ஞாயிறு, 30 ஜனவரி, 2011

நாளைய உலகம் நமக்காக விடியட்டும்....


 புதிய சிறகுகள்-2011' தேசிய கலைஞர்கள் ஒன்றுகூடல் நிகழ்வை முன்னிட்டு 'லங்கா' பத்திரிகை நிறுவனத்தினரால் நடாத்தப்பட்ட தேசிய மட்ட கவிதைப்போட்டியில்  சிறப்பிடம்பெற்ற கவிதை.இக்கவிதை பட்சிகளின் உரையாடல் கவிதை நூலில் இடம்பெற்றுள்ளது.
 பூலோக சொர்க்கம் என்று
புகழப்பட்ட பூமி
ரத்தினத்துவீபம் என்று
ரசிக்கப்பட்ட
தேசமானது
நாசமானது
மனங்களுக்கு
பித்தம் பிடித்தபோது
மனிதர்களுக்குள்
யுத்தம் வெடித்தபோது....

மனம் முரண்பாடு கண்டபோது
இனமுரண்பாட்டை கண்டோம்
இனமுரண்பாட்டினால்
இருண்ட யுகத்துக்குள் நின்றோம்.
எங்களை நாங்களே
கொன்றோம்....
ஆனால்
மனிதர்கள் நாங்கள் என்றோம்.

மூன்று தசாப்த காலமாக
முகவரியை தொலைத்தோம்
முகாரிராகம் இசைத்தோம்.
மூக்குடைபட்டு
மூர்ச்சையாகி கிடந்தோம்
மூவின மக்களாகிய நாங்கள்...

யுத்தத்தீ எழுந்தபோது
ஷெல்லடிகள் விழுந்தபோது
துப்பாக்கி அழுதபோது
தோட்டாக்கள் உழுதபோது

பூக்கள் பூத்து
பூரித்துகிடந்த பூமியில்
புழுக்கள் நெழிந்தன...
எங்கள் குருதியால்
வங்கக் கடலே
பொங்கி வழிந்தன...
ஒரு அழகிய தேசம்
அழுகிய தேசமாய் காட்சிகொடுத்தது....
நாங்கள் வாழ்வது
ஈழத்திருநாட்டிலா
ஆபிரிக்கா காட்டிலா
என்று அங்கலாய்த்தோமே தவிர
மூவின மக்களும்
முகிழ்த்துக்கிடந்த
சிக்கலை நீக்கி
முக்கலைப்போக்கி
புரிந்துணர்வு எனும் கடலுக்குள்
மூழ்கி
புன்னகை முத்துக்களை
குளிக்கவில்லை
குருதியில்தான்
தினம் தினம்
குளித்துக் கொண்டிருந்தோம்...

நாம் எல்லோரும்
சேர்ந்துதான்
பிரியத்தை
கல்லறையாக்கினோம்
பிணங்களை சில்லறையாக்கினோம்
நேசத்தை சிறையறைக்கினோம்
பாசத்தை வரையறையாக்கினோம்

நாங்கள் ஒற்றுமை எனும் கயிற்றை
ஒருமித்து பிடித்திருந்தால்
வேற்றுமை எனும் வேதாளம்
போர் எனும் முருங்கைமரத்தில்
ஏறியிருக்காது...
எம்தேசம் நாறியிருக்காது....

பட்டது போதும்
எம்மைநாமே
சுட்டது போதும்...
வசந்தத்தை தேடும்
வானம்பாடிகளே
ஒன்று படுவோம் வாருங்கள்..

இனமதங்கள் நாம் கடந்து
தாய் நாட்டை நேசிப்போம்
இருக்கும் வரை
இறக்கும் வரை
தமிழ்மொழியை சுவாசிப்போம்....
நாளைய உலகம்
நமக்காக விடியட்டும்....

                       நன்றி *'புதிய சிறகுகள்-2011'  ..
*பட்சிகளின் உரையாடல் (கவிதை நூல்)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக