சனி, 22 அக்டோபர், 2011

படைப்பாளி அறிமுகம் - 20 எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்

 எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்
நாடறிந்த எழுத்தாளரான  தெளிவத்தை ஜோசப் அவர்கள்    கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக இலக்கிய வாழ்வு வாழ்ந்து மலையக இலக்கியத்தின் அடையாளத்திற்கும் தனித்துவத்திற்கும் தனது எழுத்துக்கள் மூலம் பெரும் பங்காற்றி மலையக இலக்கியத்தின் தலைமைப் படைப்பாளியாகத் திகழ்பவர் .

சந்தனசாமி ஜோசப் என்ற இயற்பெயர் கொண்ட  தெளிவத்தை ஜோசப் சிறுகதையாளர், நாவலாசிரியர், இலக்கிய ஆய்வாளர். அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர். சாதாரணத் தோட்டத் தொழிலில் அல்லாடிக்கொண்டிருக்கும் தொழிலாளிகளைப் போன்ற உதிரி மனிதர்களைப் பாத்திரங்களாகக் கொண்டவை இவரது படைப்புலகம்.

இவரது படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைளிலும் தமிழக சஞ்சிகைகளிலும் களம் கண்டுள்ளன.தனது தமிழாற்றலால் தான் பிறந்த மலையகத்திற்கும்,தெளிவத்தை ஊருக்கும் மாபெரும் புகழைச் சேர்த்தாலும் அவர் உலகத் தமிழ் இலக்கியத்தின் சொத்து, இதுவரை பல நூல்களை எழுதியுள்ள அவர் எண்ணிலடங்கா ஆய்வு மற்றும் பயணக் கட்டுரைகளை தேசியப் பத்திரிகைகளிலும் எழுதியுள்ளதுடன் அதற்கான உரிய கெளரவங்களை, தேசிய சர்வதேச மட்டத்திலும் பெற்றுள்ளார்.


ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதுவதோடு தனது இலக்கியப் பயணத்தை ஆரம்பித்த இவர், காலப் போக்கில் குறுநாவல், நாவல், விமர்சனம், ஆய்வு,திரைக்கதை, வானொலி நாடகம் எனப் பல தளங்களில் தனது உழைப்பை விஸ்தரித்து மலையக இலக்கியத்தை, அதனூடாக ஈழத்து இலக்கியத்தை வளப்படுத்தியதோடு உலகத்தமிழ் இலக்கியத்திற்கும் உரம் சேர்ந்தவர்.
'காலங்கள் சாவதில்லை' என்பது இவருடைய முக்கியமான நாவல் ஆகும். நாமிருக்கும் நாடே சிறுகதைத் தொகுதிக்காக இலங்கைச் சாகித்திய விருது பெற்றுள்ளார்.2000 ஆம் ஆண்டில் வெளிவந்த இவரது 'மலையகச் சிறுகதை வரலாறு' இவரை ஓர் சிறந்த ஆய்வாளராக இனங்காட்டியது. அவ்வாண்டிற்கான தேசிய சாகித்திய விருதினையும் யாழ். இலக்கிய வட்டத்தின் சம்பந்தன் விருதினையும் இந்நூல் பெற்றுக்கொண்டது.


துரைவி பதிப்பகத்தினூடாக இவர் வெளிக்கொணர்ந்த மலையகச் சிறுகதைகள் உழைக்கப் பிறந்தவர்கள் ஆகிய இரு தொகுப்புகள் மலையக இலக்கியத்துக்கு இவர் அளித்த அரிய செல்வங்களாகும். எழுபதுவருட காலத்துக்குரிய கதைகளைத் தேடித் தொகுத்து இரண்டு வருட கால எல்லையுள் இப்பணியினைச் செய்து சாதனை படைத்தவர் ஜோசப்.
இவரது குறுநாவல்களான 'பாலாயி' 'ஞாயிறு வந்தது' 'மனம் வெளுக்க' ஆகிய மூன்றும் ஒரே தொகுப்பாக 1997ல் வெளிவந்தது. தமிழ் நாட்டின் சுபமங்களா சஞ்சிகையும் தேசிய கலை இலக்கியப் பேரவையும் இணைந்து நடத்திய குறுநாவல் போட்டியில் இவரது குடைநிழல்' இரண்டாவது பரிசினைப் பெற்றது.

 1979ம் ஆண்டு 'நாமிருக்கும் நாடே'' சிறுகதைக் நூலுக்காக மலையக இலக்கிய நூலுக்கான முதல் சாஹித்திய விருதினை பெற்ற மலையக படைப்பாளிக்கான முதல் கலாபூஷணம் விருதினையும் பெற்றவர்.தமிழியல் விருது, தேசிய ஒற்றுமைக்கான சாஹித்திய விருது, பேராதனை பல்கலைக்கழகத்தின் இலக்கிய சாதனையாளர் விருது, மேல் மாகாண சபை மத்திய மாகாண சபை வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார்.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக