செவ்வாய், 21 ஜூன், 2011

மாபெரும் கலை - இலக்கிய நிகழ்வுகள்.

சாய்ந்தமருது 'லக்ஸ்டோ' அமையம் - 'தடாகம்' கலை இலக்கிய வட்டம் அனுசரனையில்


மாபெரும் கலை இலக்கிய நிகழ்ச்சி...

காலம்: 26.06.2011 ஞாயிறு காலை

9.00 மணி முதல் 5.00மணி வரை..


நிகழ்வன:-
மருதூர் அன்சாரின் தொகுப்பில் 26 கவிஞர்கள் இணைந்து வெளியிடும்

"உன்னை நினைப்பதற்கு"


சப்னா அமீனின் 


"நிலாச்சோறு"

கவிதை நூல்கள் பிரசவ விழா....
                                      சிறப்புக் கவியரங்கம்

* தமிழ்த் தென்றல் அலி அக்பர் தலைமையில்
* கவிமணி என்.நஜ்முல் ஹுசைன்
* கிண்ணியா அமீர் அலி
* யாழ் அஸீம்
* கலைமகள் ஹிதாயா றிஸ்வி
* கவிஞர் அஸ்மின்
* எஸ்.ஜனூஸ்
* மன்னார் அமுதன்
* ஏ.சி.ராஹில்
* சுகைதா ஏ.ஹரீம்
* தர்பா பானு

மற்றும் கலை, இலக்கிய ,சமூக, ஊடகத் துறையில் சாதித்தவர்களுக்கான லக்ஸ்டோவின் கெளரவிப்பும்,தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் "அகஸ்தியர் விருது" வழங்கும் நிகழ்வும் - இன்னும் பல கலை இலக்கிய நிகழ்ச்சிகளும் இடம் பெறவுள்ளன..
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்...






நிகழ்ச்சித் தொகுப்பு:-"வானொலிக் குயில் " ராஜேஷ்வரி சண்முகம்.




நிகழ்ச்சித் தயாரிப்புக் குழு:-



* ஏ.எல்.அன்ஸார்
* கலைமகள் ஹிதாயா றிஸ்வி
* எஸ்.ஜனூஸ்
* பி.எம்.ரியாத்

வியாழன், 16 ஜூன், 2011

''மனசுக்குள் குண்டு வெடிக்கின்றது''


 

திரைமறைவிலிருந்து திக்கெட்டும் ஆளுகின்ற
மறையளித்த இறைவனுக்கே மாபெரும் புகழனைத்தும்


மலேசியாவில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் இலங்கை சார்பாக சிறப்பாக பங்களித்தமையை முன்னிட்டு ஸ்ரீலங்கா கலை இலக்கிய பேரவையினால்  எமக்களித்த   பாராட்டு விழாவில்  என்னால் வழங்கபட்ட ஏற்புரை.


மிழ் தென்றல் வீசும் இந்த இனிய நிகழ்வுக்கு தலைமை வகிக்கும் ஸ்ரீலங்கா கலை இலக்கிய பேரவையின் தலைவர் 'தமிழ் தென்றல்' அல்ஹாஜ் அலி அக்பர் அவர்களே.!

 இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வருகை தந்திருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத் அவர்களே....!

 சிறப்பு விருந்தினர்களாக  வந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எச்.எம் அஸ்வர் அவர்களே....!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரீ.ஹஸன் அலி அவர்களே....!

இந்த விழாவுக்கு முன்னிலை வகிக்கும் இலக்கிய புரவலர் அல்ஹாஜ் ஹாஸீம் உமர் அவர்களே...!இந்த பொன்னான நேரத்தில் பொன்னாடைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்

கல்விமான்களே! கவிஞர்களே! எல்லாவற்றுக்கும் மேலாக இந்த விழா நிறைவுரும் வரையில் பொறுமையுடன் காத்துக்கொண்டிருக்கும் கவிஞர்களே!கலைஞர்ளே! எழுத்தாளர்களே! ஊடகவியலாளர்களே! பெரியோர்களே! நண்பர்களே!
உங்கள்  அனைவரையும் தனித்தனியே விளித்தவனாக என் ஏற்புரையை தொடங்குகின்றேன்.
   

பட்டாம் பூச்சி பிடிக்கும் காற்சட்டை பருவம் தொட்டு கவிதைகளோடு கைகுலுக்கிக்கொண்டு புத்தகங்களோடு படுத்துறங்கிக்கொண்டு நாளையொருநாள் நானும் ஒரு கவிஞனாகலாம் என்றுமனப்பால் அருந்திக்கொண்டிருக்கும் மழலை இளைஞனான என்னை பாசத்தோடு அருகே அழைத்து  பாராட்டி நேசத்தோடு நெஞ்சிலே இருத்தி பேசவேண்டும் என்று பணித்திருக்கின்றீர்கள்.

நான் கவிதை எழுதும் போது வா.. என்று அழைக்கு முன்னரே வாலாட்டி நிற்கும் வார்த்தைகள், தாலாட்டி நிற்கும் கருத்துக்கள், பாலூட்டி நிற்கும் சிந்தனைகள், பேசவேண்டும் என வந்தபோது மட்டும் 'பர்தா'வுக்குள் அழகை மூடிமறைத்து என்னை கண்டு வெட்கித்துஓடி ஒளிகின்றன.

ஆதலால்அகரமும் தெரியாது உகரமும் புரியாது உங்கள் முன் நான்அனைத்தையும் இழந்து நிராயுதபாணியாக நின்றுகொண்டிருக்கிறேன்.காரணம் வண்ணத்தமிழுக்கு வளமான கருத்துக்களை தின்னக்கொடுக்கின்ற திறமைசாலிகள்,சிந்தனையாளர்கள்,அர்த்தமுள்ள பேச்சால்அன்னை மொழியைஅழகுபடுத்தி கன்னித்தமிழுக்கே பன்னீர்தெளிக்கின்ற எமது நாட்டின் அத்தனை பூக்களும் அருகில் அமர்ந்திருக்கின்றீர்கள்.''காட்டாறு நீங்கள் நான்கலங்கிநிற்கும் சிறுகுட்டை.'' அதனால்தான் சொல்கின்றேன் பேசவேண்டும் நினைக்கின்ற நிமிடத்தில் மனசுக்குள் குண்டுவெடிக்கின்றது.


இந்த பாராட்டு தமிழுக்கு கிடைத்த தாலாட்டு.அன்னை தமிழை இதயத்தில் வைத்துஅனுதினமும் தாலாட்டுகின்றவர்கள், பாலூட்டுகின்றவர்கள் நாங்கள்.அதனால்தான் சொல்கின்றேன் இந்த பாராட்டுதமிழுக்கு கிடைத்த தாலாட்டு. தாயை நாங்கள் தாலாட்டுவதால்பிள்ளைகளை இங்கே பாராட்டுகின்றார்கள்.இதை நினைக்கின்ற போது புல்லரிக்கின்றது. நாடி நரம்பு எங்கும் இன்று ஒரு கோடி புல்லாங்குழல்  இனிய ராகம் இசைப்பதை உணர்கின்றேன்.

இருட்டினை போக்க விளக்கினை தேடி புறப்பட்டஇளைய தலைமுறையை சேர்ந்தஎன்னையேசூரியனாய் மாற்றி நீங்கள் தான் சுடரவிட்டிருக்கின்றீர்கள்.
இந்த பாராட்டை என்னை உறங்கவைக்கும் தாலாட்டாய் நான் ஒருபொழுதும் உணர்ந்துகொள்ளமாட்டேன்.ஏன் எனில் தன்னம்பிக்கையை தவறவிட்டு விட்டுவிடாமுயற்சியில் கோட்டைவிட்டு உறங்கிக்கொண்டிருக்கும்என்போன்ற இளைஞர்களை தட்டியெழுப்புகின்ற பள்ளியெழுச்சியாகவே நான்மனதில் நினைக்கின்றேன்.

 உலக இஸ்லாமியதமிழ் இலக்கிய மாநாட்டு கவியரங்கை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டியிலே என்னுடைய கவிதை தேர்வு செய்யப்பட்டுள்ளது என்ற சேதி என்காதில் தேன்வார்த்தபோது என்னுடைய தன்னம்பிக்கைமீதே எனக்கு தன்னம்பிக்கை வந்தது.தூக்கத்தை தூங்க அனுப்பிவிட்டு வெற்றிபெறவேண்டும் என்ற நோக்கத்தை கையிலெடுத்து இந்த கவிதை ஆக்கத்தை ஒரே இரவுக்குள் எழுதி தீர்த்தேன்.அதன் பின்னர் அழுது தீர்த்தேன்.பெருமானாரை பற்றி எழுத நினைத்ததையெண்ணி பெருமிதப்பட்டேன்.அள்ள அள்ள வற்றாத 'ஸம் ஸம்'' ஊற்றைப் போல்பெருமானாரை  பற்றி நினைக்க... நினைக்க... எழுத... எழுத...தாயை தேடி வரும் கன்றினைப்போன்றே என்னை தேடி துள்ளி குதித்து வார்த்தைகள்ஓடிவந்து கொண்டிருந்தன அத்தனையும் அள்ளியெடுத்துஅரவணைத்துக்கொண்டேன்.

 போட்டிக்கு கவிதையை அனுப்பிவிட்டு மலேசியாவில் கவியரங்கில் கவிதை பாடுவதாகவே கனவுகண்டு கண்டேன்.விஞ்ஞானி அப்துல் கலாம் சொன்ன 'இளைஞர்களே கனவு காணுங்கள்' என்ற நித்திய வார்த்தை சத்திய வார்த்தையாகியதால்எனது கனவுகளின் ஒரு துளியை இன்று அனுபவித்துக்கொண்டிருக்கின்றேன்.


இந்த கவியரங்கில் நான் தெரிவாகியது பினகதவால் வந்துதான் என்றுவழமையாக எல்லோருக்கும் எழும் விமர்சனங்கள்என்னை நோக்கியும் எழத்தான் செய்தன.
சிலரின்  முணுமுணுப்பும் கல்லெறியும் என் காதில் வந்து விழுந்துபோது நான் கலங்கவில்லை,கதறவில்லை. ஒரு இளையதலைமுறைக் கவிஞனைஅவர்கள் சரியாக விளங்கவில்லை என்றே நினைத்தேன்.அவர்கள் என்னைப்போன்று கவிதையும் 'இளைஞனாகத்தான்' இருக்கும் என்று சிலவேளை தப்புக்கணக்கு போட்டிருக்கலாம்.

 உண்மையில் உயரத்தில்இருந்த உற்று நோக்கும் போது 'எவெரெஸ்ட்'டுக்கூட எலிப்புழுக்கை போன்றுதானே தெரியும். அவர்கள், அவர்கள் உயரத்தில் இருந்து பார்த்ததால்தான்அத்தனையும் நிகழ்ந்திருக்கிறது என்று அமைதிகொண்டேன்.

 கவியரங்கின் பின்னர் கல்லெறிந்தவர்களே கட்டித் தழுவிதொட்டுத் தடவி வாழ்த்து பூக்களைவழங்கிபோது பொறாமையை தீயை கண்டு பொசுங்கிப்போகாத நான்அவர்களது பேராண்மை கண்டு மனசு பெருமிதப்பட்டேன்.நெகிழ்ந்தேன்! மகிழ்ந்தேன்!அவர்கள் தந்த பாராட்டு தேனை அருந்தியதால்....!

 அன்பானவர்களுக்கு இந்த அவையிலேஒரு பணிவாக ஒன்றை சொல்கின்றேன்.

உங்கள் ஒவ்வொரு முயற்சியிலும் முதிய தலைகளோடு இனியாவதுஇளைய தோள்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்.அன்போடு அணைத்துகொள்ளுங்கள்.இனியாவது இருட்டடிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள், கசப்பானவைகளை திருத்திக்கொள்ளுங்கள்,
ஒருமுறை தோண்டிவிட்டு ஒன்றுமே இல்லை என்று விட்டுவிடாதீர்கள், இளைஞர்களே சுட்டுவிடாதீர்கள்.மீண்டும் மீண்டும் தோண்டிப்பாருங்கள் உங்கள் காலடிகளுக்கு கீழும் வைரமுத்துக்கள் இருக்கலாம்.

 அந்த வகையில் நான் பாக்கியசாலியாக உணர்கிறேன்என்னை எனக்கு கண்டெடுக்க உதவியஉலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின்அத்தனை தூண்களுக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன்.'மண்ணில் மலருக்குத்தான் முதல் மரியாதைவேர்கள் வெளிப்படுவதே இல்லை' என்பதைப்போல் நாங்கள் மலேசியாவிலேகாய்த்து பூத்து மணம் கமழ்வதற்கு காரணமாக பலர் எமக்கு வேராகவும் நீராகவும் இருந்திருக்கின்றார்கள்அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகின்றேன்.

 குறிப்பாக எமது படைப்புக்களை தேர்ந்தெடுக்க நடுநிலை தவறாத நடுவர்களை தேர்ந்தெடுத்தஉலக  இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் இலங்கை குழுவின் தலைவர் கல்விமான் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்கள்,அதன் செயலாளர் டாக்டர் கவிஞர் தாஸீம் அவர்கள், செயற்குழு உறுப்பினர்களான இலக்கிய புரவலர் அல்ஹாஜ் ஹாஸீம் உமர், முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர்  என்.எம்.அமீன்,தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ் துறைத் தலைவர் ரமீஸ் அப்துல்லாஹ், மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத், சிரேஸ்ட்ட ஒலிபரப்பாளர் புர்கான் பீ. இப்திகார், எழுத்தாளர் மானா மக்கீன்,சிரேஸ்ட்ட ஊடகவியலாளர் எம்.ஏ.நிலாம் ஆகியோருக்கும்


இவர்களை வழி நடத்திய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்எம்.ரீ.ஹஸனலி அவர்களுக்கும்
உலக  இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு மலேசியாவிலே வெற்றிகரமாக நடந்தேறியதற்கும் இலங்கையிலிருந்து அதிகளவிலான பேராளர் கலந்து கொண்டு பங்களித்ததற்கும் இளைய தலைமுறைசேர்ந்த நான் அந்த நிகழ்வில் பங்குபற்றியதற்கும் காரணமாக இருக்கின்ற எமது தேசியத் தலைவர் கௌரவ அமைச்சர் ரவூப்ஹக்கீம் அவர்களுக்கும் நான் இவ்வேளையில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

 அத்தோடு   வளரும் தளிர்களை முளையிலே கிள்ளி மூலையிலே தள்ளுகின்றவர்களுக்கு மத்தியிலே எமக்கு தீ வைக்காமல் தீபம் வைத்து திறமையாளர்கள் திக்கெங்கும் உருவாகவேண்டும் என்ற நல்ல நோக்கோடு எம்மை ஊக் கப்படுத்துவதற்காய் இந்த பாராட்டுவிழாவை ஏற்பாடு செய்தஸ்ரீலங்கா கலை இலக்கிய பேரவையின்  தலைவர் தமிழ் தென்றல் அல்ஹாஜ் அலி அக்பர்,  செயலாளர் ஜின்னாஹ் அதன் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடைபெருகின்றேன்

வஸ்ஸலாம்.

 15.6.11

திங்கள், 13 ஜூன், 2011

இலங்கையரின் பாடல் இசையரங்கத்தில் முதலிடம்.


அன்பு நண்பர்களுக்கு ....

இலங்கை தேசிய தொழிற்சங்க மத்திய  நிலையத்தினால் 'வியர்வையின் ஓவியம்' கலை நிகழ்வை முன்னிட்டு தேசிய  மட்டத்தில் நடாத்தப்பட்ட பாடலியற்றல் போட்டியில் முதலாமிடம்  பெற்று
2010ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியருக்கான  தேசிய விருதை எனக்கு பெற்றுக்கொடுத்த ''என்னுடைய புறப்படு தோழா...'' பாடல் தமிழ் இசையுலகில் புகழ்பெற்ற   இணையத்தளமான ''இசையரங்கம்'' இணையத்தளத்தில்  TOP 10 பாடல்களில் முதல் நிலையில் உள்ளது பாடலை நீங்களும் கேட்க இங்கே கிளிக்கவும்....
http://www.isai-arangam.com/purrapadu-thozha/


ஞாயிறு, 12 ஜூன், 2011

மலேசியாவில் இலக்கிய மாநாட்டில் இலங்கைக்கு பெருமை தேடித்தந்தவர்களுக்கு கௌரவம்.

 அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவபடுத்தி பெருமை தேடித்தந்த  


  • கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ் (மெய்யியல் துறைத் தலைவர், பேராதானை பல்கலைக்கழகம்),   
  • பேராசிரியர் வ.மகேஷ்வரன்(தமிழ்துறைத் தலைவர், பேராதனை பல்கலைக்கழகம்), 
  •  விரிவுரையாளர் கே.ரகுபரன் (தென்கிழக்கு பல்கலைக்கழகம்),  
  • 'கவிமணி' என். நஜ்முல் ஹூசைன்,
  •  கவிஞர் பொத்துவில் அஸ்மின் (தயாரிப்பாளர், வசந்தம் தொலைக்காட்சி), மற்றும் இலங்கை ஏற்பாட்டுக்குழுவை சேர்ந்த   
  • அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.ஜெமீல்(கல்விமான், முன்னாள் அமைச்சு செயலாளர்)  
  • டாக்டர் தாஸீம் அஹமது
  • திருமதி  புர்கான் பீ.இப்திகார் (சிரேஸ்ட்ட அறிவிப்பாளர்,இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்) 

ஆகியோரை கௌரவித்து பாராட்டும் நிகழ்வொன்று ஸ்ரீலங்கா இஸ்லாமிய கலை இலக்கிய மன்றம் ஏற்பாட்டில் எதிர்வரும் 15ம் திகதி மாலை 4.30மணிக்கு  கொழும்பு மெஸஞ்சர் வீதியில் அமைந்துள்ள பிரைட்டன் ரெஸ்ட் ஹோட்டல் மண்பத்தில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மன்றத்தின் தேசியத் தலைவர் 'தமிழ் தென்றல்' அல்ஹாஜ் எஸ்.எம். அலி அக்பர் தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வில் நீதியமையச்சர்  ரவுப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும் ,கௌரவ அதிதிகளாக  முன்னாள் சபாநாயகர் அல்ஹாஜ் எம்.எச். முஹம்மத்,பிரதி அமைச்சர் பஷீர் சேகு தாவூத்,  பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏ.எச்.எம். அஸ்வர்,ஹஸன் அலி மற்றும் இலக்கிய புரவலர் அல்ஹாஜ் ஹாஸீம் உமர்  ஆகியோரும் மற்றும் பல  இலக்கியவாதிகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா இஸ்லாமிய கலை இலக்கிய மன்றத்தின் செயலாளர் எம்.எஸ்.எம். ஜின்னா தெரிவித்தார்.






வெள்ளி, 10 ஜூன், 2011

கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு முஸ்லிம் லீக் கௌரவம்


பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், பிரதியமைச்சர் பஷீர்சேகுதாவூத்,புரவலர் ஹாஸீம் உமர், சட்டத்தரணி ரஷீத். எம். இம்தியாஸ் ,முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன்

அண்மையில் நடைபெற்ற மலேசிய உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் கவிக்கோ அப்துல் ரஹ்மான்  தலைமையில் இடம்பெற்ற சர்வதேச கவியரங்கில் மிகவும் மிகச் சிறப்பாக கவிபாடி இலங்கைக்கு பெருமை தேடிக்கொடுத்த    கவிஞர்களான  பொத்துவில் அஸ்மின்  என்.நஜ்முல்ஹூசைன் ஆகியோரை கௌரவித்து பாராட்டும் நிகழ்வொன்று அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கடந்த  8ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு 8,எல்விடிகல மாவத்தையில் அமைந்துள்ள சம்மேளன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


சம்மேளனத்தின் தேசியத் தலைவர் சட்டத்தரணி ரஷீத். எம். இம்தியாஸ் தலைமையில் நடைபெற்ற  இந் நிகழ்வில்  பிரதி அமைச்சர் பஷீர் சேகுதாவூத் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏ.எச்.எம். அஸ்வர், ஹஸன் அலி, மற்றும் கல்விமான் எஸ். எச். எம் ஜெமீல், முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் ஆகியோரும் மற்றும் பல இலக்கியவாதிகளும் கலந்து சிறப்பித்தனர்.இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு பொன்னாடை போர்த்த பிரதியமைச்சர் பஷீர்சேகுதாவூத் நினைவுசின்னம் வழங்கி கௌரவித்தார்.
நன்றி :தினகரன் வாரமஞ்சரி 12.6.11
நன்றி :ஞாயிறு தினக்குரல் 12.6.11

நன்றி :நவமணி பத்திரிகை11.6.11



ஞாயிறு, 5 ஜூன், 2011

இசை கலைஞர்களுக்கு களம்கொடுக்கும் ஸ்ருதி FM

ஸ்ருதிFM - ஓர் அறிமுகம்

இணையத்தள வானொலிகள், அதுவும் தமிழ் வானொலிகள் இன்று இணையத்தள பாவனையாளர்களிடையே வெகு பிரபலம் . அதுவும் உலகம் முழுதும் சென்றடையத்தக்க  இலகுவான ஊடகமாக இந்த இணையத்தள வானொலிகள் விளங்குவதால் பல வானொலிகள் இணையதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன. 

ஸ்ருதி FM இந்த தமிழ் இணையதள வானொலி வரிசையில் ஒரு புது வரவு. ஆயினும் அந்த வரிசையிலிருந்து தனித்து நிற்கும் ஒரு சிறப்பம்சம் ஸ்ருதி FM இற்கு உண்டு. 

எந்த தமிழ் இணையதள வானொலிகளை நோக்கினாலும் அவை தென்னிந்திய சினிமா பாடல்களை அடிப்படையாக வைத்தே இயங்குகின்றன. ஆயினும் சினிமா தவிர்ந்த சுதந்திரமான தம் படைப்புக்களை உருவாக்கும் தமிழ் கலைஞர்கள்  உலகெங்கிலும் பரந்து வாழ்கின்றனர். அவர்களின் படைப்புகளுக்கு களமமைத்துக் கொடுப்பதே ஸ்ருதி FM இன் பணியாகும். 

சினிமா இசையை தவிர்த்து முழுக்க முழுக்க சுதந்திரமாய் இயங்கும் கலைஞர்களின்  படைப்புக்களை மட்டுமே இணையத்தில் ஒலிபரப்புகின்றது ஸ்ருதி FM. 

ஸ்ருதி FMஇல் நீங்கள் கேட்பதெல்லாம் முற்றுமுழுதாக வேறெங்கும் கேட்கக் கிடைக்காத  அரிய பாடல்கள் மற்றும் படைப்புகளின் தொகுப்பாகும். 

வெறுமனே இசையை ஒலிபரப்புதல் மட்டுமின்றி இசைதொகுப்புகள் பற்றிய தகவல்களை பரப்புதல் அவற்றின் விற்பனைக்கு உதவுதல் போன்ற பல சேவைகளை முன்னெடுக்கும் நோக்குடனேயே இவ்விணையத்தள  வானொலி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

உலகளாவிய தமிழ் கலைஞர்களுக்கும்  ரசிகர்களுக்கும்  பாலமாய் நின்று சினிமா சாராத சுயாதினமான படைப்புக்களை மக்கள் முன் கொண்டு வரும் ஸ்ருதிFM  இப்போது ஆரம்ப கட்ட நடவடிக்கைகளிலேயே உள்ளது. அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்வதற்கு வாசிக்கும் உங்களின் உதவியும் ஆதரவும் எமக்கு தேவை..

நீங்கள் ஒரு ரசிகராக இருந்தால் எங்கள் Facebook Page இல் இணைந்து கொள்ளுங்கள். எங்கள் தகவல் பரிமாற்றத்தை அது இலகுவாகும் .அத்தோடு  உங்கள் நண்பர்களுக்கும் இப்புதிய வானொலி பற்றி சொல்லுங்கள்.

நீங்கள் ஒரு இசை கலைஞராக இருந்தால் உங்கள் படைப்புக்களை முழு விபரங்களுடன் அனுப்பி வையுங்கள். உங்கள் கலை சார் நடவடிக்கைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் . உங்கள் படைப்பு கூடியவரை அனைவரும்  எட்டத்தக்க வகையில் முடிந்தவரை  மற்றவர்களுக்கு ஸ்ருதி fm இணை அறிமுகப்படுத்துங்கள். உங்களுக்காய் ஆரம்பிக்கப்பட்ட இச்சேவை உங்கள் பங்களிப்புடன் மட்டுமே அடுத்த கட்டங்களை நோக்கி வளர முடியும்.

இவை இரண்டுமே எங்கள் இப்போதைய  எதிர்பார்ப்பு. எங்கள் Facebook Page இன் அங்கத்தவர்கள் எண்ணிக்கை கூடக் கூட எங்கள் புதிய நிகழ்ச்சிகள் மற்றும் முன்னேற்றங்கள்  பற்றிய அறிவிப்புகளும் படிப்படியாக வெளிவிடப்படும். 

எல்லா தகவல் பரிமாற்றங்களுக்கும் info@sruthifm.com என்னும் மின்னஞ்சல் முகவரியை நீங்கள் உபயோகிக்கலாம்.

படைப்பாளி அறிமுகம் -15 கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன்


தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட படைப்பாளியும் ஒளிபரப்பாளருமான கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் பன்முக ஆளுமைகொண்டவர்.

கவிதை,சிறுகதை கட்டுரை, பத்தியெழுத்து, சிறுவர் இலக்கியம், விமர்சனம் போன்ற துறைகளில் முத்திரை பதித்திருக்கும் இவரது படைப்புக்கள்  இலங்கையின் தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகள்,இணைய சஞ்சிகைகளில் களம் கண்டுள்ளன.இவர் 'நாட்டவிழி நெய்தல்' http://ashroffshihabdeen.blogspot.com எனும் தனது வலைப்பூவிலும் தொடர்ந்தும் எழுதி வருகின்றார்.

மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடியை பிறப்பிடமாக கொண்ட இவர் ஆரம்பத்தில் 'ஓட்டமாவடி அஷ்ரப்' எனும் பெயரிலும் பல படைப்புக்களை தந்திருக்கின்றார்.

ஹாஸ்யமும் சுவாரசியமும் கலந்த கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் எழுத்துக்கள் இளைய தலைமுறையினராலும் பரவலாக விரும்பி படிக்கப்படுகின்றன.
இவர் ,ஒரு முறை புதிதாக தன்னை வாசிக்க வருகின்ற ஒருவரை திரும்பவும் தன்னை நோக்கி திரும்ப செய்கின்ற எழுத்து நடையின் சொந்தக்காரர்.மரபுக் கவிஞனாக தன்னை அடையாளப்படுத்திய இவர் புதுக்கவிதையிலே சிறந்த ஆளுமை மிக்கவர்.இவருக்கு அதிகளவிலான சிறப்பை தேடிக்கொடுத்த ஷெய்த்தூன் கவிதை சர்வதேச கவிதைகளோடு வைத்து நோக்கத்தக்கது.

2002ம் ஆண்டு இலங்கை அரசு கொழும்பில் இலங்கை இஸ்லாமிய ஆய்வகத்தின் ஆதரவுடன் நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் செயலாளராக இயங்கியதை தனது வாழ்நாள் சாதனையாக கருதும் கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினதும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினதும் செயலாளராகவும் இயங்கிவருகின்றார்.


'யாத்ரா' எனும் தமிழ் கவிதைகளுக்கான சஞ்கையின் ஆசிரியரான இவர் 'மீஸான் கட்டைகளில் மீள எழும் பாடல்கள்' கவிதை தொகுதியின் பிரதான தொகுப்பாளராகவும் இருந்திருக்கின்றார்.


இதுவரை  
1.காணாமல் போனவர்கள்
2.என்னைத் தீயில் எறிந்தவள்
3உன்னை வாசிக்கும் எழுத்து'
 என்ற மூன்று கவிதை நூல்களையும்
1.புள்ளி
2.கறுக்கு மொறுக்கு
3.புல்லுக்கு அலைந்த மில்லா என்ற  
மூன்று சிறுவர் நூல்களையும் 
1.தீர்க்கவர்ணம்
2.ஸ்ரீலங்காவலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம்வரை 
என்ற பல்சுவை பத்திகளின் தொகுப்பு பயணக்கட்டுரை தொகுப்பு போன்றவற்றையும் தமிழ் இலக்கிய உலகத்திற்கு தந்திருக்கின்றார்.


இவரின் 'என்னைத் தீயில் எறிந்தவள்' கவிதை நூல்  2008ம் ஆண்டுக்கான இலங்கை அரசின் சாஹித்திய மண்டல பரிசினை பெற்றுக்கொண்டுள்ளது.


'தமிழியல் விருது' உட்பட பல உள்ளூர் விருதுகளையும்  பெற்றிருக்கும் கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன்  தமிழகத்தில் நடந்த 5வது உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழாவின் கவியரங்கில் சிறப்பாக கவிபாடி கவிக்கோ அப்துல் ரஹ்மானால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

முற்றிலும் உண்மைக்கதைகள் அடங்கிய இவரது புதிய நூலான '''ஒரு குடம் கண்ணீர்'' அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 4 ஜூன், 2011

படைப்பாளி அறிமுகம் -14 காப்பியக்கோ' DR.ஜின்னாஹ் ஷரிபுத்தீன்.

காப்பியக்கோ' DR.ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
ன்னிகரற்ற காவியங்களை தமிழுக்கு தந்திருக்கும் நாடறிந்த கவிஞரான வைத்திய கலாநிதி  ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்கள் காப்பியக் கவிஞராக கடல் கடந்தும் அறியப்படுபவர்.

தென்றலே கவிபாடும் தென்கிழக்கு மண்ணில் மருதமுனையை பிறப்பிடமாக கொண்ட இவர் விபுலானந்த அடிகளாரின் மாணவரும் கிழக்கிலங்கையின் முதல் முஸ்லிம் ஆசிரியருமான தமிழ் பண்டிதர் புலவர்மணி ஆ.மு.ஷரிபுதீன் அவர்களின் புதல்வர்.


கவிஞருக்கு ''காப்பியக்கோ' பட்டத்தை  வழங்குகின்றார் மலேசியா கல்வி வாரியத் தலைவர் ஹாஜி டத்தோ  முஹம்மது இக்பால்
அமர்ந்த இடத்தில் ஆயிரம் பாடல்களை எழுதும்  ஆற்றல் பெற்ற இவர், தமிழ் பேசும் உலகில் தலை சிறந்த மரபுக் கவிஞர். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மரபுப் பாக்களை பாடி புகழ் சூடியிருக்கின்றார்.

கவிஞர் முஹம்மது மேத்தாவுடன் நமது காப்பியக்கோ
எஸ்.டி. சிவநாயகம் அவர்களின் தினபதி கவிதா பண்ணையில்  புடம்போடப்பட்ட இவர் இதுவரை 20 நூல்களை எழுதி வெளியிட்டிருக்கின்றார்.இதில் இவரால் எழுதப்பட்ட ஏழு காவியங்களும் அடங்குகின்றன.
''காப்பியக்கோ''வுடன் கலந்துரையாடலில் கவிஞர்களான ஏ.இக்பால், அல்-அஸூமத், அஷ்ரப் சிஹாப்தீன்.

இருபதுக்கும் மேற்பட்ட தேசிய மட்ட இலக்கிய போட்டிகளில் பரிசில்களையும் விருதுகளையும் பெற்றிருக்கும்  கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன்  அவர்களின் 'பண்டாரவன்னியன்' காவியம் இலங்கை அரசின் சாஹித்திய மண்டல விருதினை பெற்றுள்ளது.அத்தோடு இவரது 'பெற்ற மனம்' சிறுகதை தொகுப்பு கலாசார அலுவல்கள் அமைச்சினால் பாடசாலை நூலக புத்தகமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.



கவிதாயினி மலீக்கா பாரூக்கின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில்
இவரது 'மஹ்ஜபீன்' மற்றும்  'புனித பூமியிலே' காவியங்களை ஆய்வு செய்து தமிழ்நாட்டை சேர்ந்த  பேராசிரியர்  எஸ்.முஹம்மது அவர்கள் கலாநிதி பட்டத்தை நிறைவு செய்திருக்கின்றார்.

இலங்கை இஸ்லாமிய ஆய்வகத்தின் தலைவராக,கொழும்பு தமிழ்சங்கத்தின் துணைத் தலைவராக,சர்வதே இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் இலங்கை கிளையின் தலைவராவும் இருக்கும் இவர்,கலாபூசணம்,தமிழ் மாமணி, கவிமாமணி,காவியத் தலைவன்,நற்கவிஞர் உட்பட பல கௌரவ பட்டங்களை பெற்றிருக்கின்றார்.

அண்மையில் தமிழ் நாட்டின் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்தினரால் 'காப்பியக் கோ' என்ற கௌரவ பட்டம் வழங்கப்பட்டும்
கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்கள் கௌரவிப்பட்டிருக்கின்றார்.

மலேசிய இலக்கிய மாநாட்டில் கவிதை பாடிய கவிஞர்களுக்கு முஸ்லிம் லீக் கௌரவம்



ண்மையில் நடைபெற்ற மலேசிய உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் மிகச் சிறப்பாக கவிதைகள் சமர்ப்பித்த இலங்கை கவிஞர்களான என். நஜ்முல் ஹூஸைன் மற்றும் பொத்துவில் அஸ்மின் ஆகியோரை கௌரவித்து பாராட்டும் நிகழ்வொன்று அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 8ஆம் திகதி புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு கொழும்பு 8, எல்விடிகல மாவத்தையில் அமைந்துள்ள சம்மேளன கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

சம்மேளனத்தின் தேசியத் தலைவர் சட்டத்தரணி ரஷீத். எம். இம்தியாஸ் தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வில் நீதியமையச்சர்  ரவுப் ஹக்கீம், பிரதி அமைச்சர் பஷீர் சேகு தாவூத், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏ.எச்.எம். அஸ்வர், ஹஸன் அலி மற்றும் கல்விமான் எஸ். எச். எம் ஜெமீல், முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் ஆகியோரும் மற்றும் பல  இலக்கியவாதிகளும் பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளதாக அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளன
பொதுச் செயலாளர் எஸ். லுக்மான் தெரிவித்துள்ளார்.