திங்கள், 12 செப்டம்பர், 2011

போராளிகளே புறப்படுங்கள்..!

 இலங்கை முஸ்லிம் சமூக அரசியல் விடுதலையின் அடிநாதம் மர்ஹூம் எம். எச். எம். அஷ்ரப்



அரசியல் களத்தில் உயிரை துச்சமென மதித்து தனித்துவக் கட்சியின் மூலம் முஸ்லிம் சமூகத்தின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச் செய்து தனித்தவ முத்திரை பதித்த மர்ஹூம் எம். எச். எம். அஷ்ரப் மறைந்த நாள் செப்டெம்பர் 16.இலங்கை முஸ்லிம் சமூகத்தின் இருப்பு, கெளரவம், தனித்துவம், உரிமை பற்றிச் சிந்தித்து ஆயுதக் கவர்ச்சியின்பால் செல்லவிருந்த இளைஞர்களை அஹிம்சை வழிதிருப்பி வரலாறு கண்ட பெருமை இவரையே சாரும்.

எடுப்பார் கைப்பிள்ளைகளாக ஊமைகளாக பேசாமடந்தைகளாக விளங்கிய முஸ்லிம்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம் அரசியல் மயப்படுத்தினார். மர்ஹூம் அஷ்ரப் ஏனைய சமூகம் அனுபவிக்கும் உரிமைகளை முஸ்லிம் சமூகமும் பெற்று தன்மானத்துடன் வாழ வழி வகுத்தார்.வேதனை, கண்ணீர், இரத்தம், உயிர் ஆகியவற்றை விலையாக அதற்கு வழங்கினார். தனது பயணப் பாதையை வகுத்ததோடு அதற்கான வழியையும் அமைத்தார். புரையோடிப்போன யுத்தத்தின் கொடுமை கண்டு மனம் வெதும்பினார்.

இனவாதம் பேசி இரத்த ஆற்றில் குளித்தோரை தன் பேச்சுப் புலமையினால் விவாதத்திற்கழைத்து வெற்றியும் கண்டார். இதன் மகுடமாக தேசிய ஐக்கிய முன்னணியைத் தோற்றுவித்தார். தார்மீக கோட்பாட்டையும் மானுட நேயங்களையும் மதிக்கும் அடையாளமாக இதனை மாற்றியமைத்தார். மூன்றரை மணி நேரம் பேசி பாராளுமன்றில் சாதனையும் படைத்தார்.14 வயதில் தாய் எனும் கவிதையுடன் ஆரம்பித்த இலக்கியப் பயணம் 'நான் எனும் நீ' எனும் தொகுப்போடு முடிவடைந்தது. அதில் தனது மரணம் அமையப்போகும் விதத்தை ஆருடமாகக் கூறினார் .மகாகவி அல்லாமா இக்பாலின் கவிதைகளுடன் காதல் கொண்டு சங்கமித்ததுடன் "போராளிகளே புறப்படுங்கள்" என கவித்துவம் மிளிரப் பாடினார்.

பன் மொழிப் புலமையும், பேச்சாற்றலும், தூரதிருஷ்டிச் சிந்தனையும், அரசியல் சாணக்கியமும் அன்னாரது அணி கலன்களாக விளங்கியது.
முஸ்லிம் சமூகத்தின் விடுதலை கல்வியிலே தங்கியுள்ளதெனக் கனாக் கண்ட மர்ஹூம் அஷ்ரப் தென் கிழக்குப் பல்கலைக்கழகம், கல்விக் கல்லூரிகளின் அமைவினூடே அதனை நனவாக்கிக் காட்டினார். சர்வதேசமும் முஸ்லிம் களுக்கும் பிரச்சினை உண்டென இனங்காண வைத்த சிறப்பு மர்ஹூம் அஷ்ரபுக்கு மட்டுமே உரித்தானதாகும்.
அரசியல், கல்வி, கலை, கலாசாரம், ஊடகம் என பல்துறையில் செயல் வீரனாக விளங்கிய வித்தகனின் உயிர் செப்டெம்பர் 16 இல் அரநாயக்க மலைத் தொடரில் அணைந்தது. முழு இலங்கை முஸ்லிம்களையும் ஆறாத் துயரில் ஆழ்த்திய நாள் ஒவ்வொரு செப்டெம்பர் 16 இலும் இறை மீட்கப்படுகிறது.



மர்ஹூம் எம். எச். எம். அஷ்ரப் மரணிக்க முன்பு எழுதப்பட்ட இந்த கவிதை ''நான் எனும் நீ'' என்ற கவிதை நூலில் இடம்பெற்றுள்ளது.
''நானும் எனும் நீ''  கவிதை நூலே இலங்கையில் மிகப்பெரிய தொகுப்பாக வெளிவந்த தனி நபரின் கவிதை நூலாகும். அன்னாரின் ஆத்மா சாந்திக்காக அனைவரும் பிரார்திப்போம்


போராளிகளே புறப்படுங்கள்
ஒரு துப்பாக்கியின் ரவைகளினால்
எனது இறைச்சல் அடங்கி விட்டதுக்காய்
நமது எதிரி
வென்றுவிட்டான் என்று நீ
குழம்பிவிடக் கூடாது

அன்றுதான்
போராட்டம் எனும் நமது
இருண்ட குகைக்குள்
வெற்றிச் சூரியனின்
வெண்கதிர்கள் நுழைகின்றன
என்பதை நீ மறந்து விடவும் கூடாது

உனது தலைவனுக்கு
ஒன்றுமே நடக்கவில்லை என்பதனை
நீ எப்போதும் மறந்திடாதே!
தலைவர்கள் ஒரு போதும்
மரணிப்பதில்லை என்பதனை
நான்
சொல்லித்தரவில்லையா?
என்னை அதற்காய் நீ
மன்னித்து விடுவாயாக.

நாம் அல்லாஹ்வின் பாதையில்
நடந்து வந்தவர்கள்
நீங்களெல்லாம் தொடர்ந்து அப்பாதையில்
நடக்க இருப்பவர்கள்

இந்தப் போராட்டத்தில்
சூடுண்டாலும், வெட்டுண்டாலும்
சுகமெல்லாம் ஒன்றேதான்
நமது போராளிகள்
யாரும் மரணிக்கப்போவதில்லை!

போராளிகளே புறப்படுங்கள்
ஓரத்தில் நின்று கொண்டு
ஓய்வேடுக்க நேரமில்லை
இந்த மையத்தைக் குளிப்பாட்டுவதில்
உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்

தண்ணீரும் தேவையில்லை
பன்னீரும் தேவையில்லை
உங்கள் தலைவனின் உடலில்
இரத்தத்தால் சந்தனம் பூசப்பட்டுள்ளதா?


அது அவனின் மண்ணறையில்
சதா மணம் வீச வேண்டுமெனில்
தூக்கி விரைவில் எடுத்துச் சென்று
தொழுது விட்டு அடக்குங்கள்

இந்த மையித்தைக் குளிப்பாட்டுவதால்
கடைசி நேரத்தில் தலைமைத்துவக்
கட்டுப்பாட்டை மீறாதீர்கள்
கண்ணீர் அஞ்சலிகள் போதும்
கவலைகளை கொஞ்சம் மறந்து தூக்குங்கள்

இரத்தத்தால் தோய்ந்திருக்கும்
எனது ஆடைகளை எடுத்து வீசாதீர்கள்
வேண்டுமெனில் எனது “இஹ்ராம்''
துண்டுகளை
அவற்றுக்கு மேலே எடுத்துப் போடுங்கள்

எனது உடலில் இருந்து பொசிந்து வரும்
இரத்தச் சொட்டுக்கள், அவற்றை தழுவும்
பசியுடன் இருப்பதைப் பாருங்கள்

எனது மூக்குக்குள்ளும்
எனது காதுகளுக்குள்ளும்
பஞ்சுத் துண்டங்களை வைத்தென் முகத்
தோற்றத்தை
பழுதாக்கி விடாதீர்கள்

சில வேலைகளில் உங்களை நான்
சுவாசிக்காமலும்
சில வேலைகளில் உங்களை நான்
கேட்காமலும்
சில வேலைகளில் உங்களை நான்
பேசாமலும் இருந்திருக்கின்றேன்

குருடர்களாகவும்
செவிடர்களாகவும்
ஊமையர்களாகவும் இல்லாதவர்களால்
இப்போராட்டத்தில் நின்று பிடிக்க முடியாது

கபுறுக் குழிக்குள்ளாவது
என்னை சுவாசிக்க அனுமதியுங்கள்
ஹுர்லீன்களின் மெல்லிசைகளை
கேட்டு ரசிக்கும் பாக்கியத்தைத் தாருங்கள்

தூக்குங்கள் இந்த மையித்தை இன்னும்
சுனக்கவும் தேவையில்லை.
தூக்கி விரைவில் எடுத்துச் சென்று
தொழுது விட்டு அடக்குங்கள்
ஓரத்தில் நின்றுகொண்டு
ஓயாமல் தர்க்கம் செய்யும்

வீரத்திற்கு வையுங்கள் முற்றுப் புள்ளி
 
கருத்து வேறுபாடென்னும்
கறையான்கள் வந்துங்கள்
புரிந்துணர்வை சீரழிக்கும்! மிகவும்
புத்தியுடன் நடந்துகொள்ளுங்கள்


வேகத்தைக் குறைக்காமல்
வெற்றியுடன் முன்னே செல்லுங்கள்


ஆலமரமாய்
ஆயிரம் விழுதுகளுடன் நமது மரம்
வாழவேண்டும் - அதை
வாழ்விற்கப் புறப்படுங்கள்


எனது பனி இனிது மடிந்தது
உங்கள் பணிகளைச் செய்வதற்காய்ப்
புறப்படுங்கள்


அவனின் நாட்டத்தை
இவனின் துப்பாக்கி ரவைகள்
பணிந்து தலைசாய்நது
நிறைவேற்றியுள்ளன.


விக்கி அழுது
வீணாக நேரத்தை ஓட்ட வேண்டாம்
தூக்கி விரைவில் எடுத்துச் சென்று
தொழுது விட்டு அடக்குங்கள்


மர்ஹூம் எம். எச். எம். அஷ்ரப் 
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 கருத்துகள்:

கே.எஸ்.செண்பா சொன்னது…

"நெஞ்சுப் பொறுக்குதில்லையே இந்த நிலைக்கெட்ட மனிதரை நினைத்து விட்டால்" பாரதியின் பாடல்தான் ஞாபகத்திற்கு வருகிறது...விடியல் எப்போது? ஏங்கித் தவிக்கிறது மனம்!

"உனது தலைவனுக்கு
ஒன்றுமே நடக்கவில்லை என்பதனை
நீ எப்போதும் மறந்திடாதே!
தலைவர்கள் ஒரு போதும்
மரணிப்பதில்லை என்பதனை
நான்
சொல்லித்தரவில்லையா?
என்னை அதற்காய் நீ
மன்னித்து விடுவாயாக." அருமை!

சிந்தையின் சிதறல்கள் சொன்னது…

கண்ணீர் சிந்தியது இதனைப் பார்த்த போது மீண்டும் அந்த மாமனிதன் என் கண்முன்னே காட்சி தந்தார் நன்றி கவிஞரே

கருத்துரையிடுக