இலங்கையின் இளைய தலைமுறை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவரான கவிஞர் எம். ரிஷான் ஷெரீப், கேகாலை மாவட்டம், மாவனல்லையை பிறப்பிடமாகக் கொண்டவர். மாவனல்லை, பதுரியா மத்திய கல்லூரியில் உயர்தரக் கல்வியை கற்ற இவர், மொரட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை தொலைக்காட்சி பயிற்சிக் கல்லூரி போன்றவற்றில் தனது உயர்கல்வியை நிறைவு செய்துவிட்டு இத்தாலியிலிருந்து இயங்கும் சகோதர மொழி செய்மதி தொலைக்காட்சியான 'CHANNEL ONE SRI LANKA' இல் தமிழ் நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பாளராகவும், நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும்,தொகுப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.
கவிதை, சிறுகதை, ஓவியம், தன்னம்பிக்கைக்கட்டுரை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, புகைப்படத்துறை போன்றவற்றில் தனது ஆற்றலை வெளிப்படுத்திவரும் இவரின் படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகள், கலை,இலக்கிய சஞ்சிகைகளிலும் இந்தியாவிலிருந்து வெளிவரும் இதழ்களான காலச்சுவடு , விகடன், பூவுலகு, யுகமாயினி, அம்ருதா, வடக்குவாசல், நவீனவிருட்சம், உன்னதம், மணல்வீடு, உயிர் எழுத்து, வார்த்தை, அகநாழிகை, கலைமகள் ஆகியவற்றிலும் மலேசியாவிலிருந்து வெளிவரும் இலக்கிய இதழ்களான அநங்கம், வல்லினம், சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் இலக்கிய இதழான 'நாம்' ஆகியவற்றிலும் மற்றும் இணைய இதழ்களான திண்ணை, வார்ப்பு, கீற்று, உயிர்மையின் உயிரோசை, மனிதம், தடாகம், அதிகாலை, புகலி, பதிவுகள், நவீன விருட்சம், சொல்வனம், இனியொரு, கூடு, சிக்கிமுக்கி, அதீதம் ஆகியவற்றிலும் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அத்தோடு இந்தியா 'வம்சி' பதிப்பகத்தின் 'கிளிஞ்சல்கள் பறக்கின்றன' தொகுப்பில் 2009ம் வருடத்துக்கான சிறந்த கவிதைகள் தொகுப்பில் இவரது கவிதையும்,'மரப்பாச்சியின் சில ஆடைகள்' 2009ம் வருடத்துக்கான சிறந்த சிறுகதைகளுக்கான தொகுப்பில் இவரது சிறுகதையும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
அண்மையில் இலங்கையில் நடைபெற்ற சர்வதேச எழுத்தாளர் மாநாட்டில் வெளியிடப்பட்ட 'முகங்கள்' எனும் இலங்கையின் முக்கிய 50 எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பிலும் இவரது சிறுகதை இடம்பெற்றிருக்கிறது.
இந்த மாதம் பிரபல இந்திய எழுத்தாளர் மதுமிதா தொகுத்து வெளிவந்திருக்கும் 'இரவுகள்' தொகுப்பிலும், பிரபல கவிஞர் குட்டிரேவதி தொகுத்து வெளிவந்திருக்கும் 'முள்ளிவாய்க்காலுக்குப் பின்' தொகுப்பிலும் இவரது கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவிலிருந்து வெளிவரும் விகடனில் 'உனக்கென மட்டும்' எனும் தலைப்பில் 50 வாரங்கள் ஒரு கவிதை தொடரையும், 'இருப்புக்கு மீள்தல்' எனும் தொடர்கதையையும், கீற்று வார இதழில் 'நேசத்துக்குரிய ஒரே காதலுக்கு' எனும் தலைப்பில் 30 வாரங்கள் ஒரு கவிதை தொடரையும், 'இயற்கை' எனும் தலைப்பில் பத்திக் கட்டுரையை தொடரொன்றை சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் வல்லினம் இதழிலும் எழுதியிருக்கின்றார்.
இவரது முதலாவது கவிதை தொகுப்பான 'வீழ்தலின் நிழல்' கடந்த வருடம் இந்தியாவின் காலச்சுவடு பதிப்பகத்தின் மூலமாக வெளிவந்தது. அத்தோடு மொழி பெயர்ப்பு நாவலான 'அம்மாவின் ரகசியம்' மற்றும் சிங்கள கவிதைகளின் தொகுப்பு ஆகியன இந்தியாவின் காலச்சுவடு பதிப்பகம் மற்றும் லண்டன் 'எக்ஸில்' பதிப்பகம் மூலமாக விரைவில் வெளிவர இருக்கின்றன.
கவிஞர் எம். ரிஷான் ஷெரீப் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் வெளிநாட்டு இதழ்களிலும் சிங்கள மொழி பெயர்ப்புக்கள் இலங்கையின் சிங்கள தேசிய பத்திரிகைகளிலும் வெளிவருகின்றன.
இலங்கை இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் மட்டுமல்லாது புலம்பெயர் நாடுகளிலும் தனது காத்திரமான படைப்புக்கள் மூலம் பரவலாக அறியப்பட்டுள்ள கவிஞர் எம். ரிஷான் ஷெரீப் எண்ணச் சிதறல்கள், எம். ரிஷான் ஷெரீப் கவிதைகள், எம்.ரிஷான் ஷெரீப் சிறுகதைகள், எனது விமர்சனங்கள், சிந்திக்கச் சில படங்கள், மொழி பெயர்ப்புகள் போன்ற தனது வலைப்பூக்களிலும் எழுதிவருகின்றார்.
ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக இலங்கையின் இலக்கிய வானை அலங்கரிக்கும் இவர் சர்வதேச ரீதியில் நடாத்தப்பட்ட பல கலை-இலக்கிய போட்டிகளில் விருதுகளை பெற்றுள்ளார். அதில்,
*2008ம் ஆண்டு சர்வதேச மட்டத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய 'கந்தர்வன் சிறுகதைப்போட்டியில் சிறப்புப் பரிசு.
*2009ம்ஆண்டு சர்வதேச மட்டத்தில் கனடா உதயன் பத்திரிகை நிறுவனம் உலக எழுத்தாளர்களுக்காக நடத்திய சிறுகதைப் போட்டியில் நான்காம் பரிசு.
*2010ம் ஆண்டு சர்வதேச புகைப்பட போட்டியில் முதல் பரிசு
*2010ம் ஆண்டு சர்வதேச மட்டத்தில் வலைப்பதிவர்களுக்கிடையே நடைபெற்ற உரையாடல் சிறுகதைப் போட்டியில் சிறப்புப்பரிசு.
*2010ம் ஆண்டு சர்வதேச மட்டத்தில் வலைப்பதிவர்களுக்கிடையே நடைபெற்ற உரையாடல் கவிதைப் போட்டியில் சிறப்புப்பரிசு.
போன்றவற்றை குறிப்பிடலாம்.
தனது காத்திரமான கவிதைகள் மூலமும் தனித்துவமான படைப்புக்கள் மூலம் இலங்கையின் இலக்கியத்துறையில் முத்திரை பதித்துவரும் கவிஞர் எம்.ரிஷான் ஷெரீப் அவர்களின் படைப்புலக பணி மேலும் மேலும் சுவடுகளை பதிக்க நாமும் வாழ்த்துவோம்.
நன்றி.
*தூவானம் (29.01.11)- வசந்தம் தொலைக்காட்சி
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
2 கருத்துகள்:
படைப்புக்களையும் படைப்பாளிகளையும் வெளிக்கொணர்வதில் ஊடகங்கள் ஆற்றுகின்ற பணியை நான் வரவேற்கின்றேன். அந்த வகையில் கவிஞர் அஸ்மின் அண்ணா அவர்கள் செய்துவரும் படைப்பாளிகள் பற்றிய அறிமுகம் மற்றும் அவர்களை கௌரவப்படுத்துகின்ற பணியானது மிகவும் வரவேற்கத்தக்கது.
அதிலும் முதன்முதலாக என்மனங் கவர்ந்த இலக்கிய நாயகன்(அத்தோடு என் அன்பு நண்பர்) ரிஷான்ஷெரீப் அண்ணனைப் பற்றி வந்திருக்கும் அறிமுகம் பார்த்தேன். அவர் உண்மையிலேயே மென்மேலும் இலக்கியத்தில் பல துறைகளில் தடம்பதித்து வற்றாத இலக்கியத் தடாகமாய் மிளிர்ந்து நமது ஈழத்து இலக்கியச்சோலையை மெருகூட்ட வாழ்த்துகின்றேன். அவரோடு அஸ்மின் அண்ணாவின் பணியும் தடைப்படாது தொடர இந்த இளையவனின் வாழ்த்துக்கள்.
அன்புக்குரிய கவிஞர் இராமசாமி ரமேஷ். நன்றி உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்.மீண்டும் வருக கருத்துக்கள் பகர்க.
கருத்துரையிடுக