வியாழன், 16 ஜூன், 2011

''மனசுக்குள் குண்டு வெடிக்கின்றது''


 

திரைமறைவிலிருந்து திக்கெட்டும் ஆளுகின்ற
மறையளித்த இறைவனுக்கே மாபெரும் புகழனைத்தும்


மலேசியாவில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் இலங்கை சார்பாக சிறப்பாக பங்களித்தமையை முன்னிட்டு ஸ்ரீலங்கா கலை இலக்கிய பேரவையினால்  எமக்களித்த   பாராட்டு விழாவில்  என்னால் வழங்கபட்ட ஏற்புரை.


மிழ் தென்றல் வீசும் இந்த இனிய நிகழ்வுக்கு தலைமை வகிக்கும் ஸ்ரீலங்கா கலை இலக்கிய பேரவையின் தலைவர் 'தமிழ் தென்றல்' அல்ஹாஜ் அலி அக்பர் அவர்களே.!

 இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வருகை தந்திருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத் அவர்களே....!

 சிறப்பு விருந்தினர்களாக  வந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எச்.எம் அஸ்வர் அவர்களே....!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரீ.ஹஸன் அலி அவர்களே....!

இந்த விழாவுக்கு முன்னிலை வகிக்கும் இலக்கிய புரவலர் அல்ஹாஜ் ஹாஸீம் உமர் அவர்களே...!இந்த பொன்னான நேரத்தில் பொன்னாடைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்

கல்விமான்களே! கவிஞர்களே! எல்லாவற்றுக்கும் மேலாக இந்த விழா நிறைவுரும் வரையில் பொறுமையுடன் காத்துக்கொண்டிருக்கும் கவிஞர்களே!கலைஞர்ளே! எழுத்தாளர்களே! ஊடகவியலாளர்களே! பெரியோர்களே! நண்பர்களே!
உங்கள்  அனைவரையும் தனித்தனியே விளித்தவனாக என் ஏற்புரையை தொடங்குகின்றேன்.
   

பட்டாம் பூச்சி பிடிக்கும் காற்சட்டை பருவம் தொட்டு கவிதைகளோடு கைகுலுக்கிக்கொண்டு புத்தகங்களோடு படுத்துறங்கிக்கொண்டு நாளையொருநாள் நானும் ஒரு கவிஞனாகலாம் என்றுமனப்பால் அருந்திக்கொண்டிருக்கும் மழலை இளைஞனான என்னை பாசத்தோடு அருகே அழைத்து  பாராட்டி நேசத்தோடு நெஞ்சிலே இருத்தி பேசவேண்டும் என்று பணித்திருக்கின்றீர்கள்.

நான் கவிதை எழுதும் போது வா.. என்று அழைக்கு முன்னரே வாலாட்டி நிற்கும் வார்த்தைகள், தாலாட்டி நிற்கும் கருத்துக்கள், பாலூட்டி நிற்கும் சிந்தனைகள், பேசவேண்டும் என வந்தபோது மட்டும் 'பர்தா'வுக்குள் அழகை மூடிமறைத்து என்னை கண்டு வெட்கித்துஓடி ஒளிகின்றன.

ஆதலால்அகரமும் தெரியாது உகரமும் புரியாது உங்கள் முன் நான்அனைத்தையும் இழந்து நிராயுதபாணியாக நின்றுகொண்டிருக்கிறேன்.காரணம் வண்ணத்தமிழுக்கு வளமான கருத்துக்களை தின்னக்கொடுக்கின்ற திறமைசாலிகள்,சிந்தனையாளர்கள்,அர்த்தமுள்ள பேச்சால்அன்னை மொழியைஅழகுபடுத்தி கன்னித்தமிழுக்கே பன்னீர்தெளிக்கின்ற எமது நாட்டின் அத்தனை பூக்களும் அருகில் அமர்ந்திருக்கின்றீர்கள்.''காட்டாறு நீங்கள் நான்கலங்கிநிற்கும் சிறுகுட்டை.'' அதனால்தான் சொல்கின்றேன் பேசவேண்டும் நினைக்கின்ற நிமிடத்தில் மனசுக்குள் குண்டுவெடிக்கின்றது.


இந்த பாராட்டு தமிழுக்கு கிடைத்த தாலாட்டு.அன்னை தமிழை இதயத்தில் வைத்துஅனுதினமும் தாலாட்டுகின்றவர்கள், பாலூட்டுகின்றவர்கள் நாங்கள்.அதனால்தான் சொல்கின்றேன் இந்த பாராட்டுதமிழுக்கு கிடைத்த தாலாட்டு. தாயை நாங்கள் தாலாட்டுவதால்பிள்ளைகளை இங்கே பாராட்டுகின்றார்கள்.இதை நினைக்கின்ற போது புல்லரிக்கின்றது. நாடி நரம்பு எங்கும் இன்று ஒரு கோடி புல்லாங்குழல்  இனிய ராகம் இசைப்பதை உணர்கின்றேன்.

இருட்டினை போக்க விளக்கினை தேடி புறப்பட்டஇளைய தலைமுறையை சேர்ந்தஎன்னையேசூரியனாய் மாற்றி நீங்கள் தான் சுடரவிட்டிருக்கின்றீர்கள்.
இந்த பாராட்டை என்னை உறங்கவைக்கும் தாலாட்டாய் நான் ஒருபொழுதும் உணர்ந்துகொள்ளமாட்டேன்.ஏன் எனில் தன்னம்பிக்கையை தவறவிட்டு விட்டுவிடாமுயற்சியில் கோட்டைவிட்டு உறங்கிக்கொண்டிருக்கும்என்போன்ற இளைஞர்களை தட்டியெழுப்புகின்ற பள்ளியெழுச்சியாகவே நான்மனதில் நினைக்கின்றேன்.

 உலக இஸ்லாமியதமிழ் இலக்கிய மாநாட்டு கவியரங்கை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டியிலே என்னுடைய கவிதை தேர்வு செய்யப்பட்டுள்ளது என்ற சேதி என்காதில் தேன்வார்த்தபோது என்னுடைய தன்னம்பிக்கைமீதே எனக்கு தன்னம்பிக்கை வந்தது.தூக்கத்தை தூங்க அனுப்பிவிட்டு வெற்றிபெறவேண்டும் என்ற நோக்கத்தை கையிலெடுத்து இந்த கவிதை ஆக்கத்தை ஒரே இரவுக்குள் எழுதி தீர்த்தேன்.அதன் பின்னர் அழுது தீர்த்தேன்.பெருமானாரை பற்றி எழுத நினைத்ததையெண்ணி பெருமிதப்பட்டேன்.அள்ள அள்ள வற்றாத 'ஸம் ஸம்'' ஊற்றைப் போல்பெருமானாரை  பற்றி நினைக்க... நினைக்க... எழுத... எழுத...தாயை தேடி வரும் கன்றினைப்போன்றே என்னை தேடி துள்ளி குதித்து வார்த்தைகள்ஓடிவந்து கொண்டிருந்தன அத்தனையும் அள்ளியெடுத்துஅரவணைத்துக்கொண்டேன்.

 போட்டிக்கு கவிதையை அனுப்பிவிட்டு மலேசியாவில் கவியரங்கில் கவிதை பாடுவதாகவே கனவுகண்டு கண்டேன்.விஞ்ஞானி அப்துல் கலாம் சொன்ன 'இளைஞர்களே கனவு காணுங்கள்' என்ற நித்திய வார்த்தை சத்திய வார்த்தையாகியதால்எனது கனவுகளின் ஒரு துளியை இன்று அனுபவித்துக்கொண்டிருக்கின்றேன்.


இந்த கவியரங்கில் நான் தெரிவாகியது பினகதவால் வந்துதான் என்றுவழமையாக எல்லோருக்கும் எழும் விமர்சனங்கள்என்னை நோக்கியும் எழத்தான் செய்தன.
சிலரின்  முணுமுணுப்பும் கல்லெறியும் என் காதில் வந்து விழுந்துபோது நான் கலங்கவில்லை,கதறவில்லை. ஒரு இளையதலைமுறைக் கவிஞனைஅவர்கள் சரியாக விளங்கவில்லை என்றே நினைத்தேன்.அவர்கள் என்னைப்போன்று கவிதையும் 'இளைஞனாகத்தான்' இருக்கும் என்று சிலவேளை தப்புக்கணக்கு போட்டிருக்கலாம்.

 உண்மையில் உயரத்தில்இருந்த உற்று நோக்கும் போது 'எவெரெஸ்ட்'டுக்கூட எலிப்புழுக்கை போன்றுதானே தெரியும். அவர்கள், அவர்கள் உயரத்தில் இருந்து பார்த்ததால்தான்அத்தனையும் நிகழ்ந்திருக்கிறது என்று அமைதிகொண்டேன்.

 கவியரங்கின் பின்னர் கல்லெறிந்தவர்களே கட்டித் தழுவிதொட்டுத் தடவி வாழ்த்து பூக்களைவழங்கிபோது பொறாமையை தீயை கண்டு பொசுங்கிப்போகாத நான்அவர்களது பேராண்மை கண்டு மனசு பெருமிதப்பட்டேன்.நெகிழ்ந்தேன்! மகிழ்ந்தேன்!அவர்கள் தந்த பாராட்டு தேனை அருந்தியதால்....!

 அன்பானவர்களுக்கு இந்த அவையிலேஒரு பணிவாக ஒன்றை சொல்கின்றேன்.

உங்கள் ஒவ்வொரு முயற்சியிலும் முதிய தலைகளோடு இனியாவதுஇளைய தோள்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்.அன்போடு அணைத்துகொள்ளுங்கள்.இனியாவது இருட்டடிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள், கசப்பானவைகளை திருத்திக்கொள்ளுங்கள்,
ஒருமுறை தோண்டிவிட்டு ஒன்றுமே இல்லை என்று விட்டுவிடாதீர்கள், இளைஞர்களே சுட்டுவிடாதீர்கள்.மீண்டும் மீண்டும் தோண்டிப்பாருங்கள் உங்கள் காலடிகளுக்கு கீழும் வைரமுத்துக்கள் இருக்கலாம்.

 அந்த வகையில் நான் பாக்கியசாலியாக உணர்கிறேன்என்னை எனக்கு கண்டெடுக்க உதவியஉலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின்அத்தனை தூண்களுக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன்.'மண்ணில் மலருக்குத்தான் முதல் மரியாதைவேர்கள் வெளிப்படுவதே இல்லை' என்பதைப்போல் நாங்கள் மலேசியாவிலேகாய்த்து பூத்து மணம் கமழ்வதற்கு காரணமாக பலர் எமக்கு வேராகவும் நீராகவும் இருந்திருக்கின்றார்கள்அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகின்றேன்.

 குறிப்பாக எமது படைப்புக்களை தேர்ந்தெடுக்க நடுநிலை தவறாத நடுவர்களை தேர்ந்தெடுத்தஉலக  இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் இலங்கை குழுவின் தலைவர் கல்விமான் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்கள்,அதன் செயலாளர் டாக்டர் கவிஞர் தாஸீம் அவர்கள், செயற்குழு உறுப்பினர்களான இலக்கிய புரவலர் அல்ஹாஜ் ஹாஸீம் உமர், முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர்  என்.எம்.அமீன்,தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ் துறைத் தலைவர் ரமீஸ் அப்துல்லாஹ், மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத், சிரேஸ்ட்ட ஒலிபரப்பாளர் புர்கான் பீ. இப்திகார், எழுத்தாளர் மானா மக்கீன்,சிரேஸ்ட்ட ஊடகவியலாளர் எம்.ஏ.நிலாம் ஆகியோருக்கும்


இவர்களை வழி நடத்திய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்எம்.ரீ.ஹஸனலி அவர்களுக்கும்
உலக  இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு மலேசியாவிலே வெற்றிகரமாக நடந்தேறியதற்கும் இலங்கையிலிருந்து அதிகளவிலான பேராளர் கலந்து கொண்டு பங்களித்ததற்கும் இளைய தலைமுறைசேர்ந்த நான் அந்த நிகழ்வில் பங்குபற்றியதற்கும் காரணமாக இருக்கின்ற எமது தேசியத் தலைவர் கௌரவ அமைச்சர் ரவூப்ஹக்கீம் அவர்களுக்கும் நான் இவ்வேளையில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

 அத்தோடு   வளரும் தளிர்களை முளையிலே கிள்ளி மூலையிலே தள்ளுகின்றவர்களுக்கு மத்தியிலே எமக்கு தீ வைக்காமல் தீபம் வைத்து திறமையாளர்கள் திக்கெங்கும் உருவாகவேண்டும் என்ற நல்ல நோக்கோடு எம்மை ஊக் கப்படுத்துவதற்காய் இந்த பாராட்டுவிழாவை ஏற்பாடு செய்தஸ்ரீலங்கா கலை இலக்கிய பேரவையின்  தலைவர் தமிழ் தென்றல் அல்ஹாஜ் அலி அக்பர்,  செயலாளர் ஜின்னாஹ் அதன் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடைபெருகின்றேன்

வஸ்ஸலாம்.

 15.6.11

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

3 கருத்துகள்:

பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா சொன்னது…

அருமை! அருமை! நல்ல தமிழ், நான் விரும்பும் நடை. வாழ்க. மேலும் வளர்க. சின்னத் தனங்களுக்குச் செவிசாய்க்காமல் வண்ணத்தமிழுக்கு வளம் சேர்ப்பதையே எண்ணமாகக் கொண்டு முன்னே செல்க. அன்னைத் தமிழின் ஆசி உன் சென்னியிலே பூவாய்ச் சொரியட்டும்.

அன்புடன்

பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

T.Suganthy சொன்னது…

உண்மையில் வாழ்த்துவ‌தற்கும் என்னிடம் வார்த்தைகள் இல்லை.பேச்சுக்களே(வார்த்தைகளே) பேந்தப்பேந்த விழிக்குமளவிற்கு அருமையான ஏற்புரை.
தமிழ் மொழி நர்த்த‌னமாடும் கவிநடையில் மூத்தக்கலைஞர்களுக்கும் குட்டு விழுந்திருக்கிறது, இளைய தோள்களையும் இணைத்துக்கொள்ளுங்கள் என மிக நாசூக்காக கூறியிருக்கிறீர்கள் அபாரத்திறமைதான்.
உங்களுக்கு தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகபெரிய இடம் காத்திருக்கின்றது. என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

T.Suganthy

மன்னார் அமுதன் சொன்னது…

எழுத்து நடையும், சொல்லாடல்களும் அருமையாக உள்ளது.... வாசிக்கும் போதே இனிமையாக உள்ளது அஸ்மின்

கருத்துரையிடுக