எழில்கொஞ்சும் எமதூரின் அழகைப்பட
ஏற்றகவி நானில்லை கம்பன் ஷெல்லி
வளம்மிக்க எமதூரை பாடச்சொன்னால்
வரம்கேட்டு நிற்கவரும் வார்த்தைக்காக
காடுமலை ஆறுவயல் கடலும் சூழ
கட்டழகு குமரியென சிரிக்கும் ஊரில்
அறுகம்பையாளவளின் அழகைக் காண
அகிலமெலாம் இருந்தென்றும் ஆட்கள்கூடும்
வந்தாரை வரவேற்று வாழ்வைக்காட்டி
வளர்ந்தோங்கி அவர்நிற்க வழியை காட்டும்
பண்புள்ள எம்மண்ணில் ஒருநாள் பாதம்
பதித்தவர்கள் ஒருபோதும் திரும்பிப்போகார்
முந்நூறு ஆண்டுகளாய் வரலாறோடு
மூவினமும் ஒன்றுபட்டு வாழும் ஊரில்
பண்நூறு பாடுகின்ற ஆற்றல் மிக்க
பாவலர்கள் வாழ்கின்றர் வாழ்ந்தும்போனர்...
கண்ணூறு வீழ்ந்தாலும் வீழும் நெஞ்சை
கவர்கின்ற கன்னியரின் அழகை கண்டால்
கவிநூறு பாடிவிட்ட எனக்கும் கூட-அதை
கவிதையிலே பாடிடவே முடியாதப்பா....
அழகெல்லாம் வந்திறங்கி அயர்ந்து தூங்கும்
அன்னை மண் பொத்துவிலூர் இயற்கையாலே
உலகெல்லாம் உவந்தேகும் இடத்தில் ஒன்றாய்
உள்ளதினால் பிரச்சினைகள் தோன்றலாச்சு....
ஆளுயர சிலை நிற்க அழகாய் தோன்றும்
அனுராதபுரக்கால சிற்பம் போன்று-ஊரில்
கண்டுமகிழ்வடைகின்ற தலத்தில் புதிராய்
கடற்கரையை அண்மித்த தலமொன்றுண்டு
தொன்றுதொட்ட இவ்விடத்தை பார்க்கவென்று
தொகையான பொதுமக்கள் வந்து செல்வர்
தொல்லியல் ஆய்வுக்கு சொந்தமான
நல்லிடமாய் இவ்விடமும் விளங்கக் கண்டேன்
பிக்குமார் வந்திங்கு பிரித்துமோதி
மக்குவேலை செய்தின்று மகிழுகின்றார்
தக்கபதில் கொடுப்பதற்கு ஒன்று சேர்ந்து
தலைவர்கள் எனச்சொல்வோர் தயங்குகின்றார்
புதைபொருள் ஆராய்ச்சி நிலையெமென்று
புடம்போட்டு சொன்னாலும் புரியவில்லை
கதைகட்டி கண்மூக்கு காலும் வைத்து
காழ்ப்புண்வால் எம்மோடு உரசுகின்றார்
சிதைந்திருந்த மண்டபத்தில் சிலைகள் வைத்து-சிலர்
சிங்களத்தை நிலைநாட்ட முயற்சிக்கின்றார்
புதைந்திருந்த புதைபொருளை தேடிக்கண்டு-இன்று
புரிந்துணர்வை புத்தரினால் குழப்புகின்றார்
வதைபட்டு உதைபட்டு வாட்டம் கண்டு நாங்கள்
வணை ஓதும் அவர்களினை தடைகள் செய்தும்
விதைபோட்டு போதியெனும் விருட்ஷம் செய்து
விழாச்செய்து களிக்கின்றார் விம்முகின்றோம்
இருஇனங்கள் இதனாலே இரண்டுபட்டு
இடருக்குள் வீழவுளர் இதனால் இன்று
புராதன இத்தலத்தின் புகழும் குன்றி
புரிந்துணர்வும் குன்றும் நாள் தூரமில்லை
பொத்துவில் எனும் பெயரை மாற்றி இன்று
''பௌத்தவில'' என்றாக்க முயற்சிக்கின்றார்
புத்திகெட்ட அமைச்சர்கள் எம்பிமார்கள்
புரோக்கர்கள் வாய்ப்பார்த்து நிற்கின்றாரேன்...?
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
1 கருத்து:
சத்தான வார்த்தைகளில்
பொத்துவில் ஊர் பற்றி
வித்தகம் பேசியது உம் கவிதை!
உணவதுவே அசைவமானால்
உணர்வுகளும் அப்படியே;
பௌத்த ,சிங்களர்கள்
சித்தமும் அப்படித்தான்.
மா.உலகநாதன்
கருத்துரையிடுக