சனி, 2 ஜூன், 2012

நான் திரைப்பாடலாசிரியராக அறிமுகமாகும் ''நான்’'’


வசந்தம் TV-யில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் பணிபுரியும் கவிஞர் அஸ்மின் ஈழத்தில் மரபுக் கவிதை எழுதி வரும் இளம் கவிஞர்களுள் முக்கிய கவிஞராகவும், திரைப்பட பாடலாசிரியராகவும், அறியப்பட்டு வருகின்றார்.
சக்தி TV-யினால் நடாத்தப்பட்ட ‘இசை இளவரசர்கள்’ போட்டி நிகழ்ச்சி மூலம் பாடலாசிரியராக அறிமுகமான இவர், தேசியமட்ட கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு ஜனாதிபதி விருது(2001),பேராதனை பல்கலைக்கழகத்தின் தங்கப் பதக்கம் (2003)
பெற்றுள்ளதோடு 2 முறை சிறந்த பாடலாசிரியருக்கான விருது (2010,2011) அகஸ்தியர் விருது
(2011), உட்பட 10க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.
சுபாசெவ்வேளின் தயாரிப்பில் இயக்குனர் கேசவராஜின் இயக்கத்தில் வெளிவரவுள்ள ‘பனைமரக்காடு’ தமிழ் திரைப்படத்தில் பாடல்களை எழுதியிருக்கும் இவர் ஜீவா சங்கரின் இயக்கத்தில் விஜய் அன்டனியின் நடிப்பில் வெளிவரவுள்ள ‘நான்’ திரைப்படத்தில் இசையமைப்பாளர் விஜய் அன்டனியின் இசையில் பாடல் எழுதியுள்ளார்

  
இலங்கையின் தினக்குரல் பத்திரிகையின் வெளியீடான 'உதய சூரியன் ' பத்திரிகையில் இடம்பெற்றுள்ள நேர்காணல்.
31/5/2012


வணக்கம்... 
நான் கவிஞர் அஸ்மின்! இலங்கையின் தென்கிழக்கு பிராந்தியத்தில் நாட்டார் பாடல்களின் விளைநிலங்களில் ஒன்றாக விளங்கும் பொத்துவில்தான் நான் பிறந்த இடம்.
ஆரம்பம் முதல் உயர்தரம் வரை பொத்துவில் மத்திய கல்லூரியில்தான் கல்வி கற்றேன். இப்பொழுது கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் கல்வியை தொடர்வதோடு வசந்தம் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் பணிபுரிந்து வருகின்றேன்.

நகரத்தின் புகையை குடித்து வாழ்பவர்களை விட கிராமத்தின் புழுதியை குடித்து வளர்பவர்களுக்கு நன்றாகவே கவிதை வரும். என் கிராமமே அழகிய கவிதை. அதை வாசிக்க வாசிக்க நானும் கவிஞனாக மாறிவிட்டேன்.

ஒரு கவிஞனை கற்பித்து வளர்க்க முடியாது. ஒருவன் கவிஞனாக மிளிர்வதற்கு கருவிலே திருவாக வேண்டும். தான் வாழும் காலத்தின் கோலத்தை வார்த்தைக் கோடுகளால் வரைந்துவிடும் கவிஞனின் நாளத்திலே, நெஞ்சின் ஆழத்திலே கற்பனைத் தீ உற்பத்தியாகி அது கவித்துவத்தோடு கனன்று எரிவதற்கு முதலில் அவன் பிறப்பின் மூலத்திலே கவிதை இருக்க வேண்டும்.
எனக்குள் பந்தலிடும் பாட்டுப் பூக்களுக்குள் இருந்து என் பாட்டன் முப்பாட்டன் முன்னோர்கள் அனைவரும் முறுவலிக்கின்றார்கள். மேலும் சிறிய வயதில் இருந்தே எனக்குள் இருந்த இடையறாத வாசிப்பும் என்னை வளப்படுத்தியிருக்கின்றது. இற்றை வரை என்னை பலப்படுத்தி வருகின்றது.
பாலர் வகுப்பில் படிக்கும் போது ஆசிரியர் பாடப் புத்தகத்தில் உள்ள பாடல்களை இசையோடு பாடிக்காட்டுவார். அதிலே எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. பின்னர் ஐந்தாம், ஆறாம் தரங்களில் படிக்கின்றபோது புத்தகத்தில் உள்ள பாடல்களை ஓசை நயத்தோடு நானும் பாட ஆரம்பித்து விட்டேன். அது இற்றைவரை தொடர்கின்றது. இப்பொழுதும் பாரதி, பாரதிதாசன், காசியானந்தன், மஹாகவி, நீலாவாணன், சுபத்திரன் கவிதைகளை ரசித்து ஓசையோடு பாடும் பழக்கம் இருக்கின்றது. இந்த நிகழ்வும் என்னை கவிஞனாக செதுக்கியிருக்கலாம்.

தரம் ஒன்பதில் கல்வி கற்கும்போதே எனக்குள் கவிஞன் இருப்பதை உணர ஆரம்பித்தேன். அதனால் கண்டதையும் ரசித்தேன், கண்களையும் ரசித்தேன், காணாமலும் ரசித்தேன். அந்த காலகட்டத்தில் பித்தளையில் கூட தங்கத்தை தேடியிருக்கின்றேன் என்பதை இப்பொழுது நினைக்கும்போது ஒரு பக்கம் வருத்தமாக இருந்தாலும் மறுபக்கம் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனெனில் அதனால்தானே இன்று நான் கவிஞனாய் போனேன்.

ஆரம்பத்தில் கவிதைகளோடு கைகுலுக்கிக்கொண்ட நான் சிறுகதை, கட்டுரை, பத்தி எழுத்து, பாடலியற்றல் என்று பலதுறைகளிலும் பயணிக்க ஆரம்பித்தேன். என்னுடைய படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகள் மட்டுமல்லாது சர்வதேச தமிழ் சஞ்சிகைகள், இணைய இலக்கிய இதழ்கள் பலவற்றிலும் களம் கண்டுள்ளன.
இப்பொழுது எனது (www.kavingerasmin.com) இணையத்தளத்திலும் வலைப்பூவிலும் (www.kavinger&asmin.blogspot.com) தொடர்ந்து எழுதி வருகின்றேன். 
அன்றுமுதல் இன்றுவரை என் கவிதைகளுக்கு கிடைத்த சின்னச் சின்ன கைதட்டல்கள், பெரிய பெரிய குழிவெட்டல்கள்தான் என்னை எழுந்து நிற்கச் செய்தன. என்னை நோக்கி வந்த கேள்விக்குறிகளையெல்லாம் நம்பிக்கையோடு போராடி ஆச்சரியக் குறியாக்கினேன்.
அகில இலங்கை மட்ட கவிதைப்போட்டிகளில் கலந்து கொண்டபோது எனக்கு கிடைத்த ‘ஜனாதிபதி விருது’ (2001) பேராதனைப் பல்கலைக்கழக தமிழ் சங்கத்தின் பவளவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் முதலாமிடம் பெற்றதற்காய் கிடைத்த ‘தங்கப்பதக்கம்’ (2003) என்பன மூலம் ஊமையான என் கவிதைகள் பேச ஆரம்பித்தன.
2001, 2002 ஆம் ஆண்டுகளில் ‘விடைதேடும் வினாக்கள், விடியலின் ராகங்கள்’ என இரண்டு கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன. கவிஞர் ஜீவகவி தொகுத்த ‘முகவரி தொலைந்த முகங்கள்’ கவிதை தொகுப்பிலும் தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ் சங்கத்தினால் வெளியிடப்பட்ட ‘அடையாளம்’ கவிதை தொகுப்பிலும் எனது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட ‘கூர்மதி’ சஞ்சிகையிலும் லங்கா பத்திரிகையினால் வெளியிடப்பட்ட ‘பட்சிகளின் உரையாடல்’ தொகுதியிலும் எனது கவிதைகள் வெளிவந்துள்ளன. 
எனது 3ஆவது கவிதை நூலான ‘ரத்தம் இல்லாத யுத்தம்’ மிகவிரைவில் வெளிவர இருக்கிறது. நூலின் அணிந்துரையை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். இதில் அடங்கியுள்ள கவிதைகளை ஆங்கிலத்தில் கலாபூஷணம் கவிஞர் மீஆத் மொழிபெயர்த்துள்ளார்.இந்த நூல் வெளிவருவதற்கான முழுப்பொறுப்பினையும் லண்டனில் உள்ள என்னுடைய நண்பர் அருளினி சிவனேஷன் அவர்கள் ஏற்றிருக்கின்றார். நூல் இருமொழிகளிலும் மிகச்சிறப்பாக தயாராகிக்கொண்டிருக்கிறது. நான் அதனால் தாயாராகிக்கொண்டிருக்கின்றேன்.

(இன்னும் பகிர்வேன்.. 9.06.2012 சனிக்கிழமை இதனுடைய தொடர்ச்சி வெளியிடப்படும் )
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

3 கருத்துகள்:

Chittoor Murugesan சொன்னது…

வாழ்த்துக்கள்.

தனிமரம் சொன்னது…

வாழ்த்துக்கள் !

Dhana சொன்னது…

vazthukkal

கருத்துரையிடுக