ஞாயிறு, 30 ஜனவரி, 2011

தலைப்பில்லா கவிதைகள்..!


 இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தால் தேசிய மட்டத்தில் கவிஞர்களுக்கு இடையில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் இக்கவிதை முதலாம் இடம் பெற்றுள்ளது . இக்கவிதை அடங்கிய நூல் 'அடையாளம்' எனும் பெயரில் தென்கிழக்கு பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்துள்ளது.

வாவியை கடப்ப தென்றால்
             வள்ளமொன் றிருந்தால் போதும்..
ஓவியம் வரைவ தற்கு
             ஓரிரு வரைகள் போதும்
ஆவியை ஆட்சி செய்யும்
             அரசரை; மக்கள் நெஞ்சை
கூவியே விழிக்கச் செய்த
            குயிலினை; குறிஞ்சிப்பூவை...


காவியம் பாடு தற்கு
          கவிவரி போதா தெனவே
நோவினை தந்து; தலைவர்
          நோக்கினை சாம்பர் செய்த
தாவிடும் குரங்கு மாரை
         தலையில்லா தலைவர் மாரை...
சாவியை தொலைத்துவிட்டு
          சாமரை வீசு வோரை...

கேவிநாம் அலறும் போது
           'கேக்குண்டு' வாழு மந்த
பாவிகள் பற்றித்தான் யான்
             பாவினை ஏந்தி வந்தேன்..
காவிகள் வென்றால் கூட
            கவலைநான் கொள்ளேன் 'எந்தன்
பூவிலே உள்ள தேனை
           புரிந்திட காலம் செல்லும்....'.


(வேறு)

தென்கிழக்கின் பொன்விளக்கு என்றவர்க்கு
               தேனோடும் வார்த்தைகளால் கோலம் போட்டு
நின்றிருக்கும் காலமல்ல; நிமிரச் செய்த
                நிமலனவர் இருந்தாலும் ஏற்கமாட்டார்....
புண்களுக்கு மருந்திடுவோம்; பூசல்விட்டு
                புன்னகைப்போம்; புரிந்துணர்வை முளைக்கச் செய்வோம்...!
கண்களுக்குள் இருக்கின்ற கவிதை அஸ்ரப்
              கனவுகளை நனவாக்க முயற்சி செய்வோம்...!

அன்று,மஹான் காந்தியைப்போல் அஸ்ரப் வாழ்ந்து
            அனைத்துஇன மக்களையும் அணைத்துச் சென்றார்..!
தின்றுவிட்டு தூங்காதீர்; சமூகமொங்க
            திருந்திடுவீர்; திக்கெங்கும் மரங்கள் செய்வீர்....
ஒன்றுபட்டு வென்றிடுவீர்;பிரிந்திடாமல்
            ஒற்றுமை யெனும் கயிற்றை பற்றிக்கொள்வீர்...!
என்றாரே; நடந்தோமா..? நாறினோமா..? அற்ப
            எச்சிலைக்காய் கட்சிபல ஆக்கினோமே....


இன்றெங்கள் இழிநிலையால் நடந்ததென்ன....?
         இடிவிழுந்த மரங்களைப்போல் இருக்குறோமே....
பொன்னையர்கள் என்றெம்மை கீழோரெண்ணி
          பொறிவைத்து போகின்றார்; ஆனால் நீங்கள்
கண்ணயர்ந்து இருக்கின்றீர் எங்கள் மண்ணை
          களவாடும் கழுதைகளை உதைத்து தள்வீர்
கொன்றிடுவீர் சுயநலத்தை அஸ்ரப் போன்று
          கொதித்தெழுவீர் எம்வலியை எடுத்துச் சொல்வீர்

                                               (வேறு)

தலையெழுத்தை தலைகீழாய் எழுதிவிட்ட ஆண்டவனே
           தந்துவிடு நல்வாழ்வை எமக்கு!-'தங்கத்
தலைவரினை' இழந்துவிட்டு தவிக்கின்ற 'எம்சமூகம்'
           தலையிழந்து முண்டமெனக் கிடக்கு!

தலைவர்நாம் என்றவர்கள் தறுதலைகள் முன்னாலே
           தலைகவிழ்ந்து நிற்கின்றார் எதற்கு-?அவர்
தலையாட்டி பொம்மைகள்போல் தனித்துவத்தை விட்டுவிடின்
            தருவாரே சிலஎலும்பு அதற்கு!

தலையில்லாத் தலைகளினை தலைவரென நினைத்ததற்காய்
            தலையிடிதான் எங்களுக்குப் பரிசு!-பதவிக்காய்
தலைசொறிந்து பல்லிளிக்கும் தலைவர்களால்
            தடுமாறும் எம்வாழ்க்கை தரிசு!

தலைதடவி கண்களிலே கண்கெட்டோர் கைவைக்க
            தலையணையில் எம்தலைகள் இருக்கு!-தங்கள்
தலைதப்பி னால்போதும் என்கின்ற கோழையரை
            தேர்ந்தெடுத்த நாங்கள்தான் கிறுக்கு!

தலைப்பிறையை மேகத்தால் தகர்த்தெறிய முடியாது
            தலைவர்களே கொண்டிடுவீர் ஒப்பு!-உங்கள்
தலைகளினை காப்பாற்ற கண்ணிருந்தும் குருடர்களாய்
            தவறுகளை பார்த்திருத்தல் தப்பு!

தலையில்லா முண்டங்களாய் மாறிவிட்ட எம்மவர்க்கு
            தலையாக ஒருதலைவன் எழுவான்!-அவன்
தலைவரவர் சுவடுகளில் தயங்காமல் நிதம்நடக்க
            தளையொடிந்து சிரிக்குமெங்கள் எழுவான்!!

                                                              நன்றி
*அடையாளம்(இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட கவிதை நூல்)இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக