வியாழன், 23 பிப்ரவரி, 2012

கவியரங்கில் பாடப்பட்ட கவிதை


'தடாகம்' கலை இலக்கிய வட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவிஞர் எஸ்.ஜனூஸ் எழுதிய ''தாக்கத்தி'' கவிதை நூல் வெளியீட்டு விழாவில் இடம்பெற்ற சிறப்பு கவியரங்கில் பாடப்பட்ட கவிதை.(20.2012)


இறைக்கும்
இறை மறைக்கும்
உண்மை உரைக்கும்
உயர் நபிக்கும்

என்னை முறைக்கும்
இந்த அறைக்கும்
எங்கள் பிறைக்கும்
கண்டு விறைக்கும்
கலைத் துறைக்கும்
அதன் திரைக்கும்...

என்னை அணைக்கும்
கல்முனைக்கும்
இங்கே இணைக்கும்
தாக்கத்திக்கும்....

இந்த அவைக்கும்
கவிஞர் சபைக்கும்
கவிதை சுவைக்கும்
உங்கள் செவிக்கும்....
இந்த புவிக்கும்...

இங்கே முளைக்கும்
எங்கள் கலைக்கும்
என்னை அழைக்கும்
தமிழ் மழைக்கும்
அஸ்ஸலாமு அலைக்கும்...!

நான் உரைக்கும் கவிதை
இனிக்கும் பின்னர் இடிக்கும்
உறைக்கும்-மென்மை
குறைக்கும்-நெஞ்சை
கரைக்கும்-கொஞ்சம்
குரைக்கும்

கொடுமை எரிக்கும்.
அரிக்கும் உரிக்கும் முறிக்கும்
காலம் நரைக்கும் வரைக்கும்
புதுமை கிறுக்கும்
இருக்கும்...!


(வேறு)

சாய்ந்த மருதூரின்
சர்க்கரைப் பந்தலிலே
சீனி விற்கவந்த
சின்னப்பயல் நான்...

நாணி நாவரண்டு
நடுநடுங்கி நிற்கின்றேன்-
பத்தேக்கர்
காணி செய்வது போல்
படபடப்பாய் இருக்கிறது....

கவிதைத் தலைவா...
நீங்கள் ஆய்ந்து ஆய்ந்து
அறிஞனாய் போனவர்-நான்
காய்ந்து காய்ந்து
கவிஞனாய் போனவன்...
தேய்ந்து தேய்ந்து
தெருவிலே நிற்பவன்...
பயந்து பயந்து
கவிதைகள்  பாடுவேன்
நயந்து நயந்து
ஓதுவேன் கேளுங்கள்.!

(வேறு)

வானொலியில் தேனொலிக்கும்
வரகவிகள் மத்தியிலே
நானொலிக்கும் கவிதை
'நான்' ஒழிந்து நிற்கிறது..!

ஏன்வந்தோம் என்று
ஏக்கத்தில் துடிக்கிறது..
தேன் சொரியும் திருமலர்கள்
தேன்கிழக்கின் நறுமலர்கள்
இருக்கையிலே இருக்கையிலே...

பேன்சொரியும் என்கரங்கள் - உங்களுக்கு
பிடிக்குமா தெரியவில்லை. -என்
குழந்தைக் கவிதையிலே
குறை கண்டால் மன்னிப்பீர்..!(வேறு)
 
நரிகள் எல்லாம்
ஒன்றாய்க் கூடி
நாடக மொன்றை கிறுக்கட்டும்...!
பரிகள் போர்த்திய
பாயும் புலிகள்
பதுங்கி என்னை அறுக்கட்டும்...!

சுரிகள் எல்லாம்
என்னைக் கண்டால்
முகத்தை சுழித்து வெறுக்கட்டும்..!-தற்
குறிகள் கூட
தடையாய் நின்று
முளைக்கும் என்னை நறுக்கட்டும்...!

எந்தன் வானம்
எந்தன் பூமி
எந்தன் வாழ்க்கை கறுக்கட்டும்...!
எல்லாம் சேர்ந்து
என்றோ ஒருநாள்
ஏவுகணையினை கருக்கட்டும்...!

எரியும் கவிதை
விரியும் கரமாய்
எய்ப்போர் பல்லை நொறுக்கட்டும்...!
புரியும் வரைக்கும்
எந்தன் நாமம்
புரியாதுனக்கு இருக்கட்டும்...!

காலம் யாவும்
சேர்த்து வைத்த
சோகம் கவியால் கருகட்டும்...
இமய மலைபோல்
இருக்கும் மனசும்
இன்றே பனியாய் உருகட்டும்...!

இளையவன் எந்தன்
கவிதை கேட்டு
இன்பம் எங்கும் பெருகட்டும்...!
வெடிக்கும் கவிதை
இடிக்கும் கொஞ்சம்
பிடிக்கும் என்றால் கைதட்டும்...!
(வேறு)

உம்மாநான் சவூதிக்கு போறேன்-எங்கட
கவலைகள் கரச்சல்கள் கலஞ்சோடிப்போக...!
உம்மென்று இருக்காதே நீயும்-என்ட
உசுரப்போல்  எப்போதும் புள்ளநான் பாப்பேன்!

வாப்பாநீங்க ஒழச்சது போதும்-ஒங்கட
பெரச்சின லாத்தையும் நானினி பாப்பேன்...!
சாப்பாட்டுக் கினியென்ன பஞ்சம்...?-ஒங்கள
மௌத்தாகும் வரைக்கும்நான் மனசாற பாப்பேன்..!

கலியாண வயசுள்ள என்ன-நீங்க
கரசேக்க படுகிற பாட்ட நான் அறிவேன்...!
என்னகா செய்றநான் உம்மா
பொம்புளயா  பொறந்தது யாரோட குத்தம்..?

அப்பம் வித்து காக்கா படிச்சார்
கடசியில் நமக்கெல்லாம் என்னத்த கிழிச்சார்...?
கொமர நெற வேத்த முந்தி-காக்கா
கொறுக்காட பேத்திய  கலியாணம் முடிச்சார்...

புழிஞ்ச தேங்காப் பூவப் போல
புளிச்சித்தான் போனோம் அவருக்கும் நாங்க-என்ட
கிழிஞ்ச 'சல்வார'' மாத்த-உம்மா
ஒங்கிட்ட காசில்ல யார்ட்ட வாங்க...?

படிச்சாக்கள் இப்பெல்லாம் கூட-இஞ்ச
படிப்புத்தான் உசிரென்றோர் சோத்துக்கு வாட-நான்
பட்டங்கள் படிச்சதும் வீந்தான்-இப்ப
தொழிலின்றி இருந்திட்டா கெடைக்குமோ தீன்தான்...?

அரசாங்க தொழிலையும் காணோம்-நாங்க
அலையாலும் மழையாலும் அழிஞ்சிதான் போனோம்
'எம்பி''மார் பொய்கள கேட்டா - உம்மா
இதவிட மோசமா அழிஞ்சுதான் போவோம்...!

அதுவரும் இதுவரும் என்பார்-எம்பி
ஆனைய குடுத்தாலும் சோத்தோட திம்பார்
ஊட்டுக்கு தேடிநாம் போனா-'சேர்''
எடுபிடி அனுப்பி 'பிஸி'' எனச்சொல்வார்...

ரோட்டுல கண்டாலும்கூட
தெரிஞ்சாலும் தெரியாத மாதிரி போவார்
வோட்டுத்தான் அவருக்கு வேணும்-நாங்க
ஏமாந்து ஏமாந்து அழுதது காணும்...

வக்கின்றி வாக்குகள் கேட்டு-ஊட்ட
வருவோர்க்கு உம்மாநீ வாருகள் காட்டு
எருமைங்க கதையல கேட்டு
ஏமாந்து இனிமேலும் போடாதே ஓட்டு....

ஒழைக்காட்டி ஒசந்தவர் யாரு? -நாங்க
ஒழைக்காம தின்டிட்டா மதிக்குமா ஊரு?
ஒழச்சத்தான் கக்கிஷம் போகும்-இத
ஒணராட்டி எப்புடி சோகங்கள் சாகும்..,?

நெனச்சமாரி நாங்க உடுக்க-இழிவா
நெனச்ச மச்சானுக்கு சீதனம் குடுக்க
சவூதிக்கு உம்மாநான் போறேன்-எல்லாம்
சரியாக வந்திடும் சிலநாளில் பாரேன்.

சொளையாக அனுப்புறன் காசி- ஊட்டில்
சொகமாநீ வாழலாம் பூட்டும்மா 'ஏசி'
தொணையாக இருக்கிறேன் உம்மா-நீயும்
கொளராத கக்கிஷம் போய்விடும் சும்மா...

சொர்க்கத்த வாங்கிட்டு வருவேன்-அந்த
மக்கத்து சொகமெல்லாம் ஒனக்குத்தான் தருவேன்
சொத்துக்கள் உம்மாநீ வாங்கு-எங்கட
சொர்க்கத்தில் இனியாச்சும் சொகமாக தூங்கு...!

மனம்வெச்சி என்னநீ அனுப்பு-சவூதி
நானிப்ப போனாத்தான் எரியும்நம் அடுப்பு..!
போஎன்டு செல்லித்தான் பாரு..-சொட்டு
நாளைக்குள் ஓடும்மா தங்கத்தில் ஆறு.....

ஒயித்தாட புள்ளநான் என்று
ஒதுக்கித்தான் பாக்காக ஊராக்கள் இன்று
அவியலின் முன்னால நாங்க
ஆரேண்டு காட்டித்தான் வாழனும் ஓங்க...

உம்மாநான் சவூதிக்கு போறேன்-எங்கட
கக்கிஷம் எல்லாமே காத்துல போகும்-என்ன
சும்மா நெனைக்காதே நீயும்-நாங்க
சொகுசாக வாழலாம் சொமையெல்லாம் தீயும்...!!


புதன், 15 பிப்ரவரி, 2012

காதலர் தினத்தை முன்னிட்டு வெளிவந்துள்ள எனது பாடல்....அன்புள்ளவர்களுக்கு இது காதலர் தினத்தை முன்னிட்டு வெளிவந்துள்ள எனது பாடல் உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
  • இசை: வேரணன் (UK)
  • வரிகள்:கவிஞர் அஸ்மின்
  • பாடகர்:ஆனந்த்(UK)
  • வெளியீடு: 14.2.2012

திங்கள், 6 பிப்ரவரி, 2012

'நாசாவும்'உன்னிடத்தில் பாடம் கற்கட்டும்...!

பொத்துவிலின் முன்னேற்றத்துக்கு உழைத்த பல்துறையை 33 பேர் பொத்துவில் பிரதேச சபையினால் அண்மையில் கௌரவிக்கப்பட்டனர்.அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படம்.எனது அருகில் பொத்துவிலின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சங்கர் அவர்கள் காணப்படுகின்றார்.இது நான் புதிதாக இசையமைப்பாளர் ஷமீலின் இசையில் 
எழுதியுள்ள பாடல்.உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
மிகவிரைவில் பாடலை நீங்கள் கேட்கலாம்.

பல்லவி

கொண்டாடா 'ஜில்ஜில்' சோடா
கொண்டாட 'புல்புல்' வாடா
துண்டாடும் கவலை தான்டா...
தூக்கிப் போடு
தூரம் தான்டா....!

அரிவாளை நெஞ்சில் தீட்டடா
அறிவாலே வென்று காட்டடா
அறியாமை அடித்து ஓட்டடா...
அஞ்சும் நெஞ்சை
கொல்வோம் வாடா...

அனுபல்லவி

போராடத் துணிந்தால் புயல்கூட பதுங்கும்
பூகம்பம் எமக்காய் பூப்பறிக்கும்....
நண்பாநாம் பயந்தால் நாய்கூட துரத்தும்
காக்கையும் தலையில் கூடுகட்டும்

நண்பா வா.....
நண்பா வா...
நண்பா வா....
ஒன்றாய் சேர்ந்து ஜெயிப்போம் வா..வா..(கொண்டாடா 'ஜில்ஜில்' சோடா...)

 (சொல்லிசை - Rap)

உழவர்கள் உழுது
உலகமே அழுது
மறைந்திட்ட பொழுது
தோன்றாதே...
 

கடவுளை தொழுது
புதுவிதி எழுது
நிலவிலும் பழுது 
வாடாதே...

சரணம் -01

இமயத்தில் ஏறவேண்டுமா..?
இதயத்தில் வீரம் கொண்டுவா
உலகத்தை ஆளவேண்டுமா..?
உடையாதே வா....
காற்றுக்கு சிறகு பூட்டலாம்
கனவுக்கு வர்ணம் தீட்டலாம்
கவலைக்கு தீயை மூட்டலாம்
நண்பா நீ வா.....

'வெற்றி'யின் வெற்றிப்பாட்டு எட்டு திக்கும் கேக்கட்டும்
நெற்றியின் வியர்வை பட்டு பூமி பூக்கட்டும்
நாசங்கள் உன்னை கண்டால் கைககள் கட்டி நிற்கட்டும்..
'நாசாவும்'உன்னிடத்தில் பாடம் கற்கட்டும்...!

நண்பா வா.....
நண்பா வா...
நண்பா வா....
வானம் பூமி உனக்காய்தான்டா...(கொண்டாடா 'ஜில்ஜில்' சோடா)

(சொல்லிசை - Rap)

உழவர்கள் உழுது
உலகமே அழுது
மறைந்திட்ட பொழுது
தோன்றாதே...

 கடவுளை தொழுது
புதுவிதி எழுது
நிலவிலும் பழுது
வாடாதே...

சரணம் - 02

சாகாமல் சாக வேண்டுமா
பெண்ணோடு காதல் செய்யடா
இறந்தாலும் வாழவேண்டுமா
என்னோடு வா...

வரலாறு படிக்க வேண்டுமா
வாய்பார்த்து நீயும் நில்லடா..!
வரலாறு படைக்க வேண்டுமா
போராட வா..!

அநியாயம் செய்வோ ரெல்லாம் உன்னை கண்டு அஞ்சட்டும்
'ஐநா'வும் உந்தன் காலில் வீழ்ந்து கெஞ்சட்டும்..!
மமதைகள் ஓடிப்போக மனிதம் மட்டும் மிஞ்சட்டும்
மாற்றானின் தோட்டப்பூவும் உன்னை கொஞ்சட்டும்...!

நண்பா வா.....
நண்பா வா...
நண்பா வா....
வாழும் உலகில் சொர்க்கம் செய்வோம்...!

*புல்புல்-  இசைபாடும்  பறவை

 31.1.2012

சனி, 4 பிப்ரவரி, 2012

படைப்பாளி அறிமுகம் - 23 ''சந்தக் கவிமணி'' கிண்ணியா அமீர் அலி.

''சந்தக் கவிமணி''  கிண்ணியா அமீர் அலி.

ந்தக் கவிதைகளால் சங்கத்தமிழுக்கு சரிகை கட்டி சாகாவரம் பெற்ற படைப்புக்களால் பல மனங்களுக்குள் பந்தலிட்டிருப்பவர் கவிஞர் கிண்ணியா அமீர் அலி அவர்கள்.

கொழும்பு, வடக்கு, கலைமகள் தமிழ் வித்தியாலயத்தில் கடமையாற்றிக் கொண்டிருக்கும் இவர் பத்திரிகை ஜாம்பவான் அமரர் எஸ்.டி. சிவநாயகம் அவர்களின் 'சிந்தாமணி' மூலம் பட்டை தீட்டப்பட்ட, நாடறிந்த நல்லதொரு மரபுக் கவிஞர்.

கலாபூஷணம் கவிஞர் ஏ.எம்.எம். அலி அவர்களிடம், 'கவிதை யாப்பிலக்கணம்' கற்றுத் தேர்ந்த இவர், சிறுகதை, நாடகம், குறுங்காவியம், மெல்லிசைப் பாடல்கள் எனப் பல்துறை சார்ந்து இலக்கியமே மூச்சாக இயங்கி வருகின்றார்.

திருகோணமலை மாவட்டத்தில்  கிண்ணியாவை பிறப்பிடமாககொண்ட இவர்
1984 ஆண்டு 'பதவி' என்ற கன்னிக்கவிதை மூலம் இலக்கிய உலகுக்குள் நுழைந்தார். அன்றிலிருந்து இற்றைவரை  சுமார் 500க்கும் மேற்பட்ட கவிதைளையும் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும்  எழுதியிருக்கும் இவர் 100க்கும் மேற்பட்ட பல மெல்லிசைப் பாடல்களையும் இலங்கையின் முக்கியமான இசையமைப்பாளர்களின் இசையில் எழுதியுள்ளார்.

யதார்த்தம் தொனிக்கும் எழுத்து நடையின் சொந்தக்காரரான
கிண்ணியா அமீர் அலி ஹாஸ்யம் கலந்து எழுதுவதில் தேர்ச்சிபெற்றவர்.தனது அனுபவங்களை ஒளிவு மறைவின்றி இயல்பாக இலக்கியத்தினூடக  வெளிப்படுத்துவதில் தயங்காதவர். கவியரங்குகளில் சந்தக் கவிதைகள் பாடும் இவரை, கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்கள் 'இஸ்லாமிய அருணகிரிநாதர்' என்று பாராட்டியுள்ளார்.

இவர் எழுதியுள்ள கவிதைகள், மெல்லிசைப்பாடல்கள் வானொலி நாடகங்கள்; இலங்கையின் தேசிய பத்திரிகை, சஞ்சிகைகளிலும் இலத்திரனியல் ஊடகங்கள் பலவற்றிலும் களம் கண்டுள்ளன.

1988ம் அண்டு தொடக்கம் இலங்கை வானொலியில் பகுதி நேர கலைஞராக பலதரப்படட்ட நிகழ்ச்சிகளில் பங்காற்றிவரும் இவர் கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக இலங்கை வானொலியில் கவிதைக்களம் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வருகின்றார். பிரபல இசையமைப்பாளர் சரத் விக்கரம அவர்களின் இசையில் ஏ.ஏம்.யேசு ரட்ணம் பாடிய 'பணமும் உறவும் நகமும் சதையும்' என்ற தத்துவப்பாடல் இவருக்கு நல்ல அடையாளத்தை பெற்றுக்கொடுத்த பாடலாகும் இவரது பாடல்கள் 'ரிதம் ஓப் லவ்' என்ற பெயரில் வெளிவந்துள்ளது.

இவரது இலக்கிய பணியை பாராட்டி பலவேறு அமைப்புக்கள் பொன்னாடை போர்த்தி பொற்கிழி வழங்கி கௌரவித்துள்ளன.
குறிப்பாக 2002 ஆம் ஆண்டு பண்டாரநாயக்கா மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ள கவிஞர் கிண்ணியா அமீர் அலி 2009 ஆம் ஆண்டு இலங்கை முஸ்லிம் கலைஞர் முன்னணி விருது விழாவில் 'சந்தக் கவிமணி' என்ற பட்டம் சூட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார். 2011ம் ஆண்டு 'தடாகம்' கலை இலக்கிய பேரவை 'அகஸ்தியர்' விருது வழங்கி இவரை கௌரவித்துள்ளது.