வியாழன், 6 மே, 2010

மாட்டுக்கு மாலை போடு..



காலினைப் பிடித்தேன் என்றன்
கழுத்துக்கு மாலை வேண்டாம்!

எழுத்திலே காணின் ஏதும்
எழுதுவீர் அதுவே போதும்!

வாலினை பிடிப்ப வர்தான்
வாழுவர் தெரியும் கெட்ட

தேளினை பிடித்தோர் கூட
தேம்புவர் எனவே உங்கள்

காலினைப் பிடித்தே னையா
கழுத்துக்கு மாலை வேண்டாம்!

கழுதையும் குரங்கும் மாடும்
கழுத்திலே மாலை பூண்டு…

மூலைக்கு மூலை கூடி
“முதுகினை சொரிந்து” எங்கும்

“போட்டோக்கு” பல்லைக் காட்டி
“போஸினை’’ கொடுத்து பின்னர்

எங்களை வெல்லும் கொம்பன்
எவனடா இங்கு உண்டு…?

என்றுதற் புகழ்ச்சி தன்னில்
எம்பித்தான் குதிக்கும் போது

அற்பன்நான் அவைகள் பாத
அடியிற்கு இன்னும் கீழே

ஆகையால் மாலை வாங்க
அடியேனுக் காசை யில்லை

காலினைப் பிடித்தேன் ‘வாப்பா’
கழுத்துக்கு மாலை வேண்டாம்!

மாண்டுநாம் மடிந்த பின்தான்
மனதினால் மாலை இடுவர்

ஈண்டிவர் போடும் மாலை
இதயத்த லல்ல வேசம்..

மாலையில் மாலை போட்டு
மாலைதான் மறையுமுன்னே

கூழையன் நாங்கள் போட்ட
“கூழுக்கு” ஆடிப் போனான…

ஆளினைப் பிடித்து வைத்தால்
ஆளலாம் என்பீர் உங்கள்

காலினைப் பிடித்தேன் ‘’வாப்பா’’
கழுத்துக்கு மாலை வேண்டாம்!

எலும்புக்காய் எச்சிலைக்காய்
எங்கள்நாய் வாலை ஆட்டும்

பிணமான பின்தான் உண்மை
பிரியத்தை அதுவும் காட்டும்

ஆகையால் மாலை சூட்ட
ஆருமே வராதீர் தேடி!

எழுத்திலே ஏதும் காணின்
எழுதுவீர் அதுவே கோடி!!

          நன்றி.
*சுடர் ஒளி வாரவெளியீடு
*தினகரன் வாரமஞ்சரி
*வார்ப்பு

*செங்கதிர்
*பதிவுகள்


இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக