ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

உம்மாநான் சவூதிக்கு போறேன்...!


இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களில் குறிப்பாக தென்கிழக்கு முஸ்லிம்களின்  பேச்சுவழக்கில்  இக்கவிதை அமைந்துள்ளது.


உம்மாநான் சவூதிக்கு போறேன்-எங்கட
கவலைகள் கஷ்டங்கள் கலஞ்சோடிப்போக...!
உம்மென்று இருக்காதே நீயும்-என்ட
கண்ணப்போல் உனையென்றும் புள்ளநான் காப்பேன்!

வாப்பாநீங்க ஒழச்சது போதும்-ஒங்கட
பெரச்சின லாத்தையும் நானினி பாப்பேன்...!
சாப்பாட்டுக் கினியென்ன பஞ்சம...?-ஒங்கள
மௌத்தாகும் வரைக்கும்நான் மனசாற பாப்பேன்..!

கலியாண வயசுள்ள என்ன-நீங்க
கரசேக்க படுகிற பாட்ட நான் அறிவேன்...!
என்னகா செய்றநான் உம்மா
பொம்புளயா  பொறந்தது யாரோட குத்தம்..?

அப்பம் வித்து காக்கா படிச்சார்
கடசியில் நமக்கெல்லாம் என்னத்த கிழிச்சார்...?
கொமர நெற வேத்த முந்தி-காக்கா
கொறுக்காட பேத்திய  கலியாணம் முடிச்சார்...

புழிஞ்ச தேங்காப் பூவப்போல
புளிச்சித்தான் போனோம் அவருக்கும் நாங்க
கிழிஞ்ச 'சல்வார' மாத்த-உம்மா
ஒங்கிட்ட காசில்ல யார்ட்ட வாங்க...?

படிச்சாக்கள் இப்பெல்லாம் கூட-இஞ்ச
படிப்புத்தான் உசிரென்றோர் சோத்துக்கு வாட-நான்
பட்டங்கள் படிச்சதும் வீந்தான்-இப்ப
தொழிலின்றி இருந்திட்டா கெடைக்குமோ தீன்தான்...?

அரசாங்க தொழிலையும் காணோம்-நாங்க
அலையால மழையால அழிஞ்சிதான் போனோம்
'எம்பி'மார் பொய்கள கேட்டா-உம்மா
இதவிட மோசமா அழிஞ்சுதான் போவோம்...!

அதுவரும் இதுவரும் என்பார்-உம்மா
ஆனைய குடுத்தாலும் சோத்தோட திம்பார்
ஊட்டுக்கு தேடிநாம் போனா-'சேர';
எடுபிடி அனுப்பி 'பிஸி' எனச்சொல்வார்...

வக்கின்றி வாக்குகள் கேட்டு-ஊட்ட
வருவோர்க்கு உம்மாநீ வாருகள் காட்டு
எருமைங்க கதையல கேட்டு
ஏமாந்து இனிமேலும் போடாதே ஓட்டு....

ஒழைக்காட்டி ஒசந்தவர் யாரு? -நாங்க
ஒழைக்காம தின்டிட்டா மதிக்குமா ஊரு?
ஒழச்சத்தான் கக்கிஷம் போகும்-இத
ஒணராட்டி எப்புடி சோகங்கள் சாகும்..,?

நெனச்சமாரி நாங்க உடுக்க-இழிவா
நெனச்ச மச்சானுக்கு சீதனம் குடுக்க
சவூதிக்கு உம்மாநான் போறேன்-எல்லாம்
சரியாக வந்திடும் சிலநாளில் பாரேன்.

சொளையாக அனுப்புறன் காசி- ஊட்டில்
சொகமாநீ வாழலாம் பூட்டும்மா 'ஏசி'
தொணையாக இருக்கிறேன் உம்மா-நீயும்
கொளராத கக்கிஷம் போய்விடும் சும்மா...

சொர்க்கத்த வாங்கிட்டு வருவேன்-அந்த
மக்கத்து சொகமெல்லாம் ஒனக்குத்தான் தருவேன்
சொத்துக்கள் உம்மாநீ வாங்கு-எங்கட
சொர்க்கத்தில் இனியாச்சும் சொகமாக தூங்கு...!

மனம்வெச்சி என்னநீ அனுப்பு-சவூதி
நானிப்ப போனாத்தான் எரியும்நம் அடுப்பு..!
போஎன்டு செல்லித்தான் பாரு..-சொட்டு
நாளைக்குள் ஓடும்மா தங்கத்தில் ஆறு.....

ஒயித்தாட புள்ளநான் என்று
ஒதுக்கித்தான் பாக்காங்க ஊராக்கள் இன்று
அவியலின் முன்னால நாங்க
ஆரேண்டு காட்டித்தான் வாழனும் ஓங்க...

உம்மாநான் சவூதிக்கு போறேன்-எங்கட
கக்கிஷம் எல்லாமே காத்துல போகும்-என்ன
சும்மா நெனைக்காதே நீயும்-நாங்க
சொகுசாக வாழலாம் சொமையெல்லாம் தீயும்...!!

நன்றி
*விடிவெள்ளி(24.02.11)
*விடியலின் ராகங்கள்-2001



கவிதையில் இடம்பெற்றுள்ள கிராமிய வழக்குச் சொற்கள்.

பெரச்சின- பிரச்சினை       
லாத்தையும்- எல்லாவற்றையும்
கரசேக்க- கரை சேர்க்க     
காக்கா- மூத்த சகோதரன்
உம்மா-தாய்            
வாப்பா-தந்தை
பொம்புளயா-பெண்ணாக
என்னகா-என்ன?
என்னத்த?-எதை?
கொமர-கன்னிப்பெண்
நெறவேத்த- நிறைவேற்ற
தீன்-உணவு
ஆனை-யானை
கொறுக்காட-கறுப்பானவர்களை குறிக்கும் பட்டப்பெயர்
வக்கில்லா- தகுதியின்றி
ஊட்ட-வீட்ட
கக்கிஷம்-கஷ்ட்டம்
வாருகள்-வீட்டின் முற்றத்தில் இருக்கும் குப்பைகளை அகற்ற உதவும் பொருள்
சொளையாக-சுளையாக
தொணையாக-துணையாக
கொளராத-அழாதே
எண்டு-என்று
சொட்டு-சிறிது
ஒயித்த- இஸ்லாமியர்களுக்கு விருத்தசேதனம் செய்பவர்
அவியல்- அவர்கள்
ஆரேண்டு-யார் என்று
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

14 கருத்துகள்:

இராமசாமி ரமேஷ் சொன்னது…

வறுமையின் கொடுமையையும் வாழ்வியலின் பாடுகளையும் அருமையாக வடித்துள்ளீர்கள் அண்ணன். உண்மையிலேயே உங்கள் கவித்துவத்திற்கு ஒரு பெரிய சூ.........ப்பர்.

Editor சொன்னது…

நம்மூரு பாசையில கலக்கிட்டீங்க....
இன்னும் மரபில் தொடர்ந்து எழுதுங்கள்...

munril சொன்னது…

கலங்கிடும் குடும்பத்தை கன்னியவள் மீட்பதற்காய்
இலங்காவை விட்டகன்று செல்கின்றாள் சவுதிக்கு
கொடுவிலங்கை அறுப்பதற்கு எடுத்தாளோ முடிவொன்று
கெடுக்கும் ஆணினமே இவளையும் வாட்டிடாதே
_ச.உதயன்.

எம்.வஹாப் சொன்னது…

அண்மையில் நான் படித்த கவிதையில் மிகச்சிறந்த கவிதை இது.நேற்று விடிவெள்ளியிலும் படித்தேன்.இன்றைய முஸ்லிம் பெண்களின் கையறுநிலையை உணர்த்தி நிற்கின்றது.வாழ்த்துக்கள்.

எம்.வஹாப்
வாழைச்சேனை

கவிஞர் அஸ்மின் சொன்னது…

*இராமசாமி ரமேஷ்
*Mohamed Hijas
*munril
*எம்.வஹாப்
நண்பர்களே...
எனது வலைப்பூவை தரிசித்து பாராட்டிமைக்கு நன்றி.
தொடர்ந்தும் ஊக்கப்படுத்துங்கள்

Unknown சொன்னது…

மாஷா அல்லாஹ் அஸ்மின் உங்களின் கவிதைகைளை எல்லாம் பார்க்கும் போது என்னால் உங்களை பாராட்டாமல் இருக்கமுடியாது எல்லாப்புகழும் இறைவனுக்கே!
இருந்தும் உங்கள் கவிதைகளைப்படித்து பெண்கள் வெளிநாடு போய் விடுவார்களோ என்பது தான் பயமாக இருக்கிறது பெண்கள் வெளிநாடுசென்று சம்பாதிப்பதை காட்டிலும் சொந்த ஊரில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துவது எவ்வளவோ மேல். இது நான் வெளிநாடுகளில் கண்ட அனுபவம்.

எஸ்.எம்.கையூம்,
பொத்துவில்.

ஃபஹீமாஜஹான் சொன்னது…

சராசரிப் பெண்களின் அதுவும் கிழக்கிலங்கைப் பெண்களின் மனநிலையையும் அவர்தம் தேவைகளையும் விபரித்துச் சொல்வதாக கவிதை உள்ளது. "நெனச்சமாரி நாங்க உடுக்க-இழிவா
நெனச்ச மச்சானுக்கு சீதனம் குடுக்க..." இது தான் அந்தப் பெண்களின் துயர்.அவர்களின் இத்தகைய அறியாமைகள் நீங்காத வரை பெண் பாடுபட்டு உழைப்பதும் அந்த உழைப்பு அர்த்தமிழந்து போவதும் தொடரவே செய்யும்.பெண்ணுக்கு கல்வியும் பொருளாதார சுதந்திரமும் நிச்சயமாகத் தேவையானவை.ஆனால் அந்த உழைப்பும் பணமும் பயனற்றவிடயங்களில் அழிந்து போவதையே காணமுடிகிறது.பொதுவாக பணிப்பெண்களாக வெளிநாடு போகும் எல்லாப் பெண்களினதும் மனநிலையை இக்கவிதை பிரதிபலிக்கிறது.

கவிஞர் அஸ்மின் சொன்னது…

அன்புள்ள
*கவிதாயினி ஃபஹீமாஜஹான்
*நண்பர் எஸ்.எம்.கையூம்,
உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்தலுக்கும் நன்றி.

மல்லியப்புசந்தி திலகர் சொன்னது…

அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

மன வேதனைக் குளிரில் நநடுங்கிக் கொண்டிடுகும் நிலையில் உங்கள் கவிதை போர்வையானது வாழ்த்துக்கள் சூடு ஏற முடியாத ஈரமான மனசாக: கண்ணீர் மழை தூவிக் கொண்டு உள்ளது அந்த தங்கையின் ஆத்மா சாந்தி பெற அல்லாஹ் ஒருவனே போதுமானவன் அல்ஹம்து லில்லாஹ்

Unknown சொன்னது…

மன வேதனைக் குளிரில் நநடுங்கிக் கொண்டிடுகும் நிலையில் உங்கள் கவிதை போர்வையானது வாழ்த்துக்கள் சூடு ஏற முடியாத ஈரமான மனசாக: கண்ணீர் மழை தூவிக் கொண்டு உள்ளது அந்த தங்கையின் ஆத்மா சாந்தி பெற அல்லாஹ் ஒருவனே போதுமானவன் அல்ஹம்து லில்லாஹ்

Unknown சொன்னது…

மன வேதனைக் குளிரில் நநடுங்கிக் கொண்டிடுகும் நிலையில் உங்கள் கவிதை போர்வையானது வாழ்த்துக்கள் சூடு ஏற முடியாத ஈரமான மனசாக: கண்ணீர் மழை தூவிக் கொண்டு உள்ளது அந்த தங்கையின் ஆத்மா சாந்தி பெற அல்லாஹ் ஒருவனே போதுமானவன் அல்ஹம்து லில்லாஹ்

Faiz சொன்னது…

nijankalai kavithaihalaha vadikkum un thiramai alapperiyathu....

Prapa சொன்னது…

மனசு கனமாக இருக்குறது அஸ்மின்.

கருத்துரையிடுக