ஞாயிறு, 24 ஜூன், 2012

அகவை நான்கில் கால்பதிக்கும் வசந்தம் தொலைக்காட்சி




            லங்கையில், தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய அடையாளங்களைப் பிரதிபலித்தபடி, தவிர்க்க முடியாதவொரு அடையாளமாகத் திகழும் 'வசந்தம் தொலைக்காட்சி'யானது, அதன் நான்காவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. இலங்கையின் முதலாவது தொலைக்காட்சி ஒளிபரப்புச் சேவையான சுயாதீன ஊடக வலையமைப்பின் ஒரு அங்கமாக இருந்து வரும் வசந்தம் தொலைக்காட்சியானது, 2009.06.25 அன்று ஆரம்பிக்கப்பட்டது. வெற்றிகரமான முப்பத்தாறு மாதங்களைக் கடந்துவந்துள்ள இதன் அபார வளர்ச்சியானது, இன்று பலரையும் இதன் பக்கம் ஈர்த்து, தலைநிமிர்ந்து பார்க்க வைத்துள்ளது.


            வசந்தம் தொலைக்காட்சியானது, தனது ஒளிபரப்பை ஆரம்பித்த நாளிலிருந்தே பல்சுவை நிகழ்ச்சிகளை வழங்கி, இலங்கைத் தமிழ்த் தொலைக்காட்சிகளுக்கு முன்னோடிகளாக விளங்கும் தென்னிந்திய தமிழ்த் தொலைக்காட்சிகளுக்கு இணையான பாரிய வளர்ச்சியை, மூன்று வருடங்களுக்குள்ளேயே கண்டிருக்கிறது. இலங்கைக்கு வசந்தத்தைக் கொண்டு வந்திருக்கும் வசந்தம் தொலைக்காட்சியின் முகாமையாளராக இருக்கும் திரு. முருகேசு குலேந்திரன் அவர்களின் வழிகாட்டலின் கீழ், துடிப்பும் ஆளுமையும் திறமையுமுள்ள இளைய தலைமுறை நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும், அறிவிப்பாளர்களும் இதன் வளர்ச்சியின் வேர்களாக இருந்து கொண்டிருக்கின்றனர்.

            நமது நாட்டில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அனேகமானவை, தென்னிந்தியத் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளே. இந் நிலையை மாற்றிய பெருமையும் வசந்தம் தொலைக்காட்சியையே சேரும். வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் எல்லா நிகழ்ச்சிகளும்போல எமது நாட்டு வளங்களைப் பயன்படுத்தி, திறமை வாய்ந்த எமது நாட்டுத் தயாரிப்பாளர்கள் தயாரித்த நிகழ்ச்சிகளே.



இனி, வசந்தம் தொலைக்காட்சியானது, தமிழ் பேசும் மக்களினது, சுயத்தையும் பண்பாட்டையும் கலாசாரத்தையும் பேணிப் பாதுகாக்கவென செய்திருக்கும் சாதனைகளை வெற்றிகரமான மூன்றாவது வருட நிறைவான இந் நன்னாளில் மீட்டிப்பார்ப்போம்.




            இலங்கையில் ஒரு குடும்பத் தொலைக்காட்சி எனும் நற்பெயரைப் பெற்று, தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறது வசந்தம் தொலைக்காட்சி. அதுவரையில் தமிழ்த் தொலைக்காட்சிகள் எனப்படுபவை, வெறுமனே நேரத்தைக் கழிக்கவும், பொழுதுபோக்கவும் மட்டுமேயானவை என்ற கருத்தினை மாற்றிய வசந்தம் தொலைக்காட்சியில், காலை ஆறு மணியிலிருந்து இரவு பன்னிரண்டு மணி வரை சிறுவர் முதல் பெரியோர் வரை எல்லோருமே கண்டுகளிக்கவும் பயன்பெறவுமான பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன


நாட்டு நடப்புகளைத் தெரிந்துகொள்ளவும், பார்த்து ரசிக்கவுமென அக் காலத்தில் அனேகமான சகோதர மொழித் தொலைக்காட்சிகளையே நாட வேண்டியிருந்த நிலையை மாற்றியதோடு நிற்காமல், முப்பது வருட கால யுத்த முடிவுக்குப் பிறகு, தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒருமித்து ரசிக்கக் கூடியதான நிகழ்ச்சிகளையும் தந்து கொண்டிருக்கிறது வசந்தம் தொலைக்காட்சி.


            வசந்தம் தொலைக்காட்சியானது, தொலைக்காட்சியோடு மட்டும் தனது சேவையை நிறுத்தி விடாமல், நேயர்களை மகிழ்விக்கவென அவர்கள் முன் நேரடியாகவும் களமிறங்குகிறது. இதன் முதல் கட்டமாக, தென்னிந்திய கலைஞர்களைக் கொண்டு யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நடத்திய, முதலாவது இசை நிகழ்ச்சியைச் சொல்லலாம். பல்லாயிரக்கணக்கான நேயர்களை வசீகரித்த இந் நிகழ்ச்சியில் பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் விஜய் அன்ரனி, தனது குழுவினரோடு கலந்து கொண்டார். இதுவே அவர் செய்த முதலாவது மேடை இசை நிகழ்ச்சியும் கூட. வசந்தம் தொலைக்காட்சியின் அனுசரணையோடு நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் கலந்து கொண்டு ரசித்தனர். அத்தோடு வரலாற்றிலேயே முதன்முறையாக நேரடி இசை நிகழ்ச்சியொன்றை பருத்தித்துறையில் நடத்திய பெருமையும் வசந்தம் தொலைக்காட்சியையே சாரும்.


            சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, கடந்த வருடங்களிலும், இந்த வருடமும் வசந்தம் தொலைக்காட்சியின் அனுசரணையோடு தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் மிக ஆர்வத்தோடு, அதிகளவான இளைஞர்களும் யுவதிகளும் பங்குபற்றி பரிசில்களை அள்ளிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. பலர் கலந்துகொண்ட, கடந்த வருடத்தின் சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்ட விளையாட்டுப் போட்டியானது, யாழ் கோட்டை முன்றலிலிருந்தும், வல்வெட்டித்துறையிலிருந்தும் நேரடியாக ஒளிபரப்பானதோடு, இந்த வருடத்தின் சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் யாழ். மானிப்பாய் மருதடிப் பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து நேரடியாக ஒளிபரப்பானதோடு நேரிலும் தொலைக்காட்சியிலும் பல்லாயிரக்கணக்கான நேயர்கள் ஒரே நேரத்தில் இந் நிகழ்வுகளை நேரடியாகக் கண்டு ரசித்தனர்.


            தனது அனைத்து நிகழ்ச்சிகளாலும் பூரணம் பெற்றுள்ள வசந்தம் தொலைக்காட்சி, இலங்கைத் தமிழ்த் தொலைக்காட்சி வரலாறுகளிலேயே முதன்முறையாக 'தசாவதாரம்', 'சிங்கம்', 'வேட்டைக்காரன்', 'நான் மகான் அல்ல', 'வானம்', 'மாசி', 'முரண்', 'வந்தான் வென்றான்' போன்ற வெற்றிப் படங்களை ஒளிபரப்பி அநேக நேயர்களைத் தம் வசம் ஈர்த்திருக்கிறது. அத்தோடு இதில் ஒளிபரப்பாகும் சினிமா நிகழ்ச்சிகளும், பிரபல நெடுந்தொடர்களும் வசந்தம் தொலைக்காட்சியை, நேயர்கள் பக்கம் நெருங்க வைத்திருக்கின்றன.




            வாரம் தோறும் ஒளிபரப்பாகும் ஒரு மணித்தியாலக் கலை நிகழ்ச்சியான தூவானத்தில், எழுத்தாளர்கள் அறிமுகம், சிறந்த இணையத்தள அறிமுகம், உலக விருதுகள் பெற்ற குறும்படங்கள் மற்றும் கவித்துவமான பாடல்கள் ஒளிபரப்பு என்பனவற்றோடு நல்ல கவிதைகளும் இடம்பெறுகின்றன. இந்த நிகழ்ச்சியானது கடந்த வருடத்தின் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான அரச விருதையும் சுவீகரித்துக் கொண்டது என்பதுவும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு நமது நாட்டில் கண்டுகொள்ளப்படாமலிருக்கும் நல்ல பல பழைய கலைஞர்களையும், புதிய கலைஞர்களையும் கலையகத்துக்கு வரவழைத்து கௌரவிக்கும் இசை நிகழ்ச்சியான 'புது வசந்தம்', ஒவ்வொரு ஞாயிறன்றும் இரவு ஏழு மணிக்கு புதிய, இடைக்கால, பழைய பாடல்களோடு ஒளிபரப்பாகி நேயர்களைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது.




            சமையல் மற்றும் பயனுள்ள விடயங்களை நேயர்களுக்கு, முக்கியமாக பெண்களுக்குத் தரும் 'கண்மணி' நிகழ்ச்சியும், மருத்துவம் சம்பந்தமாக நாம் தெரிந்திருக்க வேண்டிய தகவல்களை விரிவாக வழங்கும் 'ஆரோக்கியம்' நிகழ்ச்சியும் பலரது பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறது. அத்தோடு 'ஏழாம் நாள்', 'சுற்றிவரும் பூமி', 'உலகப் பார்வை' ஆகிய பொது அறிவை வளர்க்கும் சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் அனைத்துத் தரப்பு நேயர்களினதும் கவனத்தைத் தம் வசம் ஈர்த்துள்ளன. திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும், புதிய பாடல்களை விரும்பும் நேயர்களுக்கான 'Hello வசந்தம்' நிகழ்ச்சியும் இடைக்காலப் பாடல்களை விரும்பும் நேயர்களுக்கான 'நினைத்தாலே இனிக்கும்' நிகழ்ச்சியும் பலரையும் ஈர்த்துள்ளன.


சனிக்கிழமை தோறும் இரவு 8.30க்கு ஒளிபரப்பாகும் 'முகமூடி' நிகழ்ச்சியானது , சமூகத்தில் மறைந்திருக்கும் பல குற்றங்களையும் துயரங்களையும்  வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளைப் பெற்றுக் கொடுக்கும் சிறந்தவொரு நிகழ்ச்சியாக பலரதும் கவனத்தை ஈர்க்கிறது. அத்தோடு  கலையுலகத்துக்குச் சேவையாற்றும் முக்கியமானவர்களை நேரில் சந்தித்து சிரேஷ்ட அறிவிப்பாளரான திரு.விஸ்வநாதன் தொகுத்து வழங்கும் 'ஆட்டோகிராப்' நிகழ்ச்சியானது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்  ஒளிபரப்பாவதோடு நேயர்கள் பலரதும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது.


வசந்தம் தொலைக்காட்சியானது தனது மூன்றாம் ஆண்டு நிறைவோடு 'கல்விக்குக் கை கொடுப்போம், வறுமையை இல்லாதொழிப்போம், ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்புவோம்' எனும் தொனிப் பொருளில் 'வசந்தம் TVயின் சமூகப் பணி' எனும் சமூகப் பணியையும் ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாணத்துக்கு நேரடியாக வைத்தியக் குழுவினரோடு சென்று மக்களைச் சந்தித்து அவர்களது மருத்துவத் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யும் பணியை ஆரம்பித்திருக்கும் வசந்தம் தொலைக்காட்சியானது, பாடசாலை மாணவர்களுக்கும் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கி அவர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறது.

            கடந்த காலங்களில் கொழும்பில் மட்டும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த வசந்தம் தொலைக்காட்சியானது, தற்பொழுது யாழ்ப்பாணம் மற்றும்  வடக்கு மாகாணம் முழுவதிலும் கொக்காவில் கோபுரத்தின் வழியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கொழும்பில் UHF 10 அலைவரிசையிலும், யாழ்ப்பாணத்தில் UHF 25 அலைவரிசையிலும், DIALOG TV, PEO TV, LBN போன்றவை மூலமும் www.vasantham.lk இணையத்தளம் மூலமும் கண்டுகளிக்கப்படக் கூடிய வசந்தம் தொலைக்காட்சியானது, விரைவில் கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாடு முழுவதிலும் வசந்தத்தைக் கொண்டு வரவிருக்கிறது.


  

வெள்ளி, 22 ஜூன், 2012

மலம் தின்னும் மனசு...!


ஓடுகின்ற நதியினிலே அழுக்கு தூசி
ஒருபோதும் இருப்பதில்லை அதுபோல் நாங்கள்
வாடுகின்ற போதினிலும் அருகே யாரும்
வருவதில்லை என்பதனை உணர்ந்துகொள்வோம்!

பாடுகின்ற தவளைகள் பசியால் வாடும்
பாம்புக்கு இரையாகும் ;ஆனால் வாயை
மூடுகின்ற மனிதனுக்கு எதுவுமில்லை
முழுஉலகும் அவன்வாயில் மண்ணைபோடும்
பெண்ணைப்போல் நாமொதுங்கி வெட்கம்தின்றால்
விண்ணைநாம் தொடமாட்டோம் விளங்கமாட்டோம்
என்னைப்போல் யாருண்டு என்று எண்ணி
எழுவானை கிழித்தால்தான் எதையும்காண்போம்

எமக்கான சுயத்தைநாம் தேடும்போது
எதற்குமே பயங்கொள்ளத் தேவையில்லை
நமக்கான பாதையிலே நாளும் சென்று
நடக்காத கால்களையும் நடக்கச்செய்வோம்

நடக்கின்ற போதினிலே நாய்கள் வந்து
நமக்கான பாதையிலே மறித்து நின்றால்
படக்கென்று கவிவாளை உறுவி அந்த
பதருர்களின் வாலறுத்து ஓடச்செய்வோம்.

மற்றவரின் கால்பிடித்து மண்டியிட்டு
மலம்தின்னும் மனசுக்கு மருந்து செய்வோம்
கற்பனையில் யதார்த்தத்தை கலந்து நல்ல
கவிதைகளால் உலகுக்கே விருந்து செய்வோம்