வெள்ளி, 15 ஜூன், 2012

விஜய் ஆண்டனியின் ''நான்'' படத்தில் இலங்கையரின் பாடல் வரிகள்.


டைகள் பல தகர்த்தெறிந்து தானும் மண்ணின் மைந்தன் என மார் தட்டிக்கொள்ளும் அளவிற்கு தன்னுடன் சேர்த்து இலங்கையின் புகழையும் பாரினில் பரவ துடிக்கும் 'இசை இளவரசர்கள்'' புகழ் கவிஞர் பொத்துவில் அஸ்மின், தென்னிந்திய திரைப்படத்துறையில் ஜீவா சங்கரின் இயக்கத்தில் உருவாகும் 'நான்' திரைப்படத்தின் தயாரிப்பாளரும் நாயகனுமான முன்னணி இசையமைப்பாளர் விஜய் அன்டனியின் இசையில் பாடல் ஒன்றை எழுதி எம்மவரின் படைப்புக்களின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்று நாட்டுக்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.

இந்திய  சினிமாவில் தனது பாடலுக்கும் ஓர் அங்கீகாரம்     கிடைத்துள்ளதையிட்டு பெரும் சநதோஷத்துடனான வெற்றிக்களிப்பில் இருக்கும் அவர் விஜய் அன்டனி மற்றும் தனது வாய்ப்பு பற்றி எம்முடன் பகிர்ந்துக்கொண்ட விடயங்களை எமது வாசகர்களுக்காக தொகுத்து தருகின்றோம்.

 திரைப்படத்தில் பாடல் எழுதுவது முதலாவதாக எனக்கு 'பனைமரக்காடு'' திரைப்படத்தின் மூலமே சாத்தியமானது செவ்வேளின் தயாரிப்பில் இயக்குனர் கேசவாஜின் இயக்கத்தில் விமல்ராஜாவின் இசையில் 'உயிரிலே..''; என ஆரம்பிக்கும் பாடலை எழுதியிருந்தேன் பாடலை பின்னணி பாடகர் ஆனந்த் பாடியிருந்தார். அதன்பிறகு விஜய் அன்டனியின் இசையில் 'நான்'' என்ற திரைப்படத்தில் பாடல் எழுதியுள்ளேன். இந்தப்பாடலில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது சர்வதேச ரீதியாக வைத்த போட்டி ஒன்றின் மூலமே ஆகும்.

இசையமைப்பாளர் விஜய் அன்டனி அவர்கள் பல புதிய தலைமுறை பாடகர்களை, பாடலாசிரியர்களை அறிமுகப் படுத்திய பெருமைக்குரியவர் அவர் கதாநாயகனாக அறிமுகமாகும் 'நான்'' திரைப்படத்தில் புதிய பாடலாசிரியரை அறிமுகம் செய்யும் நோக்கோடு தென்னிந்திய ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள் வாயிலாக பாடல் இயற்றல் போட்டி ஒன்றை அறிவித்திருந்தார் பாடலுக்கான மெட்டினை அவரது இணையத்தளத்தில் இட்டிருந்ததோடு பாடல் உருவாகும் கதைச்சூழலையும் குறிப்பிட்டிருந்தார்.அத்தோடு வெற்றி பெறுபவர் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவருக்கு வாய்ப்பளிப்பதாக அறிவித்திருந்தார். அவரால் வழங்கப்பட்ட கதைச்சூழல், இசைக்கேட்ப நானும் பாடலை எழுதி அனுப்பியிருந்தேன்.

பல மாதங்கள் கடந்தும் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை திடீரென ஒருநாள் எனக்கு அழைப்பை ஏற்படுத்தி வாழ்த்து சொன்ன அவர் போட்டியில் நான் வெற்றியீட்டியதாக அறிவித்ததோடு உடனே சென்னைக்கு வருமாறு அழைத்திருந்தார். நான் கடந்த மார்ச் மாதம் சென்னை சென்று இரண்டு நாட்கள் அவரோடு தங்கியிருந்து முழுப்பாடலையும் எழுதிக்கொடுத்துவிட்டு வந்திருக்கின்றேன். பாடல் வெளியீட்டு விழா மிகவிரைவில் பிரமாண்ட முறையில் நடைபெறவுள்ளது.

விஜய் அன்டனி பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். கடின உழைப்பாளி தனது ஒவ்வொரு இரவையும் பகலாக்கி உழைத்ததினால்தான் இன்று அவரால் முன்ணணி இசையமைப்பாளர்கள் வரிசையில் அவரால் இடம்பிடிக்க முடிந்துள்ளது.

அவரோடு பணிபுரிந்த அந்த இரண்டு நாட்களும் என் வாழ்வில் மறக்கமுடியாத அழகிய நாட்கள். 'நான்'' திரைப்படம் என்பது முன்னேறத்துடிக்கும் இளைஞனின் கதை. முற்றிலும் மாறுபாடுடைய ஒரு கதைக்களம். 'நான்' நிச்சயம் வெற்றிபெறும் என்று எதிர்ப்பார்க்கின்றேன். இத்திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் எனக்கு மட்டுமல்ல இலங்கை கலைஞர்கள் பலருக்கும் கதவு தானாக திறக்கும் என்று எதிர்பார்க்கின்றேன்.

நான் எழுதியுள்ள பாடல் தத்துவார்த்தமான பாடல் இன்றைய காலகட்டத்தின் யதார்த்தத்தை பாடலில் பதிவு செய்துள்ளேன். வாழ்வில் முன்னேறத் நினைக்கும் ஒருவன் நேரான பாதையில் தனது பயணத்தை ஆரம்பிக்கின்றான் அவன் போகும் பாதை எங்கும் தடைகளே அதிகம் இருக்கின்றன. எனவே, தப்பு செய்து முன்னேறுகின்றான் அவன்

செய்யும் தப்பு தப்பாக இருந்தாலும் அதனை பார்க்கின்ற மனிதர்களுக்கு தப்பாக அது தோன்றவில்லை அது சரியாகவே இருக்கின்றது. அந்த சூழலில் 'தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பு இல்லை' என்று பாடலின் பல்லவி ஆரம்பிக்கின்றது. இந்த பாடலின் சரணங்களுக்காக சுமார் 50 பாடலுக்குரிய வரிகளை எழுதி இருப்பேன் இறுதியாக 2 சரணங்கள் தெரிவாகியது.

என தனது பாடல்களை பற்றி விவரித்துக்கொண்டிருந்தர் மெல்ல அவரது கவிதை வாழ்கைப் பக்கம் பற்றிப் பேசும் போது,
இலங்கையின் தென்கிழக்கு பிராந்தியத்தில் நாட்டார் பாடல்களின் விளைநிலங்களில் ஒன்றாக விளங்கும் பொத்துவில்தான் நான் பிறந்த இடம்.நான் பொத்துவிலை சேர்ந்தவன் என்று சொல்லிக்கொள்வதில் மிகவும் பெருமைப்படுகின்றேன். நகரத்தின் புகையை குடித்து வாழ்பவர்களை விட கிராமத்தின் புழுதியை குடித்து வளர்பவர்களுக்கு நன்றாகவே கவிதை வரும். என் கிராமமே அழகிய கவிதை அதை வாசிக்க வாசிக்க நானும் கவிஞனாக மாறிவிட்டேன். ஒரு கவிஞனை கற்பித்து வளர்க்க முடியாது. ஒருவன் கவிஞனாக மிளிர்வதற்கு கருவிலே திருவாக வேண்டும்.ஆரம்பத்தில் கவிதைகளோடு கைகுலுக்கிக்கொண்ட நான்  பலதுறைகளிலும் பயணிக்க ஆரம்பித்தேன். என்னுடைய படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகள்  சஞ்சிகைகள் மட்டுமல்லாது சர்வதேச தமிழ் சஞ்சிகைகள் இணைய இலக்கிய இதழ்கள் பலவற்றிலும் களம் கண்டுள்ளன.

 இன்று பாடல் எழுதுவதற்கு பலரும் ஆர்வமாக உள்ளார்கள். இன்றைய இசையமைப்பாளர்கள் போடும் மெட்டுக்குத்தான் நாம் வரிகளை எழுதவேண்டி இருக்கின்றது. எனவே வரிகளை இசைக்கேட்ப எழுதுவதற்கு நிறையவே பயிற்சி வேண்டும். எமக்கு முன்பு வாழ்ந்து மறைந்த படைப்பாளிகளை நன்றாக வாசிக்கவேண்டும். அவர்களது படைப்புக்களின் வெற்றியை நாம் ஆய்ந்து எமக்கென்றொரு புதிய பாதை வகுத்து செயல்படவேண்டும். இன்று நாட்டை ஆள்பவர்களும் பாட்டை ஆள்பவர்களும் கிராமத்திலே இருந்து நகரத்து வந்தவர்களே. முயற்சி மெய்வருந்தக் கூலிதரும் என்று சொல்வார்கள் எனவே வாழ்வில் முயற்சி செய்தால் முடியாதது ஒன்றுமே இல்லை. 

நன்றி ''வீரகேசரி''
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 கருத்து:

karikaalan சொன்னது…

வாழ்த்துக்கள்!

கருத்துரையிடுக