சனி, 10 செப்டம்பர், 2011

''விருதுகள் பெறும் எருதுகள்''


ருதுகளுக்கு
விருதுகள் வழங்க
மாடுகள் கூட்டிய
மாநாடு அது…

நடப்பன ஊர்வன
நடிப்பன பறப்பன
விலங்குகள் சிலவும்
விழாவுக்கு வந்தன…


காணிகளை
களவாக மேய்வதில்
‘கலாநிதி' முடித்த
கிழட்டுக் கிடாக்கள்தான்
கிரீடத்தை சூட்டுகின்றன…


இலவம் பழத்துக்காய்
இலவுகாத்த
மூளையே இல்லாத
முட்டாள் கிளிகள்

கீச்சுக் குரலில்
மூச்சு விடாமல்
சிறுநீரை பற்றி
சிலாகித்து பேசின…

ஒலிவாங்கியை
எலி வாங்கி
எருமைகள் பற்றியே
எடுத்துவிட்டன…


பாவம் பசுக்கள்…!
பாலைப் பலருக்கும்
பருகக் கொடுத்துவிட்டு
குட்டிகளோடு
குமுறிக் கொண்டிருந்தன
குளக்கரையில்.


பசுக்களை
கொசுக்கள் கூட
கணக்கில் எடுக்கவில்லை….


பாம்புகள்
பாலுக்காய்
படப்பிடிப்பிலிருந்தன…

வெட்கமில்லாத
வெண்பசுக்கள்
முலைகளை
மூடிமறைக்காததால்
முள்ளம் பன்றிகள் பார்த்து
மூச்சிரைத்தன…
பார்க்கு மிடமெங்கும்
பாலே ஓடியது…


பூனைகள் எலிகளோடு
புன்னகைத்தவாறு
முயல்களை
முழங்குவது போல் பார்ப்பதில்
மும்முரமாய் இருந்தன…


எருதுகளுக்கு
விருதுகள் வழங்க
மாடுகள் கூட்டிய
மாநாடு அது…


வாழ்த்துப் பாடின
வால் பிடித்தே
வயிறு வளர்க்கும்
வாலான் தவளைகள்….

கால் பிடித்தே
காரியம் முடிக்கும்
காகங்களும்
கழிசரைக் கழுதைகளும்
காளைகளுக்கு மாறி மாறி
கவரிவீசின…

மாக்கள் கூடிய
மாநாடு அல்லவா…?
பூக்களுக் கங்கே
புகழாரமில்லை

அழுக்குத்தான் அன்று
அரியணையில் இருந்ததால்
சாணமே அங்கு
சந்தனமாயிருந்தது…

தயிர்ச் சட்டிளாலும்
நெய் முட்டிகளாலும்
இவ்வருடத்திற்கான விருதுகள்
இழைக்கப்பட்டிருப்பதாகவும்
பருந்துகளுக்கு
விருந்து வழங்கினால்தான்
அடுத்த வருடத்திற்கான
‘ஆளுநர்' தெரிவாவரென்றும்
அதிலும்
முதுகு சொரிவதில்
‘முதுமாணி’ முடித்தவர்களுக்கே
முன்னுரிமை இருப்பதாகவும்
முதலைகள்
முணுமுணுத்தன…

எருதுகளுக்கு
விருதுகள் வழங்க
மாடுகள் கூட்டிய
மாநாடு அது…

நாக்கிலுப்புழு ஒன்றே
நடுவராக இருந்ததால்
மான்களுக்கும்
மயில்களுக்கும்
மரியாதை அங்கில்லை.
வான் கோழிகளுக்குத்தான்
வரபேற்பிருந்தது.
பரிகளும் வரவில்லை
நரிகளும்
நாய்களுமே
நாற்காலியை நிறைத்திருந்தது.

மாநாட்டின் ஈற்றில்
எருமைகள் பற்றி
பெருமையாய்
சாக்கடை ஈக்கள்
சங்கீத மிசைத்தன….


மரம்விட்டு
மரம்தாவும்
மந்தி
மந்திரிகள்
கையடித்தன
கைலாகு கொடுத்தன…
எதுவுமே தெரியாத
எருமைகளுக்கு
பன்னாடைகளால
பொன்னாடை போர்த்தி
பொற்கிழி வழங்கின…

மாடுகளின் மாநாட்டில்
விருதுகள் பெற்ற
எருதுகளின்
வீர பிரதாபங்களும்
பல்லிளிப்புடன் கூடிய
படங்களும்
விளம்பரமாய்
நாளை வரலாம்
நாய்களின் பத்திரிகையில்...

கவிதையை பிரசுரித்த
*சுடர் ஒளி, 
*செங்கதிர், 
*தினகரன் வாரமஞ்சரி, 
*பதிவுகள், 
*வார்ப்பு

ஆகிய ஊடகங்களுக்கு நன்றி.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

6 கருத்துகள்:

நளின் சொன்னது…

வழி மொழிகிறேன் உம் கருத்துக்களை!
திருவள்ளுவருக்கும் Beethoveனுக்கும் யாரையா விருது கொடுத்தார்கள்?
ஆதங்கத்தைச் தன்னிரங்கலாக (சுய அனுதாபம்)மாற்றி எனக்கு நாமே குழி பறிக்காமல், தொடர்ந்து எம் பணி செய்வோமே............

f.nihaza சொன்னது…

தமிழ் மணத்தில் ஓட்டுப் போட்டேன்...
மிகவும் அழகா இருக்கிறது கவி

http://nihazakahatowita.blogspot.com
http://fnihaza.blogspot.com

கே.எஸ்.செண்பா சொன்னது…

நடப்பினை நயமாக உரைத்திருக்கிறீர்கள்!
வாழ்த்துகள்!

கவிஞர் அஸ்மின் சொன்னது…

என் வாசலுக்கு வந்து நான் அளித்த பால'கார' கவிதையை உண்டு சுவைத்து கருத்துக்களை பகிர்ந்துகொண்ட எழுத்தாளர் செண்பகவள்ளி(மலேசியா), இசையமைப்பாளர் நளிந்த கவிதாயினி நிஹாஸா ஆகியோருக்கு நன்றிகள்

தமிழ் சொன்னது…

நச்

madduvil gnanakumaran சொன்னது…

ninaithen sonnai
nanrikal
nadpudan madduvil gnanakumaran

கருத்துரையிடுக