ஞாயிறு, 8 மே, 2011

படைப்பாளி அறிமுகம் -12 கவிஞர் மட்டுவில் ஞானக்குமாரன்

லங்கையின் இளைய தலைமுறை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவரான கவிஞர் மட்டுவில் ஞானக்குமாரன் யாழ்ப்பாணம் நுணாவிலை பிறப்பிடமாக கொண்டவர்.
யாழ் மானிப்பாய் இந்துக் கல்லூரி, கிழக்கு பல்கலைக்கழகம் என்பவற்றின் பழைய மாணவரான இவர் புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வாழ்ந்து வருகின்றார்.ஜேர்மனிய மொழி போதனாசிரியரான மட்டுவில் ஞானக்குமாரன் 
கவிஞர், எழுத்தாளர் , பாடலாசிரியர், குறுந்திரைப்பட இயக்குனர் என பன்முக ஆளுமைகொண்டவர்.
இவர் ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக புலம்பெயர் இலக்கியத்துக்கு வளம் சேர்த்து வருகின்றார்.


கவிதை, சிறுகதை, மேடை நாடகம், வானொலி நாடகம், குறுந்திரைப்படம் என பல துறைகளிலும்  தனது திறமை பறைசாற்றிவரும் மட்டுவில் ஞானக்குமாரனின் படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகளிலும் சர்வதேச சஞ்சிகைகளிலும் களம் கண்டுள்ளன. இணையத்தில் வெளிவரும் பல இலக்கிய சஞ்சிகைளிலும் தொடர்ந்து எழுதிவருகின்றார்.

2008ம் ஆண்டு தகவம் அமைப்பினரால் தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் 'பள்ளிக்கூடம்' சிறுகதைக்காக முதலாம் பரிசினை வென்று 'தகவம் விருதினை'  பெற்றிருக்கும் இவர் சுடர்ஒளி  பத்திரிகை சர்வதேச மட்டத்தில் நடத்திய சிறுகதைப் போட்டியில்  சிறப்பிடத்தையும் பெற்றிருக்கின்றார்.


'வெளிச்ச வீடுகள்' எனும் கவிதை இறுவட்டை பின்னணி இசையோடு தனது குரலில்  வெளியிட்டிருக்கும் மட்டுவில் ஞானக்குமாரன்  லண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பான 'கரையை தேடும் ஓடங்கள்' எனும் வானொலி நாடகத்தை எழுதி, இயக்கி, நடித்து பலரதும் பாராட்டை பெற்றிருக்கின்றார் .

வசந்தம் வரும் வாசல் (2004) முகமறியாத வீரர்களுக்காக (2000) சிறகு முளைத்த தீயாக (2011) எனும் மூன்று கவிதை நூல்களை இலக்கிய உலகுக்கு தந்திருக்கும் இவர் தற்போது 'ஒரு துளி கண்ணீர்' என்ற குறுந்திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இவரது ''ஊருக்குள் நூறு பெண்கள்'' சிறுகதை நூல் மிகவிரைவில் வெளிவருகின்றது.

தனது காத்திரமான கவிதைகள் மூலமும் தனித்துவமான படைப்புக்கள் மூலம்  இலங்கையின் இலக்கியத்துறையில் முத்திரை பதித்துவரும்  கவிஞர் மட்டுவில் ஞானக்குமாரன்
அவர்களை நாமும் வாழ்த்துவோம்.


இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக