புதன், 1 மே, 2013

எலி பொரிக்கும் கூட்டுத்தாபனத்தின் செய்திகள் (மேதின சிறப்புக் கவிதை)

வணக்கம்
இது எலிபொரிக்கும்
கூட்டுத்தாபனத்தின் செய்திகள்.
செய்தி ஆசிரியர்
பெருச்சாளி
செய்திகள் வாசிப்பது
சு.சுண்டெலி.....

முதலில்
முதன்மை செய்திகள்.

விலங்குகளுக்கு இன்று
விடுமுறை நாளாகும்.

அடிமை விலங்குகளுக்கு
ஆளும் விலங்குகள்
விடுதலை   வழங்கி
விருந்தளித்து
விருது வழங்கும்
விசேட நிகழ்வு
இன்று காலை பத்துமணியளவில்
சிங்க ராஜவனத்தில்
சிறப்பாக இடம்பெற்றது.

மாடுகளுக்கு
மாலைபோட்டு
மாநாடு நடத்த
கசாப்புக் கடைக்காரர்கள்
கைகோர்க்கும் நிகழ்வென்று
இந்நிகழ்வை
நீர்யாணைகள் விசனித்தாலும்


மான்கள்தான் இக்காட்டின்
மன்னர்கள் என்று
சிங்கமும் புலியும்
சிறப்புரையாற்றி
சிலாகித்தன
இதனைக்கேட்ட
கழுதைகள் கைதட்டின.

இன்றைய மேதினத்தில்
அப்பாவி
ஆடுகளுக்கு
அநீதி நடப்பதாகும்
இடையர்கள் கட்டிவைத்து
அவைகளது
சுதந்திரத்தை பறிப்பதாக  கூறி
ஓநாய்கள்
ஊளையிட்டு
ஊர்வலமாய் சென்றன...

மேலும்
இன்றைய நிகழ்வில்
மாங்காய்களின்
மறுமலர்ச்சி நிதிக்காக
குரங்குகளின் குத்தாட்டமும்
மாம்பிஞ்சுகளுக்காய்
வண்டுகள் வழங்கிய
இன்னிசை கச்சேரியும்
இடம்பெற்றது.

'பாட்டிகளிடம் இருந்து
வடைகளை பாதுகாப்போம்'
 என்ற தொனியில்
காகம் கத்தித் திரிய....

'காகங்களிடம் இருந்து
வடைகளை காப்பாற்றுவோம்'
என்ற வாசகத்தை
ஏந்திப்பிடித்தபடி
நரிகள் சேர்ந்து
நடைபவனி சென்றதாகவும்
செய்திகள் தெரிவிக்கின்றன.

அடுத்து
வெளி நாட்டு
செய்திகள்

வளைகுடாவில்
அலைகளின்
ஆபத்தில் இருந்து
மீன்களை மீட்பதற்காய்
வலைகளும்  தோணிகளும்
நடத்திய
உண்ணாவிரதம்
இன்று இரண்டாவது நாளாகவும்
வெற்றிகரமாக நடைபெற்றது.

கோழிக்குஞ்சுகளுக்கான
விசேட காப்புறுதி திட்டத்தை
பருந்துகள்
பாராளுமன்றத்தில்
நேற்று
நிறைவேற்றியுள்ளன.

இதற்கு கடுவன் பூனைகளும்
கீரிப்பிள்ளைகளும்
கடந்தகால கசப்புணர்வை மறந்து
இணைந்து
வாக்களித்ததாக தெரிவிக்கபடுகிறது.

இத்தோடு
இன்றைய செய்திகள்
நிறைவு பெறுகின்றன..

அடுத்த செய்தி
அடுத்த வருடம்
மே மாதம்
முதலாம் திகதி
வழமைபோல் இடம்பெறும்
வணக்கம்.!!
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

8 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஹா... ஹா... நல்ல செய்திகள்...

உண்மை...

Jaffer Shadiq சொன்னது…

அருமை & அவசியமான கவிதை !

Unknown சொன்னது…

உங்களைப் போன்ற நல்ல சிந்தனையாளர்களின் மனதில் தான் இப்படியா உற்றுக்கள் சுரக்கும் அருமையான .மிகவும் ஆழமான வரிகள்
அற்புதமாக எழுதி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்

Dr.V.K.Kanniappan சொன்னது…

கவிஞர் அஸ்மின்,
அருமையான கற்பனைக் கவிதை. வாழ்த்துக்கள்.

'காகங்களிடம் இருந்து
வடைகளை காப்பாற்றுவோம்' என்பதில்,
’கைப்பற்றுவோம்’ என்றும் இருக்கலாம்.
அன்புடன்,
வ.க.கன்னியப்பன்

கவிஞர் அஸ்மின் சொன்னது…

கருத்துக்களை வழங்கிய
#திண்டுக்கல் தனபாலன்
#Jaffer Shadiq
#kalai
#mahel hidaya risvi
#Dr.V.K.Kanniappan
ஆகியோருக்கு மனம் நிறைந்த நன்றிகள்

கவிஞர் அஸ்மின் சொன்னது…

@Dr.V.K.Kanniappan அவர்களுக்கு கவிதையை மீண்டும் ஒரு முறை படிக்கும் போது உங்கள் அபிப்பிராயம் நீங்கிவிடும் என்று எண்ணுகின்றேன்.
''வடைகளை காப்பாற்றுவோம்'' என்ற சொல்லாடலுக்கும் ''கைப்பற்றுவோம்'' என்ற சொல்லாடலுக்கும் நிறையவே கருத்து வேறுபாடு இருக்கிறது.

காகங்களிடம் இருந்து வடைகளை கைப்பற்றுவோம் என்பது வழமையாக நடப்பது.ஆனால் காப்பாற்றுவோம் என்று சொல்லும்போது பாட்டி மிகக் கொடியவர் அவர் வடைகளை வதைக்கின்றார்.எனவே நாம் வடைகளை காப்பாற்றி வாழ்வு கொடுப்போடும் என்ற வஞ்சப்புகழ்ச்சி அணியை ஏற்படுத்துகிறது.இதே தோரணையில்தான் ஏனைய வரிகளும் அமைந்துள்ளது என்பதை கருத்தில் கொள்ளவும்.

நன்றி

Pathman சொன்னது…

இது ஒரு அருமையான கவிதை இன்றுதான் வாசிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது ..

கவிஞர் அஸ்மின் சொன்னது…

@pathman மனம் நிறைந்த நன்றிகள்

கருத்துரையிடுக