வியாழன், 7 நவம்பர், 2013

என்னுடைய ''பாம்புகள் குளிக்கும் நதி'' கவிதை நூலுக்கு கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் வழங்கிய வாழ்த்துரை.



கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்துகிறார்.

நிலத்தை உடலாகவும் மொழியை உயிராகவும் கருதுகிறவர்கள் ஈழத்தமிழர்கள் மொழியை ஆளத்தெரிந்தவர்கள் அவர்கள்.

தமிழ் கவிதைக்கு ஈழத்தமிழர்கள் நிறைய பங்களிப்புச் செய்திருக்கிறார்கள்.

இன வரலாறும் மொழி வரலாறும் ஈழத்தை தவிர்த்துவிட்டு எழுத முடியாது.

இன்று கவிதை எழுதும் ஈழத்தமிழர்களில் கல்வியால் உருவாக்கப்பட்டவர்கள்;சிலர் காலத்தால் உருவாக்கப்பட்டவர்கள் பலர்.

கல்வி செலுத்த ஈழத்தில் இன்று எத்தனையோ கவிஞர்கள் உருவாகி வருகிறார்கள்.

அந்தவரிசையில் இளம் வயதில் மொழியை ஆளத்தெரிந்தவராக திகழ்கிறார் ஈழத்து இளங்கவிஞர் பொத்துவில் அஸ்மின்.

'பாம்புகள் குளிக்கும் நதி' எனும் இத்தொகுப்பில் மரபிலும் இசைப்பாடல் வடிவிலும் புதுக்கவிதை நடையிலும் இவர் யாத்துள்ள கவிதைகளில் ஒரு தேர்ந்த கவிஞனுக்குரிய திறன் தெரிகிறது.

பல்வேறு பாடுபொருள்களில் அவர் பாடியுள்ள கவிதைகளில் கருத்துச்செறிவும் கற்பனைவளமும் காணப்படுகின்றன.

சுற்றுச் சூழல் விழிப்புணர்வுக்காக இவர் படைத்துள்ள 'தண்ணீரை வாசிப்போம்' என்கிற கவிதையில்
.......... ...........
''எதிர் காலத்தில்
தங்கத்தை கொடுத்து
தண்ணீர் வாங்க வேண்டி வரலாம்
........... ..........
நாளை எந்த நேரமும்
எதுவும் நடக்கலாம்
தண்ணீருக்காய் நாம் கொல்லப்படலாம்.''
என்று எதிர்காலத்தில் தண்ணீர் பஞ்சத்தால் நேரவிருக்கும் அவலத்தை ஆபத்தை அடர்த்தியான வார்த்தைகளால் அறிவுறுத்துகிறார்.

இளைஞர்களின் சிந்தனையை மாற்றத்தூண்டும் வண்ணம் வாழ்க்கையை வடிவமைத்துக் கொடுக்கும் வரிகளாக

'தயங்குவதை இன்று முதல் நிறுத்து-உன்
தலையெழுத்தை போராடி திருத்து
அஞ்சுவதை நெஞ்சை விட்டு அறுத்து-நீ
ஆங்காங்கே வீரவிதை பொருத்து'
என்றெல்லாம் எழுதி நச்சென்று நம்பிக்கையை இளைஞர்களின் மனங்களில் பதிக்கிறார்.

மொழியாற்றலை புலப்படுத்தும் விதமாக ஒன்று என்ற வார்த்தையை வைத்து ஒன்றுக்கு பல அர்த்தங்கள் சொல்லும் 'ஒன்று+ஒன்று=ஒன்று' எனும் கவிதை இவரது புலமைக்கும் புதுமைக்கும் கட்டியங்கூறுகிறது.
அதில்

'ஒன்றுக்கு ஒன்று
ஒன்றாததால்தான்
ஒன்றுமிலாதிருக்கிறோம்
இனியாவது
ஒன்றுக்கு
ஒன்று வந்ததால்
ஒன்றாகிப் பார்ப்போம்'
என்று ஒற்றுமையை வலியுறுத்தும் வரிகள் அர்த்தச்செறிவோடும் அழகோடும் மிளிர்கின்றன.

மலேசியாவில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் பொத்துவில் அஸ்மின் வாசித்து இத்தொகுப்பிலும் இடம்பெற்றுள்ள 'பொறுமை' எனும் கவியரங்க கவிதை அவர் மரபில் பெற்றுள்ள ஆழ்ந்த பயிற்சிக்கும் மொழி செப்பத்திற்கும் அடையாளமாக விளங்கிறது.

இலங்கையில் தமிழ் இதழியல் துறையிலும் ஊடகத்துறையிலும் திரைப்படத்துறையிலும் தடம்பதித்து வரும் தம்பி பொத்துவில் அஸ்மின் காலத்தால் சிறந்த கவிஞராக செதுக்கப்படுவார் என்பதற்கான அடையாளங்களை இத்தொகுப்பெங்கும் காண்கிறேன்.

சிறந்த சிந்தனை கவிஞராக மட்டுமன்றி இவர் ஈழத்து மண்ணுக்கு நம்பிக்கை தரும் நற்றமிழ் கவிஞராக உருவெடுக்க வாழ்த்துகிறேன்.

அன்போடு
வைரமுத்து
சென்னை
30.07.012

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 கருத்து:

Kalaimahan சொன்னது…

வாழ்த்துக்கள் அஸ்மின்!

கருத்துரையிடுக