சனி, 29 ஜனவரி, 2011

"ஒரு இளையராஜாவை இலங்கையில் எதிர்பார்க்க முடியாது"

இலங்கையின் தினகரன் வாரமஞ்சரி 'செந்தூரம்' சஞ்சிகையில் இடம்பெற்ற எனது நேர்காணல்.தினகரன் வாரமஞ்சரி செந்தூரத்தின் முகப்பில்   எனது புகைப்படத்தை பிரசுரித்து என்னை கௌரவித்திருந்துது.
நேர்கண்டவர்:-வாசுகி சிவகுமார்-


01.உங்கள் ‘எங்கோ பிறந்தவவளே' பாடல், இலங்கையில் மாத்திரமல்லாமல் புலம்பெயர் நாடுகளிலும் பிரசித்தம் பெற்றிருக்கிறது. நம் நாட்டு, இசை, பாடல்களுக்கான ஒரு சாதகமான நிலை இங்கு தோன்றியிருப்பதாக நீங்கள் கருதுகின்றீர்களா..?

இலங்கையில் சாதகமான சூழ்நிலை தோன்றிவிட்டது என்பதிலும் பார்க்க, வெளிநாடுகளில் இப்பாடல்களுக்கு வரவேற்பு அதிகம் என்றுதான் நான் சொல்வேன் உள்நாட்டு வானொலிகளில் தென்றல், பிறைFM,வசந்தம்FM என்பனதான் என்பாடல்களை ஒலிபரப்பின.லண்டன் IBCவானொலியில், அக்காலத்துக்கான சிறந்த பாடல்கள் வரிசையில் இரண்டாம் இடத்தை 'எங்கோ பிறந்தவளே' பாடல் இரண்டு வாரகாலத்துக்குத் தக்கவைத்திருந்தது.

இலங்கையிலுள்ள மேற்சொன்ன வானொலிகளைத் தவிர வேறெந்த வானொலிகளும் என் பாடலை ஒலிபரப்பவில்லை. YouTubeஇல் இப்பாடல் இருப்பதால் புலம்பெயர் நாடுகளைச் சேர்ந்த பலர் இதனைக் கேட்டுவிட்டு,எனக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்கள். இயக்குனர் செல்வகுமார் விஜய் அன்டனி ஆகியோரும் இப்பாடலைக் கேட்டுவிட்டு, மிகவும் அற்புதமாக அமைந்த பாடல் எனச் சிலாகித்திருக்கிறார்கள்.

02.இப்பாடலை எழுத நேர்ந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்....

நான் ஏற்கனவே பல பாடல்கள் எழுதியிருந்தாலும், ‘எங்கோபிறந்தவளே' பாடல் பிறந்த விதமே சுவாரஸ்யமானது தான். 2008 ஆம் ஆண்டு, சக்தி தொலைக்காட்சியின் 'இசை இளவரசர்கள்' நிகழ்ச்சியில் 16 பாடலாசிரியர்களைத் தெரிவு செய்து இந்தியாவுக்குக் கொண்டு சென்றார்கள். அதில் நானும் ஒருவன். அங்கு தென்னிந்தியாவின் பிரபல பாடலாசிரியர்களை, இசையமைப்பாளர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.எங்கள் 16 பேரையும் ஒவ்வோர் குழுவாகப் பிரித்திருந்தார்கள்.எங்கள் குழுவுக்கு இயக்குனர் வெங்கடேஷ் தான் பாடல் எழுதுவதற்கான சூழலைச் சொன்னார். சொன்னதும் ஒரு மணித்தியாலத்துக்குள் நான் பாடலை எழுதிவிட்டேன்.முதலில் பாடலாசிரியர் பா. விஜயைச் சந்தித்தோம். அவருக்கு நான் எனது பாடலை படித்துக் காட்டினேன். பாடலைக் கேட்ட விஜய் என்னை மிகவும் சிலாகித்தார்.அதில் 'உன் டாவின்சி பார்வைகளால் நான் ஓவியமாகிவிட்டேன்' என்ற வரி வருகின்றது அதைக் கேட்டுவிட்டு ஆங்கிலக் சொற்களை உபயோகிக்காதீர்கள். தமிழிலேயே முற்றுமுழுதாக எழுதினால் இன்னும் சிறப்பாக வரும் என்றார்.அதேபோல்
நா. முத்துகுமார்,சினேகன், கவிஞர் விவேகா போன்றோரும் என்னைப் பாராட்டினார்கள்.ஆனால், எனது பாடல் வரிகளுக்கு இசையமைப்பது கடினமானதாக இருப்பதாக இங்குள்ள இசையமைப்பாளர் ஒருவரால் கூறப்பட்டது.பாடலாசிரியருக்கும், இசையமைப்பாளருக்குமிடையில் ஒரு நல்ல புரிந்துணர்வு இருந்தால் மாத்திரமே பாடல் வெற்றியடைய முடியும். அதனால் இப்பாடல் இசையமைக்கப்படாமலேயே போய்விட்டது.ஆனாலும் எல்லாவற்றையும் தாண்டி அது பிரபல பாடலாக வந்துவிட்டது. வவுனியாவில் உள்ள பிரபல இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தனின் தொடர்பு எனக்குக் கிடைத்தது.அவர் தனது 'யாழ்தேவி' அல்பத்துக்கு ஒரு பாடல் எழுதித்தரும்படி என்னிடம் கேட்டார். ஏற்கனவே என்னிடம் இயற்றப்பட்ட பாடல் ஒன்று இருப்பதாகக் கூற, 5 நிமிடத்திலேயே அதற்கு இசையமைத்துவிட்டார். அதுவும் பிரபலமடைந்து விட்டது.இங்குள்ள ஊடகங்கள் தென்னிந்தியத் திரையிசைப் பாடல்களுக்குத் தரும் முக்கியத்துவத்தில் கால்பங்கேனும் நம் நாட்டவர்களின் பாடல்களுக்குத் தருவதில்லை.நாங்கள் தேடிப் போய்க் காலடியில் கொடுத்தால் கூட அவர்கள் ஒலிபரப்புவதில்லை. இலங்கைத் தமிழிசையில் மாற்றம் ஏற்படப் போவதில்லை. இங்குள்ள தமிழிசைக் கலைஞர்களுக்கு உரிய வாய்ப்புகள் தரப்பட்டிருந்தால் அவர்கள் எங்கோ சென்றிருப்பார்கள். இலங்கையில் உள்ள இசையமைப்பாளர்களிடம் ஏ. ஆர். ரஹுமானையோ, இசைஞானி இளையராஜாவையோ எதிர்பார்க்கிறார்கள். பாடலாசிரியர்களில் கவிப் பேரரசு வைரமுத்துவை எதிர்பார்க்கிறார்கள்.அவர்களது நிலைக்கு இங்குள்ளவர்களை வளர்க்க வேண்டும் என அவர்கள் நினைப்பதில்லை. கனடாவில் புலம்பெயர் தமிழர்களால் இயக்கப்படுகின்ற ஒரு திரைப்படத்துக்கு நான் பாடல் வரிகளை எழுதுகிறேன். இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தன் அதற்கு இசையமைத்திருக்கிறார்.

இலங்கையின் கலைஞர்கள் பலர் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கிறார்கள். அவர்கள் இசை அல்பங்களை வெளியிடுகிறார்கள். பலருக்கு தென்னிந்திய திரையிசை உலகிலும் பாடல்கள் இசையமைக்கவும் பாடவும் சந்தர்ப்பங் கிடைத்திருக்கிறது. இலங்கையில் உள்ள கலைஞர்களுக்கு அவ்வாறான வசதி வாய்ப்புகள் எவையும் இல்லை.
எந்தவொரு வானொலியும் கூட இலங்கை கலைஞர்களின் பாடல்களை ஒலிபரப்பத் தாயாராக இல்லை. ஊடகங்களின் இம்மனோநிலை மாற வேண்டும். ஆரம்பகாலத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் மெல்லிசைப் பாடல்களுக்கு நிறையவே களம் கிடைத்தது. மெல்லிசைப்பாடல்கள் அதிகளவில் ஒலிபரப்பப்பட்டன. எல்லாப் பாடலாசிரியர்களுக்கும் தாமும் எழுத வேண்டும் என்ற உத்வேகம் ஏற்பட்டது. ஆனால் இப்போது அவ்வாறில்லை. எந்தவொரு வானொலியும் எங்கள் பாடல்களை ஒலிபரப்புவதில்லை.

03.இங்கு தமிழ் சினிமாத்துறை அழிவடைந்ததுதான் எமக்கென ஒரு இசை அடையாளம் இல்லாமல் போனதற்கான காரணமாக இருந்திருக்கலாமோ...?

இல்லை.அவ்வாறு குறிப்பிட முடியாது. அமெரிக்காவைப் பாருங்கள். அங்கு, சினிமா இசை ஒரு தளத்திலும் மெல்லிசை, அல்லது பொப்பிசை என்பது வேறு தளத்திலும் பயணிக்கிறது.
ஆங்கிலப்படங்களில் அனேகமானவற்றில் பாடல்கள் இல்லை. சினிமாத்துறையைப் போலவே, அங்கே இசையும் இதன் உச்சத்தை எட்டியிருக்கிறது.
இங்கு அப்படியில்லை. இலங்கையில் ஆரம் பத்தில் தமிழிசை பாரிய வளர்ச்சி கண்டிருந்தது. தமிழர்கள்தான் சிங்களப்பாடல்களுக்கு இசையமைத்தார்கள் இன்று நிலைமை மாறிவிட்டது.
இங்கு முக்கிய பிரச்சினையாகவிருப்பது எமக்குக் களமின்மை. இங்குள்ள ஊடகங்கள் களம் தராவிட்டால் வேறு யார் தருவார்கள்? 

                                          நன்றி.
*சாதீக் சிஹான்(தினகரன் ஆசிரியர் பீடம்)
*வாசுகி சிவகுமார்(தினகரன் ஆசிரியர் பீடம்)
*பரீட்(செந்தூரம் பொறுப்பாசிரியர்)
*தினகரன் வாரமஞ்சரி- செந்தூரம்
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 கருத்துகள்:

கருத்துரையிடுக