புதன், 2 பிப்ரவரி, 2011

கும்பிட்ட கைகளால் குண்டுவைப்போம்..!

 கூட இருந்தே
குழிபறிப்போம்
கும்பிட்ட கைகளால்
'குண்டுவைப்போம்'

கதைத்து பேசியே
'கழுத்தறுப்போம்'
அடுத்தவனின் வளர்ச்சிக்கு
'ஆப்படிப்போம்'

மற்றவர் சிரித்தால்
மனமுடைவோம்
நண்பணின் அழுகையில்
நாம் மகிழ்வோம்

கட்டிப்பிடித்து
கலங்கிடுவோம்
எட்டி நடக்கையில்
ஏசிடுவோம்

தட்டிப்பறித்தே
தளைத்திடுவொம்
மட்டி மடையரை
'மஹான்' என்போம்

எமக்கென்று சொன்னால்
எதுவும் செய்வோம்
'எருமையின் மூத்திரம்
தீர்த்தமென்போம்'

வடிவான அன்னத்தை
'வாத்து' என்போம்
பூக்களை அழகிய
புற்களென்போம்

கானக்குயிலினை
காகமென்போம்
பேசும் மனிதனை
ஊமையென்போம்

'எம்மவர் அமுதினை
எச்சிலென்போம்...
அடுத்தவர் எச்சிலை
அமுதமென்போம்'

'நாய்களை கூப்பிட்டு
பாடு என்போம்
நாட்டுக் குயில்களை
ஓடு என்போம்'

உணவல்ல இதுநல்ல
ஊத்தையென்போம்
உணவிருக்கும் ஆனோலோ
ஊத்தை உண்போம்...

காசுக்காய்  குதிரையை
கழுதையென்போம்
கடவுளை கூட
கூவி விற்போம்...

காகித கத்தியால்
போர் தொடுப்போம்-பின்னர்
கவட்டுக்கள் கைவைத்து
தூங்கிடுவோம்.

இருக்கின்ற போதும்
இல்லையென்போம்
நறுக்கி நறுக்கியே
நாம் உயர்வோம்

கொஞ்சிப்பேசியே
கொள்ளிவைப்போம்..
கொஞ்சும் தமிழையும்
கொன்றுவைப்போம்

தூண்டிவிட்டு நாங்கள்
தூர நிற்போம்.
துவேஷம் வளர்ந்திட
தோள்கொடுப்போம்.

வகை வகையாக
வலை பின்னுவோம்
வயிற்றினில் அடித்தே
வளர்ந்திடுவோம்

எடுத்தெதற்கெல்லாம்
பிழைபிடிப்போம்
எங்கள் பிழைகளை
மறைத்திடுவோம்

குறைகள் சொல்லியே
குழப்பம் செய்வோம்
குழப்பங்கள் செய்தே
குதூகலிப்போம்

'மரங்களின் கரங்களை
முறித்திடுவோம்
பின்னர் மழையிடம் நாங்களே
பிச்சை கேட்போம்'

சிந்திக்க சொன்னால்
'சீ' என்னுவோம்
சீர்கெட்டு போவதே
சிறப்பு என்னுவோம்

'பாவங்கள் செய்தே
பழகிவிட்டோம்
மரணம் இருப்பதை
மறந்திட்டோம்'

வாழ்வில் எதுக்கும்நாம்
வருந்தமாட்டோம்
''சுனாமி'' வந்தாலும்
திருந்தமாட்டோம்..

கூட இருந்தே
குழிபறிப்போம்
கும்பிட்ட கைகளால்
'குண்டுவைப்போம்..!'

நன்றி
 *பதிவுகள்.
*காற்றுவெளி -செப்டம்பர் -2010*வீரகேசரி உயிர் எழுத்து (06.02.2011)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

4 கருத்துகள்:

Ronnie Croos சொன்னது…

நீங்கள் சொற்களைக் கையாளும் விதம் பிகவும் அருமை அஸ்மின். நல்ல ஆழமான கருத்துக்கள். வாழ்த்துக்கள்!

Poet Asmin சொன்னது…

அன்புக்குரிய நண்பர் ரொனி குரூஸ். நன்றி உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்.மீண்டும் வருக கருத்துக்கள் பகர்க.

B.Saffar சொன்னது…

அத்துணை வரிகளும் அருமை அய்யா

அம்பாளடியாள் சொன்னது…

சிலமக்கள் மனங்களின் எண்ணங்களையும்
அவர்களது செயல்களையும் காலத்துக்கு ஏற்ப
கவிதைவரிகளால் மிக அழகாகவும் ஆழமாகவும்
சொல்லியுள்ளீர்கள்.அருமையான கவிதை வாழ்த்துக்கள்...

கருத்துரையிடுக