எழுத்தாளர்,கவிஞர் இரா.சடகோபன் |
மொஸ்வில்ல தோட்ட பாடசாலை,நாவலப்பிட்டிய கதிரேஷன் கல்லூரி ஆகியவற்றில் கற்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் சிறப்புப்பட்டத்தை பெற்றதோடு இலங்கை சட்டக்கல்லூரிக்கும் பிரவேசித்து சட்டத்தரணியாகி தன் உழைப்பால் உயர்ந்தவர்.
கவிஞராக,பத்திரிகை ஆசிரியராக,மொழி பெயர்ப்பாளராக,சமூக ஆய்வாளராக, ஓவியராக இன்று பல்துறையிலும் காலூன்றித் தடம்பதித்துள்ள படைப்பாளியான இரா.சடகோபன் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் காலத்திலேயே எழுத்து,கவிதை,நாடகம்,பேச்சு,வில்லுப்பாட்டு என பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர்.
1976 ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழக பொன்விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் தனது 17ஆவது வயதில் தேனீர் மலர்கள் என்ற கவிதைக்காக மூன்றாம் பரிசினை பெற்றதன் மூலம் கவிஞர் என்ற அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டார்.
இவரின் படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகள்,கலை-இலக்கிய சஞ்சிகைகளிலும் வெளிவந்திருக்கின்றன.விஜய் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரான இவர் தற்போது சுகவாழ்வு ஆரோக்கிய சஞ்சிகையின் ஆசிரியராகவும் செயற்பட்டு வருகின்றார்.
இவரது முதலாவது கவிதை தொகுப்பான ''வசந்தங்களும் வசீகரங்களும்'' என்ற கவிதை நூல் 1998ம் ஆண்டு வெளிவந்தது.அன்றிலிருந்து
2002ம் ஆண்டு ''ஆயிரம் ஆண்டுகால மனிதர்கள்'' எனும் சிறுவர் இலக்கிய நூலையும் 2008ம் ஆண்டு ''உழைப்பால் உயர்ந்தவர்கள்'' என்ற மொழி பெயர்ப்பு நாவலினையும் வெளியிட்டுள்ளார்.தற்போது ஆங்கில வரலாற்று நாவலை ''கசந்த கோப்பி'' எனும் பெயரில் தமிழில் மொழி பெயர்த்து இலங்கையின் தமிழ் இலக்கியத்துக்கு வளம்சேர்த்து இருக்கின்றார்.
மலையக மக்கள் ஆய்வு மன்றத்தின் தலைவராக,மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் இணைச் செயலாளராக,தமிழ்-சிங்கள எழுத்தாளர் ஒன்றியத்தின் துணைச் செயலாளராக, மார்ட்டின் விக்கிரமசிங்க அறக்கட்டளை நிறுவனத்தின் இணைப்பாளராக செயற்பட்டு வரும்
எழுத்தாளர் இரா.சடகோபன் 35க்கும் மேற்பட்ட நூல்களுக்கு அட்டைப்படங்களையும் வரைந்துள்ளார்.
தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட கலை-இலக்கிய போட்டிகளில் வெற்றியீட்டி பலதடவை பரிசில்களை பெற்றுள்ள இவர் 1993ம் ஆண்டு சிறந்த பத்திரிகையாளருக்கான எஸ்மன்ட் விக்கிரம சிங்க ஞாபகார்த்த ஜனாதிபதி விருதினையும் 2000ம் ஆண்டு வசந்தங்களும் வசீகரங்களும் கவிதை நூலுக்கான மத்திய மாகாண சாஹித்திய விருதினையும் 2008ம் ஆண்டு மொழி பெயர்ப்பு நாவலுக்கான தேசிய சாஹித்திய மண்டல விருதினையும் பெற்றிருக்கின்றார்.
தனது காத்திரமான கவிதைகள் மூலமும் தனித்துவமான படைப்புக்கள் மூலம் இலங்கையின் இலக்கியத்துறையில் முத்திரை பதித்துவரும் எழுத்தாளர இரா.சடகோபன் படைப்புக்கள் இன்னுமின்னும் இலக்கிய உலகில் அழியாத சுவடுகளை பதிக்க நாமும் வாழ்த்துவோம்.
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக