகக்கூட்டம் வானைப்பார்த்து பாவம்பூமி என்றன!
பாடுபட்டு சேர்த்தவற்றை பகிர்ந்து அலைகள் தின்றன!
படையைகண்ட தமிழர்போல பயந்துயாவும் நின்றன!

வீடுகாணி 'கார்'கள்கூட கால்முளைத்து நடந்தன!
வியக்குமளவு கப்பல்
கள்கூட வீட்டின்மேலே கிடந்தன!
வாடும்மனிதன் வாட்டம்கண்டு வானம்பூமி அழுதன!
வாழவேண்டும் உயிர்களென்று வையம்யாவும் தொழுதன!

சூடுபட்டபாலை மீண்டும் சுனாமிப்பூனை
கள் நக்கின!
'சூச்சூ..'என்று விரட்டிப்பார்த்தும் கழிவையெங்கும் கக்கின!
கேடுகெட்ட மனிதவாழ்க்கை கிடந்து அதற்குள் சிக்கின!
கேள்விகேட்ட அறிவும்கூட தோல்வியுற்று முக்கின!

உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு உயிர்கள்யாவும்  கெஞ்சின!
'உலகக்கோப்பை வென்றார்போலே அலைகள்கூடிக் கொஞ்சின!
அகிலமின்றே அழியுமென்று இருக்கும்நிலங்கள் அஞ்சின!
அலைகள்தின்று போட்ட மிச்சம் இமயமலையை விஞ்சின.

காடுகழனி யெங்கும்வெள்ளம் கரைபுரண்டு ஓடின!
கடவுளில்லை என்றவாயும் கடவுள்நாமம் கூறின!
காடுகரை யெங்கும்பிணங்கள் அழுகிப்புழுத்து நாறின.
நாடுஎட்டாம் நரகம்போன்று இமைக்கும்பொழுதில் மாறின!




நன்றி.
*தமிழ் ஆதர்ஸ்    

*விடிவெள்ளி (ஆறாவது விரல்) 24.3.11
*இருக்கிறம் (04.04.11)
 *சிகரம் (துபாய் ) 15.04.2011




முதன்முறையாக மலேசியத் தலைநகரில் 2011இல் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு!


 லேசியத் தலைநகர் கோலாலம்பூரில் முதன்முறையாக உலகத் தமிழ் இஸ்லாமிய இலக்கிய மாநாடு, 2011 மே 20, 21, 22ம் நாள்களில் மலாயாப் பல்கலைக் கழகத்தில் நடைபெறவுள்ளது. மலேசிய இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் பல்துறை சார்ந்த பொது அமைப்புகளின் பேராளர்களைக் கொண்ட ஏற்பாட்டுக் குழு இந்த மாநாட்டை நடத்துகிறது.

மலேசியப் பிரதமர் மாண்புமிகு டத்தோஸ்ரீ நஜீப் துன் அப்துல் ரசாக் அவர்களால் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கப்படவிருக்கும் இந்த மாநாட்டில், மலேசிய அறிஞர்கள், இலக்கிய வாணர்களுடன் தமிழ்நாடு, சிங்கை, இலங்கை முதலிய நாடுகளைச் சார்ந்த அறிஞர்களும் இலக்கிய வாணர்களும் பங்கு பெற்றுக் கட்டுரைகள் படைக்கவுள்ளனர்.

இம் மாநாட்டில், மலேசிய மொழியார்வலர்களுடன் தாய்லாந்து, புருணை, ஹாங்காங், வளைகுடா நாடுகளிலிருந்தும் திரளாகப் பேராளர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

''இலட்சிய வாழ்விற்கு இஸ்லாமிய இலக்கியம்'' என்னும் கருப்பொருளை முன்வைத்து நடத்தப்படும் இந்த மாநாட்டில், இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் பற்றிய பொதுவான 12 தலைப்புகளில் கட்டுரைகள் படைக்கப்படவுள்ளன. இவற்றுடன், மலேசிய நாட்டின் மேம்பாடு, தமிழ் இலக்கியம், ஊடகம் முதலிய துறைகளில் தமிழ் முஸ்லிம்களின் பங்களிப்புப் பற்றிய 5 கட்டுரைகளும், இலங்கைத் தமிழ் முஸ்லிம்கள் பற்றிய 2 கட்டுரைகளும், சிங்கைத் தமிழ்முஸ்லிம்கள் பற்றிய 1 கட்டுரையும் படைக்கப்படவுள்ளன.

இவைதவிர, பலநாடுகளில் அறிஞர் பெருமக்களும் பங்குபெறும் கருத்தரங்கமும், பலநாடுகளின் கவிஞர்கள் பங்குபெறும் கவியரங்கமும் இம் மாநாட்டில் இடம்பெறவிருக்கின்றன.

பொதுநிலையில் மாநாடுபற்றி அறிந்துகொள்ளவும் பேராளர்களாகப் பதிந்துகொள்ளவும் விரும்பும் இலக்கியத் துறையார்வலர்கள் மாநாட்டுச் செயலகத்துடன் கீழ்க்காணும் விவரப்படி அஞ்சல், தொலைபேசி, தொலைப்படி வழியாகவும் செயலாகத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

தலைமைச் செயலகம்
கவிஞர் மைதீ. சுல்தான் - 006012 2902057 mydinsultan@yahoo.com
பிதாவுல்லாஹ் கான் - 006012 3673464 fidhaullah@gmail.com

மாநாட்டில் கலந்துகொள்வோரும் மாநாட்டு மலருக்கு கட்டுரை அனுப்ப விரும்புவோரும் தலைமைச் செயலகத்துடன் அல்லது தாங்கள் வசிக்கும் நாட்டின் தொடர்பாளருடன் தொடர்பு கொள்ளலாம்.
பேராளர் கட்டணம் ரி.ம.100/- செலுத்த வேண்டும்.


Office
Wisma Iqrah
No 9 Jalan PJS 8/17
Dataran Mentari
46150 Petaling Jaya
Selangor

Tel: +603 5630 0155
Fax: +603 5630 0166
_______________________________________________

Secretariat
Fidhaullah Khan
Tel: +6012 367 3464
Email:fidhaullah@gmail.com

Mydee Sultan
Tel: +6012 290 2057
Email:mydinsultan@gmail.com
_______________________________________________

Literary Contact
Seeni Naina Mohamed
Tel: +6019 456 7523
Email:nmseeni@yahoo.com

Additional Contact 
Pulavar Pa. M. Anwar
Tel : +603 26930505

Syed Peer Mohamed
Tel : +60123826312
_______________________________________________

Registration / Enquiry

_______________________________________________

Delegate
_______________________________________________

National Steering Committee
_______________________________________________




INTERNATIONAL CO-ORDINATORS

Singapore   
Alhaj M. A. Mustafa    
India
Mr. Usman
Sri Lanka
Alhaj S,H,M. Jameel & Dr. Thassim
Thailand
Alhaj Wavoo Shamsudeen & Dr. Ayyub
Miyanmar
S.S.Khan
France
Adam Shah
United Kingdom
Alhaj Mahmoodh & Dr. Raffi
BruneI
Sheik Mukhthar
Gulf
Mudhuvai Hidayathullah

வியாழன், 17 மார்ச், 2011

படைப்பாளி அறிமுகம் -07- கவிஞர் வதிரி சி.ரவீந்திரன்

 
லங்கையின் படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவரான கவிஞர் வதிரி.சி.ரவீந்திரன் அவர்கள் யாழ்ப்பாணம், சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்டவர்.
கலை-இலக்கியத்தில்  தன்னை உருவாக்கிய தான் வளர்ந்த 'வதிரி'மண்ணுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தனது பெயரோடு 'வதிரி'என்ற பெயரையும் இணைத்து படைப்புக்களை படைத்து வருகின்றார்.

1970ம் ஆண்டு முதல் எழுத்துலக பயணத்தை ஆரம்பித்த இவரின் படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகள்,சஞ்சிகைகள், வானொலிகளில் களம் கண்டுள்ளன.

பாடசாலை காலத்திலிருந்தே இவருக்குள் இருந்த வந்த இடையறதா வாசிப்பும் பல சிரேஷ்ட்ட எழுத்தாளர்களோடு இருந்த தொடர்பும் இவரை சிறந்ததொரு படைப்பாளியாக பரிணமிக்க வைத்துள்ளது.
சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு- இலங்கை

கவிதை,கட்டுரை,விமர்சனம்,ஆய்வு,நேர்காணல், நாடகம்,மெல்லிசைப்பாடல் போன்றவற்றில் தனது ஆற்றலை வெளிப்படுத்திவரும் இவர் கவிஞர்  காரை செ.சுந்தரம்பிள்ளை அவர்களின் கவிதைகளினால் ஆகர்ஷிக்கப்பட்டு அவரை தன் மானசீக குருவாக கொண்டு பல அர்த்தபுஷ்டியுள்ள மரபுக்கவிதைகளை படைத்திருந்தாலும் பின்னர் ஏற்பட்ட புதுக்கவிதை வளர்ச்சியினால் புதுக்கவிதை படைப்பதிலும் ஈடுபட்டு மரபு,புதுமை இரண்டிலும் தனது ஆற்றலை வெளிபடுத்தி வருகின்றார்.

இவரின் மெல்லிசைப்பாடல்கள் பல இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகி வருகின்றன.

மரபுக் கவிதையிலே இவருக்கு இருந்த ஈடுபாடும்,அறிவும் சந்தம் நிறைந்த பல மெல்லிசை பாடல்களை எழுதுவதற்கு கைகொடுத்துள்ளது.

பத்திரிகைகளிலும்,இணையத்தளங்களிலும் இவர் எழுதியுள்ள இலங்கையின் 

மெல்லிசைத் துறை பற்றிய  ஆய்வுக்கட்டுரை இவருக்கு இருந்த மெல்லிசைத்துறை பற்றிய தேடலையும்  இவரின் அகன்ற பார்வையையும்  எடுத்துக்காட்டியுள்ளது.


தேசிய நாடக சபை உறுப்பினரான கவிஞர் வதிரி சி.ரவீந்திரன்
பல நாடகங்களில் நடித்துள்ளதோடு பல நாடகங்களை எழுதியும் இருக்கின்றார்.
இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகிய'வாலிபர் வட்டம்','பாவளம்' போன்ற காத்திரமான இலக்கிய நிகழ்ச்சிகளில் புடம்போடப்பட்ட இவர் பல கவியரங்குகளில் கலந்து கொண்டும் தலைமை வகித்தும் கவிதை பாடி ரசிகர்களின் மனதில்  என்றும் அழியாத சுவடுகளில் பதித்திருக்கின்றார்.





இவர் எழுத்துறைக்குள்  நுழைந்து நான்கு தசாப்தங்கள் கடந்திருந்தாலும் இவரது கவிதை நூல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை அந்தக் குறை சிங்கள் மொமியில் பல நூல்களை வெளியிட்டு விருதுகள் பலவற்றை வென்றெடுத்த பிரபல புத்தக வெளியீட்டு நிறுவனமான 'கொடகே' யினால் மிக விரைவில் வெளியிடப்பட இருக்கும்
'மீண்டு வந்த நாட்கள்' என்ற கவிதை நூல் மூலம் நிறைவு செய்யப்பட இருக்கின்றது.

தனது  படைப்புக்கள் மூலம்  இலங்கையின் இலக்கியத்தில் முத்திரை பதித்துவரும்
கவிஞர் வதிரி.சி.ரவீந்திரன் அவர்களின் படைப்புலக பணி மேலும் சுவடுகளை  பதிக்க நாமும் வாழ்த்துவோம்.

ஞாயிறு, 13 மார்ச், 2011

படைப்பாளி அறிமுகம்-06- எழுத்தாளர் எஸ்.ஐ.நாகூர்கனி

ண்ணத் தமிழுக்கு  வளம் சேர்க்கும் எண்ணற்ற எழுத்தாளர்களை ஈன்றெடுத்து, இலங்கையின் இலக்கிய நந்தவனத்துக்கு நறுமணத்தை வழங்கி வாகை சூடிய ஊர்களில் வாழைத்தோட்டத்துக்கு என்றே தனித்துவமான வரலாறு இருக்கின்றது.
 

இலங்கையில் அதிக பத்திரிகைகள் பூத்து அறிவுமணம் பரப்பிய பத்திரிகை பாரம்பரியம் மிக்க அந்த வாழை மண்ணில் பிறந்து,வாழையடி வாழையாக சங்கத்தமிழை சந்தனப் பல்லக்கில் சுமந்து நின்ற வாண்மை மிக்க படைப்பாளிகளுள் சமுதாய குரலாக ஒலிக்கும் சத்திய எழுத்தாளர்தான், கலாபூசணம் எஸ்.ஐ.நாகூர்கனி அவர்கள்.
 

இலங்கை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவரான இவர் கவிதை,கட்டுரை, சிறுகதை,நாடகம்,பத்தி,ஆய்வு போன்ற துறைகளில் மட்டுமல்லாது பத்திரிகை துறையிலும் கடந்த நான்கு தசாப்தத்துக்கும் மேலாக  காலூன்றி தடம்பதித்துள்ளார்.மேலும், இவர் இலங்கையில் தமிழில் துப்பாய்வுத்துறை ( INVESTIGATIVE JOURNALIST) பத்திரிகையாளர்களுக்கு முன்னோடியாகவும் விளங்குகின்றார்.
இலங்கை ''மல்லிகை'' சஞ்சிகையின் முகப்பை அலங்கரிக்கும்  கலாபூசணம் எஸ்.ஐ.நாகூர்கனி

கொழும்பு சாஹிரா கல்லூரியின் பழைய மாணவரான இவர்.கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறையில் டிப்ளோமா பட்டத்தை நிறைவு செய்துள்ளார்.
 

1963ம் ஆண்டு  தினகரன் 'பாலர்கழகம்' பகுதியில் பிரசுரமான கல்வி கற்றல் என்ற மரபுக்கவிதை  மூலம் முதன் முதலாக இலக்கிய உலகத்தில் காலடி எடுத்துவைத்த இவரது படைப்புக்கள்
தமிழ்ச் செல்வன்,முஸாபி
ர்,முஸல்மான் ,அமுதன், இதயக்கனி,இப்னு இஸ்மாயில், நிஹார் மணாளன், சதுர்ச்செல்வன்,முல்லா ஆகிய புனை பெயர்களில் இலங்கையின் தேசிய பத்திரிகைள்,சஞ்சிகைகள் மட்டுமல்லாது சர்வதேச இலக்கிய ஏடுகளிலும் வெளிவந்துள்ளன.
 

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவையில் 'ஊடுருவல் 'என்ற நிகழ்ச்சிமூலம் சமூக அவலங்களை படம்பிடித்து காட்டிய இவர்' பத்திரிகை ஜாம்பவான் எஸ்.டி.சிவநாயகம் அவர்களின் பட்டறையில் பட்டைதீட்டப்பட்ட வைரம். இலங்கை வலம்புரி கவிதா வட்டம் என்ற அமைப்பின் அமைப்பாளராக இருந்து பல புதிய கவிஞர்கள்  உருவாவதற்கு துணையாக நின்றவர்.


2002 சர்வதேச இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா விருது வழங்கும் நிகழ்வு

 

தேசிய மட்டத்தில் நடைபெற்ற பல கலை-இலக்கிய போட்டிகளில் வெற்றியீட்டியுள்ள இவருக்கு கிடைத்த கௌரவங்கள்.
 

01.    1991ம்ஆண்டு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்களுக்கான  இராஜங்க அமைச்சு நடாத்திய முதலாவது வாழ்வோரை வாழ்த்துவோம் நிகழ்வில் 'காதிபுல் ஹக்' சத்திய எழுத்தாளன் என்ற பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

02.    1994 ம்ஆண்டு தமிழ்நாடு தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் நடத்தப்பட்ட 15வது திருக்குர்ஆன் மாநாட்டில் ''சமுதாய எழுத்தாளர்'' பட்டமும் பொற்கிழியும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.


03.    1996ம்ஆண்டு இரத்தினபுரியில் அமைந்துள்ள அகில இலங்கை நல்லுறவு ஒன்றியம் நடத்திய கலை-இலக்கிய சமூகப்பணியாளர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் ''சமுதாயக்காவலன்'' பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுளார்.

04.    2002ம்ஆண்டு இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் கொழும்பில் நடத்திய சர்வதேச இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் சிரேஷ்;ட்ட படைப்பாளிக்கான விருதும் பொற்கிழியும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.


05.    2007ம் ஆண்டு இலங்கை அரசின் கலாச்சார அமைச்சினால் சிரேஷ்;ட்ட கலைஞர்களுக்கு வழங்கப்படும் 'கலாபூசணம்' பட்டம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.



கவியரங்கில் கவிதை பொழியும் கவிஞர் எஸ்.ஐ.நாகூர்கனி

இவர் வெளியிட்டுள்ள நூல்கள்.
 

01.    தூரத்து பூபாளம் (சிறுகதை தொகுதி-1983)
02.    அவள் நெஞ்சுக்குத் தெரியும் (நாவல்-1986)
03.    ஒரு வெள்ளிவழா பார்வை (எழுத்தாக்க தொகுப்பு நூல்-1989)
04.    காலத்தின் சுவடுகள் (சமூக விமர்சன நூல்-1993)
05.    நன்றி மறப்போம் (வரலாறு -1998)


தனது தனித்துவமான படைப்புக்கள் மூலம்  இலங்கையின் கலை-இலக்கியம், பத்திரிகைத் துறையில் முத்திரை பதித்துவரும் 

எழுத்தாளர் கலாபூசணம் எஸ்.ஐ.நாகூர்கனி அவர்களின் எழுத்துப்பணி மேலும் மேலும் சுவடுகளை  பதிக்க நாமும் வாழ்த்துவோம்.



சனி, 5 மார்ச், 2011

அன்புள்ள துரோகிக்கு...!

ன்புள்ள துரோகிக்கு
ஆசையுடன் எழுதுகிறேன்
பண்புள்ள பழையவனின்
பாச வணக்கங்கள்...

எப்படிநீ இருக்கின்றாய்
எனை உனக்கு ஞாபகமா..?
அப்படியே உன்நினைவு
அடிநெஞ்சில் இருக்குதம்மா...!

ஏதோ ஒருமூலையில்நான்
எப்படியோ இருந்தாலும்...
என்னுடைய மூளையெங்கும்
உன்குரலே கேட்குதம்மா...!

என்புள்ள வளர்ந்திட்டான்..
ஏதேதோ கேட்கின்றான்...
விண்ணுயர்ந்த கவிமரத்தின்
விலாசத்தை வினவுகின்றான்....

உன்பெயரை உரைத்திடவா?
உண்மைகளை மறைத்திடவா...?

கண்ணாடி உடைந்தகதை
கற்பனைகள் இடிந்தகதை
என்நாடி நரம்பெங்கும்
எரிஅமிலம் வடிந்தகதை....
என்செய்வேன் என்கதையை
எப்படிநான் செப்பிடுவேன்.

வண்ணக் கவிபேசும்
வடிவான விழிகளினால்
சின்னக் குறுஞ்சிரிப்பால்
சிணுங்கிவிழும் தேன்பேச்சால்
தென்னங்-கள் வழிகின்ற
கன்னங்கள் வழியாக
எண்ணங்கள் மீதேறி
என்நெஞ்சில் இடம்பிடித்தாய்.
என்னவளே பின்னெதற்காய்
எனைக்கொல்ல அடம்பிடித்தாய்..?
என்னநான் செய்தேனோ
ஏனென்னை நீமறந்தாய்..?
கண்ணே உனக்கு
காதல் கிளித்தட்டா..?

அன்றொருநாள் பாதையில்நான்
என்பாட்டில் போகையிலே
நின்றாய் விழிகளினால்
நீயேதான் தூதுவிட்டாய்...

தின்னும் உணவுக்கே
திண்டாடும் எனைத்தெரிந்தும்
இன்னும் தொழிலின்றி
இடர்காணும்  எனைப்புரிந்தும்
என்னை நேசித்தாய்
என்மனதை யாசித்தாய்
உன்னை சுவாசித்தேன்
உயிருதட்டால் வாசித்தேன்
காலம் 'ஜெட்டாக'
கடுகதியில் ஓடையிலே
நாளம் அறுத்தெறிந்தாய்.
நட்டாற்றில் விட்டெறிந்தாய்.
காலம் காலமாக
கட்டிக்காத்த என்தன்பின்
ஆழம் புரியாமல்
அடியேநீ ஒடித்துவிட்டாய்.

காலப் பெருவெளியில்
காசுபுகழ் நீதேடி
காதலித்த ஏழையிவன்
காலதனை வாரிட்டாய்.
பெண்ணேநீ என்னை
பேயனாய் எண்ணிவிட்டாய்
கண்ணே உனக்கொருநாள்
காலம்பதில் சொல்லும்.
என்றன்று உன்பிரிவால்
எரிநெருப்பால் எழுதியதை

என்னவென்று சொல்லிடுவேன்....
எப்படிநான் பேசிடுவேன்...?


நன்றி 
*சுடர் ஒளி-2008