சனி, 3 டிசம்பர், 2011

''அரச விருதுகளில் பக்கச்சார்பும் முதுகுசொரிதலுமே காணப்படுகின்றது''

 இலங்கையின் முன்னணி செய்தித் தளமான 'தமிழ்மிரர்' இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ள கவிஞர் அஸ்மினின் நேர்காணல்.(18/11/2011)


கேள்வி: இன்னும் அதிகமானவர்களின் மனதிள் நீங்கள் இடம்பிடிப்பதற்கு 'எங்கோ பிறந்தவளே' பாடல் ஓர் அச்சாணியாய் அமைந்துப்போனது. இப்பாடலுக்கு கிடைத்த வரவேற்புக் குறித்து கூறுங்கள்?
                                                       
                                                             "எங்கோ பிறந்தவளே''
 பதில்:  
எனக்கு நல்லதொரு அடையாளத்தை தந்துக்கொண்டிருக்கும் பாடலென்றால் அது 'எங்கோ பிறந்தவளே' பாடல்தான். அப்பாடல் உருவான விதமே மிகவும் சுவாரஸ்யம் நிறைந்தது. இப்பாடல் எழுதும்போது இத்தகைய வரவேற்பை அது எனக்குப் பெற்றுத்தருமென்று நினைக்கவில்லை. இந்தப்பாடல் சர்வதேசம் வரை எனக்கு நல்லதொரு அடையாளத்தை பெற்றுத்தந்துள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு சக்தி தொலைக்காட்சியினால் நடத்தப்பட்ட 'இசை இளவரசர்கள்' நிகழ்ச்சியில் தேர்வாகி இந்தியாவிற்குச் செல்வதற்கான வாய்ப்பு எனக்குக் கிட்டியது. 16 ராகங்களுக்கு ஏற்ப 16 குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்தோம்.எமது குழுவின் பெயர் 'ஹம்ஸத்வனி' எமது குழுவில் இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், பாடகி, என் நான்குபேர் அடங்கி இருந்தோம்.எமக்கு தென்னிந்தியாவின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர்களை, இசைதுறை சார்ந்த கலைஞர்களை நேரிலே சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.

அந்தவகையில் எமது குழுவுக்கு இயக்குனர் ஏ.வேங்கடேஷ் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அவர் எமக்கு பாடல் எழுதவேண்டிய கதைச்சூழலை மிகவும் அழகாக விபரித்தார்.அவர் சொன்ன கதையை உள்வாங்கிய இரண்டு மணிநேரத்துக்குள் பாடல் முழுவதையும் நான் எழுதிவிட்டேன். எமது 16 பாடலாசிரியர்களுக்குள்ளும் நானே முதலில் பாடலை எழுதியதை எண்ணி மகிழ்வுற்றேன்.கவிஞர் பா.விஜய் அவர்களை நாங்கள் அவரது இல்லத்தில் சந்தித்தோம். அவரிடம் நான் எழுதிய 'எங்கோ பிறந்தவளே' பாடலை பாடியே காட்டினேன். பாடல் வரிகளை வெகுவாக பாராட்டிய அவர் என்னுடைய சக பாடலாசிரியர் ஒருவரின் 'ஒரு பாடல் எவ்வாறு அமையவேண்டும்?' என்ற கேள்விக்கு எங்கோ பிறந்தவளே பாடலை உதாரணமாக கூறினார்.இருப்பினும்  அப்பாடல் வரிகளில் இடம்பெற்ற'டாவின்ஸி பார்வையாலே' என்ற வரியை மட்டும் மாற்றிவிட கூறினார். வளர்ந்து வரும் பாடலாசிரியர் என்ற வகையில் ஆங்கில சொல்லை கலக்காமல் தமிழிலே அந்த பாடல் வரியையும் எழுதக் கூறினார்.

பாடலாசிரியருக்கும் இசையமைப்பாளருக்கும் கணவன் மனைவிக்கிடையிலான உறவே இருக்கவேண்டும். 'செம்புலப்பெயல்நீர் போல' என்று சங்கப்பாடல் சொல்வதற்கு இணங்க அது அமைதல் வேண்டும் .ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து தாழ்வு மனப்பான்மையை தூக்கியெறிந்து ஒரு புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும். ஆனால் எனது குழுவிற்கு கிடைத்த இசையமைப்பாளர் அவ்வாறு இருப்பதற்கு தவறிவிட்டார்.எமது குழுவின் இசையமைப்பாளர் பாடல்வரிகள் நன்றாக அயைவில்லையென்று என்னோடு வாதிட்டார்.நான் எவ்வளவு எடுத்துக்கூறியும் தனது இசையில் பாடலை எழுதவேண்டும் என்றே அடம்பிடித்தார் என்னுடைய பாடல்களை அன்று அவர்  இதயத்தால் படம்பிடித்திருந்தால் இன்று முகவரியில்லாது போயிருக்க மாட்டார். அதன்பின் இந்தப்பாடலை விட்டு வேறு ஒரு பாடலை எழுதவேண்டியேற்பட்டது.
ஆனால் அந்த பாடல் சிறப்பாக வரவில்லை. இதற்காக நான் மிகவும் மனம் வருத்தப்பட்டேன். 16 பாடலாசிரியர்கள் மத்தியில் தனித்துவமாக ரசிகர்களாலும் இனங்காணப்பட்ட நான்  சிறப்பாக பாடல் எழுதுவேன் என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டேன். ஆனால் அது பொய்த்துப்போனது.
               

                                              பொய்த்துப்போன எனது  முதல் பாடல்

கேள்வி:- இந்தப் பாடலினூடாக நீங்கள் பெற்றுக்கொண்ட வரவேற்பு குறித்துக் கூற முடியுமா?

முகப்புத்தகத்திலும் 'யூடியூப்' இணையத்தளத்திலும் எனது பாடலை முதலில் பதிவேற்றினேன் .புலம்பெயர்ந்தவர்கள் பலர் எனது தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புக் கொண்டு இந்தப்பாடல் மிகவும் அருமையாக இருப்பதாக பாராட்டினார்கள்.அவர்களது வாழ்த்துக்களை கேட்டு நான் மெய்சிலிர்த்துப்போனேன். இன்னும்கூட இப்பாடலை புதிதாக கேட்கும் நண்பர்கள் பலர் தொலைப்பேசி மற்றும்  மின்னஞ்சலினூடகவும் என்னை தொடர்புக்கொண்ட வண்ணம் இருக்கின்றனர்.இதைவிட இப்பாடலானது பல அறிய வாய்ப்புக்களை எனக்கு ஏற்படுத்தி தந்துள்ளது. இயக்குநர் சு.ப. தமிழ் வாணன் தனது 'கருப்புச்சாமி உத்தரவு' படத்தில் பாடல் எழுதுவதற்கான வாய்ப்பை எனக்கு தந்துள்ளார். இதைவிட'பனைமரக்காடு' படத்தில் ஒரு பாடலை நான் எழுதியுள்ளேன்.
'இசை இளவரசர்கள்' நிகழ்ச்சியில் இசை இளவரசனாக முடிசூடிக்கொண்ட இசையமைப்பாளர் வவுனியாவை சேர்ந்த கந்தப்பு ஜெயந்தன் அவர்கள் இறந்த கிடந்த என்னுடைய பாடல்வரிகளுக்கு   இசையமைத்து  தன்னுடைய குரல்மூலம் மீண்டும் உயிர்த்தெழ செய்திருந்தார் .அவரை இந்த இடத்தில் நினைவு கூர்ந்தேயாகவேண்டும்.
என்னைப் பொருத்தவரை எனது அனைத்து வாய்ப்புகளுக்குமான அறிமுக அட்டை இப்பாடல் என்றே கூறவேண்டும்.
 கேள்வி:- இந்த பாடலுக்கு ஊடகங்களின் பங்களிப்பு எவ்வாறு இருந்தது?

ஊடகங்களின் உள்ளங்கையில்தான் இன்றைய உலகபந்து உருண்டு கொண்டிருக்கிறது.பத்து இருகைகளால் செய்ய முடியாததை பத்திரிகையால் செய்ய முடியும். வானொலி,தொலைக்காட்சி,பத்திரிகை,இணையம் போன்ற ஊடகங்கள் எமது கலைஞர்களின் படைப்பாளிகளின் திறமைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கின்ற வள்ளங்கள்.இங்கு வள்ளங்கள் நிறையவே இருக்கின்றன நல்ல உள்ளங்கள் அரிதாகவே கிடைக்கின்றன.கடையில் இருக்குக்கும் கடதாசி பூக்களுக்கு காசு கொடுக்கும் எம்மூடகங்கள் முற்றத்தில் இருக்கும் மல்லிகைப்பூக்களுக்கு முகம் கூட கொடுப்பதில்லை.உள் நாட்டின் அசல்களை காட்டிலும் வெளிநாட்டின் நகல்களுக்குத்தான் அதிகம் கிராக்கி இங்கு.

ஊடகங்கள் உண்மையாக, நேர்மையாக, நீதியாக, நடக்குமானால் இலங்கையின் இசைத்துறை எப்போதோ உச்சத்தை எட்டியிருக்கும்.எமது கலைஞர்கள் பலருக்கும் வாய்ப்புக்கள் பல கிட்டியிருக்கும். நமது சகோதர மொழி கலைஞர்கள் இசைத்துறையிலும்  சினிமா துறையிலும்   வளர்ச்சிப்பாதையை காண்பதற்கு அவர்களது ஊடகங்கள்தான் காரணம். அவர்கள் அவர்களுக்கேயுரிய தனித்துவ பாதையில் செல்கின்றனர். சகோதர மொழி பாடகர் ஒருவர் இசை இறுவட்டுக்களை வெளியிட்டால் அது அனைத்து சகோதர ஊடகங்களிலும் வெளியிடப்படுகின்றன .ஆனால் நமது தமிழ் மொழி ஊடகங்கள் அவ்வாறு இல்லை. நமது ஊடகங்கள் நமக்கேயுரிய தனித்துவத்தை காட்ட முனைவதில்லை. ஆனால் எமது துரதிஷ்டம் ஒரு ஊடகத்தின் மூலம் முதலில்  வெளியாகும் பாடலை இன்னொரு ஊடகம் வெளியிட தயக்கம் காட்டுகின்றன. தென்னிந்திய படைப்புக்களுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை எமது படைப்புக்களுக்கும் கொடுக்க முனைவதில்லை. தென்னிந்தியாவில் ஒரு திரைப்படம் வெளியாக போகின்றதென்றால் உடனடியாக அந்தப் படத்தில் இடம்பிடித்த பாடல்களை எங்கிருந்தாவது பதிவிறக்கம் செய்து முந்திக்கொண்டு கொடுக்க முன் வருகின்றார்கள்.ஆனால் இலங்கையில் உருவாக்கப்படும் எந்தப் படைப்பையும் இவ்வாறு முந்திக்கொண்டு கொடுக்க முன்வருகின்றார்களா?  நாம் நமக்கான தனித்துவத்தை காட்ட முனையும்போதே நமது திறமைசாலிகளை வெளிக்கொணர படுவார்கள். எமது இசைத்துறை வளர்ச்சியடையும். எமக்குள் ஒரு இளையராஜாவையும் ஏ.ஆர்.றஹ்மானையும் எதிர்பார்ப்பவர்கள் அதற்கான சரியான களத்தை வழங்க முன்வரவேண்டும். 

ஊடகமொன்று எங்கோ பிறந்தவள் பாடலை பாடிய கந்தப்பூ ஜெயந்தனை நேர்காணல் செய்திருந்தது. அந்நிகழ்ச்சியின்போது இந்தப்பாடலை முன்னோட்டமாக ஒலிபரப்பிக்கொண்டிருந்தார்கள். இந்தப் பாடலை நிகழ்ச்சியின்போது ஒலிபரப்புவார்கள் என நான் நினைத்து எனது நண்பர்களுக்கும் கூறினேன். அந்நிகழ்ச்சியில் சுமார் 10 பாடல்களுக்கு மேல் ஒலிபரப்பியிருந்தார்கள். இடைக்கிடையில் இரண்டு தென்னிந்திய திரைப்பட பாடல்களையும் ஒலிபரப்பியிருந்தார்கள். ஆனால் எங்கோ பிறந்தவள் பாடலை ஒலிபரப்பேவேயில்லை.இது என் மனதை மிகவும் புண்படுத்தியது. நான் நிகழ்ச்சி முடிவில் அவர்களை தொடர்புக் கொண்டு கேட்டேன் அவர்கள் பாடலை ஒலிபரப்ப மறந்துவிட்டோமென இலகுவாக கூறி முடித்துவிட்டார்கள். 

இதைவிட இன்னுமொரு ஊடகத்திடம் இந்தப்பாடலை வழங்கியப்போது அந்தப்பாடல் மிகவும் சோகமாக இருப்பதாகவும், குத்துப்பாடல்களை தரும்படியும் கேட்டார்கள். இந்த வேளையில் எனது பாடலுக்கு களம்கொடுத்த வசந்தம்FM,பிறைFM,வெற்றி FM,தென்றல்,லண்டன் ஐ.பிஸி,இணைய வானொலிகள் அனைத்தையும் நினைவுகூற விரும்புகின்றேன்.
எமது நாட்டின் பாடல்களுக்கு தனியான நிகழ்ச்சியை ஒழுங்குப்படுத்த தேவையில்லை. வழமையான நிகழ்ச்சிகளில் ஒலிபரப்பும் பாடல்களுடன் பாடலாக இதனையும் ஒலிபரப்பலாம்.அப்போது அது ரசிகர்கள் மத்தியில் சென்றடையும். 
ஊடகங்கள் இப்போது தமக்கென பிரத்தியகமான  இசைக் குழுக்களை கொண்டுள்ளன. எந்த நிகழ்வுக்கும் அந்தக் குழுக்களே பங்குப்பற்றுகின்றனர். இதனால் மற்றக் கலைஞர்களுக்கான வாய்ப்புகள் கை நழுவி போய்கின்றன. இதனால்தான் இலங்கையின் தமிழ்இசைத்துறை ஓடும் இடத்திலயே ஓடும் இடத்திலயே ஓடிக் கொண்டிருக்கிறது.எனவே,இந்த வரட்டு நிலையிருந்து வளர்ச்சி நிலைக்கு செல்ல எமது ஊடகங்கள் முன்வரவேண்டும்.எமது நிலத்தில் நாம் விதைகளை தூவாமல் அடுத்தவர் பழத்தில் பல்லைப்பதிப்பதை நாங்கள் நிறுத்தவேண்டும் எம்மை நாம் திருத்தவேண்டும். வெளிச்சத்துக்கு மட்டும்விளக்கு பிடிக்க முனையும் ஊடகங்கள் காய்த்தல், உவத்தல், குத்தல்,வெட்டல் இன்றி 'இருட்டின்'மீது தமது வெளிச்சத்தை பாய்ச்ச முயன்றால்தான் வளர்ந்துவரும் இளைய தலைமுறை கலைஞர்களுக்கு விமோசனம் கிட்டும்.அவர்கள் குரல்களும் எட்டுத்திக்கும் எட்டும். இல்லாவிட்டால் எமது நிலத்தில் வெங்காயம் நட்டால் வெடிகுண்டுதான் முளைக்கும்.

கேள்வி: மரபுக் கவிஞராக அறியப்பட்ட நீங்கள் நவீன கவிதைகளையும் முயன்று பார்க்க வேண்டுமென்று எப்போதேனும் எண்ணிய சந்தர்ப்பம் உண்டா? 

பதில்: என்னைப் பொறுத்தவரை மரபுக்கவிதையென்பது அழகிய பொட்டு வைத்து பூச் செருகி சேலையுடுத்திய கலாசாரப் பெண். புதுக்கவிதை  என்பது சுடிதார் அணிந்தப் பெண். நவீனம் நவீனத்துவம் என்பது ஆடைகளின்றிய அம்மண உலகம்.மறைக்கும் பொருளுக்கே மதிப்பதிகம் என்பார்கள் எனவே அம்மணமாய் இருப்பதற்கு சம்மதமில்லை

கேள்வி: இப்படி கூறுவதற்கு காரணமென்ன?
எனக்கு ஒன்றோடு ஒன்பதாகிப்போவதில் உடன்பாடில்லை. அதனால்தான் புதுமையென்னும் கவசத்தை அணிந்துகொண்டு மரபென்னும் போர்வாளை கையிலெடுத்தேன். நான் மரபோடு கைகுலுக்கிக்கொள்வதால்தான் இன்று இருக்கின்ற இளையதலைமுறைக் கவிஞர்களில் இருந்து என்னால் வேறுபட்டு நிற்கமுடிகின்றது.

அரசியல்வாதிகளில் இலக்கியவாதிகள் இருந்திருக்கின்றார்கள் இருக்கின்றார்கள் ஆனால் இப்போது இலக்கியவாதிகளும் அரசியல்வாதிகளாக மாறிவிட்டார்கள்.
இலக்கிய ரீதியில் பல குழுக்கள் உருவாகியுள்ளன. அக்குழுக்களுக்கு அவர்களது பாணி முக்கியப்படுகின்றது. புதிதுபுதிதாக கவிதைகளை கண்டுபிடிக்கின்றார்கள்.தாங்கள் பிதாமகன் என தம்பட்டமடிக்கின்றார்கள் இத்தகைய இலக்கிய விஞ்ஞானிகளை கண்டால் வாசகர்கள் ஓடி ஒளிக்கின்றார்கள்.இலட்சணம் என்ற சொல்லிலிருந்து இலக்கணம் என்ற சொல்லும் இலட்சியம் என்ற சொல்லிலிருந்து இலக்கியம் என்ற சொல்லும் தோன்றியது.என்வே இலட்சியம் இல்லா எந்தவொரு படைப்பும் நீடித்து நிற்கப்போவதில்லை.

கவிதையென்பது காலத்தின் கண்ணாடி. அதில் வாசகன் தனது முகத்தை பார்க்கிறான்.அதுசமூகத்திற்கு போய் சேரவேண்டும். அதனால் படிப்பவர்கள் பயன்பெறவேண்டும்.இன்று நவீனம் நவீனத்துவம்  என்ற பெயரில்  கலாசாரத்தை சீரழிக்கும் கவிதைகள் எழுதப்படுகின்றன குறித்து உங்களிடம் கூறுவதையே அவமானமாக கருதுகிறேன். 
உதாரணத்திற்கு ஓரு பெண்கவிஞரின்  'முலைகள்' என்ற கவிதை தொகுதியை எடுத்துக் கொள்ளலாம். அதிகமான பெண்ணிய கவிஞர்கள் தமது கவிதைககளில் பாலியல் சொற்களை பயன்படுத்தப்படுகின்றனர். இவ்வாறான பாலியல் சொற்களை கவிதைகளில் கூறுவதனூடாக அவர்கள் பிரச்சினையை கூற முனையவில்லை. பிரபல்யம் அடையவே முனைகின்றனர். சமூகத்தில் சர்ச்சைக்குரிய விடயங்களை பேசும் ஒருவர் அதனூடாக இலகுவாக புகழடைந்துவிடுவார். பெண்ணியம் குறித்து பேசும் போது ஆபாசக்கருத்துக்களை கூற வேண்டியதில்லை. 
என்னைப்பொருத்தவரை கவிதை என்று வரும் போது அதற்குள் அருவறுப்பை ஏற்படுத்தக்கூடிய ஆபாச வார்த்தைகளை உட்புகுத்த கூடாது. ஆனால் இலங்கையில் ஒருசிலர் அதனை செவ்வனே செய்துக்கொண்டு செல்கின்றனர். இதனூடாக அவர்கள் பிரபல்யம் அடைய எண்ணுகின்றார்களே தவிர அதனூடாக அவர்கள் கொடுக்கும் செய்தி எதுவும் இல்லை. பின்நவீனத்தும் என்ற பெயரில் வெளிவரும் இத்தகைய ஆபாச கவிதை புத்தகங்களைளையும் கவிதைகளையும் முதலில் தடை செய்ய வேண்டும். 
என்னைப்பொறுத்தவரை நான் எல்லாவற்றையும் வாசிப்பேன்.எல்லா கவிஞர்களையும் வாசிப்பேன்.அதேபோல் திட்டமிட்டு கவிதைகளையும் எழுதியதில்லை. எனக்குள் எழும் எனக்குள் கவிதை முளைத்து என்னை எழுது என்று அழைக்கும். அந்த கவிதை வாசகனை சென்றடையும்போது அந்த கவிதை மரபுக் கவிதையா? நவீன கவிதையா?என வாசகர்களே அதற்கு அடையாளமிடுகின்றார்கள். என்னைப் பொருத்தவரை மரபுக் கவிதை, நவீன கவிதை,பின்நவீனத்துவ கவிதை தேடிப்போகாமல் கவிதைகளில் கவிதையை தேடவேண்டும். 


கேள்வி:மரபு மறுவி வரும் இக்காலத்தில் இன்னும் மரபுக் கவிதையே எழுத வேண்டுமென்று எண்ணுகின்றீர்கள். ஆனாலும் அந்த மரபுக்கவிதை தற்கால சந்ததியினரை முழுமையாக போய்ச் சேரும் என்று நினைக்கின்றீர்களா?

பதில்:- முதலில் மரபு மறுவி வருகின்றது என்ற கருத்தை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். மரபு என்பது அடித்தளம். இலக்கியத்தின் எத்தளத்திற்கு செல்வதாயினும் இத்தளத்தில் இருந்தே ஆரம்பிக்கவேண்டும்.
அகரம் அறியாதவன் உகரத்தை உச்சரிக்கவே கூடாது.
எட்டயபுரத்து கவிஞன் தொடக்கம் எங்கள் தேசத்தின் மூத்தகவிஞர்கள் வரை மரபு தெரியாமல் புதுமைக்குள் புகுந்தவர்கள் அல்லர். அவர்கள் தம்முன்னோர்களைக் கற்று முத்துக்குளித்தவர்கள்.அதனால்தான் அவர்களால் முத்தமிழிழும் பிரவாகிக்க முடிந்தது.இற்றைவரை முழுநிலவாக பிரகாசிக்க முடிந்தது. வைரமுத்து எழுதிய 'காதலித்துப்பார்' புதுக்கவிதையை   தெரியாத இளைஞர்கள் இல்லையென்றே சொல்லலாம்.அதற்காக அவர் புதுக்கவிஞராக சிலர் நினைக்கலாம் ஆனால் அவர் யாப்பிலக்கணத்தை துறைபோக கற்ற மரபுக்கவிஞர்  அதிலும் பல புதுமைகளை புகுத்தியவர் என்று எத்தனை இளைஞர்களுக்கு தெரியும்?. வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் பலந்தமிழ் இலக்கியங்களை தேடி படிக்க வேண்டும். அவற்றின் தன்மைகளை அறிந்து கொள்ள வேண்டும். வார்த்தைகள் நடந்தால் வசனம்; நடனமாடினால் கவிதை. எனவே  புதுக்கவிதையில் சொல்கின்ற படிமம்,குறியீடு, என்பவற்றை ஓசை நயத்தோடு நான் எனது மரபுக் கவிதையில் கொடுக்கின்றேன்.

கேள்வி: நவீனம், பின்நவீனத்துவம் என்ற பாணியிலிருந்து இலக்கியம் படைப்பவர்கள் காலச்சுனாமியில் மூழ்கிப்போய்விடுவதாக கூறியிருக்கின்றீர்கள்? இவ்வாறான கருத்துக்கள் உங்கள் மனதில் எழுவதற்கு எது காரணம்?
பதில்:நவீனம், பின்நவீனம் இன்று நேற்று உருவானதல்ல அது நாகரீகமனிதன் தொட்டு உருவாகிவிட்டது. துறுப்பிடித்ததை தூசுதட்டியெடுத்து அதை தாம் முதலில் கண்டுபிடித்தாக பலரும் உரிமை கோருகின்றனர். வேட்டையாடி திரிந்த மனிதன் என்று வெட்கப்பட ஆரம்பித்தானோ என்று ஆடை உடுத்து அழகு பார்த்தானோ அன்று அவன் நவீனமாகிவிட்டான்.
சங்கக் காலத்தில் தோன்றிய கவிதை அக்காலத்தில் நவீன கவிதையாக பேசப்பட்டது. அது தற்போதைய யுகத்தில் செய்யுளாக,மரபுக்கவிதையாக பேசப்படுகின்றது. தற்காலத்தில் நவீன கவிதையாக பேசப்படும் கவிதை இன்னும் ஒரு யுகம்போக அது மரபுக் கவிதையாக அக்கால சந்ததியினரால் பேசப்படும். இன்றைய நவீனம் நாளைய மரபாக தெரியலாம். எனவே,படைப்பு நிலைப்பதென்பது படைப்பாளனின் கையில் இருக்கிறது. படைப்பாளி படைப்புக்கான வார்த்தையை  வாழ்க்கையிலிருந்து பெறவேண்டும்.ஒரு படைப்பை வாசிக்கும் வாசகன் அந்த படைப்பு தன் வாழ்க்கையுடன் ஒத்துப்போவதாக உணரும்போதே ஒரு படைப்பு வெற்றிப்பெருகின்றது. ஒன்றுக்கும் உதவாத வெறும் வெற்று கற்பனைகள் அழகியலாக இருக்கும். காலப்போக்கில் அது அழுகியங்கு கிடக்கும்.

கேள்வி: உங்களது மலேசிய பயணம் குறித்து கூறமுடியுமா? 

பதில்: 6 ஆவது உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு அண்மையில் மலேசியாவில் கோலாலம்பூரில் அமைந்துள்ள மலாயபல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. அதில் இலங்கையிலிருந்து 200  இற்கும் மேற்பட்ட  எழுத்தாளர்கள் கலந்துக்கொண்டிருந்தார்கள்.5 நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் நிறைவுநாள் நிகழ்வாக மாபெறும் கவியரங்கு கவிக்கோ அப்துல்ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தியா என பல நாட்டிலிருந்து வருகை தந்த 10 கவிஞர்கள்  அக்கவியரங்கில் கவிதை பாடினார்கள். அவர்கள் அனைவருமே 40 வயதிற்கும் மேற்பட்டவர்கள். அவர்களில் மிகவும் இளையவன் நான் மட்டுமே. எல்லோரும் கவிதை பாடி முடிய இறுதியாக நான் கவிதை பாடினேன்.தூங்கிக்கொண்டிருந்த சிலரையும் எழுப்பிவிட்டேன். கவிதை பாடி முடியும் போது கரகோச வெள்ளம் கரைபுரண்டெழுந்தது.அப்துல்ரஹ்மான் என் தோள்களை தட்டிக்கொடுத்து அருமையாக இருந்ததாக கூறினார். இன்னும் பல கவிஞர்கள்,பேராசிரியர்கள் வந்து கை கொடுத்து சிறப்பாக இருந்த கூறி என்னை பாராட்டினார்கள். இந்தியாவிலிருந்த வந்த ஒரு பத்திரிகை ஆசிரியர்  அந்த மேடையிலே அந்த கவிதையை வாங்கிவிட்டு இதை தனது நாட்டின் சஞ்சிகையொன்றில் பிரசுரிப்பாதாக வாங்கிச்சென்றார். மலேசியாவின் தேசிய தமிழ் பத்திரிகை உட்பட இன்னும்பல பத்திரிகைகள் எனது கவிபாடலை பற்றி சிலாகித்து எழுதியிருந்தார்கள்.அதைவிட நீதியமைச்சர் றவூப் ஹக்கீம் இலங்கைக்கு பெறுமை தேடி தந்துவிட்டதாக என்னை கைகுலுக்கி பாராட்டினார்.அல்ஹம்துலில்லாஹ்!

கேள்வி: மலேசியப் பயணத்திலும் கூட அதிகமான திறமைமிக்கவர்கள் தட்டப்பட்டு அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள் உள்வாங்கப்பட்டதாக பரவலாக பேசப்பட்டது. இதுக் குறித்து நீங்கள் கூறவிரும்புவது?

பதில்: எந்தவொரு நல்ல நிகழ்வுகள் நடந்தாலும் அதற்கு இவ்வாறான விமர்சனங்கள் எழுப்பப்டுவது பொதுவான ஒன்று. இந்த மலேசிய மாநாட்டு நிகழ்வில் இடம்பெற்ற கவியரங்கில் இலங்கையில் சேர்ந்த இரு கவிஞர்களுக்கு வாய்ப்புகிடைத்தது. இந்த கவியரங்கில் பங்குக்கொள்வதற்காக  நாங்கள் போட்டியின் அடிப்படையிலே தெரிவுசெய்யப்பட்டோம். 
இக்கவியரங்கிற்கான தலைப்புகளாக பொறுமை, எளிமை என்ற இரு தலைப்புகள் வழங்கப்பட்டன.நான் நபிகளாரின் பொறுமை பற்றியே எழுதியிருந்தேன்.  இந்தப் போட்டி குறித்த விளம்பரத்தை கூட பல பத்திரிகைகளில் பிரசுரித்திருந்தார்கள்.அதன்மூலமாகவே நான் இதில் போட்டியிட்டேன். விண்ணப்பதாரர்களின் பெயர்களைக்கூட டிபெக்ஸ் செய்துவிட்டே நடுவர்கள் குழுவிற்கு அனுப்பியிருந்தார்கள் என்பது பின்னர் எனக்கு தெரியவந்தது அப்போட்டியில் போட்டியிட்டவர்களில் நானும், கவிஞர் நஜுமுல் ஹுசைனும் தெரிவு செய்யப்பட்டோம். அதன்பின் என்னை அழைத்து நான் எழுதிய கவிதையை பாடிக்காட்ட சொன்னார்கள். நான் எழுதிய கவிதை சிறப்பாக இருப்பதாகவும் பாடும் விதமும் அழகாக இருப்பதாகவும் கூறி என்னை தெரிவு செய்தார்கள். 
நான் திறமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்படாமல் பின்கதவால் சென்றிருந்தால் நான் பாடிய கவிதைக்காக இத்தனை பாராட்டுதல்களை பெற்றிருக்க மாட்டேன்.கவிக்கோ அப்துல்ரஹ்மான் என் தோள்களை தட்டிக்கொடுத்திருக்க மாட்டார். மலேசிய ஆசிரியர்கள் எனது கவிதையை புகழ்ந்து தமது பத்திரிகைகளில் எழுதியிருக்க மாட்டார்கள். என்னை பொருத்தவரை கவியரங்கத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் திறமையின் அடிப்படையிலே தெரிவு செய்யப்பட்டார்கள். 

கேள்வி:- விருதுகள் வழங்கப்படும் நிகழ்வுகளில் கூட அரசியல் கலந்துபோயுள்ளதே. இதனால் திறமையானவர்கள் தட்டப்பட்டுப் போகின்றார்கள் இதுக் குறித்து நீங்கள் என்னக் கூற விரும்புகின்றீர்கள்?

பதில்:- இதற்கான எனது பதிலை நான் எனது 'விருதுகள் பெரும் விருதுகள்' என்ற கவிதையில் 2007ம் ஆண்டே கூறிவிட்டேன். அதனை வாசித்தால் இதற்கு நான் கூறபோகும் பதில்கள் குறித்து விளங்கிக்கொள்ள முடியும்.
இதைவிட ஒன்றை குறிப்பிடவேண்டும். அரசாங்கத்தினால் வழங்கப்படும் விருதுகளில் பக்கச்சார்பும் முதுகுசொரிதலுமே காணப்படுகின்றது. சரியான ஆற்றல்களுக்கு களம் இங்கு வழங்கப்படுவதில்லை. அதனால் புறந்தள்ளப்படுவது சிறந்த படைப்பாளிகளே. விருதுகளால் எதையும் சாதித்துவிட முடியாது. போட்டி நிகழ்வொன்றில் 3ம் இடம்பெற்ற மகாகவி பாரதியின் 'செந்தமிழ் நாடடெனும் போதினிலே' கவிதை காலத்தை வெல்லவில்லையா? அப்போட்டியில் முதலாமிடம் பெற்றவர் எங்கே..? அவர்தம் கவிதைதான் எங்கே?படைப்பாளியின் படைப்பு எத்தனை நெஞ்சங்களின் மனதில் நிலைக்கின்றதோ அதுதான் அவனுக்கான சரியான அங்கீகாரம்.ஒரு வாசகனின் வாழ்த்துக்கு முன்னால் நோபல் பரிசும் தலைகுனிந்து நிற்கும்.

கேள்வி:- கவிஞர், பாடலாசிரியரென படிப்படியாக உங்களது வளர்ச்சி சென்று கொண்டிருக்கின்றது. உங்களது அடுத்த இலக்கு எது?

பதில்:-  
இலங்கையில் மட்டுமல்ல தமிழ்பேசும் உலகமெங்கும் போற்றப்படும் தலைச்சிறந்த கவிஞராக,பாடலாசிரியராக மிளிரிவேண்டுமென்பதே எனது அடுத்த இலக்கு. நான் என்னை என்னுடைய வயதையொத்த சக படைப்பாளிகளோடு ஒப்பிட்டுப்பார்த்து கவிதைகளை எழுதுவதில்லை.காலத்தை வென்று நிற்கும் ,பேசப்படுகின்ற தலைச்சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிட்டுப்பார்த்தே கவிதைகளை எழுதுவேன். அப்போதே எனது திறமையையும் சரியாக வடிவமைத்துக்கொள்ள முடியும். முதலில் நானே எனது கவிதைக்கு நல்ல வாசகனாகவும் விமர்சகனாகவும் இருக்கின்றேன். அப்படி இருக்கும் போதே அந்தக் கவிதை நீண்டு நிலைத்திருக்கும்.

நன்றி.
*தமிழ் மிரர்
*பிரதம ஆசிரியர்  ஏ.பி மதன்
*கோகிலவாணி (செய்தி ஆசிரியர்)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக