ஞாயிறு, 2 அக்டோபர், 2011

படைப்பாளி அறிமுகம் - 16 - எழுத்தாளர் சுதாராஜ்

லங்கை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவரான எழுத்தாளர் சுதாராஜ் யாழ்ப்பாணம் நல்லூரை பிறப்பிடமா கொண்டவர்.
யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரி.
1972 இல் 'ஒளி' என்ற சஞ்சிகையில் 'இனிவருமோ உறக்கம்' என்ற சிறுகதை மூலம் இலங்கை தமிழ் இலக்கிய உலகில் அறிமுகமான இவர் நாவல், சிறுகதை, சிறுவர் இலக்கியம்,  என இலக்கிய வானில் தன் சிறகுகளை அகல விரித்திருந்தாலும் சிறுகதை துறையிலே தனது சுவடுகளை ஆழமாகவே பதித்திருக்கின்றார் என்று சொல்ல முடியும்.



ஒரு பொறியியலாளராக ஈராக் , குவைத் , பாகிஸ்தான் , இத்தாலி, கிறீஸ் , யமன் , அல்ஜீரியா, இந்தோனீஸியா என பல நாடுகளிலும் பணிபுரிந்து இருக்கும் இவர் அங்கு தனக்கு கிடைத்த அனுபவங்களை சிறுகதைகள் மூலம் வெளிக்கொணர்ந்திருக்கின்றார்.

இவரது படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகள் , சஞ்சிகைள் , இந்திய சஞ்சிகைகள் , புலம்பெயர் சஞ்சிகைகள் , பலவற்றிலும் களம் கண்டுள்ளன.


சுதாராஜின் முதற்சிறுகதை தொகுதியான 'பலாத்காரம்' 1977ம் ஆண்டில் வெளிவந்தது. இது பின்னர் இலங்கை அரசின் சாஹித்திய மண்டல பரிசினையும் பெற்றது.
2002 தன்னை இலக்கிய துறையில் தன்னை ஆற்றுப்படுத்திய சிரித்திரனை கௌரவிப்பதற்காக 'சிரித்திரன் சுந்தர்' விருதினை இலங்கை படைப்பாளிகளால் வெளியிடப்படும் நூல்களுக்கு சிறுகதை, கவிதை, சிறுவர் இலக்கியம் ஆகிய மூன்று துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நூல்களுக்கு வழங்கி வருகின்றார்.

இவர் இதுவரை 'பலாத்காரம்' , 'கொடுத்தல்'  'ஒரு நாளில் மறைந்த இரு மாலைப்பொழுகள்' , 'தெரியாத பக்கங்கள்' , 'சுதாராஜின் சிறுகதைகள்'  'காற்றோடு போதல்' , 'மனித தரிசனங்கள்' , 'மனைவி மஹாத்மியம்' , 'உயிர்கசிவு' என்ற ஒன்பது சிறுகதை நூல்களை வெளியிட்டிருக்கின்றார்


1981ம் ஆண்டு வீரகேசரியில் வெளிவந்த 'இளமைக்கோலம்' என்ற இவரது நாவல் 2006 இல் மணிமேகலை பிரசுரமாக வெளிவந்துள்ளது. அத்தோடு இவர் பல சிறுவர் இலக்கிய நூல்களையும் எழுதி வெளியிட்டிருக்கின்றார்.இவரது பல சிறுகதைகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கபட்டுள்ளன.

'கொடுத்தல்' சிறுகதை தொகுதிக்காக தேசிய சாஹித்திய மண்டல விருதினை பெற்றிருக்கும் இவர்; அதே நூலுக்காக இந்து சமய கலாச்சார அமைச்சின் 'இலக்கிய வித்தகர்' பட்டத்தினையும் பெற்றிருக்கின்றார்.
அத்தோடு 'தெரியாத பக்கங்கள்' எனும்  சிறுகதை தொகுதிக்காக விபவி கலாசார மையத்தின் சிறந்த சிறுகதை தொகுதிக்கான விருதினையும் பெற்றிருக்கின்றார். யாழ் இலக்கிய வட்டத்தின் விருது, தகவம் விருது, தமிழியல் விருது போன்றன இவரது சிறுகதை நூல்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஆனந்த விகடனின் வைரவிழா இலக்கிய போட்டியில் சிறந்த சிறுகதைக்கான விருதினை பெற்ற 'அடைக்கலம்' என்ற இவரது சிறுகதையை தழுவியே இயக்குனர் மணிரத்தினத்தின் 'கன்னத்தில் முத்தமிட்டால்' திரைப்படம் வெளிவந்தது என்ற சர்ச்சையும் இருக்கின்றது.

இவர் 2010ம் ஆண்டுக்கான இலங்கை அரசின் தேசிய சாஹித்திய மண்டல விருதினையும் 'புதிய சிறகுகள்' விருதினையும் 'மனைவி மகாத்மியம்' என்ற சிறுகதை நூலுக்காக பெற்றிருக்கின்றார் என்பதும் குறிப்படத்தக்கது.


இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 கருத்து:

எஸ்.மதி சொன்னது…

வாழ்த்துகள் பயணங்கள் தொடரட்டும் ..

கருத்துரையிடுக