சனி, 24 செப்டம்பர், 2011

படைப்பாளி அறிமுகம் - 15 - எழுத்தாளர் சித்தன்

இலங்கையின் இளைய தலைமுறை இதழியலாளர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவரான எழுத்தாளர் ஜிதேந்திர பிரசாத்  கொழும்பை  பிறப்பிடமாகக் கொண்டவர்.

சித்தன் எனும் யெரில் படைப்புக்களை படைத்து வரும் இவர் சமூகத்தில் புரையோடியிருக்கும் மூடநம்பிக்கை, சாதியப் பிரச்சினை போன்றவற்றின் முதுகெலும்பை உடைக்கும் ஆற்றலுள்ள எழுத்தின் சொந்தக்காரர்.
பத்தியெழுத்து, கவிதை, பாடலியற்றல்,கட்டுரை போன்றவற்றில் தனது ஆற்றலை நிரூபித்து வருகின்றார். 


ஆரம்பக் கல்வி முதல் உயர்தரம் வரை  கொழும்பு உவெஸ்லிக் கல்லூரியில் கற்ற இவர் பாடசாலை கல்வியை தொடர்ந்து பத்திரிகைத் துறையில் இணைந்து கொண்டார். ஆரம்பத்தில் சுடர் ஒளி பத்திரிகையில் பணியாற்றினார். அதன் பின்னர் வீரகேசரி பத்திரிகையில் சேர்ந்து இற்றைவரை பணியாற்றி வருகின்றார்.

2009ம் ஆண்டளவில  வீரகேசரி வாரவெளியீட்டில் வெளிவரும்  'சித்தன் பதில்கள்' பகுதியில் மூலம் தனது எழுத்துலக பயணத்தை ஆரம்பித்த  இவர் கேள்வி பதில் பகுதியில்  புதுமையை புகுத்தினார். இலக்கியம், சமயம்  வாழ்வியல் , விஞ்ஞானம் , பொருளாதாரம் இன்னோரன்ன விடயங்களில் வாகர்கள் கேட்கும்  பின் நவீனத்துவ கேள்விகளுக்கு இவர் வழங்கி வரும்  காத்திரமான பதில்கள்  அதிகளவிலான கவனத்தை வாசகர்களிடத்தில் பெற்றுள்ளன. இதன் மூலம் அதிகமாக  பேசப்பட தொடங்கினார்.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் 2010ம் ஆண்டு சிறந்த பத்தி எழுத்தாளருக்கான விருது வீரகேசரி பத்திரிகை சார்பாக இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.


இவரது முதலாவது நூல் 'கிழித்துபோடு'' எனும் தலைப்பில் 2010ம் ஆண்டு வெளிவந்தது.இதில் வீரகேசரி வாரவெளியீட்டில் வெளிவந்த இவரது சித்தன் பதில்கள் அடங்கியுள்ளன.பொது அறிவில் தேடல்  உள்ள அனைவருக்கும் ஒரு பொக்கிஷமாக இந்த நூல் அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து 'இதையும் கிழித்து  போடு' எனும் தலைப்பில் அடுத்த நூலை வெளியிடுவதற்குரிய  செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.

பழந்தமிழ் இலக்கியத்தில் சித்தர் பாடல்களில் தேடலும் ஆர்வமும் உள்ள இவர் இறை மறுப்புக் கொள்கையுடையவர் அதனை அடிப்படையாக வைத்து இவரால் எழுதப்பட்ட பாடல் அடங்கிய இறுவட்டும் மிகவிரைவில் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 21 செப்டம்பர், 2011

2010ஆம் ஆண்டுக்கான 'சிறந்த பாடலாசிரியருக்கான' தேசிய விருதை பெற்றுக்கொடுத்த பாடல்.


இலங்கை தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தினால் 'வியர்வையின் ஓவியம்' கலை நிகழ்வை முன்னிட்டு  தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட பாடலியற்றல் போட்டியில் முதலாமிடம் பெற்று  2010ஆம் ஆண்டுக்கான 'சிறந்த பாடலாசிரியருக்கான' தேசிய விருதை பெற்றுக்கொடுத்த பாடல்.


2010ஆம் ஆண்டுக்கான 'சிறந்த பாடலாசிரியருக்கான' தேசிய விருது
இசையமைப்பு: டிரோன் பெர்ணாண்டோ  
பாடல்வரிகள்: கவிஞர் அஸ்மின்  
பாடியோர்:ஜனனி ஜெயரத்னராஜா& டிரோன் 

புறப்படு தோழா-வண்ண
பூக்களாய் உலகை மாற்றலாம்
நீ இன்று நினைத்தால்-அந்த
நிலவிலும் கொடியை ஏற்றலாம்

இளைஞனே உன்னைநீ ஆளடா...
இன்னும்நான் சொல்கிறேன் கேளடா...
கவிஞர்கள்  உழைப்பிலே கவிதைகள் அரங்கேறும்-எங்கள்
இளைஞர்கள்  உழைப்பிலே  உலகமே திசைமாறும்....

(புறப்படு தோழா)உன்னைநீ உனக்குள்ளே தேடடா!- அந்த
விண்ணைநீ காலின்கீழ் போடடா!
உண்மைநீ என்றுமே கூறடா!-இந்த
உலகமே வியக்குமே பாரடா..!

சோதனை தொடர்ந்துவந்தால் சோர்ந்துதான் போவாயா...?
சாதனை நீபடைக்க  சக்தியுடன் எழுவாயா...?
எழுந்துவா இளமுல்லையே-அந்த
வானம்தான்  உன் எல்லையே.....

(புறப்படு தோழா...)

உணர்வுக்குள் நம்பிக்கை நாட்டடா...-நீ
உலகுக்கே யாரென காட்டடா...
நேசத்தை நெஞ்சுக்குள் மாட்டடா-உன்
தேசத்தை அன்பினால் மாற்றடா....

ஏழைகள் என்னும் சொல்லை எரிக்கலாம் வருவாயா..?
என்னுயிர் தோழா உந்தன் கரங்களை தருவாயா...?
தோல்விகள்  உனக்கில்லையே-இனி
வெற்றிதான் உன் பிள்ளையே...!

சனி, 17 செப்டம்பர், 2011

படைப்பாளி அறிமுகம் - 14 - கவிஞர் 'இளநெஞ்சன்' முர்ஷிதீன்


லங்கை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவரான கவிஞர் இளநெஞ்சன் முர்ஷிதீன் கொழும்பு மாளிகாவத்தையை பிறப்பிடமாககொண்டவர்.

1979ம்ஆண்டிலிருந்து  கவிதைகளோடு கைகுலுக்க ஆரம்பித்த இவர் இற்றைவரையும் ஒரு சமுதாய எழுத்தாளனாக தனது பயணித்து வருகின்றார்.

மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் மகாவித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியை சிங்களமொழியிலும்  அதன்பின்னர் தமிழ் மொழியிலும் கல்வி பயின்ற இவர் பேராதனை பல்கலைகழகத்தின் கலைப்பட்டதாரி.திறந்த பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறையில் டிப்ளோமா பட்டமும் அவுஸ்திரேலியாவில் சர்வதேச விவாகரங்களுக்கான பட்டப்பின் படிப்பையும் மேற்கொண்டுள்ளார்.


தினபதி, சிந்தாமணி, பத்திரிகையின் உதவியாசிரியராக கடமையாற்றியுள்ள இவர் தொலைக்காட்சி மற்றும் இணையத்தளங்களிலும் செய்தியாசிரியராக கடமைபுரிந்துள்ளார்.

1989ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச  இளைஞர்  இஸ்லாமிய தலைமைத்துவ பயிற்சி முகாமில் கலந்துகொண்டுள்ள இவர் , அமெரிக்கா, இங்கிலாந்து,ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா, லிபியா போன்ற நாடுகளில் நடைபெற்ற  ஊடகவியல் மனித உரிமைகள் சமாதான செயற்பாடுகள் தொடர்பான மாநாடுகளில் கலந்துகொண்டுள்ளார்.

வகவம் கவிதா பாசறையில் பட்டை தீட்டப்பட்ட இவரது கவிதை, சிறுகதை, கட்டுரை, படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகை, சஞ்சிகைகளிலும் இலத்திரனியல் ஊடகங்கள் பலவற்றிலும் களம் கண்டுள்ளன. 

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தேசிய மட்டத்தில் நடத்திய கவிதை, சிறுகதை, அறிவிப்பாளர் போட்டிகளில் முதலாமிடங்களை பெற்று ஜனாதிபதி விருதினை பெற்றிருக்கின்றார்.

இவரது முதலாவது வெளியீடாகிய 'இஸ்லாமிய கீதங்கள'1986ம் ஆண்டு வெளிவந்தது. அதன் பின்னர 1988ம் ஆண்டு  'ஒருவாசகனின் வாசகங்கள'; கவிதை நூலையும் 1990ம் ஆண்டு 'சமுதாய அகதிகள்' சிறுகதை நூலையும்
1995 இல் 'சமாதான யாசகங்கள்' கவிதை நூலையும்  2000ம் ஆண்டு 'மிலேனியம் கனவுகள்' கவிதை நூலையும் இலக்கிய உலகுக்கு தந்துள்ளார்.


எழுத்துக்களால் மட்டும்  சமூக முன்னேற்றம் பற்றி பேசிக்கொண்டிருக்காமல் இன்று இவர் சமுதாய முன்னேற்ற செயற்பாடுகளில் தன்னானான பங்களிப்பு செய்து வருகின்றார்.

வியாழன், 15 செப்டம்பர், 2011

''தலையில்லா முண்டங்கள்''‎மந்தையாய் வாழ்ந்த 
எந்தையர் வாழ்வில் 
விந்தைகள் புரிந்து 
சிந்தையை கவர்ந்த எங்கள்
சிந்தனை சிற்பி


கலாநிதி மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களின் நினைவு நாள் செப்டம்பர் 16அதனை முன்னிட்டு இக்கவிதை பிரசுரமாகின்றது. இக்கவிதை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தால் தேசிய மட்டத்தில் கவிஞர்களுக்கு இடையில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் 3 இடம் பெற்றுள்ளது .இக்கவிதை அடங்கிய நூல் 'அடையாளம்' எனும் பெயரில் தென்கிழக்கு பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்துள்ளது.

லையெழுத்தை தலைகீழாய் எழுதிவிட்ட ஆண்டவனே

தந்துவிடு நல்வாழ்வை எமக்கு!-'தங்கத்
தலைவரினை' இழந்துவிட்டு தவிக்கின்ற 'எம்சமூகம்'
தலையிழந்து முண்டமெனக் கிடக்கு!

தலைவர்நாம் என்றவர்கள் தறுதலைகள் முன்னாலே
தலைகவிழ்ந்து நிற்கின்றார் எதற்கு-?அவர்
தலையாட்டி பொம்மைகள்போல் தனித்துவத்தை விட்டுவிடின்
தருவாரே சிலஎலும்பு அதற்கு!

தலையில்லாத் தலைகளினை தலைவரென நினைத்ததற்காய்
தலையிடிதான் எங்களுக்குப் பரிசு!-பதவிக்காய்
தலைசொறிந்து பல்லிளிக்கும் தலைவர்களால்
தடுமாறும் எம்வாழ்க்கை தரிசு!

தலைதடவி கண்களிலே கண்கெட்டோர் கைவைக்க
தலையணையில் எம்தலைகள் இருக்கு!-தங்கள்
தலைதப்பி னால்போதும் என்கின்ற கோழையரை
தேர்ந்தெடுத்த நாங்கள்தான் கிறுக்கு!

தலைப்பிறையை மேகத்தால் தகர்த்தெறிய முடியாது
தலைவர்களே கொண்டிடுவீர் ஒப்பு!-உங்கள்
தலைகளினை காப்பாற்ற கண்ணிருந்தும் குருடர்களாய்
தவறுகளை பார்த்திருத்தல் தப்பு!

தலையில்லா முண்டங்களாய் மாறிவிட்ட எம்மவர்க்கு
தலையாக ஒருதலைவன் எழுவான்!-அவன்
தலைவரவர் சுவடுகளில் தயங்காமல் நிதம்நடக்க
தளையொடிந்து சிரிக்குமெங்கள் எழுவான்!!திங்கள், 12 செப்டம்பர், 2011

போராளிகளே புறப்படுங்கள்..!

 இலங்கை முஸ்லிம் சமூக அரசியல் விடுதலையின் அடிநாதம் மர்ஹூம் எம். எச். எம். அஷ்ரப்அரசியல் களத்தில் உயிரை துச்சமென மதித்து தனித்துவக் கட்சியின் மூலம் முஸ்லிம் சமூகத்தின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச் செய்து தனித்தவ முத்திரை பதித்த மர்ஹூம் எம். எச். எம். அஷ்ரப் மறைந்த நாள் செப்டெம்பர் 16.இலங்கை முஸ்லிம் சமூகத்தின் இருப்பு, கெளரவம், தனித்துவம், உரிமை பற்றிச் சிந்தித்து ஆயுதக் கவர்ச்சியின்பால் செல்லவிருந்த இளைஞர்களை அஹிம்சை வழிதிருப்பி வரலாறு கண்ட பெருமை இவரையே சாரும்.

எடுப்பார் கைப்பிள்ளைகளாக ஊமைகளாக பேசாமடந்தைகளாக விளங்கிய முஸ்லிம்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம் அரசியல் மயப்படுத்தினார். மர்ஹூம் அஷ்ரப் ஏனைய சமூகம் அனுபவிக்கும் உரிமைகளை முஸ்லிம் சமூகமும் பெற்று தன்மானத்துடன் வாழ வழி வகுத்தார்.வேதனை, கண்ணீர், இரத்தம், உயிர் ஆகியவற்றை விலையாக அதற்கு வழங்கினார். தனது பயணப் பாதையை வகுத்ததோடு அதற்கான வழியையும் அமைத்தார். புரையோடிப்போன யுத்தத்தின் கொடுமை கண்டு மனம் வெதும்பினார்.

இனவாதம் பேசி இரத்த ஆற்றில் குளித்தோரை தன் பேச்சுப் புலமையினால் விவாதத்திற்கழைத்து வெற்றியும் கண்டார். இதன் மகுடமாக தேசிய ஐக்கிய முன்னணியைத் தோற்றுவித்தார். தார்மீக கோட்பாட்டையும் மானுட நேயங்களையும் மதிக்கும் அடையாளமாக இதனை மாற்றியமைத்தார். மூன்றரை மணி நேரம் பேசி பாராளுமன்றில் சாதனையும் படைத்தார்.14 வயதில் தாய் எனும் கவிதையுடன் ஆரம்பித்த இலக்கியப் பயணம் 'நான் எனும் நீ' எனும் தொகுப்போடு முடிவடைந்தது. அதில் தனது மரணம் அமையப்போகும் விதத்தை ஆருடமாகக் கூறினார் .மகாகவி அல்லாமா இக்பாலின் கவிதைகளுடன் காதல் கொண்டு சங்கமித்ததுடன் "போராளிகளே புறப்படுங்கள்" என கவித்துவம் மிளிரப் பாடினார்.

பன் மொழிப் புலமையும், பேச்சாற்றலும், தூரதிருஷ்டிச் சிந்தனையும், அரசியல் சாணக்கியமும் அன்னாரது அணி கலன்களாக விளங்கியது.
முஸ்லிம் சமூகத்தின் விடுதலை கல்வியிலே தங்கியுள்ளதெனக் கனாக் கண்ட மர்ஹூம் அஷ்ரப் தென் கிழக்குப் பல்கலைக்கழகம், கல்விக் கல்லூரிகளின் அமைவினூடே அதனை நனவாக்கிக் காட்டினார். சர்வதேசமும் முஸ்லிம் களுக்கும் பிரச்சினை உண்டென இனங்காண வைத்த சிறப்பு மர்ஹூம் அஷ்ரபுக்கு மட்டுமே உரித்தானதாகும்.
அரசியல், கல்வி, கலை, கலாசாரம், ஊடகம் என பல்துறையில் செயல் வீரனாக விளங்கிய வித்தகனின் உயிர் செப்டெம்பர் 16 இல் அரநாயக்க மலைத் தொடரில் அணைந்தது. முழு இலங்கை முஸ்லிம்களையும் ஆறாத் துயரில் ஆழ்த்திய நாள் ஒவ்வொரு செப்டெம்பர் 16 இலும் இறை மீட்கப்படுகிறது.மர்ஹூம் எம். எச். எம். அஷ்ரப் மரணிக்க முன்பு எழுதப்பட்ட இந்த கவிதை ''நான் எனும் நீ'' என்ற கவிதை நூலில் இடம்பெற்றுள்ளது.
''நானும் எனும் நீ''  கவிதை நூலே இலங்கையில் மிகப்பெரிய தொகுப்பாக வெளிவந்த தனி நபரின் கவிதை நூலாகும். அன்னாரின் ஆத்மா சாந்திக்காக அனைவரும் பிரார்திப்போம்


போராளிகளே புறப்படுங்கள்
ஒரு துப்பாக்கியின் ரவைகளினால்
எனது இறைச்சல் அடங்கி விட்டதுக்காய்
நமது எதிரி
வென்றுவிட்டான் என்று நீ
குழம்பிவிடக் கூடாது

அன்றுதான்
போராட்டம் எனும் நமது
இருண்ட குகைக்குள்
வெற்றிச் சூரியனின்
வெண்கதிர்கள் நுழைகின்றன
என்பதை நீ மறந்து விடவும் கூடாது

உனது தலைவனுக்கு
ஒன்றுமே நடக்கவில்லை என்பதனை
நீ எப்போதும் மறந்திடாதே!
தலைவர்கள் ஒரு போதும்
மரணிப்பதில்லை என்பதனை
நான்
சொல்லித்தரவில்லையா?
என்னை அதற்காய் நீ
மன்னித்து விடுவாயாக.

நாம் அல்லாஹ்வின் பாதையில்
நடந்து வந்தவர்கள்
நீங்களெல்லாம் தொடர்ந்து அப்பாதையில்
நடக்க இருப்பவர்கள்

இந்தப் போராட்டத்தில்
சூடுண்டாலும், வெட்டுண்டாலும்
சுகமெல்லாம் ஒன்றேதான்
நமது போராளிகள்
யாரும் மரணிக்கப்போவதில்லை!

போராளிகளே புறப்படுங்கள்
ஓரத்தில் நின்று கொண்டு
ஓய்வேடுக்க நேரமில்லை
இந்த மையத்தைக் குளிப்பாட்டுவதில்
உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்

தண்ணீரும் தேவையில்லை
பன்னீரும் தேவையில்லை
உங்கள் தலைவனின் உடலில்
இரத்தத்தால் சந்தனம் பூசப்பட்டுள்ளதா?


அது அவனின் மண்ணறையில்
சதா மணம் வீச வேண்டுமெனில்
தூக்கி விரைவில் எடுத்துச் சென்று
தொழுது விட்டு அடக்குங்கள்

இந்த மையித்தைக் குளிப்பாட்டுவதால்
கடைசி நேரத்தில் தலைமைத்துவக்
கட்டுப்பாட்டை மீறாதீர்கள்
கண்ணீர் அஞ்சலிகள் போதும்
கவலைகளை கொஞ்சம் மறந்து தூக்குங்கள்

இரத்தத்தால் தோய்ந்திருக்கும்
எனது ஆடைகளை எடுத்து வீசாதீர்கள்
வேண்டுமெனில் எனது “இஹ்ராம்''
துண்டுகளை
அவற்றுக்கு மேலே எடுத்துப் போடுங்கள்

எனது உடலில் இருந்து பொசிந்து வரும்
இரத்தச் சொட்டுக்கள், அவற்றை தழுவும்
பசியுடன் இருப்பதைப் பாருங்கள்

எனது மூக்குக்குள்ளும்
எனது காதுகளுக்குள்ளும்
பஞ்சுத் துண்டங்களை வைத்தென் முகத்
தோற்றத்தை
பழுதாக்கி விடாதீர்கள்

சில வேலைகளில் உங்களை நான்
சுவாசிக்காமலும்
சில வேலைகளில் உங்களை நான்
கேட்காமலும்
சில வேலைகளில் உங்களை நான்
பேசாமலும் இருந்திருக்கின்றேன்

குருடர்களாகவும்
செவிடர்களாகவும்
ஊமையர்களாகவும் இல்லாதவர்களால்
இப்போராட்டத்தில் நின்று பிடிக்க முடியாது

கபுறுக் குழிக்குள்ளாவது
என்னை சுவாசிக்க அனுமதியுங்கள்
ஹுர்லீன்களின் மெல்லிசைகளை
கேட்டு ரசிக்கும் பாக்கியத்தைத் தாருங்கள்

தூக்குங்கள் இந்த மையித்தை இன்னும்
சுனக்கவும் தேவையில்லை.
தூக்கி விரைவில் எடுத்துச் சென்று
தொழுது விட்டு அடக்குங்கள்
ஓரத்தில் நின்றுகொண்டு
ஓயாமல் தர்க்கம் செய்யும்

வீரத்திற்கு வையுங்கள் முற்றுப் புள்ளி
 
கருத்து வேறுபாடென்னும்
கறையான்கள் வந்துங்கள்
புரிந்துணர்வை சீரழிக்கும்! மிகவும்
புத்தியுடன் நடந்துகொள்ளுங்கள்


வேகத்தைக் குறைக்காமல்
வெற்றியுடன் முன்னே செல்லுங்கள்


ஆலமரமாய்
ஆயிரம் விழுதுகளுடன் நமது மரம்
வாழவேண்டும் - அதை
வாழ்விற்கப் புறப்படுங்கள்


எனது பனி இனிது மடிந்தது
உங்கள் பணிகளைச் செய்வதற்காய்ப்
புறப்படுங்கள்


அவனின் நாட்டத்தை
இவனின் துப்பாக்கி ரவைகள்
பணிந்து தலைசாய்நது
நிறைவேற்றியுள்ளன.


விக்கி அழுது
வீணாக நேரத்தை ஓட்ட வேண்டாம்
தூக்கி விரைவில் எடுத்துச் சென்று
தொழுது விட்டு அடக்குங்கள்


மர்ஹூம் எம். எச். எம். அஷ்ரப் 

விழியில் விழுந்தாயே...........(புதிய பாடல் 2011)
2008ம் ஆண்டு நடத்தப்பட்ட சக்தி TV யின்  'இசை இளவரசர்கள்' நிகழ்ச்சியில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினை பெற்றுக்கொண்ட C.சுதர்ஷனின் இசையில் என்னால் (2011.09.11) எழுதப்பட்ட பாடல் இது.இசையை உள்வாங்கி, சூழலை உணர்ந்து இந்த பாடலை எழுதுவதற்கு எனக்கு 4 மணிநேரம் தேவைப்பட்டது.பாடலை மிகவிரைவில் வானலை வழியாகவும் இணையத்தளங்கள் வாயிலாகவும் எல்லோரும் கேட்டு மகிழலாம்.

•    பல்லவி

விழியில் விழுந்தாயே...
என்நெஞ்சில் நொடியில் மலர்ந்தாயே...
என்வழியெங்கும் வழியும் கண்ணீர்
துளியில் தெரிந்தாயே...

கனவில் நுழைந்தாயே....
என்நெஞ்சின் கருவில் விளைந்தாயே
உன்னை தினந்தோரும் எண்ணும் பூவை
தீயில் எறிந்தாயே....

•    அனுபல்லவி

நீ என்னை பிரிந்து மறந்த பின்னாலும்...
நினைவுகள் கங்கை நதிபோன்றே பாயும்....
நீயில்லா வாழ்க்கை
தீமேலே யாக்கை

•    சரணம் - 01

அழகான இளங்காலை தூறும்
மழையாக வந்தேனே...
அணுவெங்கும் தீமூட்டி என்னை
அடியோடு எரித்தாயே...

நீ தந்த பூச்செண்டை வாடாமல் பார்ப்பேனே..
நீருக்கு பதிலாக கண்ணீரை வார்ப்பேனே..

வாழ்வெல்லாம் உனக்காக இருப்பேனடா...
ஒருவார்த்தை நீசொன்னால் இறப்பேனடா...

இரவோடு உறவாடி
நினைவுகள் நிதமின்று
துயரத்தில் துடிக்கிறதே....

•    சரணம் - 02

கலையாடும் அழகான வண்ண
சிலையாக நின்றேனே...
அலையாடும் கடல்போல வந்து
விளையாடிப் போனாயே....

நீ தந்த பூகம்பம் என்னோடு போகட்டும்
நீ போகும் திசையெல்லாம் பூஞ்சோலையாகட்டும்..

உன்வாசம் எனைவிட்டு அழியாதடா
என்நாடி நரம்பெங்கும் நீதானடா....

அலையோடு விளையாடி
இலையொன்று கிளையின்றி
தனிமையில் தவிக்கிறதே...

,ir: Rju;rd;  
ghlfp: gpurhe;jpdp  
ghlyhrpupau:; ftpQu; m];kpd;


  ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

  படைப்பாளி அறிமுகம்-13 -கவிஞர் 'மல்லியப்பு சந்தி' திலகர்

   இளையதலைமுறை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவரான மயில்வாகனம் திலகராஜா எனும் இயற்பெயர் கொண்ட 'மல்லியப்பு சந்தி' திலகர் மலையகத்தின் இதயமான நுவரெலியா மாவட்டத்தில் மடகொம்பரை எனும் தோட்டத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். கொழும்பு பல்கலைக்கழகத்தின் வணிகத்துறை பட்டதாரியான இவர் தொழில் ரீதியாக முகாமைத்துவ ஆலோசகராக செயற்படுகின்றார்.

  பாடசாலைக் காலத்தில் இருந்தே வாசிப்பிலும் எழுதுவதிலும் ஆர்வம் காட்டிவந்த இவர் பாடசாலை காலத்தில் கவிதை, நாடகம், கட்டுரை, சிறுகதை, பேச்சு போட்டிகளில் பங்குபற்றியுள்ளார்.

  1991ம் ஆண்டு கண்டி மாநகரில் நடந்த 'தேசிய சாகித்திய விழா'வில் பாடசாலை மாணவனாக இருக்கும்போதே 'சிறந்த நடிகர்' விருது பெற்ற இவர் 1993ம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகம் நடாத்திய திறந்த போட்டியில் பங்குபற்றி கவிதைக்கான பரிசினைப் பெற்றுள்ளதோடு
  1995ம் ஆண்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடாத்திய கலை கலாசார போட்டிகளில் பங்குபற்றி மாவட்டமட்டத்தில் கவிதைக்காகவும் தேசிய ரீதியில் பேச்சுப்போட்டியல் ஜனாதிபதி விருதினையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

  பல்கலைக் கழக காலத்தில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிறந்த பேச்சாளராக, அறிவிப்பாளராக விருது பெற்றுள்ளார்.  பத்தி எழுத்தாளராகவும் பத்திரிகைகளுக்கு அரசியல் கட்டுரைகளை எழுதிவரும் இவர் பல வானொலி கவியரங்குகளிலும் கலந்து கவிதை பாடியுள்ளார்

  2002 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக் கழகத்தில் 'இதழியல் டிப்ளோமாவை' நிறைவு செய்ளள்ள இவர் 'சிறந்த பெறுபேற்றுக்காகவும், மலையக மக்களின் பிரச்சினைகளில் ஊடகங்களின் பங்களிப்பு குறித்த ஆய்வுக்காகவும்; ஜப்பானிய அரசால் வழங்கப்படும் 'ஜூயின் அஹோக்கி' விருதினை வென்றுள்ளார்.

  மலையக மக்களின் அரசியல், தொழிற்சங்க பண்பாட்டு அம்சங்களை பிரதிபலிக்கும் 'மல்லியப்பு சந்தி' எனும் இவரது  கவிதைத் தொகுதி 2007இல்  வெளிவந்தது.

  அதன் பின்னர் ' மல்லியப்பு சந்தி' திலகர் என இலக்கிய சூழலில் அறியப்படும் இவர் தனது தாயாரின் பெயரில் 'பாக்யா பதிப்பகம்' எனும் பதிப்பகத்தினை நடாத்தி வருகின்றார். நூல் வெளியீடுகள், நூல் விநியோகம், இலக்கிய செயற்பாடுகள் என முனைப்புடன் இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்.

  சனி, 10 செப்டம்பர், 2011

  ''விருதுகள் பெறும் எருதுகள்''


  ருதுகளுக்கு
  விருதுகள் வழங்க
  மாடுகள் கூட்டிய
  மாநாடு அது…

  நடப்பன ஊர்வன
  நடிப்பன பறப்பன
  விலங்குகள் சிலவும்
  விழாவுக்கு வந்தன…


  காணிகளை
  களவாக மேய்வதில்
  ‘கலாநிதி' முடித்த
  கிழட்டுக் கிடாக்கள்தான்
  கிரீடத்தை சூட்டுகின்றன…


  இலவம் பழத்துக்காய்
  இலவுகாத்த
  மூளையே இல்லாத
  முட்டாள் கிளிகள்

  கீச்சுக் குரலில்
  மூச்சு விடாமல்
  சிறுநீரை பற்றி
  சிலாகித்து பேசின…

  ஒலிவாங்கியை
  எலி வாங்கி
  எருமைகள் பற்றியே
  எடுத்துவிட்டன…


  பாவம் பசுக்கள்…!
  பாலைப் பலருக்கும்
  பருகக் கொடுத்துவிட்டு
  குட்டிகளோடு
  குமுறிக் கொண்டிருந்தன
  குளக்கரையில்.


  பசுக்களை
  கொசுக்கள் கூட
  கணக்கில் எடுக்கவில்லை….


  பாம்புகள்
  பாலுக்காய்
  படப்பிடிப்பிலிருந்தன…

  வெட்கமில்லாத
  வெண்பசுக்கள்
  முலைகளை
  மூடிமறைக்காததால்
  முள்ளம் பன்றிகள் பார்த்து
  மூச்சிரைத்தன…
  பார்க்கு மிடமெங்கும்
  பாலே ஓடியது…


  பூனைகள் எலிகளோடு
  புன்னகைத்தவாறு
  முயல்களை
  முழங்குவது போல் பார்ப்பதில்
  மும்முரமாய் இருந்தன…


  எருதுகளுக்கு
  விருதுகள் வழங்க
  மாடுகள் கூட்டிய
  மாநாடு அது…


  வாழ்த்துப் பாடின
  வால் பிடித்தே
  வயிறு வளர்க்கும்
  வாலான் தவளைகள்….

  கால் பிடித்தே
  காரியம் முடிக்கும்
  காகங்களும்
  கழிசரைக் கழுதைகளும்
  காளைகளுக்கு மாறி மாறி
  கவரிவீசின…

  மாக்கள் கூடிய
  மாநாடு அல்லவா…?
  பூக்களுக் கங்கே
  புகழாரமில்லை

  அழுக்குத்தான் அன்று
  அரியணையில் இருந்ததால்
  சாணமே அங்கு
  சந்தனமாயிருந்தது…

  தயிர்ச் சட்டிளாலும்
  நெய் முட்டிகளாலும்
  இவ்வருடத்திற்கான விருதுகள்
  இழைக்கப்பட்டிருப்பதாகவும்
  பருந்துகளுக்கு
  விருந்து வழங்கினால்தான்
  அடுத்த வருடத்திற்கான
  ‘ஆளுநர்' தெரிவாவரென்றும்
  அதிலும்
  முதுகு சொரிவதில்
  ‘முதுமாணி’ முடித்தவர்களுக்கே
  முன்னுரிமை இருப்பதாகவும்
  முதலைகள்
  முணுமுணுத்தன…

  எருதுகளுக்கு
  விருதுகள் வழங்க
  மாடுகள் கூட்டிய
  மாநாடு அது…

  நாக்கிலுப்புழு ஒன்றே
  நடுவராக இருந்ததால்
  மான்களுக்கும்
  மயில்களுக்கும்
  மரியாதை அங்கில்லை.
  வான் கோழிகளுக்குத்தான்
  வரபேற்பிருந்தது.
  பரிகளும் வரவில்லை
  நரிகளும்
  நாய்களுமே
  நாற்காலியை நிறைத்திருந்தது.

  மாநாட்டின் ஈற்றில்
  எருமைகள் பற்றி
  பெருமையாய்
  சாக்கடை ஈக்கள்
  சங்கீத மிசைத்தன….


  மரம்விட்டு
  மரம்தாவும்
  மந்தி
  மந்திரிகள்
  கையடித்தன
  கைலாகு கொடுத்தன…
  எதுவுமே தெரியாத
  எருமைகளுக்கு
  பன்னாடைகளால
  பொன்னாடை போர்த்தி
  பொற்கிழி வழங்கின…

  மாடுகளின் மாநாட்டில்
  விருதுகள் பெற்ற
  எருதுகளின்
  வீர பிரதாபங்களும்
  பல்லிளிப்புடன் கூடிய
  படங்களும்
  விளம்பரமாய்
  நாளை வரலாம்
  நாய்களின் பத்திரிகையில்...

  கவிதையை பிரசுரித்த
  *சுடர் ஒளி, 
  *செங்கதிர், 
  *தினகரன் வாரமஞ்சரி, 
  *பதிவுகள், 
  *வார்ப்பு

  ஆகிய ஊடகங்களுக்கு நன்றி.