வியாழன், 7 ஜூன், 2012

மித்திரன் வாரமலரில் இடம்பெற்றுள்ள பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மினின் நேர்காணல்

வசந்தம் TVயில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் பணிபுரியும் கவிஞர் அஸ்மின் ஈழத்தில் மரபுக் கவிதை எழுதி வரும் இளம் கவிஞர்களுள் முக்கிய கவிஞராகவும், திரைப்பட பாடலாசிரியராகவும்,அறியப்பட்டு வருகின்றார். சக்திTVயினால் நடாத்தப்பட்ட'இசை இளவரசர்கள்' போட்டி நிகழ்ச்சி மூலம் பாடலாசிரியராக அறிமுகமான இவர்,தேசியமட்ட கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு ஜனாதிபதி விருது(2001),பேராதனை பல்கலைக்கழகத்தின் தங்கப் பதக்கம் (2003) பெற்றுள்ளதோடு 2 முறை சிறந்த பாடலாசிரியருக்கான விருது (2010,2011) அகஸ்தியர் விருது (2011), உட்பட 10க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.
சுபாசெவ்வேளின் தயாரிப்பில் இயக்குனர் கேசவராஜின் இயக்கத்தில் வெளிவரவுள்ள ''பனைமரக்காடு'' தமிழ் திரைப்படத்தில் பாடல்களை எழுதியிருக்கும் இவர் ஜீவா சங்கரின் இயக்கத்தில் விஜய் அன்டனியின் நடிப்பில் வெளிவரவுள்ள ''நான்'' திரைப்படத்தில்  இசையமைப்பாளர் விஜய் அன்டனியின் இசையில் பாடல் எழுதியுள்ளார்.


1. இந்திய திரைப்படம் ஒன்றிற்கு பாடல் எழுதும் வாய்ப்பினை எப்படி பெற்றீர்கள்?

திரைப்படத்தில் பாடல் எழுதுவது முதலாவதாக எனக்கு 'பனைமரக்காடு' திரைப்படத்தின் மூலமே சாத்தியமானது.செவ்வேளின் தயாரிப்பில் இயக்குனர் கேசவாஜின் இயக்கத்தில் விமல்ராஜாவின் இசையில் 'உயிரிலே..' என ஆரம்பிக்கும் பாடலை எழுதியிருந்தேன். இந்தப்பாடலை தென்னிந்திய பின்னணி பாடகர் ஆனந்த் பாடியிருந்தார். அதன்பிறகு இவ்வருடம் பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் இசையில் 'நான்' என்ற திரைப்படத்தில் பாடல் எழுதியுள்ளேன்.இந்தப்பாடலில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது சர்வதேச ரீதியாக வைத்த போட்டி ஒன்றின் மூலமே ஆகும்.

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்கள் பல புதிய தலைமுறை பாடகர்களை,பாடலாசிரியர்களை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.எனவே, தான் தயாரித்து இசையமைத்து கதாநாயகனாக அறிமுகமாகும் 'நான்' திரைப்படத்தில் புதிய பாடலாசிரியரை அறிமுகம் செய்யும் நோக்கோடு தென்னிந்திய தொலைக்காட்சிகள் மற்றும் இணையத்தளங்கள் வாயிலாக ஒரு போட்டி ஒன்றை அறிவித்திருந்தார். போட்டியில் வெற்றி பெறுபவர் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவருக்கு வாய்ப்பளிப்பதாக அறிவித்திருந்தார்.அவரால் வழங்கப்பட்ட கதைச்சூழல், இசைக்கேட்ப நானும் பாடலை எழுதி அனுப்பியிருந்தேன்.பல மாதங்கள் கடந்தும் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை திடிரென ஒருநாள் எனக்கு அழைப்பை ஏற்படுத்தி வாழ்த்து சொன்ன அவர் போட்டியில் நான் வெற்றியீட்டியதாக அறிவித்ததோடு உடனே சென்னைக்கு வருமாறு அழைத்திருந்தார். நான் கடந்த மார்ச் மாதம் சென்னை சென்று இரண்டு நாட்கள் அவரோடு தங்கியிருந்து முழுப்பாடலையும் எழுதிக்கொடுத்துவிட்டு வந்திருக்கின்றேன்.பாடல் வெளியீட்டு விழா மிகவிரைவில் பிரமாண்ட முறையில் நடைபெறவுள்ளது.அதற்கும் என்னை அழைக்க இருக்கின்றனர்.

2. அந்தப் பாடல் பற்றி...

'நான்' திரைப்படம் என்னைப் போன்று முன்னேறத்துடிக்கும் இளைஞனின் கதை முற்றிலும் மாறுபாடான கதைக்களம்.நான் நிச்சயம் வெற்றிபெறு ம் இத்திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய  திரையுலகம் இலங்கையை திரும்பிப்பார்க்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அது தத்துவார்த்தமான பாடல் இன்றைய காலகட்டத்தின் யதார்த்தத்தை பாடலில் நான் பதிவு செய்துள்ளேன்.வாழ்வில் முன்னேறத் நினைக்கும் ஒருவன் நேரான பாதையில் தனது பயணத்தை ஆரம்பிக்கின்றான் அவன் போகும் பாதை எங்கும் தடைகளே அதிகம் இருக்கின்றன.எனவே, தப்பு செய்து முன்னேறுகின்றான் அவன் செய்யும் தப்பு தப்பாக இருந்தாலும் அதனை பார்க்கின்ற மனிதர்களுக்கு தப்பாக அது தோன்றவில்லை அது சரியாகவே இருக்கின்றது.அந்த சூழலில்  'தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பு இல்லை'என்று பாடலின் பல்லவி ஆரம்பிக்கின்றது.இந்த பாடலின் சரணங்களுக்காக சுமார் 50 பாடலுக்குரிய வரிகளை எழுதி இருப்பேன் இறுதியாக 2 சரணங்கள் தெரிவாகியது.

3. இந்தியாவில் புதிய புதிய கவிஞர்கள் உருவாகிக்கொண்டிருக்கும் நிலையில் உங்கள் கவிதை வரிகள் அவர்களை ஈர்க்கும் என எதிர்பார்த்தீர்களா?

 நிச்சயமாக எதிர்பார்த்தேன்.தேசிய மட்டத்தில் நடைபெற்ற பல போட்டிகளில் வெற்றியீட்டி அனுபவமும் எனக்குள் நம்பிக்கை விதைகளை நட்டுச்சென்றது.மேலும் இந்திய கவிஞர்களுக்கு இலங்கையில் உள்ள கவிஞர்கள் ஒருபோதும் சோடைபோனவர்களல்ல.வாய்ப்புக்கிடைத்தால் வரலாற்றை புரட்டிப்போடுகின்ற வலிமை இலங்கை கவிஞர்களின் பேனாவுக்கு இருக்கிறது.அங்கே அவர்கள் மையைத் தொட்டு எழுதிய போது இங்கே ரத்தத்தில் நனைத்து எழுதியவர்கள் எமது படைப்பாளிகள்.அந்த வழியில் நான் வெறும் வார்த்தைகளை விதைப்பவன் அல்ல வாழ்க்கையை உழுபவன்  வலிகளுக்கு வழிகள் சொல்கின்ற வாண்மை எனது எழுத்துக்கு இருக்கின்றது நான் நம்பகின்றறேன்.


4. உங்கள் கவிதை வரிகளை இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு அனுப்பிவைத்த பின்னர் எதிர்பார்ப்போடு காத்திருந்தீர்களா?அல்லது நீங்கள் இதனை எதிர்பார்க்கவே இல்லையா?

'நீ எதுவாக ஆக நினைக்கின்றாயோ  அதுவாகவே மாறிவிடுகின்றாய் ' என்று சொல்வார்கள்.அந்தவகையில் நான் இந்த போட்டியில் முதன்மை நிலைபெறவேண்டும் என்றே நினைத்தேன். வெற்றி கிடைத்தது.பாடலை எழுதி முடித்தவுடன் எனக்குள் பாடல் தெரிவாகும் என்ற நம்பிக்கை எனக்குள் அதிகரித்தது.என்றாலும் சில சந்தேகங்கள் இருந்தது பல்லாயிரக்கணக்கான பாடல்களுக்குள் என்னுடைய பாடலை அவர் சரியாக பார்ப்பாரா என்று மனசு அலைபாய்ந்தது எனவே 'வந்தா மஸ்தான் போன சுல்தான்' என்ற நிலையில் இருந்து விட்டேன்.பாடலை எழுதி முடித்துவிட்டு நண்பர்கள் சிலரிடம் காட்டினேன் பாடல் தரமாக இருக்கின்றது நிச்சயமாக வெற்றிபெறும் என்று உற்சாக மூட்டினார்கள்.ஆனால் முடிவை ஜனவரி முதலாம் திகதி அறிவிப்பதாக அவர் அறிவித்திருந்தார் முடிவு வெளியாகததால் சோர்ந்து போயிருந்தேன் மார்ச் மாதம் 5ம் திகதி திடிரென விஜய் ஆண்டனி தொலைபேசியில் அழைத்து வெற்றி பெற்றதை அறித்தவுடன் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.எனது உழைப்பும் நம்பிக்கையும் வெற்றி பெற்றது.

5. கவிதைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன என அறிந்த பின்னரான உங்களது மனப்பாண்மை எவ்வாறு இருந்தது?
மகிழ்ச்சியாக இருந்தது.இன்னும் என் எழுத்தின் மீதான நம்பிக்கை எனக்கு அதிகரித்தது.நான் இன்று கண்டிருக்கும் ஒவ்வொரு வெற்றிப்படிகளும் நேற்று நான் கண்ட கனவுகளே.வாழ்வில் ஜெயிக்கவேண்டும் என்றால் போராடவேண்டும்.நான் ஜெயிக்க பிறந்தவன் போராடிக் கொண்டே இருப்பேன்.

6. உங்கள் கவிதைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன என அறிந்த பின்னரான ஆதரவுகள் வரவேற்புகள் எவ்வாறு உள்ளன.

முகநூலில் பல்லாயிரக்கணக்கானோர் பாராட்டினார்கள்.புலம்பெயர் நாடுகளில் உள்ள எமது உறவுகள் தொலைபேசி மூலம் வாழ்த்தினார்கள்.இணையத் தளங்கள் உள்ளூர் ஊடகங்கள் என பலர் எனது செய்திகளை பிரசுரித்து என்னை ஊக்கப்படுத்தினார்கள்.அவர்களுக்கு நன்றி சொல்ல இவ்வேளையில் கடமைப்பட்டுள்ளேன்.

7. இலக்கிய துறையில் எதிர்கால திட்டங்கள்.

2001, 2002 ம் ஆண்டுகளில் 'விடைதேடும் வினாக்கள்', 'விடியலின் ராகங்கள்' என இரண்டு கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன.எனது 3வது கவிதை நூலான 'ரத்தம் இல்லாத யுத்தம்' மிகவிரைவில் வெளிவர இருக்கிறது.நூலின் அணிந்துரையை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். இதில் அடங்கியுள்ள கவிதைகளை ஆங்கிலத்திதில் கலாபூஷணம் கவிஞர் மீஆத் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார்.இந்த நூல் வெளிவருவதற்கான முழுப்பொறுப்பினையும் லண்டனில் உள்ள என்னுடைய நண்பர் அருளினி சிவனேஷன் அவர்கள் ஏற்றிருக்கின்றார் நூல் இருமொழிகளிலும் மிகச்சிறப்பாக தயாராகிக்கொண்டிருக்கிறது நான் அதனால் தாயாராகிக்கொண்டிருக்கின்றேன்.

8. உங்களுடை வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகள் ஏதாவது உண்டா?

என்னுடைய வாழ்வில் மறக்கமுடியதா நிகழ்வுகள் பல இருக்கின்றன.2001ம் ஆண்டு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவினால் கிடைக்கப் பெற்ற விருது அதன் பிறகு மலேசியாவில் மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் இடம்பெற்ற சர்வதேச கவியரங்கில் கவிக்கோ அப்துல்ரஹ்மான் தலைமையில் சிறப்பாக கவிதைபாடி அவரது பாராட்டினை பெற்றுக்கொண்டது.அந்த நிகழ்வினை பற்றி மலேசியாவில் தமிழ் ஊடகங்களும் பாராட்டி எழுதியிருந்தன.இலங்கையின் நீதியமைச்சர் ரவூப்ஹக்கீம் உட்பட பல முக்கியஸ்தர்கள் என்கவிதா ஆற்றுகைக்கு  பாராட்டு தெரிவித்திருந்தார்கள்.எனக்கு கிடைத்த அந்த அரிய வாய்ப்பை சரியாக பயன்படுத்தியதன் விளைவாக இலங்கையிலும் பல தடவை என்னை கௌரவித்திருந்தார்கள்.

9. உங்கள்  காந்தள் பூக்கும் என்ற பாடல் சர்வதேச தமிழ் வானொலியெங்கும் ஒலிப்பதாக அறிந்தோம் அது பற்றி சொல்லுங்கள்.

 2010ம் ஆண்டு கந்தப்பு ஜெயந்தனின் இசையில் நான் எழுதிய எங்கோ பிறந்தவளே என ஆரம்பிக்கும் பாடல் சர்வதேசமெங்கும் மிகுந்த வரவேற்பை பெற்று பலரதும் கைதட்டல்களை எமக்க பெற்றுத்தந்து.
அதன்பிறகு ஜெயந்தனின் இசையில் நான் எழுதிய ஒரு பாடலை தென்னிந்திய திரைப்பட இயக்குனர்கள் புலம்பெயர்ந்த நம்மவர்கள் என பலரும் பெரிதாகப் பாராட்டினார்கள்.அந்தப்பாடல்தான் காந்தள்பூக்கும் தீவிலே என்ற பாடலாகும்.இந்தப்பாடலை ஜெயந்தனுடன் சேர்ந்து அவரது சகோதரி ஜெயப்பிரதா பாடியிருந்தார்.இந்தப்பாடலை ரசித்து இயக்குனர் .வெங்கடேஷ் அவரது அடுத்த படத்தில் எனக்கு வாய்ப்புத் தருவதாக சொல்லியிருந்தார்.உள்ளுர் வானொலிகள் எமது இந்தப் பாடலை கண்டுகொள்ளதா நிலையில் வெற்றி  வானொலி விடியல் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியது. ஆனால் புலம்பெயர் நாடுகளில் இந்த பாடல் ஒலிக்காத வானொலி நிலையங்கள் இல்லை என்றே சொல்லலாம். அந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எமது பாடலை ஒலிபரப்பின. எமது நாட்டு ரசிகர்கள் இந்தப்பாடலை கேட்காமல் இருப்பது துரதிஷ்டமே.Youtube இணையத்தளத்தில் இந்தபாடலை ஒருலட்சத்துக்கும் அதிகமான  ரசிகர்கள் பார்வையிட்டுள்ளனர்.இலங்கையில் வெளிவந்த தமிழ் பாடல்களில் அதிக ரசிகர்கள் பார்வையிட்ட ஒரு பாடல் என்ற சாதனையும் இப்பாடல் நிகழ்த்தியுள்ளது.


10.புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் இளம் கலைஞர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?

இன்று பாடல் எழுதுவதற்கு பலரும் ஆர்வமாக உள்ளார்கள்.இன்றைய இசையமைப்பாளர்கள் போடும் மெட்டுக்குத்தான் நாம் வரிகளை எழுதவேண்டி இருக்கின்றது.எனவே வரிகளை இசைக்கேட்ப எழுதுவதற்கு நிறையவே பயிற்சி வேண்டும். எமக்கு முன்பு வாழ்ந்து மறைந்த படைப்பாளிகளை நன்றாக வாசிக்கவேண்டும். அவர்களது படைப்புக்களின் வெற்றியை நாம் ஆய்ந்து எமக்கென்றொரு புதிய பாதை வகுத்து செய்படவேண்டும். இன்று நாட்டை ஆள்பவர்களும் பாட்டை ஆள்பவர்களும் கிராமத்திலே இருந்து நகரத்து வந்தவர்களே.முயற்சி மெய்வருந்தக் கூலிதரும் என்று சொல்வார்கள் எனவே வாழ்வில் முயற்சி செய்தால் முடியாதது ஒன்றுமே இல்லை.
வாசி வாசிக்கப்படுவாய்! எழுது எழுதப்படுவாய்!
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 கருத்துகள்:

Arulini Sivanesan சொன்னது…

வளர்ந்துவிட்ட கவி அரசனே கொழுந்துவிட்டு எரிகின்ற உங்கள் வெற்றி சுடரை எங்கள் கண்ணில் கண்டு ரசிக்க காத்துக் கிடக்கும் அன்பான ரசிகை அன்புடன் அருளினி.

Arulini Sivanesan சொன்னது…

வளர்ந்துவிட்ட கவி அரசனே கொழுந்துவிட்டு எரிகின்ற உங்கள் வெற்றிச் சுடரை எங்கள் கண்களில் காண காத்திருக்கும் அன்பான ரசிகை அன்புடன் அருளினி.சிவநேசன்

கருத்துரையிடுக