புதன், 2 பிப்ரவரி, 2011

ஒன்ன நெனைக்காம ஒருபொழுதும் போனதில...!








ங்கோ மலர்ந்திருந்து
எனக்குள்ளே மணப்பவளே...
நெலவே ஒன்னால
நெலமறந்து நிக்கேன்டி...

கலபேசும் கண்ணால
வலவீசிப் போனவளே...
நாளுமொன நெனச்சி
வாழுதடி ஏ..உசுரு..

பாகக்கா இனிக்குதடி...
பால்புக்க கசக்குதடி...
ஒன்ன நெனச்சாக்கா
ஒலகமெலாம் வெறுக்குதடி

முருங்கப்பூ பல்லழகே
முட்டநிற தோலழகே
கஸ்தூரி பாக்குநிற
கரும்புதட்டுக் காரிகையே...

சோளகன் மீசநிற
சோக்கான ஓமுடியில்
ஏமனச முடிஞ்சதுநீ
ஏமாத்தி போய்விடவா...

ஆசவடிஞ்சிடுச்சா
அன்புத்தீ நூந்திடிச்சா
காசக் கண்ட மனம்
காதலன மாத்திடிச்சா...

அண்டுநீ சொன்னதெல்லாம்
அடிநெஞ்சில் கேக்குதடி...
இண்டு அதநெனச்சி
இதயஅற கொளருதடி...

பகலிரவாய கதச்சதெல்லாம்
பழயகத ஆயிடுமா..?
நாம்கதச்சி கொண்டதெல்லாம்
நா மறந்து போயிடுமா...?

பிரியத்த வெதச்சிபுட்டு
பிஞ்சியில பிச்சபுள்ள
நெஞ்சபத்த வெச்சி
நெனப்பெல்லாம் நீயானாய்...

'சினேகா' சிரிப்பினிலே
சிறகடிச்சு நான்பறந்து
'சல்வார்' கனவுகளில்
சாஞ்சகத நெனப்பிருக்கு

காசித் திமிரொழுக
கட்டழகி நீபோக
எட்டா பழமெண்டு
எண்ணியது நெனப்பிருக்கு...


ஏங்கவித நீபடிச்சி
ஏக்கமுடன் தூதனுப்ப
'ஆம்ஸ்ரோங்காய்' நானன்று
ஆனதெல்லாம் நெனப்பிருக்கு....

பாடப் புத்தகத்த
படிக்கிறத்த நான்விடுத்து
பலதடவ ஓமடலில்
படிச்சதெல்லாம் நெனப்பிருக்கு...

'டியுசனுக்கே' நாமொருநாள்
'டிமிக்கி' குடுத்துபுட்டு
காதலில புதுப்பாடம்
கற்றதெல்லாம் நெனப்பிருக்கு...

நான்தின்ன நீதின்ன
நம்மிதழ தேன்தின்ன
சின்னவிழி சொக்கி
சிணுங்கியது நெனப்பிருக்கு...

விழிகளில மீன்புடிச்சி
விரல்களில சுளுக்கெடுத்து
ராத்திரியில் நாம்செய்த
ரகசியங்கள் நெனப்பிருக்கு...

வீட்டார் இதஅறிஞ்சி
வீணாக ஒனக்கடிக்க
புழவா நாந்துடிச்சி
புழுங்கியது நெனப்பிருக்கு...

அலரிவெத அரச்சி
ஆத்திரமாய் நீதின்ன
அலறி நாந்துடிச்சி
ஒளறியது நெனப்பிருக்கு....

ஒன்னப்பாத்துவர
ஓரிரவில் மனசுவெர..
நாய்வெரசி நானுழுந்து
நடுங்கியது நெனப்பிருக்கு...

கொழந்த மனசறிஞ்சும்
கொரல்வலய முறிச்சவளே..
எல்லாம் நெனப்பிருக்கு
என்னெப்பு ஒனக்கிருக்கா...

ஒன்ன நெனைக்காம
ஒருபொழுதும் போனதில
ஏய்புள்ள... நீசொல்லு..
என்னொனக்கு நெனப்பிருக்கா...?

நன்றி.


*இலங்கை ஊவா சமூக வானொலி
*சுடர் ஒளி வாரவெளியீடு
*இருக்கிறம்
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக