சனி, 29 ஜனவரி, 2011

தூசு!

 பேராதனைப்பல்கலைக்கழக தமிழ்சங்கத்தின் பவளவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட 
தேசிய மட்ட கவிதைப்போட்டியில் முதலாமிடம் பெற்று
'தங்கப்பதக்கம்' பெற்ற கவிதை-2003.

மார்கழியில் மாற்றிடவா மாலை!-நீ
மனமுவந்தால் பூக்குமடி சோலை!-நான்
கார்வளவு கேட்டிடதா காளை!-எனை
காதலிக்க வந்திடுநல் வேளை!

மோருண்ட சுகம்தந்த பெண்ணே!-நிதம்
மோதுதடி என்மனசில் மின்னே!
நீர்காற்று வானமழை முன்னே-உயிர்
நீதானே வேணுமடி கண்ணே!

பேரழகி என்மனசு வெள்ள!-நீ
பேசிடாது போவதேன்டி முல்ல!
பாருலகில் உன்னழகை வெல்ல -எந்த
பேரழகும் ஊருலகில் இல்ல...!

பாடலிலே உன்னழகை சொல்ல!-தினம்
பாடுபட்டு பாணனிவன் துள்ள!-நீ
ஊடலிலே பார்வைகளால் கொல்ல!-பயந்து
உதிருதடி வார்த்தைகளும் மெல்ல!

பனிமலரே பரிவுடனே பாரு!-நீ
பாசமுடன் நேசமொழி கூறு..!
கனிமொழியே காதலுடன் சேரு!-நிதம்
கனிந்துடலால் பெற்றிடுவாய் பேறு!

மாரழகி மனம் திறந்து பேசு!-இளம்
மாருதமே தென்றலென வீசு!
சீர்வரிசை தேவலடி காசு!-அவையுன்
சிருங்கார மொழிமுன்னே தூசு!

                                                     நன்றி.
*இளங்கதிர் (பேராதனை பல்கலைக்கழக தமிழ் சங்க வெளியீடு-2003)
*கவிதைப்பூங்கா-தினகரன் வாரமஞ்சரி
*சுடர் ஒளி வாரவெளியீடு
*வார்ப்பு
*பதிவுகள்
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

’கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்’ என்ற மாதிரி
என்ன அருமை! என்ன அருமை!!

தமிழ் ஆட்சி செய்கிறது.சந்தம் அங்கே கொலு வீற்றிருக்கிறது.கருப் பொருள் கனிந்துருகுகிறது!!

அபாரம்!!

-திவ்யா-

கவிஞர் அஸ்மின் சொன்னது…

திவ்யா...
தேனும் மயங்கும் உங்கள் தமிழ் கண்டு
நானும் நாணி நிற்கின்றேன்.
வண்ணத் தமிழ்கொண்டு என்னை
வாழ்த்தியமைக்கு நன்றி.

கருத்துரையிடுக