''எனக்கு அம்மணமாய் இருப்பதற்குச் சம்மதமில்லை''
தென்றலே கவிபாடும் தென்கிழக்கு மண் கவிஞர்களின் கலைஞர்களின்
கருவறையாக இருக்கின்றது. அதிலும் தேனொழுகும் நாட்டார் பாடல்களின் விளைநிலங்களில் ஒன்றாக விளங்குகின்ற பொத்துவில் மண்ணின்
மைந்தனாக இருக்கும் நான் கவிஞனாக விளங்குவதில் வியப்பொன்றுமில்லை.
நகரத்தின் புகையை குடித்து வாழ்பவர்களைவிட கிராமத்தின்
புழுதியை குடித்து வளர்பவர்களுக்கு நன்றாக கவிதை வரும்.
என் அப்பாவிக் கிராமமே ஒரு அழகிய மரபுக்கவிதை அதை வாசிக்க
வாசிக்க நானும் கவிஞனாக மாறிவிட்டேன்.
கவிஞனை கற்பித்து வளர்க்க முடியாது. ஒருவன் கவிஞனாக உருவாவதற்கு
கருவிலே திருவாக வேண்டும்.
தான் வாழும் காலத்தின் கோலத்தை வார்த்தைக் கோடுகளால் வரைந்துவிடும்
கவிஞனின் நாளத்திலே, நெஞ்சின் ஆழத்திலே, கற்பனைத் தீ உற்பத்தியாகி அது கவித்துவத்தோடு
கனன்று எரிவதற்கு முதலில் அவன் பிறப்பின் மூலத்திலே கவிதை இருக்க வேண்டும்.
எனக்குள் பந்தலிடும் பாட்டுப் பூக்களுக்குள் இருந்து என்
பாட்டன் முப்பாட்டன் முன்னோர்கள் அனைவரும் முறுவலிக்கின்றார்கள்.
மேலும் சிறிய வயதில் இருந்தே எனக்குள் இருந்த இடையறாத
வாசிப்பும் என்னை வளப்படுத்தியிருக்கின்றது. இற்றை வரை என்னை பலப்படுத்தி வருகின்றது.
வாசிப்பு உள்ளவர்களுக்கு வார்த்தை வாலாயப்பட்டுவிடும்.
வார்த்தை வாலாயப்பட்டால் வாவென்று அழைக்கு முன்பே கவிதைகள் வந்து வாலாட்டி நிற்கும்.
என்னை வாசிப்பதற்காய் சிறிய வயதிலே ஊக்கப்படுத்திய வாப்பாவை இந்த நேரத்தில் நினைத்துப்பார்க்கின்றேன்.
பாடசாலை காலம் என் வாழ்வில் மறக்க முடியாதது. பொத்துவில்
மத்திய கல்லூரியில் கற்கின்ற காலத்தில் என் கவிதைகளுக்கு கிடைத்த சின்னச் சின்ன பாராட்டுதல்கள்,
பெரிய பெரிய விமர்சனங்கள் தேசிய மட்ட கவிதைப் போட்டிகளில் கிடைத்த வெற்றிகள்தான் என்
இதய பூமியில் நம்பிக்கை விதைகளை நட்டுவைத்தன. அதன் பின்பே இந்த இளைய கவியின் பாதங்களும்
ஈழத்து இலக்கியத்தை நோக்கி எட்டுவைத்தன.
பாலர் வகுப்பில் படிக்கும் போது ஆசிரியர் பாடப்புத்தகத்தில்
உள்ள பாடல்களை இசையோடு பாடிக்காட்டுவார் அதிலே எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.
பின்னர் ஐந்தாம் ஆறாம் தரங்களில் படிக்கின்ற போது புத்தகத்தில்
உள்ள பாடல்களை ஓசை நயத்தோடு நானும் பாட ஆரம்பித்துவிடடேன். அதுவும் எனக்குள் என்னை
அறியாமல் மரபறிவை விதைத்து சென்றிருக்கலாம்.
மரபு என்பது அடித்தளம். இலக்கியத்தின் எத்தளத்திற்கு செல்வதாயினும்
இத்தளத்தில் இருந்தே ஆரம்பிக்கவேண்டும்.
அகரம் அறியாதவன் உகரத்தை உச்சரிக்கவே கூடாது.
எட்டயபுரத்து கவிஞன் தொடக்கம் எங்கள் தேசத்தின் மூத்த
கவிஞர்கள் வரை மரபு தெரியாமல் புதுமைக்குள் புகுந்தவர்கள் அல்லர். அவர்கள் தம் முன்னோர்களைக்
கற்று முத்துக்குளித்தவர்கள். அதனால்தான் அவர்களால் முத்தமிழிழும் பிரவாகிக்க முடிந்தது.
இற்றைவரை முழுநிலவாக பிரகாசிக்க முடிந்தது.
காகிதச்சோலைகளில் மலரும் கவிதைப்பூக்களுக்கு காலம் கல்மாரி
பொழிவதும் கல்வெட்டு செய்வதும் அவரவர் கவித்துவ ஆளுமையிலே அடங்கி இருக்கின்றது.
மரபெனும் மகுடத்தை, பழந்தமிழ் கவிதைகளை, பழஞ்சோற்றைப்போல்
பார்ப்பவர்களின் படைப்புக்களுக்கு எதிர்காலம் நல்ல சவப்பெட்டிகளை செய்துவைத்து காத்திருக்கின்றது.
இன்று கணிதத்தை விட கவிதையை விளங்குவது கடினமாய் இருக்கின்றது.
புதுக்கவிதை என்ற பெயரில் சிலர் புலம்பல்களை அவிழ்க்கின்றார்கள்.
கேட்டால் உலகத்தரம் வாய்ந்த படைப்பு அப்படித்தான் இருக்குமென்று உளறுகிறார்கள்.
வாய்க்கு வரும் வார்த்தைகளை ஒன்றன்பின ஒன்றாக ஒடித்துப்போட்டால்
அதை கவிதை என்று இளையதலைமுறையினரில் ஒரு சிலர் நம்பிக்கொண்டிருக்கின்றார்கள். தெருவுக்கு
தெரு முளைத்திருக்கும் இத்தகைய காளான்களால் நல்ல கவிஞர்களின் பெயரும் நாறிக் கிடக்கின்றது.
எனக்கு ஒன்றோடு ஒன்பதாகிப்போவதில் உடன்பாடில்லை. அதனால்தான்
புதுமையென்னும் கவசத்தை அணிந்துகொண்டு மரபென்னும் போர்வாளை கையிலெடுத்தேன்.
நான் மரபோடு கைகுலுக்கிக் கொள்வதால்தான் இன்று இருக்கின்ற
இளைய தலைமுறைக் கவிஞர்களில் இருந்து என்னால் வேறுபட்டு நிற்க முடிகின்றது.
நவீனம், பின் நவீனம் என்ற பெயரில் கவிதையுலகில் கலவரத்தை
ஏற்படுத்தி பின் காலச்சுனாமியில் காணமல் போகின்ற வரட்டு எண்ணம் எனக்கோ என் கவிதைகளுக்கோ
கடுகளவும் இல்லை.
நான் மரபுக்கும் புதுமைக்கும் இடையிலான பாலமாகவே இருக்க
விரும்புகின்றேன்.
என்னைப் பொறுத்த வரையில் மரபு என்பது கவிதையின் ஆணிவேர்
புதுக்கவிதை என்பது அதில் தோன்றும் பூக்கள்தான். ஆணிவேர் இல்லாமல் பூக்கள் என்றும்
புகழ்பெறப்போவதில்லை.
ஆடையின்றி நிர்வாணத்தை அணிந்து கொண்டிருக்கும் கூட்டத்தின்
முன் ஆடையணிந்து ஒருவன் சென்றால் அவனை நாகரீகம் தெரியாதவன் என்று நகைப்பார்கள்.
அதே நிலை எனக்கும் ஏற்படலாம்.அதற்காக விழுதுகள் பல பரப்பி
விருட்ஷமாய் வியாபித்து விரிந்திருக்கும் தமிழ் மொழியின் மரபை வெறும் விருதுகளுக்காக
விட்டுக்கொடுப்பதில் எனக்கு விருப்பமில்லை.
நவீனம், பின்நவீனம் இன்று நேற்று உருவானதல்ல அது நாகரீக
மனிதன் தொட்டு உருவாகிவிட்டது. துருப்பிடித்ததை தூசுதட்டி எடுத்து அதை தாம்தான் முதலில்
கண்டுபிடித்தாக பலரும் பசப்பித்திரிகின்றனர்.
வேட்டையாடி திரிந்த மனிதன் என்று வெட்கப்பட ஆரம்பித்தானோ
என்று ஆடை உடுத்து அந்தரங்கம் மறைத்து அழகு பார்த்தானோ அன்று அவன் நவீனமாகிவிட்டான்.
சங்கக் காலத்தில் தோன்றிய கவிதை அக்காலத்தில் நவீன கவிதையாக
கருதப்பட்டது. அது தற்போதைய யுகத்தில் செய்யுளாக, மரபுக்கவிதையாக பேசப்படுகின்றது.
தற்காலத்தில் நவீன கவிதையாக பேசப்படும் கவிதை இன்னும்
ஒரு யுகம்போக அது மரபுக் கவிதையாக அக்கால சந்ததியினரால் பேசப்படும். இன்றைய நவீனம்
நாளைய மரபாக தெரியலாம்.படைப்பு நிலைப்பதென்பது படைப்பாளனின் கையில்தான் இருக்கிறது.
மண் அடுப்பில் சமைத்தாலும் மின் அடுப்பில் சமைத்தாலும்
அரிசைத்தான் சோறக்கா முடியுமே தவிர புதுமை என்ற பெயரில் வெறும் நெல்லை உலைவைக்க முடியாது
என்பதை புரிந்து கொள்ளுங்கள். பாவம் கவிதையை புரியாமல் கொல்லாதீர்கள்.
படைப்பாளி படைப்புக்கான வார்த்தையை வாழ்க்கையிலிருந்து
பெறவேண்டும்.ஒரு படைப்பை வாசிக்கும் வாசகன் அந்த படைப்பு தன் வாழ்க்கையுடன் ஒத்துப்போவதாக
உணரும்போதே ஒரு படைப்பு வெற்றிப்பெருகின்றது.
ஒன்றுக்கும் உதவாத வெறும் வெற்று கற்பனைகள் கவர்ச்சியான
அழகியலாக இருக்கும். காலப்போக்கில் அழுகி அது இறக்கும்
.
மரபுக் கவிதைகள் பற்றி இன்னும் எளிமையாக சொன்னால் மரபுக்
கவிதை என்பது அழகிய பொட்டு வைத்து பூச் செருகி சேலையுடுத்திய கலாசாரப் பெண். புதுக்கவிதை
என்பது சுடிதார் அணிந்த பெண். நவீனம், பின் நவீனம் என்பது ஆடைகளின்றிய அம்மண உலகம்.
''மறைக்கும் பொருளுக்கே மதிப்பதிகம்'' என்பார்கள். எனக்கு
அம்மணமாய் இருப்பதற்கு சம்மதமில்லை.
தம்மை உலக கவிஞர்களாய் நினைத்துக் கொண்டிருக்கும் உள்ளூர்
கவிஞர்கள் தலை கீழாக நின்றாலும் கூட எம் தாய் மொழியான தமிழ் மொழி ஈன்றெடுத்த பிள்ளை
மரபு சார்ந்த கவிதை மட்டும்தான் ஏனையவை முத்துப்பிள்ளையானாலும் தத்துப்பிள்ளைகள்தான்.
பாரதி புனைந்தான் புதுமைப்பித்தன் வனைந்தான் என்பதற்காக
மேலைத்தேய இறக்குமதிகளை நாம் நமது தமிழின் அடையாளமாகக் கொள்ள முடியாது.
அரசியல்வாதிகளில் இலக்கிய வாதிகளும் இருந்திருக்கின்றனர்
இருக்கின்றனர். ஆனால் இன்று இலக்கியவாதிகளும் அரசியல்வாதிகள்போல் ஆகிவிட்டனர்.
பிரதேசத்துக்கு பிரதேசம், மாநிலத்துக்கு மாநிலம் , நாட்டுக்கு
நாடு ஆளுக்கொரு சஞ்சிகையினை உருவாக்கி ஆளுக்கொரு இலக்கிய அரசியலை முன்னெடுக்கின்றனர்.
இவர்கள் தமக்கு வேண்டியவர்களை 'மகா -கவிகள்' என்றும் வேண்டப்படாதவர்களை
'தற்குறிகள்' என்றும் நிறுவுவதற்கு முனைகின்றனர்.
இத்தகைய குழுமனப்பான்மை கொண்ட குழப்பக்காரர்களிடம் இருந்து
என்றும் நான் விலகி இருக்கவே விரும்புகின்றேன்.
மேலைத்தேயத்தில் இருந்து நாடுகடத்தப்பட்ட இலக்கிய சிந்தனைகளை
சிறு சஞ்சிகைகள் மூலமாக வெள்ளோட்டம் விட்டு மூக்குடைந்து போனவர்களுக்கும் , மொழி பெயர்க்கப்பட்ட
கவிதைகளை படித்துவிட்டு அதனை தமிழில் நடித்துக்காட்ட முனைந்தவர்களுக்கும் , வடமொழியை
கலந்து தமிழில் வடமிழுக்க வந்தவர்களுக்கும் , ஆபாச வார்த்தைகளால் அழகு பார்ப்பவர்களுக்கும்
, இன அரசியலை இலக்கியத்துக்குள் திணிக்க நினைப்பவர்களுக்கும் எனது கவிதை வானம் புஷ்வாணமாக
தெரியலாம். அதனைப்பற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை.
'கவிதை எப்பொழுதும் கவிஞனுக்கும் வாசகனுக்கும் இடையே நடைபெறும்
ஆன்ம உரையாடலை முன்னெடுக்கிறது. ஒரு நல்ல கவிதை எனும் நிலையை ஒரு கவிதை எட்டுவது கவிஞனின்
கைகளில் மட்டுமல்ல. உள்வாங்கும் வாசகனிடமும் இருக்கிறது.'அதனால்தான் வாசகனிடத்தில்
அனைத்தையும் விட்டுவிட்டேன்.
கடந்த பதினைந்து வருடங்களாக நான் பத்திரிகைகளிலும் , சஞ்சிகைகளிலும்
, இணையத்தளங்களிலும் எழுதியவற்றுள் தேவையான கவிதைகளை தேர்ந்தெடுத்து உங்கள் முன் சமர்ப்பித்திருக்கின்றேன்.
'எனது ஒவ்வொரு கவிதையும் ஓர் அனுபவப் பொருளாக இருக்க தேர்ந்தெடுக்கப்பட்டவை.
எனது எல்லாக் கவிதைகளும் பயன்பாட்டுக் கருவிகளாக உருவாக்கப்பட்டவை.' எனக்குப் பின்னர்
வரும் வேறு எவரோ புதிய அடையாளங்களைச் செதுக்கிக் கொள்ளக் காத்திருக்கும் கல்லோ மரத்துண்டோதான்
இந்த கவிதைகள்.
எனது ''பாம்புகள் குளிக்கும் நதி'' பிடித்திருந்தால் உங்கள்
நண்பர்களுக்கும் இதனை படிக்கக் கொடுங்கள் பிடிக்காது விட்டால் தீக்குச்சிக்கு கடிக்கக்
கொடுங்கள் அப்படிக் கொடுத்தாலும் அந்தத் தீ கவித்துவத்தோடு கனன்று எரியும் என்று எனக்கு
தெரியும்.
எனவே, நிறைவாக நன்றி நவிழலுடன் வாசக உள்ளங்களுக்கு வழிவிடுகின்றேன்....
இந்த கவிதை நூலுக்கு அணிந்துரை வழங்கிய கவிப்பேரரசு வைரமுத்து
அவர்களுக்கும் ,வாழ்த்துரை வழங்கிய வித்தக கவிஞர் பா.விஜய் அவர்களுக்கும், இந்த நூலை
வெளியிடும் ப்ளின்ட் பதிப்பகத்தின் நிறுவனர் , ஊடகம் இணைய சஞ்சிகையின் ஆசிரியர் நண்பர்
ஜாஃபர் சாதீக்(துபாய்) அவர்களுக்கும் , எழுத்துப்பிழைகளை ஒப்புநோக்கி கவிஞர் கிண்ணியா
அமீரலி மற்றும் அறிவிப்பாளர் ஏ.எம்.அஸ்கர் அவர்களுக்கும் இந்தநூல் வெளிவருவதற்கு மேலும்
என்னை ஆற்றுப்படுத்திய நண்பர்களுக்கும் நூலை அழகுற வடிவமைத்துத் தந்த நண்பர் இம்தாத்
அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
-நன்றி-
பொத்துவில் அஸ்மின்