சனி, 5 மார்ச், 2011

அன்புள்ள துரோகிக்கு...!

ன்புள்ள துரோகிக்கு
ஆசையுடன் எழுதுகிறேன்
பண்புள்ள பழையவனின்
பாச வணக்கங்கள்...

எப்படிநீ இருக்கின்றாய்
எனை உனக்கு ஞாபகமா..?
அப்படியே உன்நினைவு
அடிநெஞ்சில் இருக்குதம்மா...!

ஏதோ ஒருமூலையில்நான்
எப்படியோ இருந்தாலும்...
என்னுடைய மூளையெங்கும்
உன்குரலே கேட்குதம்மா...!

என்புள்ள வளர்ந்திட்டான்..
ஏதேதோ கேட்கின்றான்...
விண்ணுயர்ந்த கவிமரத்தின்
விலாசத்தை வினவுகின்றான்....

உன்பெயரை உரைத்திடவா?
உண்மைகளை மறைத்திடவா...?

கண்ணாடி உடைந்தகதை
கற்பனைகள் இடிந்தகதை
என்நாடி நரம்பெங்கும்
எரிஅமிலம் வடிந்தகதை....
என்செய்வேன் என்கதையை
எப்படிநான் செப்பிடுவேன்.

வண்ணக் கவிபேசும்
வடிவான விழிகளினால்
சின்னக் குறுஞ்சிரிப்பால்
சிணுங்கிவிழும் தேன்பேச்சால்
தென்னங்-கள் வழிகின்ற
கன்னங்கள் வழியாக
எண்ணங்கள் மீதேறி
என்நெஞ்சில் இடம்பிடித்தாய்.
என்னவளே பின்னெதற்காய்
எனைக்கொல்ல அடம்பிடித்தாய்..?
என்னநான் செய்தேனோ
ஏனென்னை நீமறந்தாய்..?
கண்ணே உனக்கு
காதல் கிளித்தட்டா..?

அன்றொருநாள் பாதையில்நான்
என்பாட்டில் போகையிலே
நின்றாய் விழிகளினால்
நீயேதான் தூதுவிட்டாய்...

தின்னும் உணவுக்கே
திண்டாடும் எனைத்தெரிந்தும்
இன்னும் தொழிலின்றி
இடர்காணும்  எனைப்புரிந்தும்
என்னை நேசித்தாய்
என்மனதை யாசித்தாய்
உன்னை சுவாசித்தேன்
உயிருதட்டால் வாசித்தேன்
காலம் 'ஜெட்டாக'
கடுகதியில் ஓடையிலே
நாளம் அறுத்தெறிந்தாய்.
நட்டாற்றில் விட்டெறிந்தாய்.
காலம் காலமாக
கட்டிக்காத்த என்தன்பின்
ஆழம் புரியாமல்
அடியேநீ ஒடித்துவிட்டாய்.

காலப் பெருவெளியில்
காசுபுகழ் நீதேடி
காதலித்த ஏழையிவன்
காலதனை வாரிட்டாய்.
பெண்ணேநீ என்னை
பேயனாய் எண்ணிவிட்டாய்
கண்ணே உனக்கொருநாள்
காலம்பதில் சொல்லும்.
என்றன்று உன்பிரிவால்
எரிநெருப்பால் எழுதியதை

என்னவென்று சொல்லிடுவேன்....
எப்படிநான் பேசிடுவேன்...?


நன்றி 
*சுடர் ஒளி-2008

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

5 கருத்துகள்:

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

உணர்ச்சிபூர்வமான கவிதை..

கவிஞர் அஸ்மின் சொன்னது…

உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்தலுக்கும் நன்றி.

எஸ்.மதி சொன்னது…

வண்ணக் கவிபேசும்
வடிவான விழிகளினால்
சின்னக் குறுஞ்சிரிப்பால்
என்னவென்று சொல்லிடுவேன்......

எஸ்.மதி சொன்னது…

வண்ணக் கவிபேசும்
வடிவான விழிகளினால்
சின்னக் குறுஞ்சிரிப்பால்
என்னவென்று சொல்லிடுவேன்.......

கவிஞர் அஸ்மின் சொன்னது…

உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்தலுக்கும் நன்றி.

கருத்துரையிடுக