சுடர்ஒளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுடர்ஒளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

உயிர்வண்டு..!


யிர்வண்டு உனைக்கண்டு ரீங்காரம் பாடும்!
உணர்வெங்கும் கவிபொங்கி தேனாக ஓடும்!
பயிர்காடு நிலம்யாவும் பனிதின்னும் நேரம்!
பசியாடும் வேளையிலும் கவியென்னுள் ஊறும்!

வளமான தேன்கவியே வாசமுடன் வாழும்!
வாழ்வெடுத்து பேசாத பாட்டொருநாள் வீழும்
உளமார நான்பாடல் பாடுகிறேன் நாளும்!
உணர்வுகளை உசுப்புமவை உயிர்த்தமிழை ஆளும்!

நன்றி*சுடர்ஒளி
*தித்திக்குதே







அடிநெஞ்சில் நின்றிருந்தாய் மானாய் ...!


 டிநெஞ்சில் நின்றிருந்தாய் மானாய் -அடியே
அத்தனையும் நீமறந்து போனாய்...
வெடிநெஞ்சில் பட்டவன் போலானேன் -கொடும்
வெந்தழலில் நீறாகி போனேன்.........

சில்லென்ற தென்றல்வரும் காலை -நீ
சிரிப்புதிர்த்து பள்ளிசெல்லும் வேளை...
வள்ளென்று நாய்குரைக்கும் நேரம் -நான்
வாழ்ந்திருப்பேன் உன்னினைவின் ஓரம்...

வேலிக்கு மேலாலெட்டிப் பார்ப்பாய் -என்
வேதனையை புன்னகையால் தீர்ப்பாய்..
கேலிபலர் எனைச் செய்தபோதும்-அடி
கேள்கிளியே உன்நினைவே மோதும்.....

காண்பவரை மயங்கவைக்கும் அழகி...
காதல்கொண்டு என்னுடன்நீ பழகி
நீயின்றி நான்வாழேன் என்றாய்-பின்
தீயின்மேல் எனைவீசிக் கொன்றாய்......

கடற்கரையில் கைகோர்த்து நடந்தோம்
கால்நூற்றான்டை கால்நடையில் கடந்தோம் -எம்
உடல்கறையை காணாததும் உண்மை-அதை
உணர்த்தியதா கணவனுக்குன் பெண்மை..?

         நன்றி
*சுடர்ஒளி
*தினகரன் கவிதைப்பூங்கா (20.3.11)

மாய்கின்ற மாநிலத்தின் மாடு...



குண்டுமழை பொழிகிறது
            கண்டு மனம் கிழிகிறது
துண்டுதுண்டாய் போனதெங்கள் தேசம்-யுத்தத்
              தூக்கினிலே தொங்குதெங்கள் நேசம்

துப்பாக்கி அழுகிறது
             'தோட்டாக்கள்' சிரிக்கிறது
தப்பாட்டமாடுகிறீர் ஏனோ..?-உங்கள்
              தலையெங்கும் களிமண்ணே தானோ..?

வேதனைதான் அளித்தீர்கள்
            வேறென்ன கிழித்தீர்கள்..?
சாதனைகள் செய்கின்றீர் நாளும்-பேய்கள்
            சரித்திரத்தில் உம்பெயரும் வாழும்!

ஆயுதத்தை தூக்குபவர்
            அடித்துஉயிர் போக்குபவர்
மாய்கின்ற மாநிலத்தின் மாடு-அவரை
            மானிடராய் மாற்றிவிடப் பாடு!!

நன்றி.
*சுடர்ஒளி

சனி, 29 ஜனவரி, 2011

நெருப்பாய் எரியும் வாழ்வு!


ல்வியை விற்கிறான் கடையிலே!-இங்கு
கற்பவன் நிற்கிறான் படையிலே!
கழுதைகள் காவலன் உடையிலே!-மனம்
கண்டு துடிக்குதே இடையிலே…!

பேயர சாளுது நாட்டிலே!-இன்று
பேனையை போடுறார் கூட்டிலே!
கணவனும் மனைவியும் கோட்டிலே!கொண்ட
காதலால் வந்தது றோட்டிலே…!

நினைவுகள் காதலின் மடியிலே!-நிதம்
நிம்மதி தேடுறார் குடியிலே!
வாழ்வு நிலைப்பது படியிலே!-இன்றேல்
வாடிட வேண்டுநாம் அடியிலே!

அனைத்தையும் இழந்தார் அலையிலே!-இன்று
அகதியாய் நனைகிறார் மழையிலே!
வாழ்க்கை செலவுயர் மலையிலே!-இட்ட
வாக்கினால் வந்தெதம் தலையிலே!

சும்மா புகழுவார் பேச்சிலே!-கொடும்
சுயநல முள்ளது மூச்சிலே!
வாழ்க்கை எரியுது நெருப்பிலே!-உலகில்
வாழ்வது அவரவர் பொறுப்பிலே!!

2007.11.04

          நன்றி.
*பதிவுகள்
*வார்ப்பு
*சுடர்ஒளி


பேருந்து...!


மாதத்தின் முதலாம்நாள் கன்னிப்பெண்ணின்
         மார்பினைப்போல் விம்மிநிற்கும் சேப்பைத்தொட்டு
ஆதரவாய் தடவுகின்றேன் அம்மாஅப்பா
        அன்புமுகம் என்நினைவில் வந்துபோச்சு...…
காதவழி தான்நடந்தேன் போனமாசம்
         கடன்தந்த கனகுமுகம் தோன்றலாச்சு...…
வாதமுற்ற எண்ணமுடன் வீதியோரம்
       'வஸ்'ஸொன்றின் வருகைக்காய் காத்திருந்தேன்…

தினம்குடித்து ஆடியாடி வீடுஏகும்
           திக்குவாயர் எலிக்குஞ்சு தியாகுபோன்று...
சனமடுக்கி புகைகக்கி வந்த பஸ்ஸோ
           சட்டென்று 'பிரேக்'கடிக்க உலுகுவந்தேன்..
பணம்நிறைந்த பையினிலே கையைவிட்டேன்
           பத்தெடுத்தேன் பஸ்ஸினிலே ஏறிவிட்டேன்..
தொணதொணக்கும் கண்டக்டர் காதடைக்க
          கரகரக்கும் பீக்கராகி கடந்து போனான்..

பத்துமிச்சம், பாவியென்னை பார்த்தும்கூட
        'ஸ்ஸரட்ட யன்டமல்லி' என்றுபோனான்
முத்துமுத்தாய் சொட்டுகின்ற வியர்வைதன்னை
       முடிந்தவரை நான்துடைத்து முக்கிநின்றேன்
செத்துவிட்ட அவள்நினைவு ஆங்கும்வந்து
        செய்கவிதை எனமீண்டும் தொல்லை செய்தும்
கத்திக்கத்தி கத்திநெஞ்சில் வீசும் கனகர்
       கடன்தந்த ஞாபகமே தொடரலாச்சு..

என்னருகில் ஒருகிழவி 'ஏன்டா மோனே
        ஏன்காலில் மிரிக்கின்றாய் தள்ளு 'என்றாள்...
என்னசெய்ய? வியர்வைநாற்றம் பொறுமையோடு
       'எங்கதள்ள இடமிருக்கா பொத்து'என்றேன்
கண்ணருகில் காந்தம்பூட்டி நின்றபெண்ணோ
        கஸ்ட்டநிலை உணர்ந்ததுபோல் இடம்கொடுத்தாள்...
பெண்ணவளில் சுவரிலுள்ள பல்லிபோன்று
        பெருமூச்சு விட்டவாறு ஒட்டிக்கொண்டேன்..

என்னசுகம் 'திக்கதிக்' நெஞ்சடிக்க குருதியெங்கும்
         எரிமலையின் குழம்புபொங்கி ஓடலாச்சு..
சின்னவன்நான் சனநெரிசல் உள்ளபஸ்ஸில்
        சித்தமெங்கும் தீப்பிடிக்க சிக்கிநின்றேன்!.
அன்னமவள் 'பெயின்டடிச்ச' கூந்தல்வாசம்
        அடிவயிற்றில் உருண்டையொன்றை உருட்டக்கண்டேன்..
கன்னம்வீங்கும் என்றுணர்ந்து கவலையோடு
        காற்றுபோக இடம்கொடுத்து தள்ளிநின்றேன்.

எந்தவித சலனமற்ற அந்தப் பெண்ணோ..
       ஏக்கமடன் பார்வைகளால் 'ஓகே' என்றாள்
அந்தவேளை கொழுந்துவிட்ட ஆசைத்தீயில்
       அறிவுதன்னை போட்டெரித்து மோட்சம் கண்டேன்!
சிந்தையெங்கும் சிறுக்கியவள் விந்தைசெய்ய
        சீர்கெட்ட எண்ணங்களே எழும்பலாச்சு
மந்தையாகி, நானுமங்கே பெற்றெடுத்த
       தந்தைதாயை என்னைக்கூட மறந்திருந்தேன்…

'ரோசி'யென்று பெயருரைத்தாள் மேனியெங்கும்
          'ரோஜாசென்டு' பூசிநெஞ்சை கிறங்கடித்தாள்!
தாசியவள் என்றறியா விடலைநானோ
           தடுமாறி வீழ்ந்துவிட்டேன் நடந்ததென்ன..?
பேசுதன்னை பறிகொடுத்தேன் வாழ்க்கை என்னும்
          பேருந்தில் வந்தபெண்ணை காணவில்லை...!
காசுதன்னை தொலைத்துவிட்ட கவலையோடும்
         கவிதை யொன்றை வாங்கியேங்கி வீடுவந்தேன்!!





                         நன்றி.

*சுடர்ஒளி வார வெளயீடு
*ஞானம்

*கீற்று
*வார்ப்பு
*பதிவுகள்

வியாழன், 6 மே, 2010

ஒன்று+ஒன்று=ஒன்று

ஒன்றுமில்லாமல்
ஒன்றுமில்லை
ஒன்றுக்குள்
ஒன்றாவது இருக்கிறது.

ஒன்றோடு
ஒன்றைகூட்டி
ஒன்றோடு
ஒன்றை கழித்து
ஒன்றோடு
ஒன்றை பெருக்கினாலும்
ஒன்றேவரும்...

ஒன்றையொன்று பார்க்கும் போது
ஒன்று வரும்
ஒன்றையொன்று ஈர்க்கும் போது
ஒன்றுவரும்
ஒன்றோடு ஒன்று கோர்க்கும் போது
ஒன்றுவரும்
ஒன்று தெரியுமா?
ஒன்றால்தானே
ஒன்றுவந்தது.


ஒன்றாய்
ஒன்றிருக்கிறது
ஒன்றில்
ஒன்றிருக்கிறது
ஒன்றோடு
ஒன்றுக்காய்
ஒன்றிருக்கிறது....

ஒன்றை
ஒன்றுக்குள் வைத்து
ஒன்றுக்காய்
ஒன்றைக் காட்டாது
ஒன்றென்றாலும்
ஒன்றை காட்டுவோம்...

ஒன்றுக்காய்
ஒன்றை கூறாமலும்
ஒன்றுக்காய்
ஒன்றோடு சேராமலும்
ஒன்றுக்காய்
ஒன்றோடு மாறாமலும்
ஒன்றாய் வாழ
ஒன்றாவோம்.

ஒன்றுமில்லாவிட்டாலும்
ஒன்றுவதால்தான்
ஒன்றுமிலாதிருக்கலாம்...

ஒன்றுக்கொன்று
ஒன்றாததால்தான்
ஒன்றுமிலாதிருக்கிறோம்
இனியாவது
ஒன்றுக்கு
ஒன்றுவந்தால்
ஒன்றாகிப் பார்ப்போம்

ஒவ்வொன்றுக்கும்
ஒவ்வொன்றிருப்பதுபோல்
ஒவ்வொன்றினுள்ளும்
ஒவ்வொன்றிருக்கிறது
ஒன்றுதானதையுணரும்..

ஒன்றிடம்
ஒன்றில்லாததனாலும்
ஒன்றுபோல்
ஒன்றிருப்பதனாலும்
ஒன்றைக்கண்டு
ஒன்றைவிட்டு
ஒன்றுக்காய்
ஒன்றாகினால்
ஒன்றுமிலாது போய்விடும்

நான் -ஒன்று
நீ -ஒன்று
நமக்குள் ஒன்றைத்தவிர
ஒன்றுமிருக்கக் கூடாது
வா...
நீயும் நானும்
ஒன்றாவோம்
ஒன்றில் ஒன்றைவைத்து
'ஒன்றை செய்வோம்'
நமக்கு 'ஒன்று' போதும்..

                          நன்றி
*சுடர்ஒளி வாரவெளியீடு