ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

படைப்பாளி அறிமுகம்-13 -கவிஞர் 'மல்லியப்பு சந்தி' திலகர்

 இளையதலைமுறை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவரான மயில்வாகனம் திலகராஜா எனும் இயற்பெயர் கொண்ட 'மல்லியப்பு சந்தி' திலகர் மலையகத்தின் இதயமான நுவரெலியா மாவட்டத்தில் மடகொம்பரை எனும் தோட்டத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். கொழும்பு பல்கலைக்கழகத்தின் வணிகத்துறை பட்டதாரியான இவர் தொழில் ரீதியாக முகாமைத்துவ ஆலோசகராக செயற்படுகின்றார்.

பாடசாலைக் காலத்தில் இருந்தே வாசிப்பிலும் எழுதுவதிலும் ஆர்வம் காட்டிவந்த இவர் பாடசாலை காலத்தில் கவிதை, நாடகம், கட்டுரை, சிறுகதை, பேச்சு போட்டிகளில் பங்குபற்றியுள்ளார்.

1991ம் ஆண்டு கண்டி மாநகரில் நடந்த 'தேசிய சாகித்திய விழா'வில் பாடசாலை மாணவனாக இருக்கும்போதே 'சிறந்த நடிகர்' விருது பெற்ற இவர் 1993ம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகம் நடாத்திய திறந்த போட்டியில் பங்குபற்றி கவிதைக்கான பரிசினைப் பெற்றுள்ளதோடு
1995ம் ஆண்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடாத்திய கலை கலாசார போட்டிகளில் பங்குபற்றி மாவட்டமட்டத்தில் கவிதைக்காகவும் தேசிய ரீதியில் பேச்சுப்போட்டியல் ஜனாதிபதி விருதினையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

பல்கலைக் கழக காலத்தில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிறந்த பேச்சாளராக, அறிவிப்பாளராக விருது பெற்றுள்ளார்.



பத்தி எழுத்தாளராகவும் பத்திரிகைகளுக்கு அரசியல் கட்டுரைகளை எழுதிவரும் இவர் பல வானொலி கவியரங்குகளிலும் கலந்து கவிதை பாடியுள்ளார்

2002 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக் கழகத்தில் 'இதழியல் டிப்ளோமாவை' நிறைவு செய்ளள்ள இவர் 'சிறந்த பெறுபேற்றுக்காகவும், மலையக மக்களின் பிரச்சினைகளில் ஊடகங்களின் பங்களிப்பு குறித்த ஆய்வுக்காகவும்; ஜப்பானிய அரசால் வழங்கப்படும் 'ஜூயின் அஹோக்கி' விருதினை வென்றுள்ளார்.

மலையக மக்களின் அரசியல், தொழிற்சங்க பண்பாட்டு அம்சங்களை பிரதிபலிக்கும் 'மல்லியப்பு சந்தி' எனும் இவரது  கவிதைத் தொகுதி 2007இல்  வெளிவந்தது.

அதன் பின்னர் ' மல்லியப்பு சந்தி' திலகர் என இலக்கிய சூழலில் அறியப்படும் இவர் தனது தாயாரின் பெயரில் 'பாக்யா பதிப்பகம்' எனும் பதிப்பகத்தினை நடாத்தி வருகின்றார். நூல் வெளியீடுகள், நூல் விநியோகம், இலக்கிய செயற்பாடுகள் என முனைப்புடன் இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக