வியாழன், 26 மே, 2011

மலேசியாவில் இடம்பெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு ''கவியரங்க கவிதை''

மலேசியாவில் கோலாலம்பூரில் நடைபெற்ற 6வது உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில்  22.5.11 அன்று 'கவிக்கோ 'அப்துல்ரஹ்மான் தலைமையில் இடம்பெற்ற கவியரங்கில் வாசிக்கப்பட்டு பார்வையாளர்களினதும் பேராளர்களினதும் அதிதிகளினதும் அதிகளவிலான பாராட்டினை பெற்ற கவிதை.


இறைவாழ்த்து

உலகக் கவியரங்கில் உயர்வாய் கவிபடைக்க
அழகுக் கவிதருவாய் ஆண்டவனே!-நபியருளால்
கோலாலம் பூரில் கூடிநிற்கும் சான்றோர் முன்
வீழாத செந்தமிழை தா.

தமிழ் வாழ்த்து

அண்ணல் நபியிடத்தில் ஆழ்கடல்போல் இருந்திட்ட
கன்னல் குணத்தில் சிறுதுளியை சிந்தவந்தேன்-இன்னுமேன்
மறைவாக இருக்கின்றாய் மணித்தமிழே? அவன்துணையால்
விரைவாக என்முன்னே வா.!
அவையடக்கம்.

நெற்பதர்நான் எனைக்கவிதை
நெய்துபடி என்றார்கள்

கற்கண்டு சொற்கொண்டு
கவிபாடும் புலவர்முன்

முட்புதர்நான் முஹம்மதெனும்
முழுநிலவை பாடுவதா..?

அற்பன்நான் கற்பனையில்
ஆழ்ந்தபடி யோசித்தேன்.

விக்கித்தேன் எனக்குள்ளே
விடைகேட்டு வினாத்தொடுத்தேன்...

துக்கித்தேன் பலநாட்கள்
துயரத்தில் உயிர்துடித்தேன்.

கத்தியிலே நடக்கின்ற
காலம்தனை மறந்துவிட்டு

புத்தியினை உலகத்தின்
புதைகுழிக்குள் செலுத்தியதால்

நித்திரையை தொலைத்துவிட்டு
நித்தம்நான் தவித்திருந்தேன்.

அல்லாஹ்வை நேசித்தால்
அண்ணலினை சுவாசித்தால்

பொல்லாத கோடையிலும்
பொசுக்கென்று மழைவருமே...

எனவே நான் சிந்தித்தேன்
என்னைநான் நிந்தித்தேன்

வல்லோனை தொழுது ஒரு
வழிசொல்லு என்றழுதேன்....

பொறுமையாய் இருந்தேன்
பொங்கியது சங்கத்தேன்....!-இங்கே
தங்கத்தேன் கொட்டுவோர் முன்-இதை
தந்துநான் தப்பித்தேன்...!!

 கவியரங்கத் தலைவருக்கு.

தேமாங்காய் பூமாங்காய் ஒரு மண்ணும் விளங்காமல்
தெம்மாங்காய் பாடுகிறேன் பாட்டு-கவிக்கோவே!
நான்பாடும் பாட்டை நானறியேன் பெருங்கவியே
கூனுண்டோ ஆயந்துநீர் கூறும்.

கிறுக்கும் கவியெல்லாம் கீழென்று வளர்கவியை
நறுக்கி பின்னவரே நாறுகின்றார்-திருக்கவியே!
நொறுக்கி என்நெஞ்சில் நோக்காடு தந்தோர்முன்
சருகல்ல இவனென்று சாற்றும்

அழகுத்தமிழ் கவியின் ஆற்றலினை உணராதோர்
மிளகாய் போல்மரபை நினைக்கின்றார்-விலகாமல்
பழகும் தமிழ்மொழியில் மரபுத்தாய் மாண்புகளை
உலகுக்கு சொல்வேன்உணர்ந்து.


அண்ணலாரின் அழகிய குணங்கள்
•    பொறுமை.

வாவியை கடப்ப தென்றால்
வள்ளமொன் றிருந்தால் போதும்..
ஓவியம் வரைவ தற்கு
ஓரிரு வரைகள் போதும்
ஆவியை ஆட்சி செய்யும்
அரசரை  மக்கள் நெஞ்சை
கூவியே விழிக்கச் செய்த
குயிலினை குறைஷிப்பூவை
காவியம் பாடு தற்கு
காலம்நாள் போதாதெனவே...
 தீவினை ஓடச் செய்து
தீனினை ஒளிரச் செய்ய
நோவினை பொறுத்த எங்கள்
'கோ'வினை நபிகள் என்னும்;
பூவினை பற்றித்தான்யான்
பாவினை ஏந்தி வந்தேன்..
மேவிய தகைமை மிக்க
மேதைகாள் வளருமெந்தன்
பாவிலே குறைகள் காணிண்
பாவியை மன்னியுங்கள்.
காவியாய் இருந்த நெஞ்சை
கவிதை போல் வெண்மையாக்கி
சாவியாய் தொழுகை தந்த
சத்திய புருஷர் நாமம்
நாவினால் நவின்றால் கூட
நரம்பெலாம் கலிமாச்சொல்லும்.
'லாயிலாஹ இல்லல்லாஹ்
முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்'
எல்லாப் புகழும் உருவில்லா
இறைவனுக்கே அல்ஹம்துலில்லாஹ்!!
      

  
எண்சீர் விருத்தம்.

நெறிகெட்ட காபிர்கள் மக்காவெங்கும்
             நெருப்போடு இணைவைத்து வணங்கும்வேளை
தறிகெட்டோர் வெறிகொண்டு கஃபாவெங்கும்
             தங்கத்தால் சிலைவைத்து களிக்கும்வேளை
புரியாத மாந்தர்கள் நபிகள் நெஞ்சை
             புண்ணாக்கி பழியுரைகள் கூறும் வேளை
அறியாமை இருள்விலக இஸ்லாம் மார்க்கம்
            அண்ணலார் பொறுமையினால் தளைக்கலாச்சு!


கருணைமிகு எம்பெருமான் மக்கா நகரில்
             காலாற அவ்வேளை நடந்து வந்தார்.
தெருவழியே ஒருகிழவி தலையில் மூட்டை
            சுமந்தபடி முனகலுடன் முன்னே வந்தாள்.
கிறுகிறுப்பு தரும்வெயிலில் நடந்துவந்த
            கிழவியவள் நிலைகண்டு முன்னே சென்ற
திருநபியோ 'என்தாயே உங்கள் சுமையை
             நான்தலையில் சுமக்கின்றேன் தருவீர் என்றார்


'இல்லைநான் தொலைதூரம் செல்லவேண்டும்
            வீண்சிரமம் உமக்கெதற்கு' விலகுமென்றாள்.
வெள்ளைமனம் உள்ள நபி அவளைப் பார்த்து
            வெகுதூரம் சென்றாலும் வருவே னுங்கள்
பிள்ளைபோல் எனை எண்ணி தருவீரென்று
            பிரியமுடன் அவளிடத்தில் கேட்டுநின்றார்
சுள்ளென்ற வெயில்பொழுதில் நபிகள் தலையில்
           சுமைஏற்றி அவள்பின்னே நடக்கலானாள்...!

'தள்ளாடும் இவ்வயதில் நீங்க ளுங்கள்
           தாய்மண்ணை விட்டுஏன் போகின்றீர்கள்..
பிள்ளைகள் உள்ளனரா அங்கு?' என்;று
           தொலைதூரம் சென்றநபி வினவலானார்.
'பொல்லாத ஒருகொடியோன் எங்கள் முன்னோர்
          வணங்கிவரும் தெய்வமெலாம் பொய்என்கின்றான்
'அல்லாஹ்'வை வணங்கட்டாம் என்று சொல்லி
           ஆத்திரத்தை கிளப்பு கிறான் அதனால் போறேன்'


'கல்லெடுத்து அவன் தலையை உடைக்கும் சக்தி
           கடுகளவும் எனக்கில்லை அதனால் போறேன்.
கொள்ளையிலே போகட்டும் 'முஹம்மத்' என்னை
            கொன்றாலும் அவன்பேச்சை கேட்கமாட்டேன்.
எல்லோரும் அவன் வழியில் போனால் கூட
            ஒருபோதும் அவன்வழியில் போகமாட்டேன்.
நில்லேன்நான்  அவனில்லா ஊரை நோக்கி
            நிம்மதியை தேடித்தான்; போறேன் என்றாள்.'

வறுமைப்பூ தன்வாழ்வில் பூத்தபோதும்
            வயிற்றினிலே கல்சுமந்து நின்றமன்னர்.
பொறுமையினை எளிமையினை நேர்மைதன்னை
             பொக்கிஷமாய் வைத்திருக்கும் எங்கள்தூதர்.
அருமைநபி 'அல்லாஹ்'வின் அருளினாலே
            அருங்குணங்கள் அத்தனையும் கொண்ட அண்ணல்.
சிறுமையுடன் அவள்சொன்ன பேச்சை கேட்டு
            சிறிதளவும் கோபமின்றி தொடர்ந்து சென்றார்.

கேவலமாய் ஒருவர் எமை கேலிசெய்தால்
            கேட்டிருந்து ரசிப்போமா உடனேபேசும்
நாவறுத்து அவர்கையில் கொடுத்துவிட்டு
            நம்சக்தி என்னவென்று காட்டுவோமா?
சாபமிட்ட கிழவியவள் சுமையைத் தூக்கி
            சாந்திநபி சாந்தமுடன் செல்லுகின்றார்.
கோபமென்ற சொல்கூட அறியா தந்த
            கோமகனின் பொறுமையினை என்னவென்பேன்.

செல்லுமிடம் சேர்ந்ததனால் தலையின் சுமையை
             வள்ளல்மனம் உள்ளநபி இறக்கி வைத்து
'நல்லபடி வந்துவிட்டோம் மகிழ்ச்சி 'உம்மா'
            நான்சென்று வருகின்றேன்' என்றார் பணிவாய்.
'எல்லையற்ற பேரன்பு உள்ளம் கொண்ட
            பிள்ளைநீர் யாரென்று' கிழவி கேட்டாள்.
அல்லல்தரும் கொடியவனாய்  நீங்கள் சொன்ன
            பொல்லாத நபிமுஹம்மது நான்தான் என்றார்.

சங்கைமிக்க நபிபெருமான் வார்த்தை கேட்டு
            கங்கைபோல் நீர்பெருக அழுதமாது
தங்கமனம் படைத்;தவரே! நபியே உம்மை
           தவறாகப் பேசியதை மன்னியுங்கள்.
உங்களது பொறுமையினால் இஸ்லாம் மார்க்கம்
          உலகமெலாம் பரவுமிது உண்மையென்று
அங்கமெல்லாம் நடுநடுங்க ஈமான் கொண்டு
         அண்ணலார் கரம்பற்றி கலிமா சொன்னார்.

(வேறு)

'ஹாத்தமுன்' நபியின் பொறுமையை பற்றி
கவிதை படிப்பேனா.-இல்லை
கருணைநபி பட்ட கஷ்டங்கள் பற்றி
கண்ணீர் வடிப்பேனா..?

தொழுதிடும் நபியினில் அழுகிய குடலை
தூக்கிப் போட்டார்கள்-நபியோ
அழுதவர் நிலையை மாற்றிட இறையிடம்
'துஆக்கள்' கேட்டார்கள்.

நபியினைப்பார்த்து பைத்தியமென்று
கைகொட்டி சிரித்தார்கள்-நபியோ
மனிதனாய் அவர்கள் மாறிட இறையிடம்
கைகளை விரித்தார்கள்.

அண்ணலின் தோழர்கள் நெஞ்சிலே எதிரிகள்
அம்பினை தொடுத்தார்கள்-நபியோ
உண்ண வழியின்றி வந்த எதிரிக்கு
உணவும் கொடுத்தார்கள்.

'அபுலஹப்' உட்பட 'குறைஷிகள'; அனைவரும்
கல்லை எறிந்தார்கள்-நபியோ
குறைஷிகள் உட்பட அடிமை யிடத்திலும்
அன்பை சொரிந்தர்கள்.

பாதையில் காபிர்கள் பதுங்கி இருந்து
பாய்ந்து அடித்தார்கள்-நபியோ
போதையில் ஆடிடும் அவர்நிலை மாறிட
தினமும் துடித்தார்கள்.

சூனியக்காரன் 'முஹம்மது' என்று
பெண்களும் பழித்தார்கள்-நபியோ
பெண்களை உயிருடன் புதைக்கின்ற கொடிய
பேதமை ஒழித்தார்கள்.

இறைவன் ஒன்றென சொன்ன தற்காக
இழிவாய் நினைத்தார்கள்-நபியோ
இன்னல் தந்திட்ட எதிரியை மார்புடன்
இழுத்து அணைத்தார்கள்.

கட்டிய கடவுள்கள் பொய்யென சொன்னதும்
எட்டி உதைத்தார்கள்;-நபியோ
வெட்டி எறிந்திட வந்தவரிடமும்
சென்று கதைத்தார்கள்.

கோத்திரச் சண்டையில் மூழ்கியோர் பள்ளியில்
மூத்திர மடித்தார்கள்-நபியோ
ஆத்திரம் கொண்டு அடித்து விடாதவர்
மனதை படித்தார்கள்.

'கலிமா'ச்சொன்ன 'ஸஹாபிகள்' தலையினை
கொய்து முடித்தார்கள்-நபியோ
கொய்தவர் கொண்டு  இறையருள் பணிகளை
செய்து முடித்தார்கள்.

நபியவர் தலையினில் நாளும்பெண்கள்
குப்பையை போட்டார்கள்-நபியோ
மனபிறழ்வாக  நடந்திட்ட அவருக்கு
மருந்தினை போட்டார்கள்.

கொடுத்த வாக்கை மறந்துவிட்டு
கொட்ட மடித்தார்கள்-நபியோ
உண்மை என்ற கொடியை நாளும்
உயர்த்திப் பிடித்தார்கள்.

சத்திய தூதர் நபியிடம் கூட
சந்தேகப் பட்டார்கள்.-நபியோ
சற்றும் தளர்வின்றி பொறுப் பதிலேதான்
சந்தோசப் பட்டார்கள்.

கயவர்கள் கதைகளை சிறுவர்கள் கேட்டு
கற்களை எறிந்தார்கள்-நபியோ
சின்னஞ் சிறுசுகள் செயல்களை கண்டு
புன்னகை  புரிந்தார்கள்.

எதிரிகள்கூடி மாநபி தோழர்கள்
நெஞ்சை பிளந்தார்கள-நபியோ
நஞ்சைக் கலந்திட வந்தவர் நெஞ்சிலும்
அன்பைக் கலந்தார்கள்.

நிலவு முகத்தில் எச்சிலை துப்பி
நிம்மதி கண்டார்கள்-நபியோ
சேவகம் செய்யும் மனிதர்களோடும்
சேர்ந்தே உண்டார்கள்.

ஆண்டவன் ஒருவன் என்பவர் குரல்வளை
அறுத்திடச் சொன்னார்கள்.-நபியோ
கொடுமை கண்டு கொதித்திட்ட 'உமரிடம்'
பொறுத்திடச் சொன்னார்கள்.

பரிவுள்ள நபிதலை கொய்திடின் அவருக்கு
பரிசுண்டு என்றார்கள்.-நபியோ
உண்மையை அன்பினை நெஞ்சினில் பற்றியே
உலகத்தை வென்றார்கள்.

பாவிகள் அனுதினம் பழியுரை கூறியே
பல்லினை உடைத்தார்கள்.-நபியோ
சத்திய வேதத்தை உலகெலாம் பரப்பி
சரித்திரம் படைத்தார்கள்.

பகைவர்கள் நண்பராய் பாங்குடன் நடித்து
பழியினை தீர்த்தார்கள்.-நபியோ
அநீதிகள் செய்த 'அபூசுபியானையும்'
அணியிலே சேர்த்தார்கள்.

அவதூறென்னும் சேற்றினை நபியிடம்
அள்ளி எறிந்தார்கள்.-நபியோ
கீழ்தரமாக மக்கள் நினைப்பதை
கிள்ளி எறிந்தார்கள்.

தாயிப் நகரின் வீதியில் அவரை
தாக்கி மிதித்தார்கள்.-நபியோ
தனக்குஏசிய தாயவள் சுமையை
தூக்கி மதித்தார்கள.

பிடரி சிவந்து நோகுமளவுக்கு
பிடித்து இழுத்தார்கள்.-நபியோ
அழுக்கு படிந்து கிடந்த மனதை
அன்பால் வெளுத்தார்கள்.

நபியவர் கொள்கையின் உண்மை அறிந்தும்
நாளும் மறுத்தார்கள்-நபியோ
நாளை யொருநாள் விடிந் திடுமென்று
யாவும் பொறுத்தார்கள்.

பொறுமையின் சிகரம் நபிதா னென்று
சொல்லி முடிப்பேனா.-இங்கு
இன்னும் அவர்துயர் சொல்லிடப்போனால்
அழுதிடும் என்பேனா...!!22.5.11


இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

5 கருத்துகள்:

Mohamed Hijas சொன்னது…

வாழ்த்துக்கள்

வித்யாசாகரின் எழுத்துப் பயணம் சொன்னது…

தமிழ் வெள்ளமென பாய்ந்த அரங்கில் நட்சத்திரமாய் மின்னியதன்றி உலக அரங்கிலும் உன் தமிழ் மணக்க உளம் நிறைந்த வாழ்த்துக்கள் கோடி கோடி....

பேரன்புடன்..

வித்யாசாகர்

த.எலிசபெத் சொன்னது…

மரபுக்கவிஞரே,

கோலாலம்பூரில்
கோலாகலமாய் கொண்டாடிய
மாநாட்டுவிழாவில்
அற்புதமான கவிபாடி
பாமரனையும் பாராட்டச்செய்த-உங்கள்
கவித்துவம் புதுமை...

மொழியாடல் கவியில்
வழிந்தோடுகிறது
தெளிந்தமுதை பருகும்
தித்திப்பு தமிழில்
திளைத்திருக்கிறது...

வாழ்த்துவதற்கும்
வார்த்தை கிடைக்கவில்லை
அத்தனை யருமையான
நடையில் நளினமுங்கள்
தேடலில்....

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
உஙகள் கவிச்சோலை
உலகமெங்கும் மணம்பரப்பட்டும்


-த.எலிசபெத்-

Jawidh Ibrahim : ஜாவித் இப்றாஹிம் சொன்னது…

மாஷா அள்ளாஹ்.
நிச்சயமாக,
இக்கவிதை என் உள்ளத்தில் பிடிப்பினை தந்தது,
பின் என் கண்களில் கண்ணீர வந்தது.

அருமையான கவிதை நண்பா அஸ்மின்.

உங்களுக்கு இஸ்லாத்தின்பேரில் உங்கள் பணி தொடர அள்ளாஹ் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், நல்ல வசதிகளையும், குடுப்பத்தின் வாழ்க்கை சிறப்புறவும், தீனோடு வாழ்ந்து கலிமா 'லயிலாஹ இல்லள்ளாஹ்' என்ற கலிமாவோடு வபாத்தவதற்கும் ரஹ்மத் செய்வானாக!!


ஆமின்...!
ஆமின்...!

எம்.ரிஷான் ஷெரீப் சொன்னது…

அன்பின் அஸ்மின்,

வரிகளின் ஆழம், உங்கள் வசீகரிக்கும் குரலினூடு உயிர்த்தெழுந்து நிச்சயமாக நேயர்களின் கவனத்தை ஈர்த்தெடுத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அருமையான வரிகள். மாஷா அல்லாஹ்.

இதுபோல தொடர்ந்து எழுதுங்கள்.

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

கருத்துரையிடுக