ஞாயிறு, 5 ஜூன், 2011

படைப்பாளி அறிமுகம் -15 கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன்


தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட படைப்பாளியும் ஒளிபரப்பாளருமான கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் பன்முக ஆளுமைகொண்டவர்.

கவிதை,சிறுகதை கட்டுரை, பத்தியெழுத்து, சிறுவர் இலக்கியம், விமர்சனம் போன்ற துறைகளில் முத்திரை பதித்திருக்கும் இவரது படைப்புக்கள்  இலங்கையின் தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகள்,இணைய சஞ்சிகைகளில் களம் கண்டுள்ளன.இவர் 'நாட்டவிழி நெய்தல்' http://ashroffshihabdeen.blogspot.com எனும் தனது வலைப்பூவிலும் தொடர்ந்தும் எழுதி வருகின்றார்.

மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடியை பிறப்பிடமாக கொண்ட இவர் ஆரம்பத்தில் 'ஓட்டமாவடி அஷ்ரப்' எனும் பெயரிலும் பல படைப்புக்களை தந்திருக்கின்றார்.

ஹாஸ்யமும் சுவாரசியமும் கலந்த கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் எழுத்துக்கள் இளைய தலைமுறையினராலும் பரவலாக விரும்பி படிக்கப்படுகின்றன.
இவர் ,ஒரு முறை புதிதாக தன்னை வாசிக்க வருகின்ற ஒருவரை திரும்பவும் தன்னை நோக்கி திரும்ப செய்கின்ற எழுத்து நடையின் சொந்தக்காரர்.மரபுக் கவிஞனாக தன்னை அடையாளப்படுத்திய இவர் புதுக்கவிதையிலே சிறந்த ஆளுமை மிக்கவர்.இவருக்கு அதிகளவிலான சிறப்பை தேடிக்கொடுத்த ஷெய்த்தூன் கவிதை சர்வதேச கவிதைகளோடு வைத்து நோக்கத்தக்கது.

2002ம் ஆண்டு இலங்கை அரசு கொழும்பில் இலங்கை இஸ்லாமிய ஆய்வகத்தின் ஆதரவுடன் நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் செயலாளராக இயங்கியதை தனது வாழ்நாள் சாதனையாக கருதும் கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினதும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினதும் செயலாளராகவும் இயங்கிவருகின்றார்.


'யாத்ரா' எனும் தமிழ் கவிதைகளுக்கான சஞ்கையின் ஆசிரியரான இவர் 'மீஸான் கட்டைகளில் மீள எழும் பாடல்கள்' கவிதை தொகுதியின் பிரதான தொகுப்பாளராகவும் இருந்திருக்கின்றார்.


இதுவரை  
1.காணாமல் போனவர்கள்
2.என்னைத் தீயில் எறிந்தவள்
3உன்னை வாசிக்கும் எழுத்து'
 என்ற மூன்று கவிதை நூல்களையும்
1.புள்ளி
2.கறுக்கு மொறுக்கு
3.புல்லுக்கு அலைந்த மில்லா என்ற  
மூன்று சிறுவர் நூல்களையும் 
1.தீர்க்கவர்ணம்
2.ஸ்ரீலங்காவலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம்வரை 
என்ற பல்சுவை பத்திகளின் தொகுப்பு பயணக்கட்டுரை தொகுப்பு போன்றவற்றையும் தமிழ் இலக்கிய உலகத்திற்கு தந்திருக்கின்றார்.


இவரின் 'என்னைத் தீயில் எறிந்தவள்' கவிதை நூல்  2008ம் ஆண்டுக்கான இலங்கை அரசின் சாஹித்திய மண்டல பரிசினை பெற்றுக்கொண்டுள்ளது.


'தமிழியல் விருது' உட்பட பல உள்ளூர் விருதுகளையும்  பெற்றிருக்கும் கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன்  தமிழகத்தில் நடந்த 5வது உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழாவின் கவியரங்கில் சிறப்பாக கவிபாடி கவிக்கோ அப்துல் ரஹ்மானால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

முற்றிலும் உண்மைக்கதைகள் அடங்கிய இவரது புதிய நூலான '''ஒரு குடம் கண்ணீர்'' அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக